Sunday, November 17, 2013

கீதோபதேசம் - குணங்களின் இரு வகைகள்!



தனஞ்ஜெயா குணங்களின் இரு வகைகளை விளக்குகிறேன் கேள்!

அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், தானம் செய்தல்,புலனடக்கம், தன்னடக்கம், ஆன்மீக ஆராய்ச்சி, தவம், நேர்மை போன்றவை தெய்வீக குனங்களாகும்.

மேலும் பிறர்க்கு தீங்கு செய்யாமை, உண்மை, சினம் இன்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, தியாக உணர்ச்சி , சாந்தம், எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுதல், பேராசை இல்லாமை, இனிமையாகப் பழகுதல், மனம் சலியாமை போன்றவைகளும் தெய்வீக குணங்களாகும்.

மன்னிக்கும் குணம், தளராத மன உறுதி, தூய்மை, துவேஷத்திலிருந்தும் இருமாப்பிலிருந்தும் விடுதலை இவை எல்லாம் தெய்வீக குணங்களாகும்.

அர்ஜுனா!

இத்தகைய தெய்வ குனங்கள் வீடுபேற்றைக் கொடுக்கும். ஆனால் அசுர குனங்கள் பிறப்பு, இறப்பாகிய பந்தத்தைக் கொடுக்கும். பாண்டவா! நீ தெய்வத் தன்மையோடு பிறந்தவன். எனவே வருந்தாதே!

பார்த்தா!

இவ்வுலகில் இருவகையான பிறப்புக்கள் உள்ளன. தெய்வீக இயல்பும், அசுர இயல்பும் கொண்ட பிறப்புக்கள் தான் அவை. தெய்வீக பிறப்பைப் பற்றி விளக்கமாகக் கூறிவிட்டேன். இனி அசுர குணத்தைப் பற்றி கூறுகிறேன் கேள்!

அசுர இயல்புள்ள மனிதர்கள் தாங்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை அறியமாட்டார்கள். அவர்களிடம் தூய்மையோ, நல்லொழுக்கமோ, சத்தியமோ இருப்பதில்லை.

இந்த உலகம் பொய்யானது. ஆதாரமற்றது. கடவுள் இல்லாதது. காமத்தின் அடிப்படையில் ஆண், பெண் சேர்க்கையின் காரணமாகவே உலகம் உண்டானது. அதனன்றி வேறு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வகையிலான அபிப்பிராயம் கொண்ட சீர்கெட்ட இந்த ஆன்மாக்கள் அற்பபுத்தி உடையவர்கள். இவர்கள் உலகத்தை நாசம் செய்வதற்காக உலகத்தின் விரோதிகளாக வந்து சேருகிறார்கள்.

திருப்தி செய்ய முடியாத காம இச்சையில் ஆழ்ந்த இவர்கள் ஆடம்பரம், இறுமாப்பு, தற்பெருமை ஆகியவற்றால் தீய நோக்கம் கொண்டு களங்கமுள்ள செயல்களையே செய்பவர்களாக உள்ளார்கள். இறக்கும் வரையில் அளவு கடந்த கவலை கொண்டவ்ர்களாய், போகங்களையும், சிற்றின்ப இச்சையே எல்லாவற்றிலும் மேலானதாகக் கருதி, வேறு ஒன்றும் இல்லை என்று தீர்மானம் செய்தவர்களாய் இருப்பார்கள்.

எண்ணற்ற ஆசைவலைகளில் சிக்கிக் கொண்டு, காமத்திற்கும், கோபத்திற்கும் அடிமைகளாகியும் தங்களுடைய ஆசைப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக அநியாயமான வழிகளில் செல்வம் திரட்ட முற்படுவார்கள். (தற்கால செய்திகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆடம்பரமாக வாழ ஆசைப்பாட்டு வழிபறி செய்வதையும் கொள்ளையடித்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பவர்கள் பற்றியும் செய்திகளில் படித்திருப்போம்).

பார்த்தா!

கற்பனையான பலவித ஆசைகளுக்கு இரையாகி, மதிமயக்கமாகிய வலையில் சிக்குண்டு போகங்களில் ஆழ்ந்து அவர்கள் பாழும் நரகத்தில் வீழ்கின்றனர். மனிதனை நாசமாக்கும் இந்த நரகத்திற்கு காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று விதமான வாயில்கள் உள்ளன. எந்த மூன்று வாயில்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் மனிதன், தன்னுடைய உயர்ந்த நலனுக்கு வழிதேடி என்னையே வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ கிருஷ்னர்

சம்பவாமி யுகே யுகே!

No comments: