Sunday, March 23, 2014

ஜ்யோதிஷம் வேதபுருஷனின் கண்!!



கண் இல்லாதவன் குருடன், கண் எதற்காக இருக்கிறது? பக்கத்திலுள்ள பொருட்களைக் கையினால் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தூரத்திலுள்ளதன் ரூபம் தெரிய வேண்டுமானால், அப்பொழுது கண்ணினால் பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இடத்திலே தூரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ள நம்முடைய கண் எப்படி உபயோகப்படுகிறதோ, அப்படிக் காலத்திலே தூரத்தில் (அதாவது பல வருஷங்களுக்கு முன்னால் அல்லது பல வருஷங்களுக்கு அப்புறம் ) உள்ள க்ரஹ நிலைகளைத் தெரிந்து கொள்ள ஜ்யோதிஷ சாஸ்திரம்தான் உதவி புரிகிறது. இன்றைக்கு சூரியனும் சந்திரனும் 

மற்ற கிரஹங்களும் எங்கே இருக்கின்றன என்பதைப் பிரத்யக்ஷத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கண்ணில்லாவிட்டாலும் கையால் தடவியே கிட்டத்தில் உள்ளதன் ரூபத்தைத் தெரிந்து கொள்வதுபோல், ஜ்யோதிஷ சாஸ்திரம் தேவைப்படாமல் நம் கண்ணாலேயே பார்த்து, காலத்தில் கிட்டே, அதாவது நிகழ்காலத்தில் உள்ள கிரஹ நிலைமைகளை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் 50 வருஷத்துக்கு முன்னால் அல்லது பின்னால் கிரஹங்கள் எங்கே இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் ஜ்யோதிஷ சாஸ்திரத்தைப் பார்த்தாலே தெரியும்!

கிட்டத்தில் உள்ளதைத் தடவிப் பார்த்து, அதன் உருவத்தை அறிகிறபோதுகூட அது பச்சையா, சிவப்பா, வேறு என்ன கலர் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை அறியக் கண் வேண்டியிருக்கிறது. இதே போல, பிரத்யக்ஷத்தில் ஒரு கிரஹம் தெரிந்தால்கூட, அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பயன் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதை ஜ்யோதிஷந்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆகவேதான், ஜ்யோதிஷத்தை வேத புருஷனுக்குக் கண் என்றார்கள். வைதிகக் காரியங்களைச் செய்வதற்கு, இன்னின்ன க்ரஹம் இன்னின்ன க்ரஹம் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. 'நாள் பார்ப்பது', 'முஹ§ர்த்தம் வைப்பது'என்றெல்லாம் க்ரஹ நிலைகளை ஒட்டித்தானே சடங்குகளைப் பண்ண வேண்டியிருக்கிறது?இதனால் ஜ்யோதிஷம் நேத்ர ஸ்தானத்தைப் பெறுகிறது.

ஜ்யோதிஷத்துக்கு 'நயனம்' என்று ஒரு பெயர் உண்டு. 'நய'என்றால் அழைத்துக் கொண்டு போவது (to lead) . கண்ணில்லாதவனை இன்னொருவர்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது?அதனால் கண்தான் அழைத்துப் போகிற லீடராக இருக்கிறது என்பது தெரிகிறது!வேத கர்மாக்களைப் பண்ணுவதற்கான காலத்தை நிர்ணயம் பண்ணி, நம்மை அந்தக் காரியத்துக்கு அழைத்துக் கொண்டு போகிற கண்ணாக இருப்பது ஜ்யோதிஷமே.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

No comments: