தியானம் செய்யும் முறை!
இலக்காகிய பிரம்மத்தில் மனதை மிகவும் திடமாக நிலை நிறுத்தி
வெளி இந்திரியங்களை அவ்வவற்றின் இடங்களில் புகுந்திருக்கச் செய்து உடலை அசையாமல் நிறுத்தி உடலின் ஸம்ரக்ஷணையையும் கூட கவனியாது
விடுத்து பிரம்மத்திடம் ஆத்மாவை ஒன்று படுத்தி
தன்மயமாகி இடைவிடாத தியானத்தால் எப்பொழுதும் உனக்குள்ளேயே
பொங்கும் மகிழ்ச்சியால் பிரம்மானந்த ரஸத்தை பருகுவாயாக. பயனற்ற மற்ற மதிமயக்கச் செயல்களால் ஆவதென்ன?
விஷயமாகிற அழுக்குடன் கூடியதும் துக்கத்தை விளைவிப்பதுமான
ஆத்மாவல்லாத உலக சிந்தனையை விட்டொழித்து எது முக்திக்குக் காரணமோ ஆனந்த வடிவானதோ அந்த ஆத்மாவை சிந்திப்பாயாக.
இந்த ஆத்மா தன்னொளியால் பிரகாசிப்பது. அனைத்தையும் பார்த்துக்
கொண்டிருப்பது; விஞ்ஞானமய கோசத்தில் எப்பொழுதும்
விளங்கிக் கொண்டிருப்பது. அஸத்தாகிய பிரபஞ்சத்தினின்று முற்றும்
வேறான இதை இலக்காக வைத்துக் கொண்டு இடைவிடாத தியானத்தால் அதையே உனது ஸ்வரூபமாக அனுபவத்திற்குக் கொண்டுவருவாயாக.
இந்த ஆத்மாவை வேறு எண்ணம் குறிக்கிடாத இடைவிடாத தியானத்தால்
உள்ளத்தில் கொண்டுவந்து தெளிவாக தனது ஸ்வரூபமாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த பரமாத்மாவில் தன்னுடைய ஒற்றுமையை திடமாகச் செய்து
அஹங்காரம் நீக்கி 'தனது' என்ற எண்ணத்தை நீக்கி பொருட்களில் ஸம்பந்தப் படாமல் அவற்றிடை நிற்க வேண்டும்.
பரிசுத்தமான அந்தக்கரனத்தை ஸாக்ஷியாகவும் ஞான மாத்திரமாகவும்
உள்ள தனது ஸ்வரூபத்தில் வைத்து மெதுவாக அசைவிலாத நிலைக்கு கொணர்ந்து பிறகு பரிபூணமாகிய
தனது நிலையை தொடர்ந்து காண வேண்டும்.
தனது அஞ்ஞானத்தால் கற்பிக்கப்பட்ட தேகம், இந்திரியங்கள் பிராணனன், மனது அஹங்காரம் முதலிய எல்லா உபாதிகளினின்றும்
விலகியதும் பிளவு படாததும் எங்கும் நிறைந்ததுமான ஆத்மாவை பேராகாயத்தைப் போல் பார்க்க
வேண்டும்.
குடம் , செம்பு, குதிர், ஊசி முதலிய நூற்றுக்கணக்கான உபாதிகளினின்று
விலகிய ஆகாயம் ஒன்றே ஆகிறது. விதவிதமானதன்று. அவ்வாறே அஹங்காரம் முதலியவற்றினின்று
விலகிய பரம்பொருள் ஒன்றேயாம்!
- ஆதிசங்கரரின் விவேக சூடாமணி!
No comments:
Post a Comment