சொல்ல மறந்துட்டேனே! சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்! ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொல்லிக்கொண்டிருந்த மூத்த சாமியிடம் தொடர்ந்து விவாதிக்கும் போது இடையே மக்களது சமூக பழக்கங்களும் நம்பிக்கைகளும் பற்றி பேச்சு எழுந்தது.
நான் கேட்டேன் "சாமீ, சில சமூகத்தார் பூனூல் போட்டுக்கறாங்களே! அது எதுக்கு? அந்த நூல்ல ஏதாவது சக்தி இருக்கா? இல்லன்னா அவங்க தான் உசந்தவங்கன்னு காமிக்கவா? இல்லன்னா பூனூல் போட்டாதான் ஒருத்தன் நல்லவனா இருக்க முடியும்ன்னு ஏதாவது இருக்கா" என்றேன்.
ரொம்ப பக்குவமுள்ள மனிதரான அவர் சலனமே இல்லாமல் விளக்கினார்.
"தம்பி எல்லாமே ஒரு மனோவியல் விஷயம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலேயும் மனிதர்களை செம்மைப்படுத்த, அவர்தம் உணர்ச்சிகளை பக்குவப்படுத்த ஏதாவது உபாயத்தை கடைபிடித்து வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பின்னால் அந்த உபாயம் நீர்த்துப் போய் காலம் மாறும் போது அவர்தம் உபாயங்களும் மாறும். அப்படி அந்த காலத்தில் நம் முன்னோர்களால் கடைபிடித்து வரப்பட்ட ஒரு மனோவியல் ரீதியான உபாயம் தான் இந்த பூனூல் அணிந்து கொள்வது. ஒரு உதாரணம் மூலம் சொல்றேன் கேளு" என்று தொடர்ந்தார்.
ஒரு யானையை குழந்தையாக இருக்கும் போது அதன் கால்களை சனல் கயிறு மூலம் கட்டி விடுகிறார்கள். அந்த கயிறு தன்னை கட்டுப்படுத்துவதாக யானை நினைத்துக் கொண்டது. அந்த கயிறு இருந்ததால் சிறிய யானை அதைத் தாண்டி வெளியேற பயப்பட்டது.
யானை வளர்ந்த பிறகும் அது அதே சனல் கயிறுக்கு கட்டுப்பட்டு அசையாமல் இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் யானைப் பாகனிடம் கேட்டான் ‘யானையின் பலத்திற்கு இந்த சனல் கயிறு ஒரு விஷயமா? அது ஏன் அறுத்துக் கொண்டு போகவில்லை என்று?’ கேட்க, பாகன் சொன்னான் ‘யானைக்கு சனல் கயிறு ஒரு விஷயம் இல்லை. ஆனால் சிறுவயதில் கயிறால் கட்டப்பட்ட அந்த பயம் இப்போதும் இருப்பதால் அது அசையாமல் கட்டுப்பட்டு நிற்கிறது. எல்லை மீறுவதில்லை" என்றான்
'சில சமூகத்தவர்கள் பூனூல் போடுவதும் இப்படிப்பட்ட ஒரு சனல் கயிறு மனோவைத்தியம் தான். சிறு வயதிலேயே அந்த நூல் மூலமாக அடையாளப்படுத்தி, நீ இன்னன்ன தவறுகள் செய்யக்கூடாது என்று மனதில் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கி விட்டால் வளர்ந்த பிறகும் அந்த நூல் இருக்கும் வரை அவன் தவறிழைக்க ஆழ்மனம் ஒத்துக்கொள்ளாது என்பதே காரணம்' என்றார்.
"ஓஹோ அதான் காரணமா? ஆனா சாமீ ஒரு நூல் ஒரு மனுஷனோட நல்லது கெட்டதை கட்டுப்படுத்தீரும்னா உலகத்துல உள்ள எல்லாருமே அப்படி ஒரு நூலை போட்டுக்கலாம் தானே" என்றேன்.
"நூல்ன்னு பாத்தா அது மனுஷனைக் கட்டுப்படுத்தறதில்லை. எப்படி சனல் யானையைக் கட்டுப்படுத்த முடியாதோ அப்படித்தான் உடலைச் சுற்றிய நூலும். உணர்ச்சிப் பித்து தலைக்கேறி மதம் பிடித்த யானைக்கு இரும்பு சங்கிலி கூட சனலாகிவிடும். அது போலவே உணர்ச்சிப் பெருக்கால் சுய கட்டுப்பாட்டை இழக்கும் எந்த மனிதருக்கும் பூனூல் என்ற ஒரு நூல் உடம்பில் இருப்பது எந்த கட்டுப்பாட்டையும் கொடுத்து விடாது. ஆனால் மிகச்சிறிய வயதிலிருந்தே ஒருவனது ஆழ் மனதில் நீ இந்த நூலை உடையவன் அதனால் நீ இன்னன்ன தவறுகளைச் செய்யக்கூடாது என்று திரும்ப திரும்ப சொல்லி ஆழ் மனதில் பதியவைத்தால் அதுவே பின்னாளில் நிலைக்கும் என்ற நம்பிக்கைதான்.
