Saturday, January 2, 2010

மரணத்திற்கு அப்பால் - 3


"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.

ஒரு வழியாக மூன்று மணிக்கு கோவிலின் கதவு திறந்தது. குருவாயூரப்பனின் தரிசனத்தை அதிகாலை பார்த்தோம். நாங்கள் கோவிலை விட்டு வெளியே கூட்டத்தைப் பார்த்தால் கிட்டத்தட்ட இரு கிலோமீட்டருக்கான மக்கள் ஒரே தெருவில் மூன்று வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாக ஒரு மணிக்கு வரிசையில் நின்றதால் அதிகாலை தரிசனம் கிடைத்து ஊருக்கு கிளம்ப முடிந்தது. இல்லையேல் ஒரு நாள் முழுவதும் வீணாகியிருக்கலாம். எல்லாம் ட்ரில் மாஸ்டர் போல எங்களை விரட்டி விரட்டி வழிநடத்திய குருசாமி உபயம்.

ஒரு வழியாக வண்டி கிளம்பியது. அப்போது கண் மூடியவன் தான். பிறகு உடன் வந்தவர்கள் வழியெல்லாம் கோவில்களில் நிறுத்தி ஒரே பக்தி ரசத்தைப் புழிந்தார்கள். என்னால் அதற்கு மேல் கண்முழிக்க முடியவில்லை. நன்றாக உறங்கிவிட்டேன்.

மாலை ரயில் ஏறும் உற்சவம் நடந்தது. கேரளத்திற்கு பிரியாவிடை கொடுத்து பயணிக்கத் துவங்கினோம். வண்டியில் அருகே உட்கார்ந்திருந்த குருசாமியிடம் என் ஆத்மாவை அறியும் தாகத்தை தணிக்க மீண்டும் பேசத் துவங்கினேன்.

நல்ல மனிதர் சலித்துக் கொள்ளாமல் அவரும் பேசத்துவங்கினார்.

"உபநிஷத்துக்கள் எல்லாமே "ஆத்மா" என்ற உண்மைப் பொருளை பற்றி அறியும் வழியை ஒவ்வொரு கோணத்தில் எடுத்துச் சொல்வதாகவே இருக்கிறது. எளிதாகச் சொன்னால் இது ஒரு "self realisation".

நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

இதைத் தான் ஒற்றை வாக்கியமாக "தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) என்று சொல்லுவார்கள்.

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்."

"சரி இதை நசிகேதஸ் எந்த வகையில் தெர்நிது கொள்கிறான்" என்றேன்.

"நசிகேதஸ் ஒரு சிறுவன் தான். ஆனால் அவனுக்குள்ளே ஞானத்தைப் பற்றிய கேள்விகளும் விடை காண வேண்டும் என்ற பிடிவாதமும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. முக்கியமாக வைராக்கியம் இருப்பவனே அதை அடைவான் என்பதற்கு நசிகேதனே உதாரணம்."

"கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்" என்றேன்.

"முழுசா சொல்றேன் கேளு" என்று சொல்லத்துவங்கினார்.

ஒரு காலத்தில் வாஜ்ரவஸ் என்ற அரசன் இருந்தான். அவன் நற்பலன்கள் அடையவேண்டும் என்பதைக் கருதி ஒரு பெரிய யாகம் ஒன்றை நடத்தி வந்தான். யாக குண்டத்தில் அக்னி வளர்த்து உயர்ந்த பொருட்களையெல்லாம் அக்னியில் இட்டு இறைவனுக்கு அற்பனிப்பதாக சொல்லப்படுவதே யாகம்.

வாஜ்ரவஸ் இந்த உலகத்தையே ஆள வேண்டும். உலகில் உள்ள எல்லாப் பொருளும் தனக்கே உரியதாக வேண்டும் என்ற வேண்டுதலின் பேரில் விசுவஜித் என்ற யாகத்தை செய்தான். இந்த யாகத்தின் நிபந்தனை என்னவென்றால் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையுமே தானமாக கொடுக்க வேண்டும். எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.

எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் எல்லாம் கிடைக்கும் என்பது யாகத்தின் நோக்கம். ஆக அரசன் தன்னிடம் இருக்கும் பொன், பொருள் பசுக்கள், குதிரைகள் என்று யாவற்றையும் தானம் கொடுக்கத் துவங்கினான்.

இவற்றை வாஜ்ரவஸின் மகனான நசிகேதன் அருகிலே இருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு யாகங்களை அதன் தர்மம் மீறாமல் செய்ய வேண்டும் என்பதில் பிடிப்பு இருந்தது.

ஆனால் அரசனோ பால் சுறக்காத வயதான மாடுகளையும், கிழட்டு குதிரைகளையும் உதவாத பொருட்களையும் மட்டுமே தானமாக கொடுத்துக் கொண்டிருந்தான். இது யாகத்திற்கு விரோதமானது. தானமாக கொடுக்கும் பொருள் எதுவாகிலும் அது தானம் பெறுபவர்களுக்கு உபயோகப்பட்டால் தான் தானத்திற்கு பயன்.

அதனால் ஒன்றுக்கும் உதவாத பொருட்களையெல்லாம் தானம் என்று தன் தந்தை கொடுப்பதை பார்த்து நசிகேதன் வருத்தமுற்றான். எப்படியாவது தன் தந்தையின் தவறை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணினான். நேரடியாக கேட்டால் தந்தை கோபிக்ககூடும் என்பதால் மறைமுகமாக உணர்த்த நினைத்தான்.

அவன் வாஜ்ரவஸிடம் சென்று "தந்தையே, என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான். நசிகேதன் இப்படிக் கேட்டதற்கு காரணம் இருக்கு. ஒருவேளை தந்தை நீ எனக்கு உசத்தி, உன்னை எப்படி தானமாகக் கொடுப்பது என்று கேட்டால், உயர்ந்த பொருட்களைத் தானே தானம் கொடுக்க வேண்டும் நீங்கள் அவ்வாறு செய்யவில்லையே! என்று நாசூக்காக கேட்டுவிடலாம் என்று எண்ணினான்.

ஆனால் தந்தை எந்த பதிலும் சொல்லவில்லை. சிறுவன் ஏதோ கேட்கிறான் என்று இருந்துவிட்டான். மீண்டும் நசிகேதன் தந்தையிடம் "என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான். இப்போதும் ஒன்றும் சொல்லாமல் வேலையைப் பார்த்தான். மூன்றாவது முறையாகவும் "என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான்.

வாஜ்ரவஸ் கோபமாக கர்ஜித்தான் "உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்!"

இந்த வார்த்தை தான் நசிகேதன் எமனைச் சந்திக்க காரணமானது.
ரயிலில் இரவு உணவு உண்ண எல்லோரும் தயாரானோம். ரயிலும் வாழ்க்கையும் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்தது, அடுத்த நாளை நோக்கி.

தொடர்ந்து பயணிப்போம்...

மரணத்திற்கு அப்பால் - 4

2 comments:

அதிரை தங்க செல்வராஜன் said...

நல்ல உபயோகமான கட்டுரை, எழுதும்
நடை மிகவும் அருமை. நன்றி.

அதிரை தங்க செல்வராஜன்

hayyram said...

வருகைக்கு நன்றி திரு செல்வராஜன்! அடிக்கடி வாருங்கள். நிறைய பகிர்ந்து கொள்ளலாம்!