- ச. திருமலை
அருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa
மோடியின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப் படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் மீது அவதூறுகளும், குற்றசாட்டுக்களும் எழுவது சகஜமான ஒன்றே. மோடியின் மீதான விமர்சனங்கள் மென்மையானது முதல் கடுமையானவை வரை பல விதமாகவும் வீசப் படுகின்றன. அவற்றில் நியாயமான குற்றசாட்டுக்களோ சந்தேகங்களோ இருந்தால் அவற்றிற்கான பதில்களை விளக்கிச் சொல்லலாம். அதைத்தான் மது கிஷ்வர், மீடியா க்ரூக்ஸ், குருபிரசாத், ஒத்திசைவு ராமசாமி போன்றோர் ஆக்கபூர்வமாகச் செய்து வருகிறார்கள்.
மோடியின் வெற்றியை எப்படியும் தவிர்க்க முடியாது என்ற நிலையில் முடிந்த வரை அவர் மீது நம்பிக்கையின்மையை எறிந்து பார்க்கலாம் ஒட்டியது ஒட்டட்டும் என்று அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றசாட்டுகளையும் அவர்களினால் வைக்க முடியவில்லை. அவர் மீது எந்தவிதமான கிரிமினல் குற்றசாட்டுக்களையும் இந்தியாவின் அனைத்து விதமான கோர்ட்டுகளையும் பயன் படுத்தியும் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே அவர் மீது வாக்காளர்களிடத்து அவநம்பிக்கையையாவது விதைக்க முடியுமா அதன் மூலமாக அவருக்குப் பெருகி வரும் ஆதரவுகளைக் குறைக்க முடியுமா என்று சூடோ செக்குலார் ஊடகங்களும் மோடி வெறுப்பு கட்டுரையாளர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் எரிச்சலும், கோபமும், வெறுப்பும், ஆதங்கமும்,படபடப்பும், பதட்டமும், கையாலாகதத்தன்மையும் அவர்களின் கட்டுரைகளின் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் பெரிதும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன.
அப்படி மோடி மீதான அவநம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கும் ஒரு உத்திகளில் ஒன்று மோடி குஜராத் மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்து வருபவர் ஆகவே அவரால் சிக்கலான, கஷ்டமான, சோதனையான ஒட்டு மொத்த இந்தியாவை நிர்வாகம் செய்ய முடியாது என்பது. இதையே பல விதமாகவும் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார்கள். மோடி குஜராத் என்ற ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனால் அது மட்டுமே இந்தியாவின் பிரதமராகும் தகுதியை அளித்து விடாது. அது மட்டுமே மாபெரும் இந்தியாவை ஆளும் தகுதியை அவருக்கு அளித்து விடாது ஆகவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆக அருகதை அற்றவர். ஆகவே மக்களே அவருக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்பதே இவர்கள் சொல்ல வரும் செய்தியின் சாரமாகும். இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் எழுதியும் சொல்லியும் ஒரு விஷப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தில் உள்ள அபத்தத்தை முதலில் காணலாம்
மோடி குஜராத்தை நான்காவது முறையாக ஆட்சி செய்து வருகிறார். அவர் குஜராத்தை அமெரிக்கா போலவோ வளர்ந்த வளமான ஐரோப்பா நாடுகள் போலவோ இன்னும் முழுமையாக மாற்றி விடவில்லை. அதற்கு முன்பாக 50 ஆண்டுகள் மோசமான ஆட்சியை அவரால் வெறும் 15 ஆண்டுகளில் மாற்றி விடவும் முடியாது. அதற்கான மந்திரக் கோல் எதுவும் அவரிடம் கிடையாது. இருந்தாலும் எதிர்காலம் குறித்த தீர்க்கமான பார்வையுடனும் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் நிர்வாகத் திறனாலும் ஆட்சி நிர்வாகத்தைப் பெரும் அளவு கணணிப் படுத்துவதினால் ஊழலை குறைக்கும் விதமாகவும் ஆட்சி செய்து வருகிறார். அவரது நிர்வாகத்தினால் மின்சாரம், நீர் மேலாண்மை, விவசாயம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்து அதற்கான விளைவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளன. ஐ நா சபை முதல் மத்திய அரசாங்கம் வரை அவரது நிர்வாகத்தைப் பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக குஜராத் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் அவர் மீது மாநில அனுபவம் மட்டுமே உள்ளவர் மத்திய அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அவநம்பிக்கை விதைக்கப் பட்டு வருகின்றன.
மோடியை விட்டு விடலாம். ஒரு கார்ப்போரெட் நிர்வாகம் தனது நிர்வாக மேலதிகாரிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்? ஒரு ஐ டி நிறுவனத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு சின்ன ப்ராஜக்ட்டை மேனேஜ் செய்த மேனேஜரை அதை விட அடுத்து பெரிய ப்ராஜக்ட்டை நிர்வாகிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விற்பனை நிறுவனத்தில் ஒரு மாவட்டத்தில் விற்பனையை மேலாண்மை செய்த அதிகாரியை மாநில அளவின் அதிகாரியாக தேர்ந்தெடுக்க்கிறார்கள். மாநில அனுபவம் உடையவர்களை அகில இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவின் பல்வேறு ரீஜியன்களுக்கோ அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் நிர்வாகிக்கும் ஒரு பொறுப்புக்கு ஏற்கனவே இந்தியா முழுதும் நிர்வாகித்த அதிகாரிதான் வேண்டும் என்று எந்த நிறுவனமும் பிடிவாதம் பிடிப்பதில்லை. முன் அனுபவம் அதை விடச் சிறிய துறையிலோ, பகுதியிலோ இருந்தாலும் அதன் அடிப்படையிலேயே அதை விடப் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை.
இந்திய அரசு பதவிகளை எடுத்துக் கொண்டாலும் சரி மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்களை மாநில நீதிபதிகளாக்குகிறார்கள். மாநில நீதிபதிகளாக இருந்தவர்களைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியை நியமிக்கும் பொழுது நீ ஏற்கனவே இந்தியாவின் தலமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை. நீ மாநில அளவில் ஹைக் கோர்ட்டுகளில்தான் நீதிபதியாக இருந்துள்ளாய் ஆகவே உன்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு அமர்த்த முடியாது என்று எவரையும் மறுப்பதில்லை
மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை.
ஆனால் மோடி என்று வரும் பொழுது மட்டும் இவர்கள் வைக்கும் வாதம் என்ன? அவருக்கு மாநில அனுபவம் மட்டுமே உள்ளது ஆகவே அவரை மத்தியில் பிரதமராக்க முடியாது என்று. சரி அந்த அபத்தமான வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட அவருக்கு மாற்றாக இந்த அறிவு ஜீவிகள் வைப்பது எவரை? ராகுல் காந்தியையும், சோனியாவையும், சீத்தாராம் யெச்சூரிகளையும், கேஜ்ரிவால்களையும் தானே? ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உள்ளவர்தான் வேண்டும் என்றால் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் உள்ள தேர்வு என்ன? தேவகவுடாவும். வாஜ்பாயியும், குல்ஜாரிலால் நந்தாவும் தானே? மற்றவர்கள் உயிருடன் இல்லை. இதில் வாஜ்பாயியும் நந்தாவும் முதுமை அடைந்தவர்கள் சுயநினைவில் இல்லாதவர்கள். தேவகவுடா மட்டுமே பிரதமராக இருந்த அனுபவம் உடைய ஒரெ தகுதியுள்ள நபர். அவைத்தான் இந்த மோடி எதிர்ப்பாளர்கள் முன்னிறுத்துகிறார்களா என்ன?
ஆக மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது. இந்து மதத்தை நம்பும் ஒருவர் அதை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் பிரதமர் ஆவதைக் கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அனைத்து விதமான மோடி எதிர்ப்பாளர்களும் இவை போன்ற சொத்தைக் காரணங்களை முன் வைத்து மோடியை எதிர்த்து அவர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட பாடு படுகிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிகிறார்கள்.
மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது என்பது மற்றொரு வாதம். அதுவும் இதைப் போலவே அபத்தமான ஒரு வாதமே. ஆகவே அனைத்து விதங்களிலும் முன் அனுபவமும் திறமையும் நேர்மையும் உடைய ஒரு தகுதியுள்ள தலைவர் மோடி அவர் குஜராத் போலவே இந்தியாவையும் நிர்வாகிப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்து அவரை ஆதரிக்க வேண்டும்.
செய்வார்களா? செய்வார்களா?
செய்வார்களா? செய்வார்களா?
No comments:
Post a Comment