Showing posts with label ஏசுநாதர். Show all posts
Showing posts with label ஏசுநாதர். Show all posts

Sunday, November 14, 2010

ஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா? ஏன்?





அப்புசாமி அவசர அவசரமாக குப்புசாமியைப் பார்க்க ஓடி வந்தார். முகத்தில் மிகவும் பதட்டம் தெரிந்தது.

குப்புசாமி: என்ன அப்பு, ஏன் இப்டி தல தெறிக்க ஓடி வர, என்ன ஆச்சு?

அப்புசாமி: குப்பு, எனக்கு காவே வல்ல! ராத்திரி தூங்கிட்டிருந்தேனா, ஒரு கனவு.. கடவுள் வந்து என்ன வரம் வேணும்ன்னு கேட்டாரு.. நான் 'எனக்கு காவே வரக்கூடாதுன்னு' வேண்டிகிட்டேன். அதுலருந்து எனக்கு 'காவே' வரல.

குப்புசாமி குழம்பிப்போனார். விஷயம் இதுதான். அப்புசாமியின் கனவில் கடவுள் தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்று கூற, அப்புசாமியோ தனக்கு சாவே வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டார். கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்து விட்டார்.

காலையில் ஒருவன் அப்புசாமியின் பெயரைக் கேட்க டக்கென்று 'அப்புமி' என்று கூறியிருக்கிறார். எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தும், பாவம் அவருக்கு 'சா'வே வரலை. அந்த பதட்டத்தில் தான் குப்புசாமியைப் பார்க்க ஓடோடி வந்து விஷயத்தை சாவில்லாமல் 'கொல்லிக்' கொண்டு இருக்கிறார். மேலும் பார்ப்போம்.

குப்புசாமி: அடப்பாவி, கனவுல தானேடா வரம் கேட்ட, இப்பவுமா அது பலிக்குது!

அப்புசாமி: என்னவோ தெரியல குப்பு, நான் அதிர்க்கி (ஷாக்) ஆயிட்டேன். கொஞ்ங்க நேரமா இப்டி தான் பேத்தறேன்.

குப்புசாமி: அடப்பாவி, உன் கூட பேசிட்டிருந்தா கொஞ்ச நேரத்தில நானும் கக்கா கிக்கீன்னு பேசுவேன் போலருக்கே!

அப்புசாமி: கேலி பண்ணாத குப்பு! காலைல இருந்து எல்லா கடவுளையும் மாத்தி மாத்தி வேண்டிக்கிட்டேன் இது கரியாக மாட்டேன்குது...ஐ மீன் கரெக்ட் ஆக மாட்டேன்குது.

குப்புசாமி: அட அப்பு, கடவுள்ங்கறது ஒன்னே ஒன்னு தான். அவங்கவங்களுக்கு பிடிச்ச உருவத்தில கும்பிடறதனால பல சாமிங்க இருக்கு. நீ ஏன் எல்லாத்தையும் கும்பிடற. ஏதாவது ஒரு சாமிய மனச அமைதியா வெச்சி தியானிக்க வேண்டியது தானே!

அப்புசாமி: குப்பு, எனக்கு ஒரு 'கந்தேகம்'... ஐ மீன் 'டவுட்'

குப்புசாமி: என்ன?

அப்புசாமி: எல்லா கடவுளையும் கும்பிட்டாலும் கார்த்தால கர்க்குக்கு போய் ஏகுவை... ஐ மீன் தேவாலயத்துக்கு போயி கர்த்தர் முன்னாடி நின்ன உடனே என் கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணி ஊத்த ஆரம்பிக்கிடுக்கு. ஒரே அழுகையா வந்துது. ரெண்டு நிமிடம் நல்லா அழுதப்பறம் மனம் அமைதியா இருந்திக்கு. வேற எந்த 'காமியை' ஐ மீன் 'காட்' ஐ பாத்தாலும் இப்டி ஆகறதில்லை. அது ஏன் குப்பு எனக்கு இப்டி நடந்தது.

குப்புசாமி: அப்பு, அதுக்கு ஒரு மனோவியல் காரணம் இருக்கு.

அப்புசாமி: என்ன?!!!

குப்புசாமி: நீ காலைல என்ன மூட்ல இருந்த...

அப்புசாமி: ஐயோ, 'கா(சா)வே' வரலையே ஒரே பயத்துல அழுவுற நிலைமைல இருந்தேன்!

குப்புசாமி: அதான் காரணம். விலாவாரியா சொல்லனும்னா, ஒரு சினிமா பார்க்கறோம். அந்த சினிமால ஹீரோ குடும்பத்துக்காக கடினமா உழைக்கறவனா இருந்து க்ளைமேக்ஸிலே ரொம்ப கஷ்டப்பட்டு சாகற மாதிரியும் படம் முடிஞ்சா அந்த காட்சிகள்ல நம்மை அறியாம மனசு கனமாகி விழியோரங்கள்ல கண்ணீர் வந்திடும். ஏசுநாதர் பற்றி மக்களிடம் சொல்லப்படும் கதைகளும் இதே போன்றதொரு சோகக் கதை தானே! மக்களுக்காக உழைத்து கடைசியில் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கும் ஒரு கதாபாத்திரம். அதனால் அந்த கதை நாயகனின் உருவத்தைப் பார்த்த உடனேயே மனசு கனமாகி அழுகை வருது.

பாரு அப்பு..., பொதுவாவே எல்லாருமே நிறைய கஷ்டத்துல இருப்பாங்க. யாருக்கிட்டயாவது சொல்லி அழமாட்டோமான்னு நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. ஏற்கனவே மனம் நிறைய துக்கத்துடன் தேவாலயம் போறவங்க அங்க இருக்கிற சோகமான நம்ம கதைநாயகனைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழத்துவங்கிடறாங்க. அதைத்தான் நீயும் பண்ணிருக்க. எப்பவுமே கண்ணீர் விட்டு அழுதுவிட்டால் மனதில் உள்ள பாரம் குறைந்து மனது லேசான மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். இது ஹியூமன் சைக்காலஜி. அது தான் உனக்கும் நடந்திருக்கு.

அப்புசாமி: ஓ, அப்ப அதுக்கு என் மனது தான் காரணமா? கர்த்தரோட அருள் இல்லையா?

குப்புசாமி: அருள் இருக்கோ இல்லையோ தெரியாது.. ஆனா உனக்குள்ள முட்டிக்கிட்டு இருக்கிற அழுகைய வெளியில கொண்டு வர ஏசுவோட சோகமான உருவம் ஒரு உந்து சக்தியா பயன்பட்டுவிடுகிறது. அது தான் நிஜம். ஆனா இந்த சராசரி மனோவியல் வடிகால்களைக் காட்டியே பலபேரை மதம் மாற்றிவிடுகிறது மதபோதகக் கும்பல். மதம் மாறின பலபேர் ஏசுவை கும்பிட்டா மனசு அமைதியா இருந்திச்சி. அதான் மாறிட்டேன் என்பார்கள்.

அப்புசாமி: கரி... ஐ மீன் 'ரைட்டு', ஆனா அது தப்பில்லையே... அந்த கடவுளால ப்ராப்ளம் தீர்ந்தா நல்லது நடந்ததுன்னு எடுத்துக்கலாம்ல்ல.

குப்புசாமி: அங்க தான் எல்லாரும் தப்பு பண்றாங்க அப்பு, மனசு சமாதானம் அடையறது வேறு பிரச்சனைகள் தீர்வது வேறு. ஏசுவ கும்பிட்டா மனசு சமாதானம் கிடைக்குதுங்கறது சரி தான். ஆனா அவர்கள் பிரச்சனைக்கு தீர்வை அது கொடுக்கிறதா என்பதை தான் பார்க்கனும்.

உதாரணமா, உன்னை நாய் துறத்துதுன்னு வெச்சிக்கோ... நீ ஏசுவை மனசில நினைச்சிக்கிட்டதால உன் மனசு சமாதானமா இருக்கும். இப்போ பதட்டம் இல்லாதவனா அமைதியான மனசோட உன்னால ஓட முடியும். ஆனா நாய் துறத்துவது நிக்கலையே! என்ன பிரயோஜனம். மன அமைதியா இருந்தாலும் எவ்வளவு தூரம் நாய் துறத்தலுக்காக ஓடிக்கிட்டே இருப்ப?

அப்புசாமி: அதானே!

குப்புசாமி: உத்வேகத்தோட போராட்டங்களில் ஜெயிப்பது தான் சராசரி வாழ்க்கைக்கு முக்கியம். அதனால தான் இந்து கடவுளர்களெல்லாமே தீமையை அழிப்பவர்களாகவும், துஷ்டர்களை வென்று ஜெயிப்பவர்களாகவும் வெச்சிருக்காங்க. இது போன்ற கடவுளரை ஆதர்ஷ நாயகர்களாகக் கொள்ளும் போது நமக்கும் வெற்றி நாயகனாகவே இருக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். இன்னும் முனைப்புடன் வாழ்க்கையின் கஷ்டங்களை எதிர் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க இந்த உத்வேகம் உதவும். அதுக்கு தான் சாமியை அந்த மாதிரியெல்லாம் உருவகிச்சிருக்காங்க. இதெல்லாம் ஒரு மனக்கணக்கு தான்.

அப்புசாமி: அப்போ கர்த்தரை விட இந்துகடவுளர் தான் உயர்வு ன்னு கொல்றியா?

குப்புசாமி: நான் அப்படி சொல்லவரல. சாமின்னா எல்லாமே சாமி தான்.
நீ அழுவாச்சியா வந்திச்சுன்னியே அதுக்கு தான் இவ்வளவும் விளக்கினேன். உனக்கு ஏசுவை கும்பிடப்பிடிக்கும்ன்னா உங்க வீட்டு ராமர், க்ருஷ்ணர் சிவன் பக்கத்திலேயே ஏசுவையும் வெச்சிக்கோ. எந்த ரூபத்தை வேணும்னாலும் சாமியா கும்பிடற சிறப்பு இந்துக்களுக்கு மட்டும் தானே இருக்கு.

அப்புசாமி: ஆமாம் ஆமாம், அப்படி உயர்வான மதத்தில இருந்திக்கிட்டு கிலபேர் ஒரு கடவுள கும்பிடறதுக்காக போய் ஒரு மதமே மாறிடறாங்க. அவங்க அடையாளத்தையே அடியோட மாத்திக்கிட்டு வேற்று நாட்டு விகு(சு)வாகி(சி)களாகவும் ஆகிடறாங்க.

குப்புசாமி: இதைத்தான் 'வ' க்காண்டி ஒயின் ஷாப்பையே விலைக்கு வாங்கற கதைன்னு சொல்வாங்க.

அப்புசாமி: அதென்ன 'வ'

குப்புசாமி: அதான்பா 'குவாட்டர் கட்டிங்க்'

அப்புசாமி: அதெல்லாம் இருக்கட்டும் என் ப்ராப்ளத்துக்கு என்ன பண்ண...

குப்புசாமி: ஹா ஹா ஹா ஹா

அப்புசாமி: ஏன்பா இந்த ஹா ஹா....

குப்புசாமி: இல்ல, உங்க வீட்டு மொட்டை மாடிக்கு எப்ப போனாலும் உன்னை ஒரு காக்கா கொத்திக்கிட்டே இருக்குன்னு அடிக்கடி சொல்லுவியே..

அப்புசாமி: அதுக்கென்ன இப்போ...?

குப்புசாமி: ஹா ஹா இல்ல அப்பு, கனவுல சாமிகிட்ட வரம் கேட்டப்போ நல்ல வேளையா 'காக்கா'வே வரக்கூடாதுன்னு நீ கேக்கலை....

அப்புசாமி: கேட்டிருந்தா..?

குப்புசாமி: உன் உச்சரிப்பை தப்பா புரிஞ்சிக்கிட்டு சாமி அப்படியே ஆகட்டும்ன்னு சொல்லப்போய் உனக்கு 'கக்கா' வே வராம போயிருந்தா நீ என்ன பண்ணியிருப்பேன்னு நினைச்சேன். ஒரே சிப்பு சிப்பா வந்திடிச்சு.... ஹாஹ்ஹ்ஹ் ஹாஹ்ஹ் ஹா... ஐயோ ஐயோ!

அப்புசாமி: "போடா..ங்..இவனே..." என்று குப்புவை முறைத்துக்கொண்டே அடுத்த தூக்கத்திற்காக வீட்டை நோக்கி நடக்கலானார். மறுபடி கனவு வருமா?


.

Tuesday, March 9, 2010

ஏசுவுக்கும் முன்னால் ரந்திதேவன்!


கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபாகாரம் அசுத்தமாகிவிடுகிறது. கருணை காட்டுகிறோம் என்கிற நமது எண்ணமே ஒரு வித கர்வத்தைக் கொடுத்துவிடுகிறது. இதனால் செய்யும் உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது.

பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம் அஹங்கார நீக்கம் ஊண்டாக வேண்டும். நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக் கோண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த 'வேண்டியவர்கள்' என்ற வட்டத்தை நம் ஊறார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால் அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது.

'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

நம் சாஸ்திரங்களில் அவரவருக்கான அனுஷ்டானங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கவேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருகிறார்கள். இதில் முதலாவதே அஹிம்ஸை தான். ஸத்யம் கூட இதற்குப் பிறகுதான் வருகிறது. அந்த ஸத்யத்துக்கும் இலக்கணம் கொடுக்கும் போது, வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயால் சொல்வது மட்டுமல்ல. எது ஜீவராசிகளுக்கு இதமானதாக, பிரியமானதாக இருக்கிறதோ அதுவே ஸத்யம் என்று சொல்லியிருக்கிறது.

பாப செயல்களினால் தான் துக்கம் வருகிறது. ஒருவரின் பாபத்தை இன்னொருவர் வாங்கிக் கொண்டு அனுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் பாபத்தை வாங்கிக் கொண்டு தீர்ப்பதற்கே ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தத் தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். "எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்" என்றான். "எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு அனுபவிக்கிறேன். அதனால் அவற்றின் துக்கம் தீரட்டும்" என்றான்.
(யார் ரந்தி தேவன்?!)

இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.

ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிராமல் நம்மாலான உபகாரத்தைப் பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


சரி, யாரிந்த ரந்திதேவன்!

ஸ்ரீமத் பாகவதத்திலே ரந்தி தேவன் பற்றி கூறப்பட்டுள்ளது. பரீக்ஷீத்து, யயாதி, துஷ்யந்தன், பரதன் இவர்களின் வம்சத்தில் வந்தவன் தான் ரந்திதேவன். இவர்களுடைய சரித்திரம் பரவலாக அறியப்பட்டிருப்பதுபோல், ரந்தி தேவனின் சரித்திரம் அறியப்படவில்லையென்றாலும் மனித நேயம்மிக்க ரந்திதேவனின் புகழ் இன்றும், இவ்வுலகிலும், அவ்வுலகிலும் நிலவுகிறது' என்கிறது பாகவதம்.

“ரந்தி தேவனின் காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ‘வானம் பொய்த்து, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ரந்திதேவன் தன்னிடம் இருந்ததையெல்லாம் தானம் செய்தான். தானும் தன் குடும்பமும் பட்டினியால் வாடியபொழுதும்கூட பொருள் வரவர அவனும் அவன் குடும்பத்தாரும் விரும்பி அறம் செய்தனர். ‘தனக்குப் போக, தானம்’ என்ற விதியை அவர்கள் கடைபிடிக்கவில்லை. “தானத்திற்குப் போக, தனக்கு” என்பது அவர்களின் கோட்பாடாகத் திகழ்ந்தது.

ரந்திதேவனும் அவன் குடும்பத்தினரும் தொடர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் பட்டினிகிடந்தார்கள். நாற்பத்தொன்பதாவது நாள் காலையில் நெய் கலந்த பால்கஞ்சி சிறிதளவு கிடைத்தது. அதை அவன் சாப்பிட ஆரம்பித்தவுடன், வாசலில் ஓர் அந்தணன் தோன்றினான்.