சின்ன வயசுல கத்துக்கற விஷயம் பசுமறத்தானி போல பதியும்னு பெரியவங்க சொல்வாங்களே, அந்த முயற்சி தான் இது. எவ்வளவு அழுத்தமாக சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே பலன் கிடைக்கும். இந்த முயற்சி பெரும்பாலும் பலன் குடுத்திருப்பதாகத்தான் பெரியவங்க சொல்றாங்க. இப்ப புரியுதா" என்றார்
"சரி சாமி! அது உண்மையிலேயே பலனைக் கொடுத்திச்சா! அப்படீன்னா எல்லாரும் அதை ஏன் ஏத்துக்கலை?" என்றேன்.
"தம்பி சாமி! இந்து மதம் எப்போதுமே எக்ஸ்பரிமண்டலாக விஷயங்களை அனுகி அதில் உயர்ந்தபட்ச உண்மை எதுவோ அதையே தனதாக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த தர்மத்தில் வாழும் மனிதர்களுக்கு அந்தச் சுதந்திரமும் உண்டு.
அந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்கும் அது தனக்குத் தேவையில்லை என்று தங்களுக்கென்று தனி பாதை அமைத்துக் கொள்ளவும் நம் சமூக மனிதர்களுக்கு சுதந்திரமும் உண்டு. அப்படி சுதந்திரம் உள்ள மனிதர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த இப்படி ஒரு நூல் தேவை இல்லை.
நாங்கள் கடவுளுக்கு கட்டுப்பட்டிருப்பதே போதும். அதுவே எங்களை செம்மைப்படுத்தும் என்று சொல்லி அப்படி ஒரு வழக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.
தனியொரு நபரின் கட்டளைக்கு கீழ்படிவது தான் மதம் என்றில்லாமல் எல்லாவற்றிலும் உயர்ந்தது எதுவோ அதை ஒவ்வொரு சமூகமும் தனது வாழும் முறையாக ஆக்கிக் கொள்ளும் உரிமை இந்து தர்மத்தில் உள்ளது. அதன் படி இந்துக்களில் சில சமூகத்தவர் ஏற்றுக் கொண்டும் சில சமூகத்தவர் இது தேவையில்லை என்றும் இருந்திருக்கிறார்கள்." என்றார்.
'அப்போ பூனூல் போட்டவங்க உசந்தவங்க, அதப் போடாதவங்க தாழ்ந்தவர்கள்ன்னு சொல்லி ஒரு பேச்சு இருக்கே, அது?" என்றேன்.
"அதெல்லாம் காலப்போக்கில் உண்டான ஜாதீய அடையாளம். ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கை முறையே அவரவர்களின் அடையாளங்களாகப் போனதால் வந்த வினை. இப்போ கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் லுங்கி கட்டின நம்மாளும் ஒன்னா ஸ்டார் ஹோட்டலுக்கு போனா கோட் போட்டவனுக் குத்தான் முதல் மரியாதை. ஏன்னா கோட் போட்டவன் உசந்தவன்னு மனசில பதிஞ்சு போச்சு. கோட் போட்டு வாழும் ஒருவனது வாழ்க்கை முறை அவனுக்கு அடையாளமாப் போனதால இந்த நிலை. அதனால கோட்டு போடறதும் லுங்கி கட்டறதும் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைதானே ஒழிய அது மனிதர்களுக்கான அடையாளம் ஆகாதுன்னு மக்களுக்கு புரிய வெச்சிட்டா
இந்த அடையாள மார்கங்கள் ஒழிஞ்சு மறுபடியும் எல்லாரும் ஒரே மாதிரி வாழ ஒரு வழி பிறக்கும்.
அப்படி ஜாதி மத பேதமில்லாம எல்லோரும் ஒன்னா ஒரே இடத்தில கூடவெக்கிற வேலையத்தான் நம்ம ஐயப்பன் செஞ்சிக்கிட்டு இருக்கார். என்ன நான் சொல்றது" என்றார் சாமீ.
"அம்மாம் ஆமாம். ஜாதி பேதமில்லாமல் எல்லோரும் ஒட்டி உரசி நின்னு, அடையாளமே தெரியாத ஒருவர் கூப்பிடும் சரணத்திற்கு, ஜாதி பாக்காம மற்றவர் பதில் சரணம் சொல்வது நம்ம சபரிமலையில தானே" என்று நானும் அமோதித்தேன்.
நீங்களும் ஆமோதிதீர்களா! அப்போ சேந்து சொல்லுங்க...
சாமியே சரணம் ஐயப்பா!
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்