Monday, March 30, 2009

விதுர நீதி


திருதிராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் ‍:

கவலை மிகுதியால் எனக்கு உறக்கம் வரவில்லை. உன்னைப் போன்று தர்மம், அதர்மம் பற்றி அறிந்தவர் யாருமில்லை. என்னுடைய நன்மைக்குரிய அறிவுரைகள் சொல்.! 

விதுரர்: சாதாரண மனிதர்களுக்கு உறக்கம் வராததற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.  

பலமுள்ள ஒருவனின் ஆதிக்கத்திற்க்கு ஒருவர் ஆளாகும் போது,  
ஒருவருக்குச் சொந்தமான சொத்தெல்லாம் கவரப்படும் போதும் உறக்கம் வராது, 

மேலும், காமமுள்ளவனுக்கும், திருடனுக்கும் உறக்கம் வராது.  

மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவனுக்கும் உறக்கம் வராது, இவ்விதமான எந்தக் குற்றமும் உங்களிடத்தில் இல்லாமல் இருந்தால் உங்களால் நன்றாக உறங்க முடியும் இவ்வாறு விதுரர் பதிலளித்தார்.

தெனாலிராமன் கதைகள் - கூன் வண்ணான்கூன் வண்ணான்:

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.


இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.

போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.

அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.

அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில்
மன்னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.

தெனாலிராமன் கதைகள்


தத்துவ ஞியானியை வெல்லுதல்:

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோதிக்க‌ தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாரப்பட்டது. அவர் உண்ண உணவை கையிலெடுக்கும் போது தெனாலிராமன் அவரது கையைப் பிடித்துக் கொண்டார். உண்பது மாயை, அதனால் நீங்கள் உண்பது போல நினைத்துக் கொள்ளுங்கள். உண்ணக்கூடாது என்று வாதிட்டார்.  அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவறை அரசவை விகடகவியாக்கினார்.

தெனாலிராமன் கதைகள்


கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள்:

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.


முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.


பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

தெனாலிராமன் கதைகள்புலவரை வென்ற தெனாலிராமன்:

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். 

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான். 

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான். 

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். 

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

Saturday, March 28, 2009

விதுர நீதி


விட்டுவிட வேண்டிய குணங்கள்:

அதிகமாக உறங்குவது, உடல் அசதி, அச்சம், கோபம், சோம்பேறித்தனம், பின்பு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் இந்த‌ ஆறு குணங்களையும் நாம் கட்டாயம் விட்டுவிட வேண்டும்.

விடக்கூடாத குணங்கள்:

உண்மை, தானம், கவனம், அன்பு, பொறுமை, தைரியம் இந்த ஆறு நற்குணங்களையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது.

கீதோபதேசம்!


அர்ஜுனர்: பரமாத்மாவை அடைவதற்க்கான வைராக்கியம் எப்படி ஏற்படும்?

ஸ்ரீ க்ருக்ஷ்னர்: வைராக்கியத்திற்குப் பல ஸாதனங்கள் உள்ளன. அவற்றில் சில‍ 

1. உலகியல் பொருட்களை ஆராய்ந்து அவற்றில் அழகு, அன்பு, ஸுகம் இல்லை என்பதை உணர வேண்டும். 

2. அவை பிறப்பிறப்பு, மூப்பு , நோய் முதலிய துக்கங்களும், குற்றங்களும் நிறைந்தவை; நிலையற்றவை; பயம் தருபவை என்று அறிய வேண்டும்.  

3. உலக வாழ்க்கை, பகவான் இவ்விரண்டின் தத்துவத்தை நிரூபிக்கின்ற அறநூல்களைக் கற்க வேண்டும்.  

4. தீவிர வைராக்கியம் உள்ள பெரியோர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சேர்க்கை கிடைக்காவிடில் வைராக்யம் நிறைந்த அவர்களுடைய படங்களையும், சரித்திரங்களையும் நினைத்து, மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.  

5. உலகில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களின் இடிபாடுகளையும், பெரிய நகரங்களும், கிராமங்களும் அழிவதையும் பார்த்து உலகம் கணத்தில் அழியக்கூடியது என்று உணர வேண்டும்.  

6. ப்ரம்மம் ஒன்றே பகுதியற்றது; இரண்டற்றது என்ற ஞானம் பெற்று, மற்றவை எதற்கும் இருப்பே இல்லை என்று அறிய வேண்டும்.  

7. தகுதியுள்ள பெரியோர்களிடமிருந்து, பகவானுடைய வர்ணனைக்கடங்காத குணங்கள், ப்ரபாவங்கள், தத்வம், ப்ரேமை (அன்பு), ரகசியங்கள், அவருடைய லீலா சரித்திரங்கள், தெய்வீக அழகு, இனிமை இவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்டறிந்து, அவற்றில் முற்றும் ஈடுபட்டு, மூழ்கி விட வேண்டும். இவ்விதம் இன்னும் பல ஸாதனங்கள் உள்ளன.

விதுர நீதி


அறிவுள்ளவனின் குணங்கள்

"எவனுடைய கல்வி, அவன் புத்தியை அனுசரித்து இருக்கிறதோ, எவனுடைய புத்தி அவன் பெற்ற கல்விக்கு விரோதமாக இல்லையோ, பண்டைக்கால மனிதர்களால் நல்லதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற நடத்தையை எவன் மீறுவதில்லையோ, எவன் எப்பொழுதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஸநாதன தர்மத்தை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்துள்ளானோ, அவன் அறிவுள்ளவன் ஆவான்!"

அறிவற்றவனின் குணங்கள்

"சாஸ்திரங்களில் கூறியவற்றையும், உலகத்திலுள்ள பெரியோர்களின் சொற்களையும் செவிமடுத்துக் கேட்காதவனும், தன்னை மிகப் பெரியவன் என்று கருதி, கர்வம் கொள்பவனும், இதை முடிக்கத் திறமையில்லை எனத் தெரிந்தும் அதை நிறைவேற்றச் செயல்பட்டுக் கொண்டிருப்பவனும், பாவம் செய்து பொருளீட்ட விரும்புபவனும், தன் நன்பனை மோசம் செய்பவனும், பகைவரிடம் நட்புக் கொள்பவனும், தானே செய்ய வேண்டிய வேலைகளை, வேலைக்காரர்களைச் செய்யும்படி ஏவுபவனும், தராதரம் இல்லாமல் ஸ்நேகம் கொள்பவனும், அவசர அவசரமாகச் செயல்படுபவனும், விரைவில் செய்து முடிக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் தாமதம் செய்பவனும் அறிவிலிகள்".


மேலும் "பித்ருக்களுக்கு ஈமக்கடன்கள் செய்யாதவனும், தேவதைகளுக்கு பூஜை செய்யாதவனும், நல்லோரிடம் நட்பு கொள்ளாதவனும், அழைக்கப்படாத இடங்களுக்கு செல்பவனும், கேட்காவிட்டாலும் பல விஷயங்களை சொல்லித்தீர்ப்பவனும், நம்பத் தகுந்தவனை நம்பாதவனும், தனது குற்றத்தைப் பிறர் மீது சுமத்துபவனும், பிறருடைய‌ மனைவியை காம நோக்குடன் பார்ப்பவனும், கஞ்சனுக்கு வேலை செய்பவனும் அறிவற்றவர்கள் ஆவர்."

- விதுர‌ர்

Friday, March 27, 2009

கமல் பேசினால்


'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.
குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை" இது நடிகர் கமல்ஹாஸனின் சமீபத்திய மேடைப் பேச்சு.


ஆதீத பகுத்த‌றிவாள‌ராக‌ பேசுவ‌தில் க‌ம‌லுக்கு நிக‌ர் அவ‌ர் ம‌ட்டுமே. த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ளில் இது குழ‌ந்தைக‌ள் ப‌ட‌ம் இது எல்லோரும் பார்க்கும் ப‌ட‌ம், இது வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் பார்க்கும் ப‌ட‌ம் என்று த‌ர‌ம் பிரித்து காம‌க்க‌ளியாட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையும் வெளியிட‌லாம் என்ப‌து இவ‌ர‌து நீண்ட‌கால‌ க‌ருத்து.


ந‌ம‌க்கு ஏற்ப‌டும் ச‌ந்தேக‌ம் எல்லாம், இப்பொழுது ச‌மூக‌த்தில் காம‌த்திற்க்கு அப்ப‌டி என்ன‌ ப‌ஞ்ச‌ம் வ‌ந்து விட்ட‌து? ச‌ரி அப்ப‌டியே அத‌ற்க்கென்று த‌னி சான்றித‌ழ்க‌ளோடு ப‌ட‌ம் வெளியிட்டால் உட‌ல் ரீதியான‌ எந்த‌ ப‌ய‌னும் இல்லாம‌ல் வெறும் க‌ண்க‌ளால் பார்த்து ம‌ன‌த்தில் காம‌ப்பித்தேறி வீட்டுக்குச் செல்லும் ஒரு இளைஞ‌ன் திரும‌ண‌மாகாத‌வ‌னாக‌ இருந்தால் அவ‌ன‌து காமத்தீயைத் த‌னிக்க என்ன‌ செய்வான். சொந்த‌ வீட்டில் வ‌டிகால் இல்லாத‌வ‌ன் ப‌க்க‌த்து வீட்டுக்குள் நுழைந்தால் ப‌ர‌வாயில்லையா? க‌ம‌ல் இதையும் நாக‌ரீக‌ம் என்று சொல்வாரா?


ஒரு ம‌னித‌ன் காதல் முதல் முதலாய், காம‌ உன‌ர்ச்சிக‌ளை புரிந்து கொண்டு அல்ல‌து அனுப‌விக்க‌ நினைக்கும் வயது 15 வயதிலிருந்து 19 வயது வரை. இந்த வயதிற்குள் பாலினச்சேர்க்கை இயற்க்கையாகவே தேவைப்படும். இதைப் புரிந்து தான் நமது முன்னோர்கள் இந்த பதின் வயதில் திருமணம் செய்வதை தேவையான வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் த‌ற்போது இதை குழ‌ந்தை திரும‌ண‌ம் என்றும் ச‌ட்ட‌ விரோத‌ம் என்றும் கூறி த‌ள்ளி விட்டார்க‌ள். பணத்தேவை திருமண வயதை 30 வரை கொண்டு சென்று விட்டது. இதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? பாலுணர்ச்சியின் சமநிலையற்ற வெளிப்பாடு, கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான‌ குற்றங்கள் என்று ப‌ட்டிய‌ல் நீள்கிற‌து.


ஏற்க‌ன‌வே தொலைக்காட்சியைத் திற‌ந்தால் தொப்புள் ந‌ட‌ன‌ங்க‌ளும், மார்புக்குலுக்க‌ல்க‌ளும் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சிக‌ள் என்ற‌ பெய‌ரில் ச‌மூக‌ச் சீர‌ழிவை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்திக் கொண்டிருக்கின்ற‌ன‌. இன்ட‌ர்நெட்டில் இளைஞ‌ர்க‌ளுக்கு கிடைக்காத பாலிய‌ல் காட்சிக‌ள் உண்டா? கைய‌ள‌வு செல்பேசியில், கால் இன்ச் சிப்பில் கப்ளிங்ஸ் விளையாடி களைத்துப் போகின்றனர் இன்றைய சிறார்கள். ப‌ள்ளிகூட‌த்திலேயே ப‌த்திக்கொள்ளும் காம‌ம் ஏன் எத‌ற்கு என்று புரிவ‌த‌ற்க்குள் அவை பாலிய‌ல் வ‌க்கிர‌ங்களுக்கும், குற்ற‌ங்க‌ளுக்கும் சென்று முடிந்து விடுகிற‌து. பள்ளிக்கூட படிப்பின் போதே அக்க‌ம்ப‌க்க‌த்து பெண்களை அரைக்கண்ணால் பார்த்து விட்டு "ஆண்டி" சூப்பர் டா என்று நாகரீக உற‌வு முறைகள் எல்லாம் "ஆன்டி க்ளைமாக்ஸில்" முடியும் க‌தை ந‌ம‌க்கு தெரியாத‌தா?


இவை எல்லாம் தெரிந்தும் அடுத்த‌ த‌லைமுறையை, த‌ர்ம‌ங்க‌ளைப் புரிந்து கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் , க‌லாச்சார‌த்தை புரிந்து கொண்டார்வ‌ர்க‌ளாக‌வும் எப்ப‌டி உருவாக்குவ‌து என்று பார்ப்ப‌தை விட்டு விட்டு காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல் காம‌த்திற்கும் க‌டைவிரியுங்க‌ள் என்று பேசுவ‌து ச‌மூக‌ பொறுப்ப‌ற்ற‌ த‌ன்மையையே காட்டுகிற‌து.


கஜுராஹோ கோவிலில் பாலியல் சிற்பங்கள் இல்லையா? என்று கேட்கும் அறிவு ஜீவிகள் அந்த காலத்தில் நமது பூமியில் வாழ்ந்த மக்கள் தொகை என்ன? அவர்கள் கடைபிடித்த தர்மங்கள் என்ன? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். காமத்திற்கு ஆசைப்படும் போதே முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்ததால் அனைவருக்கும் வீட்டுக்குள்ளேயே வடிகால்கள் இருந்ததையும் மறுக்க முடியாது. முறையற்ற உறவுக்கு அவசியமே இல்லாத காலம் அது. ஆனால் தற்காலத்தில் அப்படியா? வாழும் முறையில் இருக்கும் வடிகால்களை எல்லாம் அடைத்து விட்டு சினிமாவில் அதை கட்டவிழ்த்து விட்டால் கற்பனை வாழ்க்கையிலேயே இன்றைய இளைய சமூகம் திருப்தி அடைந்து விடுமா? என்பதையும் கமல் தனது அறிவு ஜீவித்தனம் மூலமாக சிந்திக்க வேண்டும்.


கமலஹாசன் அவர்கள் காப்பி, டீ போன்ற வஸ்த்துக்களை குடிப்பதில்லை. அதற்கு அவர் சொல்லும் காரணம் எந்த ஒரு மிருகமும் இன்னொரு மிருகத்தின் பாலை குடிப்பதில்லை, நாம் ஏன் குடிக்க வேண்டும் என்பதாகும். இதையே அவருக்கு திருப்பி கேட்கலாம். எந்த ஒரு மிருகமும் சக மிருகங்கள் செய்யும் உடலுறவை கூட்டமாக உட்கார்ந்து பார்ப்பதில்லை. எந்த மிருகமும் தங்கள் பாலியல் உறவை வியாபாரமாக்குவதில்லை. இதை மட்டும் மனிதன் செய்தால் நாகரீகம் என்று இவரது பகுத்தறிவுக்கு எப்படி தோன்றியது என்பது விளங்கவில்லை.

பெண்ணாசையால் சாக‌தே என்று கூறும் இராமாய‌ண‌த்தையும், ம‌ன்னாசையால் சாகாதே என்று கூறும் ம‌ஹாபார‌த‌த்தையும் மூட‌ந‌ம்பிக்கை என்று முட‌க்கியாகி விட்டது. எனவே நாழித‌ழ்க‌ளை திற‌ந்தால் தின‌ம் இர‌ண்டு க‌ற்ப‌ழிப்பு பாலிய‌ல் குற்ற‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாம‌ல் உள்ள‌ன‌. இவ‌ற்றில் பாலிய‌ல் திரைப்ப‌ட‌ங்க‌ளை தாரை த‌ப்ப‌ட்டையுட‌ன் வ‌ர‌வேற்க்க‌ வேண்டுமாம்.


கொக்கு கொண்டு வ‌ந்து போடாமலே இத்த‌னை ஜ‌ன‌த்தொகை என்றால் இனி த‌மிழ் சினிமாவில் த‌மிழ் க‌லைஞ‌ர்க‌ளே எடுத்து ந‌டித்து வெளிவ‌ரும் பாலிய‌ல் ப‌ட‌ங்க‌ளால் கொக்கு வாழ‌ கூட‌ இந்தியாவில் இட‌ம் இல்லாம‌ல் போகுமோ? ஈஸ்வ‌ரோ ர‌க்ஷ‌து:!

Wednesday, March 25, 2009

இந்து தர்மத்தில் எல்லோரும் விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம்

வெண்மையான இந்த விபூதிப் பொடியானது பசுவின் சானத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெண்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பூமியில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் இறுதியில் சாம்பலாக வேண்டியது தான் என்பதை எப்பொழுதும் நமது சிந்தனையில் இருத்தி வைப்பதன் மனோவியல் ரீதியான நடவடிக்கையே இந்த விபூதி பூசும் பழக்கம். அதாவது சிம்பாலிக் மெஸ்ஸேஜ் என்று சொல்லலாம்.

அரசன் முதல் ஆண்டி வரையில் எல்லோருக்கும் முடிவு ஒன்று தான். அது தான் சாம்பல், கடைசியில் சாம்பலாகப் போகும் நமது மாய வாழ்க்கையை, விபூதி நமக்கு உணர்த்துகிறது. வைஷ்ணவர்கள் இதையே திரும‌ண் என்று இட்டுக்கொள்வார்க‌ள்.ம‌ண்ணிலே பிற‌ந்த‌ நாம், ம‌ண்ணிலேதான் ம‌டிய‌ப்போகிறோம் என்ப‌தை ந‌ம‌க்கு நாமே நினைவு ப‌டுத்திக் கொள்வ‌து தான் இத‌ன் நோக்க‌ம்.!

இன்னும் விள‌க்க‌மாக‌ச் சொல்ல‌ வேண்டும் என்றால், தீயில் இட‌ப்ப‌டும் பொருள்க‌ள் யாவும் க‌ருகிப்போகின்ற‌ன‌. அத‌ன் பின்னும் இன்னும் தீயிட்டால், அது நீற்றுப் போய் வெளுத்து விடுகிற‌து. அதுவே இந்த‌ பூமியில் உள்ள‌ எல்லாப்பொருட்க‌ளுக்கும் இறுதி நிலை, மாறாத‌ நிலையாகும்.
எல்லாம் அழிந்த‌ பின்னும், அழியாத‌ ச‌த்திய‌மாக‌ நிற்க்க‌க் கூடிய‌ நிர‌ந்த‌ர‌மான‌ உருக்கொண்ட‌வ‌ன் இறைவ‌ன் என்ப‌தை ஆத்மார்த்த‌மாக‌ உண‌ர்ந்து அவ‌னை நினைக்க‌ வேண்டும் என்ப‌தாகும். மெய்யான‌ ஆத்மாவுக்கு அடையாள‌மாக‌ இதை பெரியோர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இந்த‌ உட‌ல் பொய்யான‌து என்ப‌தையும் நிர‌ந்த‌ர‌மான‌ அமைதி எதுவோ அது தான் உண்மை என்ப‌தும் ந‌ம்மை அறியாம‌லே ந‌ம் ம‌ன‌தில் ப‌திய‌வும் இந்த‌ விபூதி பூசும் ப‌ழ‌க்க‌ம் ம‌னோவிய‌ல் ரீதியாக‌ உத‌வுகிற‌து.


"விற‌குக் க‌ட்டையை அக்னி சாம்ப‌லாக்குவ‌து போல‌, அக்னி எல்லாக் க‌ரும‌ங்க‌ளையும் சாம்ப‌லாகுகிற‌து" என்ப‌து கீதையில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து நாம் வாழும் இந்த‌ வாழ்க்கையில் ந‌ம்மால் செய்ய‌ப்ப‌டும் ந‌ன்மை தீமை போன்ற‌ எல்லா காரிய‌ங்க‌ளையுமே 'கர்மா' என்ற‌ழைக்கிறோம். இந்த‌ ந‌ம‌து செய்கைக‌ளினால் ந‌ம‌க்கு ஏற்ப‌டும் ந‌ல்விளைவு அல்ல‌து தீய‌ விளைவு அதாவ‌து ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்வ‌தால் ஏற்ப‌டும் விளைவு ந‌ல்ல‌ விளைவு என‌வும் நாம் செய்த‌ தீய‌ காரிய‌ங்க‌ளால் ஏற்ப‌டும் விளைவு தீய‌ விளைவுக‌ள் என‌வும் குறிப்பிடுகிறோம். இவையே க‌ர்ம‌ வினைக‌ளாகும். இந்த‌ விளைவுக‌ளில் ந‌ல்ல‌ விளைவு அதிக‌மாக‌ இருந்தால் நாம் புண்ணிய‌ம் செய்திருக்கிறோம் என்றும், தீய‌விளைவுக‌ள் அதிக‌ம் இருந்தால் நாம் பாவ‌ம் செய்திருக்கிறோம் என‌வும் கூறுவ‌ர். இவ்வாறான‌ க‌ர்மாக்க‌ளை அக்னி எரித்து விடும் என்ப‌தும், அவ்வாறு எரித்த‌ பின் எஞ்சி நிற்ப‌து ஞான‌ம் தான் என்ப‌தையும் இந்த‌ விபூதி ஒரு க‌ண்ணால் பார்க்க‌க்கூடிய‌ அடையாள‌மாக‌ உள்ள‌து.


மதமாற்றம் ஜாக்கிரதை


இத‌ற்கும் மேலாக‌ விபூதி என்ப‌து ஏற்க‌ன‌வே சொன்ன‌து போல் ப‌சுவின் சாண‌‌த்தை நெருப்பிலிட்டு, சாம்ப‌லாக்கிச் செய்ய‌ப்ப‌டுகிற‌து. ப‌சுவின் சாணம் தரையில் காயும் போது துர்நாற்றம் வீசுமே ஒழுய எரித்தால் அதற்கு மாறான வினையைக்கொடுக்கும் ஒரு அற்புதப் பொருள்.இது எரித்து சாம்பலாக உபயோகப்படுத்தினால் ப‌ல‌ துர்நாற்ற‌ங்க‌ள‌ப் போக்கும் த‌ன்மையை அடைகிற‌து. இது ஒரு 'ஆன்டி செப்டிக்' என்று கூட‌ச் சொல்ல‌லாம். அதாவ‌து ஒரு கிருமினாசினி.

கிராம‌ங்க‌ளில் பெண்க‌ள் அதிகாலை வாச‌ற் தெளிக்கும் போது ப‌சுவின் சாண‌த்தை த‌ண்ணீரில் க‌ரைத்து தெளிப்ப‌தைப் பார்த்திருப்பீர்க‌ள்!. இது ஒரு கிருமினாசினி என்ப‌தை உண‌ர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வ‌ழ‌க்க‌மாக‌வே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்ப‌லாக்கும் போது உட‌லைச் சுத்த‌ப்ப‌டுத்துவ‌து போல‌ உள்ள‌த்தையும் சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிக‌மாக‌ த‌லை நீர் த‌ங்குவ‌தையும் த‌டுக்கிற‌து.


இப்ப‌டி உட‌லையும் ம‌ன‌தையும் ஒருசேர‌ சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்க்காக‌வே ந‌ம் முன்னோர்க‌ள் விபூதி பூசும் ப‌ழ‌க்க‌த்தை வைத்திருக்கிறார்க‌ள். நாமும் அதை க‌டை பிடிப்போமாக‌.

ஆதலால் சொல்கிறேன் இந்து த‌ர்ம‌ம் என்ப‌து ம‌னோவிய‌லும், அறிவிய‌லும் ஆகும்.


Tuesday, March 24, 2009

மாற்ற‌ம் ஒன்றே மாறாதது!.

அண்ணா சாலை அன்று
அண்ணா சாலை இன்று


மைலாபூர் அன்று
மைலாபூர் இன்றுநேபியர் பாலம் அன்றுநேபியர் பாலம் இன்றுக‌ட‌ற்க‌ரை சாலை அன்றுக‌ட‌ற்க‌ரை சாலை இன்று

மனிதர்கள் தோன்றுவார்கள் மறைவார்கள்,
பறவைகள் தோன்றும் மறையும்,
விலங்குகள் தோன்றும் மறையும்,
கட்டிடங்கள் தோன்றும் மறையும்,
பூமி என்றும் நிரந்தரம்!
உலகத்தில் எல்லாம் ஒரு நிலையில் உருமாருபவையே! எனவே நிரந்தரம் இல்லா பொருட்கள் மீது பற்று கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான ஆத்ம ஞானத்தை தேட முயற்ச்சி செய்யுங்கள்!

Sunday, March 22, 2009

சூப்ப‌ர்ஸ்ட்டாரை சீண்டிப்பார்க்கும் தின‌ம‌ல‌ர்!

இன்று மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சீண்டியிருக்கிறது தினமலர். "அரசியலில் நாடு முழுவதும் பரவி விட்டது சினிமா மோகம்" என்ற தலைப்பில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் பங்கேற்க்கப் போகும் நடிகர் நடிகைகளைப் பற்றிய குறிப்புக்கள், அவர்களின் அரசியல் பலம் போன்ற தனது எழுத்தாய்வுகளை வெளியுட்டுள்ளது. நடிகர் சிரஞீவி, பாலகிருஷ்னா , சஞ்சய் தத் மற்றும் நடிகைகள் நக்மா, ஜெயசுதா முதல் புதிய வரவான ஜெ கெ ரித்தீஷ் வரை அனைவரை பற்றியும் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசியலில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல பல பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டும், தங்களது கட்சிக்காக பிரசாரமும் செய்யப்போகிறவர்கள்.

இவர்கள் எல்லோர் பற்றியும் போட்டுவிட்டு க‌டைசியில் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினி ப‌ற்றியும் குறிப்பை ம‌ற‌க்காம‌ல் சேர்த்து வ‌ம்புக்கு இழுத்துள்ள‌து. "சூப்ப‌ர் ஸ்ட்டார் ர‌ஜினி அதிக‌ ர‌சிக‌ர்க‌ளைக் கொண்ட‌வ‌ர். இவ‌ர் ச‌மீப‌த்தில் எந்த‌ க‌ட்சியையும் ஆத‌ரிக்க‌வில்லை. இவ‌ர் ஏதாவது வாய் திற‌க்க‌ வேண்டும் த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ள் காத்திருக்கின்ற‌ன‌" என்றெல்லாம் தேவையில்லாம‌ல் வெறும் வாயை மென்று த‌ன‌து வியாபார‌ குள்ள‌ந‌ரி புத்தியை வெளியிட்டுள்ள‌து. த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ள் சூப்ப‌ர்ஸ்டார் வாய் திற‌க்காம‌ல் இருப்ப‌தையே விரும்புகின்ற‌ன‌ என்ப‌தே உண்மை. ர‌ஜினி வாய் திற‌ந்து ஏதாவது பேசி வைத்தால் ந‌ம‌து தொழில் கெட்டுவிட‌ப்போகிற‌தே என்று தான் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் க‌வ‌லையில் உள்ள‌ன‌. அத‌னால் தான், முடிந்த‌ வ‌ரை அவ‌ரை அவ‌மான‌ப்ப‌டுத்தி அவ‌ர் வாயை மூட‌ வைக்கும் வேலையில் ப‌ல‌ வித‌ங்க‌ளில் காய் ந‌க‌ர்த்தினார்க‌ள் என்ப‌தும் உண்மை. அதில் ஒன்றுதான் ர‌ஜினி கன்னடர் என்ற‌ பிரிவினை வாத‌ப் பேச்சும் கூட‌.

உண்மை இப்படி இருக்கும் போது தினமலரில் தமிழக கட்சிகள் ரஜினி குரலை எதிர்பார்ப்பதை போன்று வெளியிட்டுள்ளது சுத்த அயோக்கியத்தனம். உண்மையைச் சொல்லப்போனால் இது போன்ற பத்திரிக்கைகளுக்கு தான் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் சூப்ப‌ர்ஸ்டார் வாய் திறந்தால் அவரை திட்டி பேசுபவர்களையும், ஆதரித்து பேசுபவர்களையும் பற்றி மாறி மாறி எழுதி காசு பார்க்கலாமே! ஆனால் ப‌ழி ம‌ட்டும் சூப்ப‌ர்ஸ்ட்டாருக்கு.

யானை இருந்தாலும் ஆயிர‌ம் பொன், இற‌ந்தாலும் ஆயிர‌ம் பொன் என்ற‌ ப‌ழ‌மொழியைப்போல‌ சூப்ப‌ர்ஸ்டாரை புக‌ழ்ந்தாலும் காசு, இக‌ழ்ந்தாலும் காசு. அத‌னால் அவ‌ரைப் ப‌க‌டைக்காயாய் ப‌ய‌ன்ப‌டுத்தி குளிர்காய‌ எத்த‌னைப் பேர். அர‌சிய‌ல் க‌ட்சிகள் நேரடியாக அவமதிப்பது ஒரு புறம், அவ‌ர் கூட‌வே ப‌ணியாற்றி அவ‌ரையே முதுகில் குத்தும் ஒரு சில‌ திரைத்துறைப் பிர‌க‌ஸ்ப‌திக‌ள் ஒரு புறம், போதாக்குறைக்கு இந்த‌ மீடியாக்க‌ள்.

ச‌மீப‌த்தில் ஒட்டப்பட்ட‌ "அர‌ச‌ன்" திரைப்ப‌ட‌ சுவ‌ரொட்டியில் இவ்வாறு எழுதியிருந்த‌து "இன்று வேட்டை விரைவில் கோட்டை". இந்த வாசகம் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினியின் அனுமதி பெற்று தான் போடப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் ப‌ட‌ம் வியாபார‌ம் ஆக வேண்டும் என்ப‌தற்க்காக‌ ர‌சிக‌ர்க‌ளின் உண‌ர்ச்சிக‌ளை உசுப்பி விடும் வாச‌க‌மாக‌வே தெரிகிற‌து. இப்ப‌டி ஆளாளுக்கு சூப்ப‌ர்ஸ்ட்டாரையும் அவ‌ர‌து அமைதி காக்கும் குண‌த்தையும் வியாபார‌ம் ஆக்கி அவ‌ரை மாட்டி விடுவ‌தும் பிற‌கு அவ‌ர் மீது ப‌ழி அனைத்தையும் போட்டு அவ‌ருக்கு எதிராக‌வே உட்கார்ந்து கேள்வி கேட்ப‌தும் அவ‌ரை முதுகில் குத்தும் அப்ப‌ட்ட‌மான‌ துரோக‌மே அன்றி வேறில்லை.


இன்னும் எத்த‌னை பேர் சூப்ப‌ர்ஸ்ட்டார் ர‌ஜினியை மிதித்து முன்னேற‌ காத்திருக்கிறார்க‌ளோ?. சிக‌ர‌த்தை மிதித்த‌வ‌ர்க‌ள் உய‌ர‌த்துக்கு போவ‌துண்டு. ஆனால் மிதிப‌ட்ட‌ கார‌ண‌த்தால் சிக‌ரத்தின் உயரம் குறைந்ததில்லை. சூப்ப‌ர்ஸ்ட்டார் என்றும் சிக‌ர‌மே!

இறைவா! மீடியாக்களில் இருந்து தலைவரைக் காப்பாற்று. எதிரிக‌ளை அவ‌ர் பார்த்துக் கொள்வார்.

Saturday, March 21, 2009

இந்து திருமண‌த்தில் அம்மி மிதித்தல் பொருள் என்ன?இந்து திருமண‌த்தில் அம்மி மிதித்தல் என்ற சம்பிரதாயம் இருப்பதன் பொருள் என்ன?

பழங்காலம் முதல் இந்து திருமண‌த்தில் மனிதர்கள் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்களை சில செய்கைகள் மூலம் மனதில் பதிய வைக்க‌ முயற்ச்சிப்பது வழக்கம். அவற்றில் ஒன்று தான் இந்த அம்மி மிதித்தல் என்ற சம்பிரதாயம். செய்முறை பயிற்சி என்று இன்று நாம் சொல்கிறோமே அது போல தான்.

சரி முதலில் இந்த சம்பிரதாயத்தின் அர்த்தம் என்ன என்பதை பார்ப்போம். அதாவது மணப்பெண் அம்மி மிதிக்கிறபோது பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை அம்மி மீது தூக்கி வைக்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்திற்கு "வாழ்க்கையில் பகைவர்களைப் போல் துன்பம் அளிக்கக்கூடிய நிலைகள் ஏற்படலாம். அப்போது நீ இந்தக் கல்லைப் போல் அசையாமல் இருக்க வேண்டும். எவ்வளவு துன்பங்கள் நேரிட்டாலும் அதை நீ உறுதியாக தாங்கி எதிர்கொள்ள‌ வேண்டும்." என்பது பொருள்.

சரி இதை வெறும் வாயாலேயே சொல்லலாமே. அதை ஏன் மெனக்கெட்டு ஒரு அம்மிக்கல்லை தூக்கி வந்து அதன் மேல் கால் வைத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் இது ஒரு வகை செய்முறை பயிற்சி தான். அம்மியின் மீது மணப்பெண்ணின் காலை பிடித்து வைத்து கல்லின் உறுதித்தன்மையை மணமகன் உண‌ர்த்துகிறான். இவ்வாறு தொடு உணர்வு மூலம் உணர்த்தப்படும் போது அது ஆழமாக மனதில் பதிகிறது.மேலும் உறவினர்கள் எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஒரு ஆண் அனைவரின் முன்னிலையிலும் ஒரு பெண்ணின் காலை பிடிக்கும் போது ஏற்ப‌டும் உண‌ர்வு
அன்றைய‌ தின‌த்தை ப‌ல‌ நாட்க‌ளுக்கு ஞியாப‌க‌ம் வைத்திருக்க‌ச் செய்யும். அது ம‌ட்டும் அல்லாம‌ல் அந்த‌ நிக‌ழ்ச்சியை ம‌ற‌க்காம‌ல் இருக்க‌வும் அன்றைய‌ தின‌த்தில் போதிக்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் வாழ்நாள் முழுவதும் ம‌ன‌தை விட்டு நீங்காம‌ல் இருக்க‌வுமே அம்மியில் கால் வைத்த‌வுட‌ன் ம‌ண‌ம‌க‌ன் , ம‌ண‌ப்பெண்ணின் காலில் மெட்டி இடுகிறான்.


ஆக‌ திரும‌ணத்தின் போது ம‌ண‌ம‌க்க‌ளுக்கு வாழ்க்கை தர்மங்கள் மனதில் ஆழப்பதியவும், அது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கவும் செய்யப்படும் செய்கைகளே சம்பிரதாயங்கள் எனப்படுகிறது. இது ஒருவ‌கை மனோ ரீதியான சூட்சம நடவடிக்கையே. சரியாகச் சொல்லப்பட்டு இவ்வாறு மனதில் ப‌திய‌வைக்க‌ப்ப‌டும் த‌ர்ம‌ங்க‌ள் வாழ்நாள் முழுவ‌தும் ம‌ற‌க்காம‌ல் காப்பாற்ற‌ப்ப‌டும்.

இந்து த‌ர்ம‌த்தில் இப்ப‌டி ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் மிக‌ உள்ளார்ந்த‌ அர்த்த‌ங்க‌ளுட‌ன் இருப்ப‌தை அனுப‌த்து உண‌ர்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌ ந‌ன்றாக‌வே புரியும். ஆத‌லால் சொல்கிறேன், இந்து த‌ர்ம‌ம் என்ப‌து ம‌னோவிய‌லும் அறிவிய‌லும்.

Wednesday, March 18, 2009

ரமண மகரிஷியின் பொன்மொழிகள்இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே.

இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன் கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. ஆனால் யாரும் இறுதிக்காலம் வ்ரை காத்திராமல் அதற்கு வெகு முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை உணர வேண்டும். அவ்வாறில்லையெனில், மரணத்தறுவாயில் விரும்பத்தகாத எண்ணங்கள் மேலோங்கும். அவ‌ற்றை அட‌க்கிக் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ அள‌வுக்கு அவை பூதாக‌ரிக்கும்.எந்த‌ நினைவோடு ஒருவ‌ன் சாகிறானோ, அதை அனுச‌ரித்து அவ‌ன் ம‌றுபிற‌வியுறுவான் என்ப‌து உண்மையே. ப‌க‌வ‌த் கீதையின் எட்டாவ‌து அத்தியாய‌த்திலும் அவ்வாறு கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. எனினும், சாக‌ப்போகும் அக்க‌ண‌த்தில் காண‌ விரும்பும் அம் மெய்ம்மை இக்க‌ண‌மும் எக்க‌ண‌மும் இருந்து கொண்டுதானே இருக்கிற‌து? இப்போதே அதை உண‌ர‌லாமே!


- பகவான் ரமணர்

Monday, March 9, 2009

ஒளவைப்பாட்டியின் ஆத்திசூடி:ஒளவைப்பாட்டியின் ஆத்திசூடி:


உயிர் வருக்கம்:


1. அற‌ம் செய‌ விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடைவது விள‌ம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண் எழுத்து இக‌ழேல்

8. ஏற்ப‌து இக‌ழ்ச்சி

9. ஐய‌ம் இட்டு உண்

10.ஒப் புர‌வு ஒழுகு

11.ஓதுவ‌து ஒழியேல்

12.ஒள‌விய‌ம் பேசேல்

13.அஃக‌ம் சுருக்கேல்


உயிர் மெய் வ‌ருக்க‌ம்:

14. க‌ண்டொன்று சொல்லேல்

15. ஙப் போல் வ‌ளை

16. ச‌னி நீ ராடு

17. ஞ‌ய‌ம் ப‌ட‌ உரை

18. இட‌ம் ப‌ட‌ வீடு எடேல்

19. இண‌க்க‌ம் அறிந்து இண‌ங்கு

20. த‌ந்தை தாய் பேண்

21. ந‌ன்றி ம‌ற‌வேல்

22. ப‌ருவ‌த்தே ப‌யிர் செய்

23. ம‌ண் ப‌றித்து உண்ணேல்

24. இய‌ல்பு அலாத‌ன‌ செய்யேல்

25. அர‌வ‌ம் ஆட்டேல்

26. இல‌வ‌ம் ப‌ஞ்சில் துயில்

27. வ‌ஞ்ச‌க‌ம் பேசேல்

28. அழ‌கு அலாத‌ன‌ செய்யேல்

29. இள‌மையில் க‌ல்

30. அர‌னை ம‌ற‌‌வேல்

31. அன‌ந்த‌ல் ஆடேல்

ககர வருக்கம்

32.கடிவது மற‌

33.காப்பது விரதம்

34.கிழமைப்பட வாழ்

35.கீழ்மை அகற்று

36.குணமது கைவிடேல்

37.கூடிப் பிரியேல்

38.கெடுப்ப‌து ஒழி

39.கேள்வி முயல்

40.கைவினை க‌ர‌வேல்

41.கொள்ளை விரும்பேல்

42.கோதாட் டு ஒழி

43.கெள‌வை அக‌ற்று

சகர வருக்கம்

44.ச‌க்க‌ர‌ நெறி நில்

45.சான்றோர் இன‌த்து இரு

46.சித் திர‌ம் பேசேல்

47.சீர்மை ம‌ற‌வேல்

48.சுளிக்க‌ச் சொல்லேல்

49.சூது விரும்பேல்

50.செய்வ‌ன‌ திருந்த‌ச் செய்

51.சேரிட‌ம் அறிந்து சேர்

52.சையென‌த் திரியேல்

53.சொற் சோர்வு ப‌டேல்

54.சோம்பித் திரியேல்

த‌க‌ர‌ வ‌ருக்கம்

55.த‌க்கோன் என‌த் திரி

56.தான‌ம‌து விரும்பு

57.திருமாலுக்கு அடிமை செய்

58.தீ வினை அக‌ற்று

59.துன்ப‌த்திற்கு இட‌ம் கொடேல்

60.தூக்கி வினை செய்

61.தெய்வ‌ம் இக‌ழேல்

62.தேச‌த்தோடு ஒட்டி வாழ்

63.தைய‌ல் சொல் கேளேல்

64.தொன்மை ம‌ற‌வேல்

65.தோற்ப‌ன‌ தொட‌ரேல்

நகர வருக்கம்

66.ந‌ன்மை க‌டைபிடி

67.நாடு ஒப்ப‌ன‌ செய்

68.நிலையில் பிரியேல்

69.நீர் விளையாடேல்

70.நுண்மை நுக‌ரேல்

71.நூல் ப‌ல‌ க‌ல்

72.நெற் ப‌யிற் விளைவு செய்

73.நேர் ப‌ட‌ ஒழுகு

74.நைவினை நுணுகேல்

75.நொய்ய‌ உரையேல்

76.நோய்க்கு இட‌ம் கொடேல்

77.ப‌ழிப்ப‌ன‌ ப‌க‌ரேல்

78.பாம் பொடு ப‌ழ‌கேல்

79.பிழைப‌ட‌ச் சொல்லேல்

80.பீடு பெற‌ நில்

81.புக‌ழ்ந்தாரைப் போற்றி வாழ்

82.பூமி திருத்தி உண்

83.பெரியாரைத் துனைக்கொள்

84.பேத‌மை அக‌ற்று

85.பைய‌லோடு இண‌ங்கேல்

86.பொருள் த‌னைப் போற்றி வாழ்

87.போர்த் தொழில் புரியேல்

ம‌க‌ர‌ வ‌ருக்கம்

88.ம‌ன‌ம் த‌டுமாறேல்

89.மாற்றானுக்கு இட‌ம் கொடேல்

90.மிகைப்ப‌ட‌ச் சொல்லேல்

91.மீ தூண் விரும்பேல்

92.முனை முக‌த்து நில்லேல்

93.மூர்க்க‌ரோடு இண‌ங்கேல்

94.மெல்லி நல்லாள் தோள் சேர்

95.மேன் ம‌க்க‌ள் சொல் கேள்

96.மை விழியார் ம‌னை அக‌ல்

97.மொழிவ‌து அற‌மொழி

98.மோகத்தை முனி

வ‌க‌ர‌ வ‌ருக்கம்

99.வ‌ல்ல‌மை பேசேல்

100.வாது முற் கூறேல்

101.வித்தை விரும்பு

102.வீடு பெற‌ நில்

103.உத்த‌ம‌னாய் இரு

104.ஊருட‌ன் கூடி வாழ்

105.வெட்டென‌ப் பேசேல்

106.வேண்டி வினை செய்

107.வைக‌றைத் துயில்

108.ஒன்னாரைத் தேறேல்

109.ஓர‌ம் சொல்லேல்


Saturday, March 7, 2009

இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?


ஏன் இத்தனை தெய்வங்கள்?


இந்த கேள்வியை ஆராயும்முன் முதலில் நமக்கு ஏன் இத்தனை குணங்கள் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம். ஏன்? நமக்குள்ளே எத்தனை உணர்வுகள் ஏன்? பாசம், கோபம், அமைதி, காதல் மற்றும் காமம் என்று பல ரூபங்களை எடுக்கிறோமே ஏன்? வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்துடன் பழகும் நாம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பழகும் போது பயத்துடன் பழகுகிறோம் ஏன்? அலுவலக மேலதிகாரியிடம் ஏன் பாசத்தை பொழிவதில்லை? இப்படி நாம் ஒருவரே வெவ்வேறான நபராக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போது இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியான கடவுளுக்கு பல உருவங்கள் ஏன் இருக்கக் கூடாது? இது ஒரு வாதமே என்று எடுத்துக்கொண்டாலும் இந்த பல உருவ வழிபாட்டில் உள்ள மனோவியல் ரீதியான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்து தர்மத்தில் பல தெய்வங்கள் இருப்பது வேறு எந்த மதங்களிலும் இல்லாத ஒரு சிறப்பாகவே கருத வேண்டும். ஏனெனில் கடவுளை வணங்குவதற்கு நமக்கு விருப்பமான எந்த ரூபத்தையும் நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த ஒரு தர்மத்தில் மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கொடுக்கப்படவில்லை என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.


இப்போது மேற்குறிப்பிட்ட கேள்விக்கான புரிதலுக்கு வருவோம். பொதுவக ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணங்களுக்கு ஏற்பவே நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்க தாங்கள் வணங்கும் கடவுளும் தங்களுக்கு பிடித்த மாதிரியான குணாதிசய‌ங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயல்பானதே! அது போலவே பல கடவுளர்களின் குணங்களும் அதற்கேற்ற கதைகளும் மக்கள் வாழிடத்திற்கு ஏற்றார்போல அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும் உண்டு. தம்மை வழிநடத்தும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கற்பனையே அவன் விரும்பும் கடவுளாகவும் மாறுகிறது. அமைதியான, அன்பான‌ அதே நேரம் வீரமுள்ள கடவுளை வழிபட வேண்டுவோர் இராமரை வணங்குவதும் , எந்த துன்பத்திலுருந்தும் தம்மைக்காக்கும் சூத்திரதாரி வேண்டுவோர் கிருஷ்னரையும் வணங்குவர். பயந்த சுபாவம் கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்ட‌ கடவுளை காக்கும் தெய்வங்களாக வணங்குவதைக் காணலாம்.


அதிக கோபம் சமூக அக்கிரமங்களை கொடூரமாக அழிப்பதே சரி என்று மனோவியல் ரீதியாக எண்ணுபவர்கள் பத்திரகாளி போன்ற ரத்த மயமான தெய்வங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கடவுளை தாயாக பாவிக்க நினைப்பவர்கள் மீனாட்சி , காமட்சி , மாரியம்மன் என்ற பெண் தெய்வங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.


மேலும் சிலர் இயற்கையின் மீதும் வினோத படைப்புக்கள் மீதும் ஈர்க்கப்பட்டால் அவர்கள் மனித உருவும் விலங்கு உருவும் கொண்ட வித்தியாசமான தெய்வங்களான பிள்ளையார், அனுமார் போன்ற கடவுளை தேர்ந்தெடுப்பர்.


மொத்தத்தில் பக்தி செலுத்தவும் தியானிக்கவும் ஒரு உருவம் தேவை. ஒரே உருவத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படுவது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே தியானிப்பதற்கும் பக்தியை மனதில் இருத்தி , மனதை ஒரு நிலைப்படுத்தி நிரந்தரமான அமைதியை அடைந்து நல்வழிப்பட மனிதர்களுக்கு பல்வெறு உருவங்கள் கொண்ட தெய்வ வழிபாடு சிறப்பாக உதவுகிறது.


இந்த பல உருவ வழிபாட்டை இன்னொரு நிலையிலும் பார்க்க வேண்டும். ஒரு மார்கத்திற்கு ஒரே ஒரு உருவம் தான் கடவுள் என்று மொத்த பேரும் அந்த உருவத்தை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிரார்த்தனை நிரைவேறாமல் போனால், அந்த உருவத்தின் மீதான நம்பிக்கை குறையும் அதே நேரத்தில் அந்த உருவத்தை மையப்படுத்தும் மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை போய்விடும். ஆனால் இந்து தர்மத்தில் ஒரு உருவ தெய்வத்தின் மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம். அதாவது ஒரு மனிதன் எந்த உருவத்தின் வாயிலாக‌ வழிபட்டாலும் தத்துவமார்க்கமான தர்மத்தை கடைபிடிக்கும் வாழ்க்கைக்குள் வந்து விட வேண்டும் என்பதேயன்றி உருவ வழிபாடு மட்டும் முக்கிய நோக்கமல்ல.


ஆதலால் மீண்டும் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.