Saturday, January 2, 2010

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 2 கொடியது, இனியது, பெரியது, அரியது


ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.

“பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.

ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, “சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார்.

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் “பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.

“சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....” என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.

“பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!” என்று கூறினான்.

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, (கதலித்தண்டு) வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.

ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.

‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

முருகனை வணங்கிய ஒளவையாரின் மனத்திலிருந்த புலமைக் கர்வம் அகன்றது; நெஞ்சில் அமைதி குடி கொண்டது.

ஒளவையாரைப் பார்த்து முருகன், “ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள்” என்றான்.

“முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்” என்றார் ஒளவையார்.

அப்போது முருகன் "கொடியது, இனியது, பெரியது, அரியது இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வாயாக!" என்று கேட்டான். அதற்கு ஒளவையார் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற அவர்கையில்
உண்பதுதானே

இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும்.

தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று கொடுமையானவற்றுள் எல்லாம் மிகவும் கொடுமையானது அன்பு இல்லாத பெண் இடும் உணவை உண்பதுதான் என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

இந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால், தனிமையில் இருப்பதுதான் இனிமையானது. அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது.

இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.


பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால் தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத்தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர்.

எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்று ஒளவையார் பாடினார்.

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது.

அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார்.

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததே ஆகும். ஆன்மீகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆனால் நாத்திகம் தான் தமிழர் மரபு என்ற தோற்றம் உண்டாகும் வகையில் ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகம் தவறான பாதைக்குத் திருப்பப்பட்டு வருகிறது.

ஆனாலும் ஆன்மீகமில்லாமல் தமிழ் இல்லை என்பதற்கு ஒளவையாரே சான்று.

Friday, January 1, 2010

பயமே ஜெயம்!


சென்ற பதிவில் விவேகானந்தர் எதிலெல்லாம் பயங்கள் இருக்கிறது என்றும் துறவில் தான் பயமே இல்லை என்றும் கூறியிருந்தார் என்பதைப் பார்த்திருந்தோம்.

ஆனால் எல்லோரும் ஓர் இரவில் துறவியாகி பயத்தை வென்று நிர்பயத்துவம் எய்தி சிரிக்க முடியாதே! சம்சார வாழ்க்கை நமக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணித்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்நிலையில் பயத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

நம்மைப் போன்றவர்கள் பயத்தை ஒரு உந்து சக்தியாகவே பார்க்க வேண்டும். எதிலெல்லாம் நாம் பயப்படுகிறோமோ அதிலிருந்து தான் விடுதலை அடைகிறோம். சாமானிய மனிதன் முதலில் உணர்வு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும். விடுதலை அடைந்தவனே ஆனந்தத்தை அனுபவிப்பான்.

பயமே இல்லை என்று நடிப்பவனைவிட பயத்தால் உந்தப்பட்டு வீரிட்டு எழுந்து விடுதலை அடைந்தவனே உலகை வெல்வான். ஆனந்தத்தை அனுபவிப்பான். ஆகவே பயத்தை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்துங்கள். பயத்தை படிக்கட்டாக பயன்படுத்துங்கள். பயந்து தெளியுங்கள். பயமே ஜெயம் என்பீர்கள்!

இறப்பின் மீது பயம் கொள்வீர்
ஞானத்திற்கு அதுவே உந்து சக்தி!

வறுமையின் மீது பயம் கொள்வீர்
உழைப்பிற்கு அதுவே உந்து சக்தி!

வயோதிகம் மீது பயம் கொள்வீர்
வாலிபத்திற்கு அதுவே உந்து சக்தி!

தோல்வியின் மீது பயம் கொள்வீர்
வெற்றிக்கு அதுவே உந்து சக்தி!

நோயின் மீது பயம் கொள்வீர்
உடற்பயிற்சிக்கு அதுவே உந்து சக்தி!

வன்முறை மீது பயம் கொள்வீர்
அன்பிற்கு அதுவே உந்து சக்தி!

இயற்கையின் மீது பயம் கொள்வீர்
இறைதேடலுக்கு அதுவே உந்து சக்தி!

காலத்தின் மீது பயம் கொள்வீர்
வேகத்திற்கு அதுவே உந்து சக்தி!

மறுமையின் மீது பயம் கொள்வீர்
புண்ணியம் தேட அதுவே உந்து சக்தி!

துயரங்கள் மீது பயம் கொள்வீர்
விடுதலைக்கு அதுவே உந்து சக்தி!

பயத்தாலே புண்ணியவான் ஆனான் ரத்னாகரன். கொலை, கொள்ளையில் ஈடுபட்டேனும் பொருள் ஈட்டி பெற்றோரையும் குடும்பத்தையும் காத்துவந்தான். பாவங்கள் பல செய்து வந்தான்.

ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், "நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?" என்றார். என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.

"சரி, நீ செய்து கொண்டிருக்கும் பாவங்கள் எவ்வளவு பெரியது தெரியுமா? மரணத்திற்கு பின்னால் மறுமையின் வாழ்வில் நீ அதனால் என்னென்ன துன்பங்கள் அனுபவிப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.

ரத்னாகரனுக்கு மறுமையைப் பற்றி ஒரு பயம் உண்டானது. நாரதர் தொடர்ந்தார் "உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும்பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?" என்றார். இதற்கு ரத்னாகரன் 'ஆம்' என்றான். அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன்," என்றார்.

ரத்னாகரன் பெற்றோரை பார்க்கச் சென்றான். வீட்டிற்கு சென்றதும், "என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?" என குடும்பத்தாரிடம் கேட்டான்.

அவனது பெற்றோர், "பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்" என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர்.

ரத்னாகரன் கலக்கமுற்றான். அத்தனை பாவங்களுக்கும் நான் மட்டுமே பொறுப்பாவேனா என்று பயந்தான். அதனால் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணி நடுங்கத் துவங்கினான். பாவங்களின் அழுத்தம் அவனை வாட்டியது.

மீண்டும் நாரதரை சந்திக்க வந்தான். 'இந்த பாவங்களிலிருந்து விடுபட எனக்கு உபாயம் சொல்லுங்கள்' என்றான்.

நாரதர் ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். பாவங்களின் மீது பயம் கொண்டவன் ஓரிடத்தில் அமர்ந்து தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்தான்.

அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி "வால் மீகம்" வளர ஆரம்பித்தது. வால்மீகம்' என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார்.

அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் "வால்மீகி" என அழைக்கப்பட்டான்.

இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

மறுமையின் மீதிருந்த பயமே ரத்னாகரனின் உந்து சக்தியானது. அவன் வால்மீகியாக மாற அதுவே தூண்டுகோலானது.

ஆக நம்மைப் போன்று துறவுக்கு போக முடியாத சாமானியர்களுக்கு வாழ்க்கையின் பயணத்தைக் கடக்க அந்தராத்மாவின் உந்து சக்தியே அதிகம் தேவை. எனவே பயப்படுங்கள். அதே வேகத்துடன் பயத்தை வெல்லுங்கள்.

பயத்தை வெல்வோம், விவேகானந்தர் ஆவோம்.


கொசுறு: புதுப்பேட்டை என்ற படத்தில் தனுஷ் முதன் முதலாக குற்றம் செய்யப்போவார். கூட வந்தவன் கேட்பான்

"என்ன பயமா இருக்கா?"

"ம்ம்ம்"

"பரவாயில்லை, பயம் தான் நம்மள காப்பாத்தும்"