அந்த அந்தணன் “ஐயா, நான் மிகுந்த பசியால் வாடுகிறேன். இருட்டிக் கொண்டு வருகிறது. உயிர் பிரியும் தருவாயில் இருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் உணவு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். எங்கும் எதிலும் எம்பிரானையே காணும் ரந்திதேவன், 48 நாட்களுக்குக் பிறகு தனக்குக் கிடைத்த நெய்கலந்த பால் கஞ்சியை அந்தணனுக்கு மனமுவந்து வழங்கினான். பசி மயக்கம் தெளிந்து, அந்தணன் தனது வழியே சென்றதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரந்தித்தேவனின் உடல் பசியாலும், தாகத்தாலும் நடுங்கியது. அப்பொழுது அவனுடைய குடும்பத்தார் தங்கள் பங்கில் ஒரு பகுதியை அவனுக்கு அளித்தனர். அதைக் கண்ட அவன் சாப்பிட முற்பட்ட பொழுது பட்டினியால் வாடும் ஒரு விவசாயி வந்தான். ரந்திதேவன் மகிழ்சியுடன் தனது பங்கை அவனுக்கு அளித்தான்.

அந்த நேரம், நான்கு நாய்களுடன் ஒரு வேடன் வந்தான். “ஐயா! இந்த வாயில்லா ஜீவன்களும், நானும் கடும் பசியால் துன்பப்படுகிறோம். தயவு செய்து எங்களுக்குக் கொஞ்சம் உணவளியுங்கள்” என்று வேண்டினான்.

ரந்திதேவனின் குடும்பத்தார் தங்கள் பங்காக வைத்திருந்த அத்தனை உணவையும், வேடனுக்கும் நாய்களுக்கும் அன்புடன் அளித்தனர். ரந்தி தேவனும் அவன் குடும்பத்தாரும் அந்த வேடனையும் நாய்களையும் அந்தப் பரமனாகவே கருதி, வணங்கி வழி அனுப்பி வைத்தனர்.

இந்த மூன்று பேரும் சென்ற பிறகு ஒரே ஒருவர் பருகுவதற்குப் போதுமான நீர் மட்டும் இருந்தது. அதை ரந்திதேவன் பருக முற்பட்டான்.

அப்பொழுது ஓர் புலையன் வந்து, “ஐயா! தாகத்தால் சாகும் தருவாயில் இருக்கும் எனக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள்” என்று இறைஞ்சினான். கருணையையே தன் இயல்பாகக் கொண்ட ரந்தித்தேவன் தன்னிடம் இருந்த தண்ணீரை உடனே அவனிடம் மிக்க மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.

“நான் கடவுளிடம் பொன் வேண்டேன். பொருள் வேண்டேன். பதினாறு பெரும் பேரும் வேண்டேன். ஏன் மோக்ஷத்தைக் கூட வேண்டேன். ஆனால் உடல் படைத்த ஜீவராசிகளுக்குப் பெரும் துன்பத்தைத் தருவது பசிப் பிணி. பசிப் பிணி நீங்கி உயிர்வாழ விழையும் ஒரு எளிய ஜீவனுக்கு ஜீவாதாரமான நீரையளிப்பதால் என்னுடைய பசி, தாகம், களைப்பு, தள்ளாமை, சோகம், இவை யாவும் நீங்கும் என உளமாற நம்புகிறேன். "எனது மக்களின் துயரங்கள் அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். 'பசியாலும், தாகத்தாலும் வாடும் ஒரு ஜீவராசிக்கு உணவும், நீரும் அளிக்கும் பாக்கியம் எனக்கு எப்பொழுதும் இருக்க வரமருள வேண்டுமென்பதே எனது பிரார்த்தனை" என்றார்.

அக்கணத்தில் மும்மூர்த்திகளும் ரந்தி தேவன் முன்பு தோன்றி, “மன்னா! நாங்கள் மூவர்தான் உன்னிடம் நால்வராக வந்தோம்” என்றனர். பற்றற்றான் பற்றினைப் பற்றி வாழ்ந்து வந்த ரந்திதேவனுக்குக் கடுமையான மாயை கணப்பொழுதில் மறைந்து போயிற்று.

எனவே அஹிம்சைக்கும் தியாகத்திற்கும் ஏசுநாதர் முதல் மனிதர் அல்ல. அந்த வரிசையில் ஏசுவும் உண்டு.