Wednesday, May 30, 2012

சாணக்கியன் சொல்!ஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது.

இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும்.

மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும்.

நால்வர் சேர்ந்து வெளியில் செல்வது மகிழ்ச்சிகு உதவும்.

ஐந்து பேர் சேர்ந்து க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வது துணை பயக்கும்.

போரென்று வரும்போது பலர் சேர்வது நலம் பயக்கும்.

தெய்வ பக்தி உள்ளவளும், வீட்டு வேலைகளில் திறமைசாலியும், கற்பு உள்ளவளுமே உயர்ந்த மனைவி!

கெட்டவர்கள் உள்ள கிராமத்தில் குடியிருத்தல், கீழ்மக்களிடம் பணி புரிதல், சுவையில்லாத உணவு, எரிந்து விழும் மனைவி, முட்டாளான மகன் ஆகிய இவையாவும் ஒரு மனிதனுடைய உடம்பை நெருப்பு இல்லாமலே எரித்து விடுகின்றன.

பால் கறவை அற்றுப் போன ஒரு மலட்டுப் பசுமாடு எப்படி உபயோகம் அற்றதோ அதேபோல கல்வியும், தெய்வ பக்தியும் இல்லாத மகனால் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை!

ஒரு சந்திரன் இருளைப் போக்குகிறது. ஆனால் நக்ஷத்திரங்கள் ஆயிரமிருந்தும் இருளைப் போக்க முடியாது. அது போல நூறு குணமில்லாத மகன்களை விட ஒரு குணமுள்ள மகன் மேலானவன் ஆவான்.

தர்மத்தில் பற்று, பேச்சில் இனிமை, தானம் கொடுப்பதில் உற்சாகம், நண்பனிடம் நேர்மை, குருவிடம் பணிவு, உள்ளத்தில் கம்பீரம், நடத்தையில் சுத்தம், நற்குணங்களுக்கு மதிப்பு, சாஸ்திரங்களில் தேர்ச்சி, உருவத்தில் அழகும், சிவனிடத்தில் பக்தி இவை எல்லாம் சான்றோரின்
லக்ஷணங்கள் ஆகும்.

- சாணக்கியர்

Monday, May 28, 2012

வீர சாவர்க்கர்!

வினாயக் தாமோதர் சாவர்க்கர்

இன்று தலை சிறந்த தேசபக்தரும் சுதந்திர போராட்ட வீரருமான வீர சாவர்க்கரின் பிறந்த தினம்!

இந்த தேசபக்தி வீரருக்கு நமது வணக்கங்களை செலுத்துவோமாக!Born: May 28, 1883
Died: February 26, 1966
Friday, May 25, 2012

ஜுனூன் ஜுனூன்!'ஜுனூன்' என்று ஒரு தொலைக்காட்சி டப்பிங் தொடரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழில் 'பிடிவாதம்' என்று மொழி மாற்றி போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த டப்பிங் தொடர் அதன் கதையை விட அதில் பேசப்பட்ட தமிழாலேயே ப்ரபலானது எனலாம். அப்படி ஒரு சிரிப்பை வரவழைக்கும் கேலிக்குரிய தமிழாக்கமாக இருந்தது. இன்றைக்கும் நண்பர்களை மிரட்டும் தொனியில் பேசிவிளையாடினால், "போடா போ, நாங்கல்லாம் தாத்தா நகர்க்கரையே பாத்தவைங்க, எங்கிட்டயேவா" என அந்தத் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்திப் பேசுவார்கள். அந்த அளவுக்கு அந்த தொடரின் பாத்திரங்கள் பழகிப்போய் இருந்தன. ஜுனூன் தமிழ் என்றே ஒரு தமிழ் ப்ரபலமானது தனி கதை. சரி இப்போது எதற்கு அந்த விவரணங்கள் என்று கேட்கிறீர்களா?

ஒன்றுமில்லை, பிடிவாதம் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் ஏனோ இந்த தொலைக்காட்சித் தொடர் ஞாபகம் வந்தது.

பிடிவாதம் என்பது மனிதர்களுக்கு இயற்கையாகவே உடன் பிறந்த ஒரு குணம். அந்த உணர்ச்சியை பயன்படுத்தி காரியம் சாதிக்காதவர்கள் இருக்க முடியாது. கூடவே அதே குணத்தால் தானே அழிவதும் அல்லது பிறரது அழிவுக்கு வழிவகுக்கவும் கூட முடியும். பிடிவாதம் என்கிற உணர்வை நாம் எந்த நோக்கில் செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே விளைவுகள் அமைகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்!

பிடிவாதம் என்றவுடன் நினைவுக்கு வரும் நபர் திரு.காந்தி! அவரது பிடிவாதம் உலகம் முழுவதும் ப்ரசித்தம்! அந்தப் பிடிவாதத்தின் விளைவுகளை வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக அனுபவித்தார்கள். அவரது பிடிவாதமே அவருக்கு எதிர்தரப்பாளர்களை எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருந்தது. விமர்சிக்கப்படவும் வைத்தது! ஆனால் அவர் பிடிவாதமாக தனது பிடிவாத குணத்தைத் தொடர்ந்தார்.

காரணம் அவரது நோக்கம் சமூகத்தின் நலன்கருதியதாக இருந்ததே காரணம். சிலர் ஏதாவது ஒரு சித்தாந்தத்தை அல்லது கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த ஒரு சித்தாந்தமோ கொள்கைகளோ நீண்ட நாட்களுக்கு சரியானதாக இருப்பதில்லை. அவை மாறுதலுக்கு உட்பட்டதாகவே இருந்திருக்கிறது. காந்தியாரும் தனது வாழ்க்கையில் அஹிம்சை என்கிற கொள்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு அவரது கடைசி காலங்களில் யாருக்கும் பிரயோஜனப்படாமல் அவர் கண் முன்னாலேயே ரத்த ஆறுகளும் வன்முறைகளுமே பிரச்சனைக்குத் தீர்வாகக் காணப்பட்டது. இதை அஹிம்சையின் தோல்வியாக கொள்ள முடியாவிட்டாலும் நீண்ட நாளைக்கு எந்த ஒரு கொள்கையும் ஒரே மாதிரியாக தட்டையான சிந்தனையில் எடுபடாது என்பதை தெளிவுபடுத்துகிறது. அஹிம்சாவாதியின் மரணம் ரத்தத் துளிகளால் முடித்துவைக்கப்பட்டது வினோதம்!காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போடும். எந்த ஒரு மனிதனின் சிந்தனையின் படி உலகம் செல்வதில்லை! அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறது. இந்திய தேசியத்தை தட்டியெழுப்பி மிகப்பெரிய நிலத்து மக்களையெல்லாம் ஒரே குடையின் கீழ் ஒன்றாக நிறுத்தி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆட்டம் காணவைத்த ஒரு மாபெரும் ஆத்ம சக்தி அதன் கடைசி காலங்களில் இயலாமையின் பிடியில் சிக்கி தான் வளர்த்த சக்திகள் தம்மையே பதம் பார்க்க, சோகத்தில் மடிய நேர்ந்தது காலத்தின் கோலம் தான்!இது காந்தியின் ஜுனூன்!

காந்தியடிகள் இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தை முழுவீச்சில் துவங்குவதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அங்கேயே வெள்ளையர்களுக்கு எதிரான தனது போராட்டத்தை துவங்கியுமிருந்தார்.

ஒரு முறை ஜொஹனஸ்பர்க் செல்லும் வழியில் தனக்கு நேர்ந்த அவமதிப்பையும் அவர் அதை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதையும் அவரே தன் சுயசரிதையில் விளக்குகிறார்.

"அப்போதெல்லாம் சார்லஸ் டவுனிலிருந்து ஜொஹனர்ஸ்பர்க் செல்ல குதிரைகள் பூட்டிய கோச் வண்டி தான் இருந்தது. அதில் என்னைப் போன்றவர்களை ஒரு கூலியாகக் கருதினார்கள். பிரயாணிகளை வண்டிக்குள்ளே உட்காரவைக்க வேண்டும். ஆனால் புதியவனாக தென்பட்ட
என்னை வெள்ளைக்காரப் பிரயாணிகளுடன் உட்கார வைக்காமல்கோச் வண்டிக்கு வெளியே வண்டியோட்டிக்கு இரு பக்கங்களிலும் இருக்கும் ஆசனங்களில் ஒன்றில் என்னை உட்காரவைத்தார். சாதாரணமாக அது வண்டித் தலைவர் உட்காரும் இடம்.

ஆனால் என்னை வெளியே உட்கார வைக்க வேண்டுமென்பதற்காக அவர் உள்ளே அமர்ந்து கொண்டு அந்த இடத்தில் என்னை உட்காரச் செய்தார். அது எனக்கிழைத்த பெரிய அநியாயமும் அவமதிப்பும் என்பதை உணர்ந்தேன், என்றாலும் அதையும் சகித்துக்கொள்ள முடிவு செய்தேன். ஒருவேளை கட்டாயப்படுத்தி நான் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ள முயன்றால் என்னை ஏற்றிக் கொள்ளாமலேயே வண்டி போயிருக்கும்.

இந்த சூழலில் வண்டி போய்க்கொண்டிருந்தது. ஓரிடத்தை அடைந்ததும் வண்டியின் தலைவர் நான் உடகார்ந்திருந்த இடத்தில் தாம் உட்கார்ந்துகொள்ள விரும்பினார். அதனால் அவர் வண்டியோடியிடமிருந்து ஒருகோணித்துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படிமீது அதை விரித்து என்னைப் பார்த்து "இதன் மீது நீ உட்காரும், வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்" என அதிகாரம் செய்தார்! இந்த அவமதிப்பு இன்னும் அதிகம். அதனை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

நான் அந்த அவமதிப்பை ஏற்க பிடிவாதமாக மறுத்தேன். அவரிடம் கூறினேன் "என்னை உள்ளே உட்கார வைக்கவேண்டி இருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்காரவைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்போது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்காரமாட்டேன். வேண்டுமானால், வண்டியின் உள்ளே உட்காரத் தயார்" என்றேன்.

இவ்விதம் நான் தட்டுத் தடுமாரிச் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை விடமாட்டேன் என்று உறுதியாயிருந்தேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும், நான் நான் பிடிவாதமாகவும் அதே நேரத்தில் சும்மா இருப்பதுமாகிய அக்காட்சியை சகப்பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமானவன். பயணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று. "அவரை விட்டுவிடு. அடிக்காதே! அவர் மீது குற்றம் இல்லை. அவர் செய்தது. சரியே! அவர் அங்கே இருக்க முடியாதென்றால் இங்கே வந்து எங்களுடன் உட்கார்ந்து கொள்ளட்டும்" என்றனர்.

"அது முடியாது" என்று வீம்புக்கு மறுத்தார் வண்டியின் தலைவர். அவருடைய இனவெறி அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. ஆனாலும் பயணிகள் தடுத்ததால் என்னை தொடர்ந்து தாக்க முடியவில்லை. என்னை அடிப்பதை நிறுத்திக் கொண்டார். கொஞ்சம் அவமானம் அடைந்து விட்டவர் போலவே காணப்பட்டார். என் கையை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தார். பிறகு வண்டிப் பெட்டியின் அந்தப் பக்கத்தில் இருந்த மற்றொரு பணியாளை அங்கிருந்து எழுப்பி விட்டு தான் அங்கே உட்கார்ந்து கொண்டார். இப்படியாக ஊர்போய்ச் சேர்ந்தேன்."

ஆக, பிடிவாதமாக நினைத்ததை சாதிக்கும் தனது உள்ள உறுதியினால் அவர் தன்மானத்தை இழக்காமல் அன்று இனவெறியை வென்றார்.

அதே போன்று இன்னொரு சூழலில் தன்னை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றியே தீருவது என்று கங்கனம் கட்டி வந்தவர்களிடம் தனது பிடிவாதத்தால் மதம் மாறாது காத்துக் கொள்ள வேண்டி வந்தது.

அது பற்றி அடுத்த பதிவில் பிடிவாதமாகப் படிப்போம்!

ஜுனூன் ஜுனூன்... ஜுனூன் ஜுனூன்!


Thursday, May 24, 2012

அகங்காரத்தால் அழியாதே - விதுர நீதி!பாண்டவர்களும் கௌரவர்களும் போரில் இறப்பார்களே என்ற துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்த திருதிராஷ்ட்டிரன் விதுரரிடம் கேட்கிறார்!

திருதிராஷ்ட்டிரன்: விதுரா! மனிதனுக்கு ஆயுள் நூறாண்டு காலம் என்று எல்லா வேதங்களும் சொல்கின்றன. அப்படி இருந்தும், மனிதன் நூறு ஆண்டுகளும் உலகில் இருப்பதில்லையே, அது ஏன்?

விதுரர்: மாமன்னா! மனிதர்களை எமன் கொல்வதில்லை. அவர்களின் ஆயுளை ஆறு கூர்மையான ஆயுதங்கள் அறுக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.

மிதமிஞ்சிய அகங்காரம்

அதிகமான பேச்சு

குற்றங்களை மிகுதியாகச் செய்வது.

அதிகமான கோபம்

தன்னை மட்டும் காத்துக் கொள்வதில் ஆசை

நண்பர்களுக்குத் துரோகம் செய்வது.

என்கிற இவைகளே அந்தக் கூர்மையான ஆயுதங்கள். ஆகவே மன்னா! இந்தத் தீய குணங்களை ஒழித்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சுகமாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்!

- மகான் விதுரர்

Wednesday, May 23, 2012

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!

அழிவில் இருந்த பழங்கால தமிழோலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சிலேற்றி தமிழை வாழவைத்த தமிழ்த் தாத்தா உ. வெ. சுவாமிநாத அய்யர்!

ப்ராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பொய்ப் ப்ரசாரங்களைப் பரப்பி தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றிய வரலாறுகளையே மறைத்துவிடுகின்றனர். ஆனால் தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா! அதனால் இங்கே ஒரு சிறு பகிர்வு!

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!


சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

 பாரதியார்!
(ப்ராமணர் என்பதாலேயே இவர் புகழை மறைத்தாலும் தமிழ் மூலம் உலகெங்கும் ஒலிக்கிறார், என்றும் ஒலிப்பார், ஒளிர்கிறார்)Sunday, May 20, 2012

எந்த தேவதையைத் தொழுதாலும் என்னையே வழிபடுகிறாய்!
ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன் வடிவத்தின் தன்மையை இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

அர்ஜுனா! மகாத்மாக்கள் என்னுடைய தெய்வீகத் தன்மை பெற்று, உயிர்களுக்கு என்றும் அழியாத பிறப்பிடம் நான் என்பதை அறிந்து, என்னைத் தவிர வேறு எங்கும் மனதைச் செலுத்தாது என்னை வழிபடுகின்றனர்.

எப்பொழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் என்னை வணங்குபவராயும், நித்திய யோகிகள் என்னை வழிபடுகிறார்கள்.

ஞான வேள்வியால் வழிபடும் மற்றவர்களும் என்னை ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனை விதங்களிலும் வணங்குகிறார்கள்.

தனஞ்ஜெய! நானே கிரது என்ற வைதீக கர்மம். நானே வேள்வி. மருந்துப் பூண்டுகளும், எல்லா வகையான தாவரங்களும் நான்; மந்திரமாவது நான். வேள்வியில் அளிக்கப்படும் நெய்யும் நானே! தீயும் நா; வேள்வி வேட்டலும் நானே!

நானே இந்த உலகத்தின் தாய், தந்தை , பாட்டன். கர்ம பலனைக் கொடுப்பவன் மற்றும் அறிய வேண்டிய பொருள், தூய்மையாக்குவோன், ஓங்காரம், ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்கள் ஆகியவைகளும் நானே.

அடைக்கலம், வளர்ப்பவன், உடையவன், சாட்சி, இருப்பிடம் நண்பன், தோற்றம், அழிவு, ஆதாரம், களஞ்சியம், அழியாவித்து ஆகிய அனைத்தும் நானே!

வேறு எதைப்பற்றிய எண்ணமும் இல்லாதவர்களாய், மனதை ஒரு முகப்படுத்தி என்னையே வழிபடுகிறவர்கள் வேண்டியதைப் பெறுதலையும், பெற்றதைக் காப்பாற்றுதலையும் நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

குந்தியின் மைந்தா! சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வழிபடும்போது, அவர்களும் அறியாமையோடு என்னையே வணங்குகிறார்கள்!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்Saturday, May 19, 2012

கடவுளிடம் உண்மையாக இருங்கள்!

ஷீர்டி சாய்பாபா தகியா என்னுமிடத்தில் வசிக்கும் போது சுற்றி உள்ள கோவில்களிலும் மசூதிகளிலும் விளக்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பாராம். பிறர் வேண்டாமென்று
வீசி எறியும் அழுக்கு கந்தல் துணிகளை ஆற்றில் கசக்கி துவைத்து சிறு சிறு துண்டுகளாக்கி அந்த விளக்கிற்கு தேவைப்படும் திரியை செய்து விளக்கேற்றுவாராம்.

யாராவது பாபாவிடம் "இது என்ன வீணாய்ப்போன அழுக்குத் துணியையெல்லாம் துவைத்து விளக்கிற்கு போடுகிறீர்களே" என்று கேட்டால் "நம்மிடம் கூட பொறாமை, கோபம், வெறுப்பு களவு போன்ற கெட்ட அழுக்குகள் சேர்ந்திருக்கின்றன. அவைகளை ஞானம் என்ற மண்ணில் புரட்டி பக்தி என்ற வெள்ளாவி வைத்து வெளுத்தால் மனம் பளிச் சென்று சுத்தமாகி விடாதாநம் குழந்தைகளிடம் தீய குணங்கள் படிந்திருந்தால் தூர எறிந்து விடுகிறோமா? இந்தத் திரி நம் அழுக்குகளைத் துவைத்து மனத்திலிருக்கும் நச்சை பக்தி என்கிற நெருப்பால் எரித்து மனத்தைப் ப்ரகாசிக்கச் செய்வதாகக் கொள்ளுங்கள்' என்பாராம். "கடவுளிடம் உண்மையாக இருங்கள், ஆன்மா சுடர் விட்டெரியும்" என்பாராம்.

விளக்கேற்றுவதற்கு எண்ணெய் வேண்டுமே! பாபாவிடம் ஏது பணம்? பாபா என்ன செய்வார் தெரியுமா? ஒரு தகரக் குவளையோடு போய் எண்ணெய் கடைகளில் நிற்பாராம். அவர்கள் ஊற்றும் எண்ணெயால் மசூதியிலும் கோவில்களிலும் விளக்கேற்றுவார்.

ஒரு முறை எண்ணெய் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பாபாவுக்கு இனாமாக எண்ணெய் தருவதில்லை என்று முடிவு செய்தனர். அவர்கள் பாபாவை பார்த்து ஏளனமாக "பாபா, ஓசியிலேயே புண்ணியம் தேடுகிறாயா? நஹி நஹி" என்று கையை ஆட்டி கடையை விட்டுப் போகச் சொல்லி விரட்டினர்.

பாபா மௌனமாக மசூதிக்குத் திரும்பினார்.

எண்ணெய்க் கடைக்காரர்களெல்லாம் ஒரு ஆளை சத்தமில்லாமல் அனுப்பி 'பாபா என்ன செய்கிறார் என்று பார்த்துவா' என்றார்கள். வந்த சிறிது நேரத்தில் ஓட்டமாகத் திரும்பி ப் போய்க் கடைக்காரர்களிடம் மூச்சு முட்ட இப்படிச் சொன்னான் -

"ஐயா, நான் பார்த்தேன், பாபா யாரிடமும் பேசவில்லை. காய்ந்த திரிகளை விளக்குகளில் போட்டார். அவரது டப்பாவில் ஒருதுளி எண்ணெய் கூட கிடையாது போல. அவர் டப்பாவை கவிழ்த்தார். ஒரு துளி எண்ணெய் வழிந்து விழவே நீண்ட நேரம் ஆனது. அந்த எண்ணெய்க் குவளையில் தண்ணீர் பிடித்து வந்தார். அதிலிரிந்து கொஞ்சத்தைக் குடித்தார். பிறகு மிச்சத் தண்ணீரையெல்லாம் எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. சரி, தண்ணீரில் எவ்வளவு நேரம் எரியப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் விளக்கு அனையவே இல்லை. இப்போது வரை!" என்றான்

எண்ணெய் கடைக்காரர்கள் தாங்கள் பாபாவை அலட்சியப்படுத்தி தவறு செய்துவிட்டோம் என எண்ணினார்கள். ஒன்றாகப் புறப்பட்டுப் போய் பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

அப்போதும் பாபா சொன்னது ஒன்று தான் "எப்போதும் கடவுளிடம் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள். நன்மை பெறுவீர்கள்"

இந்தக்காலத்திலும் சிலர் துறவிகள் என்ற அடையாளங்களோடு வலம் வருபவர்களைப் பார்க்கிறோம். எண்ணெய் நிறுவனத்தையே நடத்தும் அளவு கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். யாரேனும் அவர்களை பற்றி விமர்சனம் செய்து விட்டாலே நான் வழக்குதொடுப்பேன், உன்னை கோர்ட்டுக்கு இழுப்பேன் என்று கர்ஜிக்கிறார்கள்! இவர்கள் கடவுளுக்கும் உண்மையாக இல்லை, தான் கொண்ட சமூகத்திற்கும் உண்மையாக இல்லை!

ஷீர்டி பாபா வணங்கப்பட வேண்டிய துறவி!


Monday, May 14, 2012

எல்லா உயிர்களும் இறைவனின் கோவில்களே!
துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் மழையினால் உண்டாகும். மழையே மாநிலத்தின் உயிர்நாடி பயிர்தழைக்க உயிர் தழைக்கும். அத்தகைய மழைபொழிய வானில் இருண்ட மேகம் எழுந்த உடனே உலகிற்கு உண்டாகும் நலனைக் கருதி அந்நலம் தனக்கு எய்தியது போல் மகிழ்ச்சியுடன் தோகையை விரித்துக் களிநடம் புரிகின்றது மயில். இத்தகைய சிறந்த பண்புடைய மயிலைக் கருணை நாயகராகிய கந்தப் பெருமான் தனக்கு வாகனமாகக் கொண்டுள்ளார். அதாவது தன்னலமில்லாமல் பிறருக்கு நன்மையே நினைக்கும் எவரையும் எம்பெருமான் கந்தனுக்கு மிகவும் பிடிக்கும். 

ஒருவனுக்கு எத்தனை மாட மாளிகைகள் இருப்பினும் அவன் படுக்குமிடம் ஐந்தரை அடி நீளந்தானே. ஒருவனுக்கு எத்தனை ஏக்கர் நிலங்களிருப்பினும் அவன் உண்பது காற்படியரிசிதானே! எத்தனை நூல் துணி ஆலைகள் இருப்பினும் அவன் உடுப்பது நான்கு முழந்தானே! அதனால் போதும் என்ற மனமே ஒருவனுக்கு நிம்மதியை அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உணவு அருந்தாமல் வீதியில் வெயிலில் விளையாடிக் கொண்டேயிருக்குமானால் தாய் அக்குழந்தைகள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் வலிய வீட்டுக்குள் அழைத்துச் சென்று நீராட்டி ஆடை அணிகலன்களால் அழ்கு செய்து நல்லுணவு தந்து இன்பம் செய்வது போல், உயிர்களாகிய நாம் பாவமாகிய வெயிலில் விளையாடும் போது தாயினும் மேலான கருணையுள்ள இறைவன் நம்மை தகுந்த காலத்தில் அழைத்து பக்குவமான நிலைக்கு அழைத்துச் சென்று அருள்புரிவான். ஆனால் தாய் வலியச் சொல்லும் போது குழந்தைகள் மறுக்காமல் அதைக் கேட்டு நடப்பது போல இறைவன் சொல்படி கேட்டு நடக்கும் வகையில் மனதை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம்நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

தன்னிடமுள்ள பொருட்களின் மேல் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். இன்னும் அது வேண்டும் இது வேண்டும் என்று கொழுந்து விட்டு எரிகின்ற நினைவுகள் ஆசை எனப்படும். இதை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கவில்லையென்றால் எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல், சதா உலைந்து அலைந்து நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கும் பேராசை குணத்திற்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடும்.

பசியானது அறிவைப் போக்கும், தரும சிந்தனையைக் கெடுக்கும். பசி வந்தால் ஞானமுள்ளவனும் தைரியத்தை இழந்து விடுவான். எவன் பசியை வெல்லுவானோ நிச்சயமாக அவன் சொர்கத்தை வெல்லுவான்.

கோபத்தையும் புலனையும் வென்றவர்கள் சொர்கத்தின் வாயிலைப் பார்கின்றனர்.

ஆயிரம் கொடுக்கச் சக்தி இருக்க நூறு கொடுப்பவனும், நூறு கொடுக்கச் சக்தியுள்ளவன் பத்துக் கொடுப்பவனும், சக்திக்குத் தக்கபடி தண்ணீரைக் கொடுப்பவனும் ஆகிய எல்லாரும் சமமான பலனை அடைகின்றனர்.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

வீட்டு வாசலைப் பூட்டி விட்டு உள்ளே வாருங்கள் என்றழைத்தால் யார் வரமுடியும். அதேபோல உன் இதயத்தை மும்மலமாகிய கதவினால் பூட்டி விட்டு இறைவனை அழைத்தால் எப்படி வருவான். உள்ளத்தை தூய்மையாக திறந்து வைத்தால் இறைவன் உன்னிடத்தில் பிரகாசிப்பார்.

எல்லா உயிர்களும் இறைவனின் கோவில்களே. உயிர்கள் தோறும் இறைவன் இருக்கிறான். ஆதலால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாயிரு. உயிர்களிடத்தில் செலுத்தும் அன்பு இறைவனைச் சேரும்.

- திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்!

Sunday, May 6, 2012

சடங்குகள் தேவையா?நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியன வெல்லாம் வெறும் சடங்குதானே என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.

உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமோ என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக் கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமாக ஆத்மானந்தத்தை மூடிக்கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டுமாதான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்றுபோகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் வெறும் சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே. 

எனவே, சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிறபோது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவதுபோலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஒர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (DISCIPLINE) உட்படுகிறான். இதை சாப்பிடக்கூடாது. இதை போக்கிய வஸ்துக்களைப் அநுபவிக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (WILL - POWER) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன.

ஆக, வெறும் சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (MORALITY) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!