Wednesday, July 7, 2010

மரணத்திற்கு அப்பால் - 16


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் அனுப்பொருளும் அதன் சக்தியும் எதுவோ அதுவே நாமும் நம்முள்ளிருக்கும் ஆன்மாவும். நம் உடலும் ஆன்மாவும் இறுதியில் பிரபஞ்சத்திலே தான் ஐக்கியமாகிறது. தனித்து எங்கும் செல்வதில்லை. இவற்றை எமதர்மன் படிப்படியாக நசிகேதனுக்கு விளக்கி வருகிறார்.

"நசிகேதா! பதினோரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். உடல் ஆன்மா வசிக்க உதவும் ஒரு கருவிதான் என்பதை தியானித்து உனர்ந்தவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு உடலை ஒரு கருவியாக உபயோகித்துப் பின் அதிலிருந்து நீங்கும் உட்பொருள் எதுவோ அந்த ஆன்மாவே நீ கேட்டது!"

கண்கள், நாசிகள், செவி, குதம், பிறப்புக்குறி, தொப்புள் மற்றும் கருவுருவாகும் போது ஆன்மா உடலுக்குள் புகும் வாயிலாக கருதப்படும் உச்சந்தலை ஆகியவற்றையே எமதர்மன் உடலின் பதினோரு துவாரங்களாக குறிப்பிடுகிறார். இதில் தொப்புள் மற்றும் உச்சந்தலை துவாரங்கள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும். பிறந்த குழந்தையின் உச்சந் தலையை சிறிது காலத்திற்கு யாரையும் தொட விடமாட்டார்கள். ஏனெனில் தலைப்பகுதியானாலும் மிகவும் மென்மையான ஒரு பகுதியாக அப்பகுதி விளங்குவதே அதற்கு காரணம். மனிதர்கள் கருவாக உருவெடுக்கும் மண்டைஓட்டுடன் கூடிய தலைப்பகுதி வளருகையில் தலை ஒரு உருண்ட பஞ்சு போல இருக்கும். உச்சந்தலையின் அப்பகுதி மூலமாகவே ஆன்மா கருவினுள் புகுவதாக பெரியோர்கள் கூறுவார்கள். உடலைப் பேணிப்பாதுகாப்பதில் உச்சந்தலைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதும் அதனால் தான். ஆக எமதர்மன் இது போன்ற இடங்களையும் சேர்த்தே பதினோரு துவாரங்கள் கொண்ட உடல் என்று கூறுகிறார்.எனவே உடலை வெறுக்கவும் கூடாது, அதன் சுகங்கள் மீதும் மயக்கம் கொள்ளக் கூடாது. இந்த உடல் பாதுகாக்கப்படுவது உள்ளே அசைவற்று இருக்கும் ஆன்மாவுக்காகவே என்று உணர்ந்து மயக்கமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். அவ்வாறு எந்த ஆன்மாவிற்காக நாம் உடலைக் காக்கும் கடமையை மேற்கொண்டிருக்கிறோமோ அதுவே நீ அறிய விரும்புவது என்று நசிகேதனுக்கு எமதர்மன் விளக்குகிறார்.

"நசிகேதா! இந்த ஆன்மா எங்கும் செல்வது. தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது, அனைத்திற்கும் ஆதாரமானது, அண்ட வெளியில் காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது. பெரியது."

"நசிகேதா! பிராணனை மேலே இயக்குவதும், அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன."

பிராணன் உடலின் உள்ளிருந்து மேலே எழும்பி வெளியேறக்கூடிய சக்தி. மூச்சு வெளியேறுவது அந்த மேல் நோக்கிய சக்தியால் தான். அபாணன் என்பது கீழ் நோக்கிய இயக்கம். உடலில் இருந்து வாயு குதம் வழியாக வெளியேறுவது. உடலில் இருக்கும் வாயு இந்த இரண்டு மார்கம் வழியாக சீரான அழுத்தத்தில் பிரிவதும் அது தடையற்ற முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதுமே இந்த உடல் சரியாக இயங்குவதை வெளிப்படுத்தும். பூமிப்பந்தில் மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இந்த வாயுவானது உடலில் பத்து வகையான இயக்கங்களாக செயல்படுகிறது என ரிஷிகள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

அவற்றைப் பார்ப்போம்.

பிராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கிய இயக்கம்.
அபானன் - தொப்புளுக்கு கீழ் நோக்கிய இயக்கம்
வியானன் - எல்லா பக்க இயக்கம்
உதானன் - மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல் (சில வயோதிகர்கள் கழிவறையில் உயிர் நீப்பதை கேள்விப்பட்டிருப்போம், சிலருக்கு ஜீவன் வாய் வழியாகப் பிரியலாம், சிலர் கண்களை அகல விரித்து ஜீவனைத் துறப்பர். இத்தகைய வழிகளில் ஆன்மா வெளியேற உதவும் வாயு
உதானன்)
ஸமானன் - உணவு ஜீரணம், உனவை ரத்தம்போன்றவையாக மாற்றுதல். (உடல் செல்கள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் உயிர் வாழாதல்லவா, அவ்வாறு உடலின் ரத்த ஓட்டம் முதல் அனைத்து செல்களிலும் இருக்கும் வாயு ஸமானன்)
நாகன் - வாந்தி, ஏப்பம்
கூர்மன் - கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன் - பசி
தேவதத்தன் - கொட்டாவி
தனஞ்ஜயன் - உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

இவ்வாறு பத்து வகையாக வாயு நமது உடம்பில் செயல்பட்டு வருகின்றது என்கிறார்கள் ரிஷி முனிவர்கள். இந்த வாயுக்கள் அதனதன் வேலையை சீராக செய்யாமல் போனால் உடல் நோயுறக்கூடும். ஆக உடலின் அனைத்து இயக்கங்களும் இந்தப் பிராணனையே சார்ந்துள்ளன என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இவ்வாறான உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் அங்கே என்ன மிஞ்சுமோ அதுவே நீ கேட்ட பொருள்."

"எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பிராணனனும் அபானனும் இயங்குகின்றனவோ அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன."

வெறும் மூச்சு விடுவதால் நாம் வாழ்வதில்லை. உடலினுள்ளே இருக்கும் நிலையான பொருளான ஆன்மாவின் சக்தியே இந்த இயக்கங்களுக்கு காரணமாகிறது என்கிறார் எமதர்மன். அதாவது ஒரு மின் விசிறி ஓடுகிறாது என்றால் அதன் இறக்கையால் அல்ல. அதனுள்ளே ஓடும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தால் தான் அல்லவா! அது போலவே உடலை ஆன்மா என்ற சக்தி இயக்குகிறது என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். மரணத்திற்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்"

"புலன்கள் தூங்கும் போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை."

உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.

"நசிகேதா! ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது."


எந்தப் பொருளை எரித்தாலும் நெருப்பு ஒரே வடிவானதாகவே இருக்கிறது. அதே போலவே ஆன்மா மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்திலுமே ஒரே தன்மை உடையதாகவே இருக்கிறது. மரத்தையும் நாம் கடவுளாக வணங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஆன்மாவின் தன்மையை எமதர்மன் விளக்குகிறார்.

"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 17

10 comments:

kppradeep said...

Dear Ram sir,
I do not know from where you get all these info. May god bless you for your wonderful work

hayyram said...

தங்கள் ஆதரவிற்கு நன்றி பிரதீப்.

Sundara said...

Ram,

எப்படியோ புத்தர், இயேசு , அல்லா உள்ளிட்ட எல்லோரையும் கடவுளின் அவதாரமாக காட்டும் வகையிலான படத்தை வெளியிட்டு, உங்களின் சமரசத்தை மத நல்லிணக்கத்தை காட்டி இருக்கிறீர்கள். வரவேற்கிறோம்.

Sivasubramanian said...

ஐயா,
ஆத்மா அந்த பரமாத்மாவிலிருந்து வந்து பின் மீண்டும் அதையே அடைகிறது என்பதை த்வைதம் அத்வைதம் முதலியவை விரிவாக சொல்கின்றன. எப்படி முதன் முதலில் ஆத்மாவிற்கு கர்மம் உண்டாக ஆரம்பித்தது? கர்மத்தை கழிக்கத்தான் நாம் இந்த கர்மபூமியில் பிறந்தோம் என்றால், பூரணமமாக இருந்த நமக்கு முதலில் கர்மம் ஏன் ஏற்பட்டது? எதனால் மீண்டும் கர்மத்தை கழிக்க இந்த பிறவி? ஏன் இந்த விளையாட்டு? தயை கூர்ந்து விளக்கவும்.

hayyram said...

//எப்படி முதன் முதலில் ஆத்மாவிற்கு கர்மம் உண்டாக ஆரம்பித்தது?// என்ன ஐயா, இப்படி ஒரு சிக்கலான கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டீர்களே! முதல் ஆத்மா எது என்பது தெரிந்தால் தானே இதற்கு நான் பதில் கூற முடியும்?. சரி, டார்வின் தியரிப்படியே முதல் ஆத்மா அமீபா என்று கொண்டால் கூட அதற்குமுன் அது என்னவாக இருந்தது என்றும் என்ன கர்மம் செய்தது என்று நம்மால் எப்படி உணர முடியும்?

நாம் இருக்கும் இந்த அண்டவெளி மட்டுமல்ல, கோடானு கோடி அண்டவெளிகள், பலப் பல உலகங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன. இதில் முதல் அண்டவெளி எது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா?

நமக்கு மேலும் கீழும் நமக்கு அப்பாலும் நம்மை அப்பால் கொண்டும் பிரபஞ்சங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் பிரபஞ்சம் எது என்பதை நம்மால் அறிய முடியுமா?

ஆத்மா என்பது பிரபஞ்சத்தின் சக்தியின் ஒரு துளி என்று வைத்துக்கொள்வோம். அளவிட முடியாத இந்த பிரபஞ்சத்தின் முதல் சக்தி எது (சக்தியின் மூலம்) என்பது நம்மால் அளக்க முடியாதே! இதை நமக்கு கதை மூலம் உணர்த்தவே இறைவனின் அடி முடி காண முடியாமல் நாரதரும் பிரம்மனும் தோற்றார்கள் என்று கதை கூறுவார்கள். ஆக நாம் சக்தியின் ஒரு துளி என்பது வரை மட்டுமே நம்மால் உணர முடியும். இவ்வாறு பிரபஞ்சம் என்பதன் சக்தி மூலம் எது என்பதை அளவிட முடியாத சிறு துளிகள் நாம் என்பதாலேயே பிரபஞ்சத்தின் சக்தியுடன் நாம் ஐக்கியமாவது எப்படி என்பதைப் பற்றியே நம்மிடம் வலியுறுத்துகிறார்கள்,அன்றி அந்தச் சக்தியின் ஆரம்பத்தை அளவிடு என்று கூறவில்லை. அது நம்மால் ஆக முடிவதும் இல்லை. அதனால் நாம் தான் அது, அது தான் நாம் என்றுணர்ந்து அதனூடே ஐக்கியம் ஆகவேண்டும். அதையே உபநிஷத்தும் வலியுறுத்துகிறது.

மேலும், நம்முடைய பிறப்பை மட்டும் தான் நாம் கட்டுப்படுத்த முடியும். நமது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளின் பிறப்பை கூட நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் இந்து தர்மம் ஒவ்வொரு தனி மனிதனையும் ஆத்ம விசாரம் செய்யச் சொல்கிறது. ஒவ்வொரு தனிமதினதையும் நீயாக உன் பிறப்பைக் கட்டுப்படுத்த சாதகம் செய் என்கிறது. கூட்டமாக எதையோ நம்பி அது தான் தெய்வம் அது உன்னை காத்திடும் என்று கூறுவதில்லை.

மேலும் ஒன்றை விளக்க விரும்புகிறேன்! ஒரு மனிதனின் எண்ணற்ற பிறப்பு என்பது ஒரு முத்து மாலையைப் போன்றது. ஒவ்வொரு பிறப்பும் ஒரு முத்து என்றும் அத்தனை முத்துக்களினூடே இருக்கும் ஒரே நூலிழை போன்றது தான் ஆத்மா என்றும் பெரியோர்கள் கூறுவார்கள். ஆக நம்முடைய முதல் கர்மா எது என்பதே நம்மால் உணர முடியாத போது நம்மாள் அளவிட முடியாத சக்தியின் முதல் ஆத்மாவும் அதன் முதல் கர்மாவையும் சத்தியமாக நம்மால் எண்ணிப்பார்த்துவிட முடியாது. எனவே நாம் முதல் ஆதமாவாக எப்போது பிறந்தோம் என்று நம்முடைய முதல் கர்மாவை தேடத்துவங்குவோம். நம்மை நாம் அறிந்த பின் முதல் ஆத்மாவின் முதல் கர்மாவை தேடுவோம் என்பது அடியேனின் கருத்து. இந்த பதிலில் தங்களுக்கு திருப்தி இல்லையெனில் இன்னும் கேளுங்கள், தொடர்ந்து விவாதித்து தெளிவு பெருவோம்.

Sivasubramanian said...

ஐயா,
.// பிரபஞ்சம் என்பதன் சக்தி மூலம் எது என்பதை அளவிட முடியாத சிறு துளிகள் நாம் என்பதாலேயே பிரபஞ்சத்தின் சக்தியுடன் நாம் ஐக்கியமாவது எப்படி என்பதைப் பற்றியே நம்மிடம் வலியுறுத்துகிறார்கள்,அன்றி அந்தச் சக்தியின் ஆரம்பத்தை அளவிடு என்று கூறவில்லை. அது நம்மால் ஆக முடிவதும் இல்லை. அதனால் நாம் தான் அது, அது தான் நாம் என்றுணர்ந்து அதனூடே ஐக்கியம் ஆகவேண்டும். அதையே உபநிஷத்தும் வலியுறுத்துகிறது//
உண்மை தான். பிறந்தால் இறந்து தான் ஆகவேண்டும். இது நியதி. இறக்க வேண்டும் என்றால் பிறக்க தான் வேண்டும் என்றும் கொள்ளலாம். எனவே அதனுடன் ஐக்கிய வேண்டும் என்றால் என்றோ ஒரு நாள் அதனிடமிருந்து பிரிந்திருக்க வேண்டும்.எது நம்மை பிரித்தது?அதனுடன் இருந்துருக்கும் வரை பாபம் இல்லை புண்ணியம் இல்லை கர்மம் இல்லை அகங்காரம் இல்லை.பூரணதுடன் பூரணமாய் ஆனந்தமயமாய் இருந்திருப்போம் ஏனெனில் இப்போது நாம் முயசிப்பதும் அதற்காகவே.இடையில் ஏன் இந்த பிரிதல் பின் சேர்தல்? நடுவில் மாயை வேறு? இது என் ஐயம்.

hayyram said...

//எது நம்மை பிரித்தது?// சிக்கலான கேள்வி. வேண்டுமானால் அறிவியலாளர்களின் பிக் பேங்க் தியரியில் இருந்து பார்க்கலாம். ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது நாமிருக்கும் அண்ட வெளி என்கிறார்கள். நெருப்புப் பிழம்பிலிருந்து இத்தனை சூரியன்களையும், பூமிகளையும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பிரித்தது எதுவோ அதுவே பூரணத்திலிருந்து நாம் பிரியவும் காரணமாகியிருந்திருக்கிறது எனலாம். நம்முள் எந்த பொருளுக்கு ஆத்மா என்று பெயரோ அதே பொருள் தான் சூரியனின் மையப்பகுதியிலும் இருக்கிறது. பூமியின் மையத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பு பிழம்புதான் பூமிப்பந்தின் ஆத்மா. சுழலுவதும் மழை பெய்வதும் அதன் கர்மா! அந்த மழையால் இடியும் மின்னலும் உண்டானது கர்ம வினை. அந்த கர்ம வினையின் பயனாகத் தோன்றிய முதல் உயிரி அமீபா! அந்த அமீபாவின் கர்மம் இனவிருத்தி என்று கொண்டால் அந்த கர்ம வினையின் பயன் பரினாம வளர்ச்சி, மனிதர்கள். ஆக பிரபஞ்சத்தின் நிலையில்லா கர்மமும் அதன் வினையும் 'நாம்'. ஆக நாம் பிறந்ததும் நம்முடைய வாழ்க்கை சுழல்வதும் நமக்கு மேல் இருக்கும் மிகப்பெரிய சக்தியான பிரபஞ்சத்தின் கர்மத்தால் உண்டானது. ஆக பிக் பேங்க் வெடிப்பு முதல் கர்மம் என்று நமது சிற்றரிவிற்கு எட்டியவரைக் கொள்ளலாம். முதல் நெருப்புக் குழம்பு எங்கிருந்து வந்தது என்று கேட்டு விடாதீர்கள். எனக்கு தலை சுற்றுகிறது. ஆக முதல் கர்மாவிலும் முதல் உயிரின் தொடக்கத்திலும் பாவம் புண்ணியம் இருக்கவில்லை. பின் உயிர்கள் ஒன்று இரண்டான போது ஒன்றின் பசிக்கு இன்னொன்று உணவானபோது தான் பாவமும் புண்ணியமும் பிறந்திருக்க வேண்டும். பின்னர், முதல் பாவம் அதற்குப் பலனாக் வேறு பிறப்பு, பின்னர் அதில் பாவம் அதனால் இன்னொரு பிறப்பு என்று நீண்டு நம்வரை வந்திருக்கிறோம். இந்த பதில் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். இல்லையேல் மீண்டும் கேளுங்கள்! சேர்ந்து சிந்திப்போம்! விடைகாணுவோம்!

Sivasubramanian said...

மிக்க நன்றி.நிச்சயம் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையில் பதிலளித்துள்ளீர்கள்." எல்லா பிறப்பும் பிறந்திழைத்தேன்" என்ற கருத்தை வழிமொழிகிறீர்கள்.நிச்சயம் நம் முன்னோர்கள் காட்டிய வழி, சொன்ன தத்துவங்கள் நம் அறிவிற்கு புரியாத வகையில் இருந்தாலும் அவைகள் சத்தியமானவை. மிகப்பெரிய உண்மைகளை எளிமையாக கதைகள்,சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் மூலம் நம் அறிவிற்கு எட்டும் அளவிற்கு சொல்லி ஆத்மவிசாரணை செய்ய தூண்டியுள்ளர்கள். ஆனால் இன்று மூலத்தை மறந்து வெறும் சடங்கு சம்பிரதாயங்களை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம்.பலரும் கேலி செய்யும் வகையில் (குறிப்பாக நம் மதத்தினரே) இருப்பது தான் மிக மிக வேதனையாக உள்ளது.உங்கள் எழுத்தின் மூலம் பல உண்மைகளை தெரிந்து கொள்ள உதவிவுள்ளீர்கள்.நீங்கள் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும்.இறைவன் ஆசீர்வதிப்பாராக.

hayyram said...

மிக்க நன்றி Sivasubramanian. இறைவன் அருளால் இன்னும் தொடர்வோம்.

jagadeesh said...

முதல் நெருப்புக் குழம்பு கடவுளிடம் இருந்து வந்தது.