சுயநலத்திற்காக எதையும் கெடுக்கும் குணம் கொண்டவர்கள் நாடாண்டால் தேசம் நாசமாய்த்தான் போகும். அதன் கண்கூடானச் சான்றாக 2 ஜி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி பலரது முகத்திரையைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.
தன் சுயலாபத்திற்காக நாட்டைக் கெடுப்பவர்கள் தன்னைக்காத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் கெடுப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இது போன்ற கெடுதிகளைச் செய்பவர்களை எல்லாம் ஒரே குடும்பத்திற்குள் அடக்கிவிடலாம் என்றால் மிகையாகாது. காலம் தோறும் இது போன்ற திருடர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டும் இவர்களைத் தொடர்ந்து அரசியல் வாதிகளென்றும் மக்களுக்காக பாடுபடுபவர்கள் என்றும் தமிழகத்து ஜனங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் மனிதர்களா அல்லது மாக்களா என்ற சந்தேகத்திற்கு விடைகிடைக்காதோ எனத் தோன்றுகிறது.
முகத்திரை கிழிபட்ட இன்னொரு செய்தி பற்றி இப்போது பார்ப்போம். 'கலைஞர் கருணாநிதி' - தனது அரசியல் சுயலாபத்திற்காக ஒருவரது பாடலை எப்படிக் கெடுத்து அதனை அப்படியே மக்களை ஏற்கச்செய்தார் என்பதை கொஞ்சம் பார்க்கலாம். பார்ப்பனரைத் திட்டும் கருணாநிதி தனக்கு ஆதாயம் வேண்டுமென்பதற்காக அதே பார்ப்பனரைக் குளிர்விக்க எத்தகைய காரியம் செய்தார் என்பதைப் பார்ப்போம்.
திரு . மு வலவன் எழுதிய "திராவிடமா? தீராவிடமா?" என்கிற புத்தகத்திலிருந்து குறிப்புள் சில:
"கருணாநிதி எனும் கோடாரியின் கையில் அடுத்து அகப்பட்டுக் கொண்ட பூ மாலையானது பேராசிரியர் மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ்த்தெய்வ வணக்கப்பாடலாகும். கருணாநிதி தான் ஏதோ தமிழுக்கு உண்மையிலேயே சாதித்து விட்டதாக எண்ணிக்கொண்டு மணோன்மணீயம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளில் 1970ல் அறிமுகப்படுத்தியதை பெருமையோடு தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம்.
கருணாநிதி தேர்ந்தெடுத்த மனோன்மணியம் நாடகக் காப்பியத்தில் பாயிரம் என்ற தலைப்பின் கீழ் கடவுள் வணக்கமாக இடம் பெற்ற "தமிழ்த் தெய்வ வணக்கம்" பின்வருமாறு:
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந்ந்தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பலஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே"
கவிக்குலக் கருணாநிதி மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய இந்த அற்புதமான செய்யுளில் எத்தகு படையெடுப்பு இனக்கலப்பு மொழிக்கலப்பு மொழியழிப்பு போன்ற பேரிடிகள் சூழ்ந்தபோதும் தமிழ் வடமொழிபோல் வழக்கிழந்த மொழியாகாமல் இன்னும் சீரிளமைத் திறத்தோடு செந்தமிழாய்க் கோலோச்சி வாழ்கின்ற பாங்கினை நிறுவும் வரிகளைப் பார்த்தார்.
ஆனால் ஈ. வெ ரா வின் உண்மை வாரிசு என்று ஊரார் அறியத் தம்பட்டம் அடிக்கும் இவர் பார்ப்பனரும், வடமொழிப் பற்றாளர்களும் தன் செயலைப் பாராட்ட வேன்டும் என்பதற்காக இந்தத் தீண்டரிய திருப்பாடலைக் கையில் எடுத்துக் கண்டபடி தணிக்கை செய்து பின்னர் உயிரிழந்த உடலாக்கி அதனையே மேடைகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்குமாறு செய்துவிட்டார். "ஆச்சாரியார் வியூகம் வகுத்தால் அங்கே தான் ஆபத்து" என்று அபிமன்யூ படத்தில் திரு ராஜாஜி அவர்களை இழிவுபடுத்தி வசனம் எழுதிய கருணாநிதி அண்ணாவுடன் சேர்ந்து ராஜாஜியுடன் கூட்டு வைத்துக் கொண்ட பொழுது "மூதறிஞர் ராஜாஜி" என்று அவர் அடிவருடியாக மாறி மெஎடைக்கு மேடை முழங்கினார் (....)
'தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து அழிக்கும்' என்பதற்கிணங்க கருணாநிதி சுந்தனாரின் திராவிட நல்திருநாடு என்ற சொல்லைத் திராவிட நல் திருநாடு என மாற்றியும் வழக்கொழிந்த வடமொழியின் இயல்பினைச் சுட்டும் வரிகளை நீக்கியும் இப்பாடலை வெளியிட்டால் பார்ப்பனர் வரவேற்பர் என்று தப்புக் கணக்கு போட்டார். தன்னைப் பகுத்தறிவுவாதி என்றும் முற்போக்கு சிந்தனையுடையவன் என்றும் பொய் முழக்கமிடும் கருணாநிதியின் முகமூடி இந்த இழி செயலால் கிழிந்து தொங்குவதைப் பாருங்கள்"
புத்தகம்: - "திராவிடமா? தீராவிடமா?"
ஆக பார்ப்பனரை திட்டுவது போல திட்டி விட்டு அவர்களை குளிர்விப்பதற்காக, ஒருவர் அரும்பாடுபட்டு இயற்றியச் செய்யுளை வெட்டி ஒட்டி அப்பாடலாசிரியரை அவமதித்து நடந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.
மொத்தப்பாடலில் இருந்து -
"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பலஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாஉன்"
இத்தனை வரிகளை அகற்றி விட்டு " உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே" என்ற வரிகளை மட்டும் இணைத்து அதனை மக்களிடம் மறைத்து தமிழ்த்தாய் வாழ்த்து என பள்ளி தோறும் பாடும்படியும் செய்திருக்கிறார். இது தமிழக மக்களுக்கு எத்தகைய துரோகம். உண்மைப்பாடலை மறைத்து ஒருவரது சுயநலத்திற்காக திருத்தப்பட்ட பொய்யான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை நிஜமென்று நம்பி தமிழக மக்கள் இது வரை தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பார்ப்பன வசைபாடியவர் அதே பார்ப்பனர்களை தாஜா செய்வதற்கென, தன் சுயநலத்திற்காக திருத்தப்பட்டதொரு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவது அந்த தமிழண்ணைக்கே செய்த மிகப்பெரிய துரோகம் அல்லவா? அவமானம் அல்லவா?
இப்படி பல வழிகளில் தமிழர்களை ஏமாற்றி துரோகம் செய்த கும்பல்கள் இன்று கூட்டம் கூட்டமாக 2ஜி 3 ஜி 4 ஜி எனக் கூட்டுக் கொள்ளை அடித்து அவற்றின் ஆதாரங்களை அழித்தும் திருத்தியும் மக்களை ஏமாற்றி இருக்கின்றனர்.
இவர்களது துரோகம் பலவழிகளில் மக்களிடம் வெளிப்பட்டு முகத்திரை கிழிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன.
ஆனால் சுரணை இல்லாத மக்கள் இந்த துரோகிகளைத் தொடர்ந்து நம்புகிறார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து உருவான கதை எப்படி மறைக்கப்பட்டிருக்கிறதோ அது போல பற்பல மோசமான ஊழல்கள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் சூடு சுரணை தமிழகத்து மக்களுக்கு அல்லவா வேண்டும்?
'தமிழ்த்தாய்' என்பதாவது ஒரு கற்பனை கதாபாத்திரம். கருணாநிதியிடம் போய் 'உன் சுயநலத்திற்காக திருத்திய பாடலை எனக்கு வாழ்த்துப்பாட்டாகப் பாட வைத்ததாயே ஏன்?' ஏனக் கேட்கத் தெரியாது.
ஆனால் தமிழக மக்களுக்கு சூடு சுரணை உள்ளதா?
இருந்தால்...