"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.
ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்."
பொதுவாக தியானம் எனப்படுவது புலன்களை உள்நோக்கி செலுத்துவது என்பார்கள். பார்த்தலையும், கேட்டலையும், முகர்வதையும், சுவையறிதலையும் இந்த உடலின் உள்நோக்கி செலுத்த முயற்சித்தால், அதில் ஒருவர் வெற்றியடைந்தால் அவரே ஆன்மாவை தரிசனம் செய்ய முடிபவர் ஆகிறார் என்கிறார் எமதர்மன். இதற்கு முதல் படி புலன்களை நாம் நினைக்கும் இடத்திற்கு செலுத்த நாம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான பயிற்சிக்கு தியானம் உதவுகிறது.
உதாரணமாக ஒரு துறவியிடம் ஒருவர் தியானம் கற்க வந்தார். அவரிடம் அந்தத் துறவி "காட்டுக்குள் அமைதியாக அமர்ந்து அங்கே நீ என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றை என்னிடம் வந்து சொல்" என்று கூறி அனுப்பினார். தியானம் கற்க வந்த அந்த நபரும் அடர்ந்த காட்டுக்குள் சென்று அமர்ந்தார். ஓரிரு நாட்களில் மீண்டும் துறவியிடம் வந்து "காட்டுக்குள்ளே பறவைகளின் சப்தங்களைக் கேட்டேன், மிருகங்களின் கர்ஜனைகளைக் கேட்டேன், பறவைகளின் இறைச்சலைக் கேட்டேன், மரம் செடிகொடிகள் மற்றும் சறுகுகள் காற்றில் ஆடுவதன் சப்தத்தைக் கேட்டேன்" என்கிறார்.
துறவியோ, "நீ தியானம் செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை. மனதை இன்னும் ஒரு நிலைப்படுத்தி இன்னும் அமைதியாக இன்னும் புதியனவாக என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றைச் சொல்" என்கிறார். மீண்டும் காட்டுக்குள் போய் அமர்ந்து புலன்களை கூர்மையாக்கி சூழலை உணரத் துவங்குகிறார் அந்த சீடர். சில நாட்களுக்குப் பின் துறவியிடம் திரும்பி வந்து "ஐயா! தூரத்தில் அருவித் தண்ணீர் கீழே விழும் சப்தத்தைக் கேட்டேன். காற்றி கிளைகளுக்கிடையே ஓடிடும் சப்தத்தைக் கேட்டேன். எறும்புகள் ஊறும் சப்தத்தைக் கேட்டேன், மொட்டுக்கள் மலர்ந்திடும் சப்தம் கேட்டேன்" என்கிறார்.
துறவியோ இது போதாது மீண்டும் செல் என்கிறார். மீண்டும் சென்று பல நாட்கள் கழித்து திரும்பி வந்தவர் "இத்தனை நாள் காதில் கேட்க முடியாத மிகச்சிறிய சப்தங்களைக் கூட கேட்க முடிந்த நான் இந்த முறை எதையுமே கேட்கவில்லை. மனம் லயித்த நிலையில் என்னுள்ளேயே நான் இருந்து விட்டேன். என்னால் என் சூழலை உணரக்கூட முடியவில்லை. நான் முழுமையான நிசப்தத்தையே உணர்ந்தேன்" என்கிறார். துறவி கூறினார் "நீ தியானம் கற்றுக்கொண்டாய், இனி இதைத் தொடர்ந்து செய்துவா, உன்னை நீயே தரிசிப்பாய்" என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.
இவ்வாறு புலன்களை ஒரு இலக்கை அடையும் நோக்கோடு, இலக்கை நோக்கிச் செலுத்தும் பயிற்சியை மேற்கொள்ளும் போது அது தானாகவே நம் மனதுள் அடங்கும் என்பதை விவரிக்கிறது இந்தக்கதை. இவ்வாறு புலன்களை யார் உள்நோக்கிச் செலுத்திகிறாரோ அவரே ஆன்மாவை தரிசிக்கிறார் என்கிறார் எமதர்மன்.
எமதர்மன் மேலும் தொடர்கிறார், "நசிகேதா! பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குடையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்"
"கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பது போல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்."
அரணிக்கட்டை என்பது நெருப்பை பற்ற வைக்க உதவும் ஒரு மரப்பொருள். அரணிக்கட்டைகள் இரண்டை எடுத்து ஒன்றாக உரசும் போது அதிலிருந்து அக்னி வெளிப்படும். யாக குண்டத்தில் தீமூட்ட இந்த கட்டைகளை பயன்படுத்துவார்கள். எமதர்மன் ஆன்மா ஒரு மனிதருக்குள்ளே எப்படி உரைந்திருக்கிறது என்பதை இந்த அரணிக்கட்டையை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார். அரணிக்கட்டையை உரசும் போது அக்கினி தோன்றுகிறது. அதாவது அரணிக்கட்டைக்குள்ளே அக்னி கருப்பொருளாக உரைந்து இருக்கிறது. இரு கட்டைகளை உரசும்போது அது வெளியே வருகின்றது. அல்லாமல் அந்த மரத்துக்குள் அக்னி இருப்பதை கண்ணால் பார்க்க முடியாது. அதைப்போலவே நமக்குள்ளே உரைந்திருக்கும் அக்னி போன்றதே ஆன்மா என்கிறார் எமதர்மன்.
"நசிகேதா! யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே."
"யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ" என்று எமதர்மன் கூறுவதிலிருந்தே இறைவன் எனப்படுவது பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்திருக்கும் ஒருவகை சக்தி என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆக அளப்பறிய பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எதுவோ அதுவே இறை சக்தி எனக் கொள்க. பிரபஞ்சத்தின் சக்தியால் தான் பூமியின் சுழற்சியும் அதன் மாற்றங்களும் உண்டாகிறது. பூமியின் அந்த மாற்றங்களால் தான் நம் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. இவ்வாறு பிரபஞ்ச சக்தியை மீறி தனியாக எதுவும் நிகழ்வதில்லை என்பதையும் அத்தகைய பிரபஞ்சத்தின் சக்தியாக எதை நம்மால் ஊகிக்க முடிகிறதோ அதுவே நம்முள்ளில் இருக்கும் ஆன்மா என்று விளக்குகிறார்.
"நசிகேதா! இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்."
"அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை" என்பதை சித்தர்கள் மொழியாகக் கூறுவார்கள். அதைத்தன் உபநிஷத்தின் மூலமாக எமதர்மனும் விளக்குகிறார். நமது அறிவால் அளக்க முடியாத மிகப்பெரிய சக்தியான சூரியன், பூமி மற்றும் கால அளவைகளில் அடங்காத மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள் இருக்கும் சக்தி. அதன் பெயரே ஆன்மா என்று எமதர்மன் கூறுகிறார். அதையே இன்னும் விளக்கி நம்முள் என்ன சக்தி இருக்கிறதோ, நம்முள் இருக்கும் ஆன்மாவின் சக்தி எதுவோ அதுவே பிரபஞ்சத்தின் சக்தியாகும். பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது. இதை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் தான் தனக்குள்ளே ப்ரபஞ்சத்தின் முழுமை இருப்பதை உணர்வார்கள். அவர்களே நிரந்தரமான அந்த சக்தியோடு கலக்கிறார்கள் என்கிறார் எமதர்மன்.
"நசிகேதா! இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்"
"இறைவனுக்குப் பிரியமானவனே! எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே. புகையற்ற ஒளி போல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே, நீ கேட்ட பொருளும் அவரே!"
ஆன்மாவை புகையில்லாத ஒரு தீபம் எப்படி நிலைத்தெரியும் ஒரு வடிவத்தைக் கொண்டதோ அத்தகைய வடிவமாக இதய மையத்தில் நிலைத்திருக்கும் சக்தியாக எமதர்மன் கூறுகிறார். இதயக்குகை என்பது எது...? உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயமா என்றால் இல்லை. அது இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது. அதை உணர்பவர் ஆன்மாவை உணர்பவராகிறார் என்கிறார் எமதர்மன்.
"நசிகேதா! மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்"
ப்ரபஞ்சத்தின் நிலையான சக்தி எதுவோ அதுவே ஆன்மாவின் சக்தி என்பதை புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சம் வேறு, நான் வேறு என்று நினைப்பவர்கள், நிலையாக இருக்கும் அந்த சக்தி வேறு நான் என்ற நினைப்பவர்கள் நிரந்தரமான சக்தியுடன் ஐக்கியம் ஆகாமல் மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள்.
"நசிகேதா! தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்"
தண்ணீர் கடலில் இருந்தாலும், கிணற்றில் இருந்தலும், குளத்தில் இருந்தாலும் அது தண்ணீர் தான். எந்த பாத்திரத்தில் இருந்தாலும் தண்ணீரின் இயல்பு ஒன்றாகவே இருக்கிறது. அது போலவே பிரபஞ்சத்தின் சக்தியும் நம்முள் இருக்கும் ஆன்மாவும் ஒன்றே. அதுவே உலகின் சகல ஜீவராசிக்குள்ளும் இருக்கிறது. அவை வெவ்வேறு உடலைப் பெற்றிருக்கிறதே தவிற அதன் குணங்கள் ஒன்றே. அத்தகைய ஆன்மா ப்ரபஞ்சத்துடன் ஐக்கியமாகும் போது தண்ணீரின் இரண்டு துளிகள் ஒன்றாக இணைந்து ஒரே துளி ஆவதற்குச் சமமாகும் என்று விளக்குகிறார் எமதர்மன்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!
விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.
மேலே கூறப்பட்டதில் பூர்ணம் என்பதற்கு பதிலாக தண்ணீர் என்று கூறி படித்துப் பாருங்கள். ஆன்மாவின் தன்மையை அறிவீர்கள்!
"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆன்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.
மரணத்திற்கு அப்பால் - 16