Saturday, October 12, 2013

நவராத்திரி காலத்தின் சிறப்பம்சம்!!




ஒரு குறிப்பிட்ட பக்‌ஷம் முழுவதுமே மனோலயத்துக்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது சரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம் தான்.

இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஓரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கேயோ நம் ஊரைவிடப்பத்து, பன்னிரண்டு டிகிரிக்கு மேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமேயில்லை என்கிற மாதிரி வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. 

நம் சீமையில் ஒயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்யப்பிரதேசத்திலும் மான்ஸூன் மழை கொட்டுகிறது. 

இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுசாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய் குளிரில் நடுங்கவைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது.

இந்த சமயத்தில் காஷ்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமரி என்று எல்லா ஊர் Weather report- ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிக்கள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்ததுபோல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில்இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், எல்லாரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம்.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

No comments: