Sunday, February 23, 2014

விதுர நீதி!




திருதிராஷ்ட்ரர்: விதுரா! நீ மாபெரும் அறிஞன். இதுவரை கூறியதைப் போன்ற மேலும் பல நல்ல அறிவுரைகளை எனக்கு விளக்கிச் சொல்வாயாக. உன் சொற்கள் நற்பண்புகளை வலியுறுத்துகின்றன. உலக நன்மைக்கான விஷயங்களால் நிரம்பி விளங்குகின்றன. அவை அழகு ததும்பும் உண்மைகலாக வெளிப்படுகின்றன. என் மனம் திருப்தியுறாமல் மேலும் கேக விழைகிறது. 

விதுரர் கூறலானார்:  "மன்னா! மனிதர்களில் முதல் தரமான மனிதன் உலகிலுள்ள அனைவரும், அனைத்தும் சௌக்கியமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான். அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான். அவன் உண்மையையே பேசுவான். கனிவுடன் பழகுவான். உடல்-மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான்.

மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.

- விதுரர்.

No comments: