Sunday, December 13, 2009

மரணத்திற்கு அப்பால் - 1


சென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தார்கள். முதல் முறையாக சீசனில் பயணித்தேன். இப்படி ஒரு மக்கள் வெள்ளத்தை, ஒரு மலையே மலை ஏறுவது போல அடர்ந்த மனிதக் கூட்டத்தைப் பார்த்து திகைத்தே போனேன்! இன்னும் ஜோதிக்கு போகவேண்டும் என்று மாலையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சாமிகளைப் பார்த்தால் என் தலை சுற்றுகிறது.

இந்த பிரயாணத்தில் சபரிமலையில் நல்ல விஷயம் இரண்டு அவதானித்தேன். ஒன்று கூட்டத்தை கட்டுப்படுத்தி நிறுத்தி தடுத்து பேட்ச் பேட்ச்சாக அனுப்பினார்கள். ஒரேயடியாக உச்சியில் போய் முட்டிக்கொண்டு மூச்சுத் திணறாமல் இருக்க பாதையிலேயே தடுத்து அனுப்பியது நல்ல விஷயமாக பட்டது.

இன்னொன்று மிகவும் முக்கியமானது. சிறுநீர்கழிக்க ஆங்காங்கே பீங்கான்கள் வைத்து பக்கத்திலேயே கை கால் கழுவ குழாயும் வைத்திருந்தார்கள். தண்ணீரும் கொட்டியது. வசதியாக இருந்தது. சென்றமுறை மலையிறங்கும் போது முட்டிக்கொண்டு வந்து, பம்பா வருவதற்குள் திண்டாடிப் போனோம். கட்டனக் கழிப்பறை அங்கே தான் இருக்கிறது. போதாக்குறைக்கு வழிநெடுக துர்நாற்றம் வீசியபடியே இருந்தது. பாவம் அடக்க முடியாத மனிதர்களின் அவஸ்தை தெரிந்தது. இம்முறை அந்த துர்நாற்றம் இல்லாததும் ஒரு ஆறுதல்.

சன்னிதானத்தில் நல்ல தரிசனம். ஆனால் முட்டி மோதிக்கொள்ளும் கூட்டமும், கட்டுப்பாட்டை மீறி கம்பி தாண்டி ஓடும் மனிதர்களும் கொஞ்சம் வருத்தத்தை உண்டாக்கினார்கள். இதைப்பற்றி உடன் பயணித்த மூத்த சாமியிடம் விசாரித்தேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று.

அவர் கூறினார், "நாற்பத்தோரு நாள் விரதம் இருப்பதே மனிதனின் கட்டுக்கடங்காத உணர்ச்சிகளில் இருக்கும் வேகத்தைக் குறைத்து, மனதில் அமைதியும் பக்தியும் குடிகொண்டிருக்கத்தான். இதனால் மனம் அமைதி யடையும். ஆனால் அமைதிக்கான பயிற்சியை சரியாக எடுத்துக்கொள்ளாதவர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மிரண்டு போகிறார்கள். மனம் அவசரப் படுகிறது. பதற்றம் அடைகிறது. எல்லோருக்கும் முந்தி நானே செல்லவேண்டும் என்ற சுயநலம் பெருக்கெடுத்து ஓடத்துவங்குகிறது. ஆக நம் சாமிகளுக்கு பயிற்சியில் முதிர்ச்சி தேவை" என்றார்.

ஆனால் அப்படி நடந்து கொள்பவர்கள் அவ்வளவு கூட்டத்திலும் மிகச்சிலரே என்பது ஒரு ஆறுதல்.

விஷயத்திற்கு வருவோம், வாகனத்தில் பிரயானித்த படி மூத்த சாமியிடம் இப்படி விடாப்பிடியாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இரவு நீண்ட நேரமாகியும் சளைக்காமல் பல விளக்கங்களை சொல்லிக்கொண்டே வந்த அவர் ஒரு கட்டத்தில் "என்னப்பா! நசிகேதஸ் போல கேட்டுக்கிடே இருக்கியே! கொஞ்சம் தூங்க விடுப்பா" என்றார் கெஞ்சாத குறையாக.

சரியென்று அமைதியடைந்தேன். ஆனால் அதென்ன நசிகேதஸ் மாதிரி. மீண்டும் அவரை உசுப்பினேன், "சாமி, நசிகேதஸ் மாதிரின்னு சொன்னீங்களே, அது யார்?"

"ஆஹா! ஆரம்பிச்சிட்டியா! தெரியாம அந்தப்பேரைச் சொல்லிட்டேம்பா! கொஞ்சம் தூங்கு, தூங்கவிடு" என்று சாய்ந்து கொண்டார்.

குறைந்த பட்சம் அது யார் என்றாவது தெரியவில்லையென்றால் எனக்குத்தூக்கம் வராதே!

"சாமி, நாம ஆன்மீக பயணம் வந்திருக்கோம், நாலு விஷயம் விவாதிச்சு தெரிஞ்சுக்கலாம்னா தூங்க சொல்றீங்களே! அந்த நசிகேதஸ் யார்ன்னாவது சொல்லுங்களேன்" என்றேன்.

"நசிகேதஸ் இருக்கானே அவன் எமதர்மனையே கேள்விமேல கேள்வி கேட்டு துளைச்செடுத்திட்டான். எமதர்மனே அவனிடம் கெஞ்சாத குறைதான்! அப்படி ஒரு பிடிவாதக்காரன்" அவனைப்பத்தி தான் சொன்னேன். போதுமா! போய் தூங்கு.

சரியென்று சாய்ந்தேன். ஆனால் அப்படி என்ன கேட்டான். ஐயோ தூக்கம் போச்சே! மறுபடியும் எழுப்பினேன், "சாமீ அப்படி எதப்பத்தி கேட்டான்னு சொல்லுங்களேன்?"

"நீ விடமாட்டியா?"

"ஊஹும், செத்தா கூட அடுத்த பிறவிலயும் வந்து கேப்பேன். அதனால் இப்பவே சொல்லுங்க?"

"அதப்பத்தி தான்பா நசிகேதஸ் எமதர்மனிடம் கேட்டான்"

"அதப்பத்தின்னா?"

"அதாவது, செத்ததுக்கப்பறம் மனிதனின் நிலை என்ன? இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது? மரணத்திற்கு அப்பால் உள்ள ரகசியம் என்ன? அப்படீன்னு எமதர்மனிடம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டான் நசிகேதன்? நசிகேதனின் இந்தக் கேள்விகளுக்கு எமதர்மன் பதில் அளித்த அந்த விஷயம் தான், அதாவது மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது, நமது ஆன்மா என்ன ஆகிறது என்கிற அந்த விஷயத்திற்குத்தான் உபநிஷதம்னு பேரு. ஒகெ வா! ரொம்ப டயர்டா இருக்கேன். கொஞ்சம் தூங்க விடுப்பா" என்று கூறி சாய்ந்து கொண்டார்.

நானும் சாய்ந்து கொண்டேன். ஆனால் இப்போது நானே நசிகேதனாகிவிட்டேன். எனக்கும் மரணத்திற்கு அப்பால் என்ன? என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது. இதற்கு மேல் உசுப்பினால் சாமி கோச்சுக்கும். எதுக்கும் விடியட்டும் கேட்டுத் தெரிஞ்சுப்போம்ன்னு கண்களை மூடிக்கொண்டேன். வாகனம் இருளைக் கிழித்து பயணித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பயணிப்போம்....


மரணத்திற்கு அப்பால் - 2

2 comments:

nerkuppai thumbi said...

எமனுக்கும் நசிகேதசுக்கும் இடையே நடந்த உரையாடல் தான் கடோபநிஷத் என கேள்விப் பட்டிருக்கிறேன். பெயர் பதிவில் வரவில்லை.

hayyram said...

அடுத்தடுத்த தொடர்களில் வருமே!