Sunday, October 31, 2010

இந்த கருமத்துக்குத் தான் மதம் மாறுகிறார்களா?


தினமலர் செய்தி:

திருச்சி : திருச்சி மேலப்புதூர் கல்லறையில் உள்ள தீண்டாமை சுவரை இடிக்க முயன்ற ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான உத்திரிய மாதா கோவில் கல்லறை உள்ளது. பிள்ளைமா நகர், தர்மநாதபுரம், செங்குளம் காலனி, செந்தண்ணீர்புரம் உட்பட 32 பகுதிகளில் இறப்பவர்களை, 200 ஆண்டாக இங்கு அடக்கம் செய்கின்றனர். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கி, இடையில் மதில் சுவர் ஒன்றை, மேல்ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் எழுப்பினர். அதை அகற்ற தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர், பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர். நேற்று காலை 9.05 மணிக்கு, கடப்பாரை, சுத்தியலுடன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலர் நிலவழகன் தலைமையில் சிலர், கல்லறைக்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், தீண்டாமை மதில் சுவரை இடிக்க துவங்கினர்.

தகவலறிந்த பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சுவர் இடித்தவர்களை தடுத்து நிறுத்தினர். பாலக்கரையை சேர்ந்த செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, அத்துமீறி நுழைதல், கலவரத்தை தூண்டுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, நிலவழகன் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர். திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்தரப்பினர் பிரச்னையில் ஈடுபடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது

****

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கிறது என்றும் வர்னாசிரமம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் அதை ஒழிக்கவே வேறு மதங்களுக்கு மாறுவதாகவும் கூறிக்கொள்பவர்கள் தங்கள் செயலுக்காக வெட்கப்பட வேண்டும். ஜாதிகளும் வருனாசிரமங்களும் கடைபிடிக்கப்படுவதாக கூறிக்கொண்டு அதன் பொருட்டே இந்து மததின் மீது வெறுபுணர்ச்சியை பரப்பி வரும் நாத்திகர்களும், மதம் மாற்றும் பாதிரியார்களும் இனி என்ன கூறப்போகிறார்கள்?

கிறிஸ்தவர்களின் தீண்டாமைச் சுவரை உடைக்க மட்டும் கம்யூனிஸ்ட்கள் ஏன் போகவில்லை?

அடிப்படையில் மனிதர்கள் ஆதிக்க குணம் படைத்தவர்களே! யாராவது யாரையாவது தனக்குக் கீழே அடிபணியச் செய்து பழக்கப்பட்டவன். எனவே இதற்கு மதங்களைப் பொறுப்பாக்காமல் உண்மையான ஆண்மீகத் தேடலுக்கு வழி வகுத்து மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வு உண்டாகச் செய்வதே சரியான தீர்வாக இருக்க முடியும்!

இனியும் இந்து மதத்தில் தான் ஓட்டை உடைசல் இருக்கிறது என்று நாத்திக மற்றும் இந்து மத எதிர்ப்புக் கூட்டம் பேசிக்கொண்டிருந்தால் தன்னைத் தானே அவர்கள் கேலி செய்து கொள்கிறார்கள் என்றே பொருள் கொள்ளப்படும்!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

.

Wednesday, October 27, 2010

நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?

அலுவலகத்தில் வேலைபார்ப்போருக்கெல்லாம் பிடித்ததோ பிடிக்கவில்லையே 'யெஸ் சார்' என்று தலை ஆட்டினால் தான் அடுத்த நாட்களை ஓட்ட முடியும் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. நீங்களும் அப்படி 'எஸ் பாஸ்' ஆசாமியா? வெட்கப்படாதீங்க. அதுவும் ஒரு புத்திசாலித்தனம் தான் என்று முல்லாவைப் பார்த்து தேற்றிக்கொள்ளுங்கள்.

முல்லா ஒரு மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு
அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு
ஏதாவது உரையாடிக்கொண்டு இருப்பார்.

ஒரு நாள் மன்னரும் முல்லாவும் அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தார்கள்.

அன்று பீன்ஸ் கரி சமைக்கப்பட்டிருந்தது. அதிக பசியின் இருந்ததால் மன்னருக்கு பீன்ஸ் கரி
மிகவும் ருசியாக இருந்ததாகத் தெரிந்தது.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி "முல்லா, உலகத்திலேயே மிகவும் ருசியான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்றார்.

"சந்தேகமே வேண்டாம், பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது" என்று ஆமாம் போட்டார் முல்லா. அதாவது 'எஸ் பாஸ்'.

மன்னர் உடனே சமையல்காரரை அழைத்து "இனிமேல் சமையலில் தினமும் பீன்ஸ் இருக்க வேண்டும். நாள் தவறாமல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸ் இருந்தே ஆக வேண்டும்" என்று ஆணையிட்டார். இப்படியே பத்து தினங்கள் ஓடியது.

மன்னருக்கு இப்போது பீன்ஸ் கரியைப் பார்த்தாலே ஒரு வித வெறுப்பும், சலிப்பும்
உண்டாகிவிட்டது.

அன்றும் வழக்கம் போல பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் முல்லாவைப் பார்த்து "உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினார்.

"ஆமாம் மன்னா, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த காய்கறிகளிலேயே
இவ்வளவு மோசமாக சுவையே இல்லாத காயை கண்டதே இல்லை" என்றார் முல்லா. அதாவது மீண்டும் 'எஸ் பாஸ்'.

மன்னருக்கு ஒரே ஆச்சரியம் "என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்ட பொழுது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர், இப்போது தலைகீழாக மாற்றிப் பேசுகிறீரே" என்றார் மன்னர்.

முல்லா சிரித்துக் கொண்டே "மன்னா! என்ன செய்வது? நான் தங்களிடம் தானே வேலை
பார்க்கிறேன். பீன்ஸிடம் இல்லையே!" என்றார்.

ஆக இடம் பொருள் தெரிந்து 'எஸ் பாஸ்' போடுவதும் சாமர்த்தியம் தான் போல இருக்கிறது.
சரி, நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?


.

Monday, October 25, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள். ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.

எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது.

இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல். உனக்கும் சொல்லிக்கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாமும் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல். அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.

உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் சொற்களின்
உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள். உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அரிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

- சுவாமி விவேகானந்தர்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் "வேதங்களின் சிறப்பு என்ன?" என்று கேட்கப்பட்டது.

"'தங்கள் போதனையையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்பத் திரும்ப வற்புறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெரும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்" என்று பதிலளித்தார். வேதங்கள் இறைவாக்காகவே கருதப்பட்டாலும் இறைநிலையை அடைவதே அதனினும் சிறந்தது என்பதை மிக எளிமையாக விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.

மனதில் நிறுத்த சில பெரியோர் வாக்கு:-

அகந்தை கொள்ளாதீர்கள் அது தீமையில் முடியும்.

நல்லோர்களின் நட்பைப் பெறுங்கள். அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதில் வஞ்சம் வைக்காதீர்கள். அது மரணத்தைக் காட்டிலும் கொடிய துன்பம் தரும்.

தகுந்த நேரத்தில் உதவுங்கள். அத்தகைய உதவி விலைமதிப்பிட முடியாததாகிறது.

தீயோர் நட்பு, பிறர் உடைமை, மாற்றான் மனைவி இவற்றில் ஆசை வந்தால் அதை அலட்சியம் செய்யுங்கள். அது அழிவைக் கொடுக்கும்.

தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவனே உண்மையான நண்பனாவான்.

நற்சிந்தனையும் நல்லொழுக்கமுமே வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குணங்களாகும்.

ஆசைகளைத் துறக்கத் தெரிந்தவனே துயரங்களை வெல்ல முடிந்தவன்.

சத்தியமும் பொறுமையும் கொண்டவனே உலகை வெல்லக்கூடியவன்.

பிற ஜீவன்களின் மீது கருணையோடு நடந்து கொள்பவன் முன்னால் இறைவனே பணிந்து நிற்பான்.

.

Sunday, October 24, 2010

வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்து வெற்றி பெற்று விடவில்லை. மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களை விஞ்ஞானம் இன்னும் முழுமையாக அறிந்திட வில்லை.

சுத்த வெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின, பரமாணுக்களின் சேர்க்கையால் பஞ்ச பூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருபு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்சக்தி சுழலும் பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சி நிலை பெற்று ஓரறிவு முதல் பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.

இந்த மனித உடலிலே உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக் கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து
இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக் கூடிய இயக்கங்கள் வேறெதுவிமில்லை.

இந்த உடலில் நடைபெறாத ரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டு பிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது. இவற்றை முழுமையாக உணர்ந்தவர்கள்
சித்தர்கள் மட்டுமே. "இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப் பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன" என்பதையெல்லாம் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.

அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும் உறுதிக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு உடல் பிரபஞ்சத்திலிருந்து பெற்று எவ்வாறு அதை மின்சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களைத் தோற்றுவித்து இயக்க நியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.

ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், .
ஊடுருவுதல், இரண்டினிடையே முன்பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.

இந்த அலைகள் பஞ்சபூதங்களின் மீது மோதும் போது அழுத்தம் , ஒலி, ஒளி, சுவை, மணம்
அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மலர்ச்சி பெறுகின்றன.
அந்த மனநிலையிலேயே பிரபஞ்ச உற்பத்தி ரகசியங்கள் எல்லாம் மனிதர்கள் உள்ளத்திலே
நிறைந்திருக்கும். இவ்வாறு உடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சித்தர்கள் பிரபஞ்சமும் உடலும்
சார்ந்த பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இந்த உடலை ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் ஆராய முடியும்.

அவ்வாறு ஆராய்ந்து உடல் இயக்கமும் பிரபஞ்ச இயக்கமும் ஒன்றே என்று அறிந்த
சித்தர்களே 'அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை' என்று சுருக்கமாகக் கூறினார்கள்.
அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால்
ஒரு சித்தராகச் சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லாரிடத்திலுமே அடங்கியுள்ளது. நமக்குத் தேவை இவற்றை அறிய முயற்சிக்கும் மனமே!

.

Wednesday, October 20, 2010

சூப்பர்ஸ்டார் ரஜினியும் ஆன்மீக ரஜினியும்!


ஸூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!ஆன்மீக ரஜினிகாந்த்! அட இதுல ரஜினி யாருப்பா??? 

.

Saturday, October 16, 2010

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!நண்பர்கள் அனைவரின் பிரார்தனைகளும் நிறைவேறி எல்லா நிகழ்வுகளிலும் வெற்றியே பெற இறைவன் அருள்புரிவாராக!

அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!.

Thursday, October 14, 2010

அக்பர் பீர்பால் கதைகள் - 4

பீர்பாலை அமைச்சர் பதவியில் இருந்து விரட்ட அவரது எதிரிகள் பல முயற்சிகள் செய்து தோற்றுப்போயிருந்தனர். அவர்கள் அனைவரும் அரசியாரின் தம்பியை அனுகி பீர்பாலை அரசவையிலிருந்து நீக்க ஏதாவது செய்தால் அந்த இடத்தில் உங்களை இருத்தலாம் என்றும் இதனால் நீங்கள் மன்னருக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூபம் போட்டனர். பதவி ஆசை முற்றியதாலும் மன்னருக்கு மிக நெருக்கமான முறையில் பீர்பால் இருப்பதால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியாலும் அரசியாரின் தம்பி இதற்கு சம்மதித்தான்.

அவன் அரசியாரிடம் சென்று ஏதாவது நாடகமாடி பீர்பாலை தொலைத்துக் கட்டு. இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிற எனக்கு வேறு வழியில்லை என்றும் மிரட்டலானான். அரசியும் தம்பியின் மேலிருந்த பாசத்தால் நாடகமாட சம்மதித்தாள். அவன் கூறிய திட்டப்படி அன்று அரசி நாடகமாடினாள்.

அன்று மன்னர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசியார் அழுது கொண்டிருந்தாள். மன்னர் அதிர்ந்தார். காரணம் வினவினார். அரசியோ பீர்பால் மிகவும் செருக்குற்று இருப்பதாகவும் அரசியாகிய தன்னை மதியாமல் நடந்து கொள்வதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கூறி விம்மலானாள். அரசர் மேலும் அதிர்ந்தார். "பீர்பாலை எந்த காரணமும் இல்லாமல் எப்படி பதவி நீக்கம் செய்வது?. அவர் போல அற்புத மனிதர் கிடைக்கமாட்டார். இதோ பார், அவர் உன்னை மதிக்குமாறு நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறு. அதைச் செய்வோம். அது நடக்கவில்லை என்றால் நீ கூறுவதைப் போல அவரை பதவி நீக்கம் நீக்கம் செய்யலாம். என்ன சரியா?" என்றார் மன்னர்.

அரசியும் சம்மதித்தார். அரசியின் யோசனைப்படி இதற்காக ஒரு நாடகமாட இருவரும் தீர்மானித்தனர். அரசி கூறியதாவது "நீங்கள் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிச் சென்றது போல நடியுங்கள். பீர்பால் சமரசம் செய்ய வருவார். நீங்கள் அரண்மனைக்கு வர மறுத்துப் பிடிவாதம் பிடிக்க வேண்டும். உன்னால் முடிந்தால் மகாராணியாரை இங்கே வந்து பார்க்கச் சொல்" என்று சவால் விடுங்கள். இதில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று கேளுங்கள். அதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பார். என்னைச் சமாதானம் செய்ய வருவார். என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டால் நான் மதித்து வருவேன். இல்லையேல் நான் மிகவும் பிடிவாதமாக வர மறுத்து விடுவேன். அவர் முயற்சியில் தோற்பார். தானாகவே பதவியை விட்டு விலகி விடுவார்." என்று யோசனை கூறினார்.

மன்னரும் இதற்கு சம்மதித்தார். மன்னருக்கு பீர்பால் தான் வெல்வார் என்று நன்றாகத் தெரியும். மறுநாள் மன்னர் அரசியிடம் கோபப்பட்டு அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டார் என்று செய்தி காட்டுத் தீ போல பரவியது. பதறிய பீர்பால் மன்னரைச் சென்று பார்த்தார். மன்னரோ திட்டமிட்டபடி "பீர்பால், நான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டுமானால் எனது ஒரு நிபந்தனையை நீர் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

"எந்த நிபந்தனை என்றாலும் சொல்லுங்கள். நான் நிறைவேற்றுகிறேன்"

"அது உம்மால் முடியாது"

"நிச்சயம் முடியும்"

"முடியாது, ஒரு வேளை நீர் தோற்றால்.."

"நான் அமைச்சர் பதவியை விட்டே விலகிவிடுகிறேன்"

எல்லாம் திட்டப்படி நடப்பதால் மன்னர் புன்னகைத்தார்.

"பீர்பால், கோபித்துக் கொண்ட நான் தானாகவே அரன்மனை திரும்பமாட்டேன். அரசியார் என்னை இங்கே வந்து அழைத்துச் சென்றால் தான் வருவேன். உன்னால் முடிந்தால் அவரை இங்கே அழைத்து வா" என்றார் அக்பர்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே பீர்பால் மனதிற்கு தோன்றியது. அவர் அரசியை வரவழைக்கத் திட்டம் போட்டார்.

கண்களில் கண்ணீருடன் அரசியை சந்தித்தார் பீர்பால். "பீர்பால் என்ன நடந்தது? ஏன் இந்தக்
கண்ணீர்?"

"என்ன சொல்வது அரசியாரே, மன்னர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி பாதை மாறி போகிறாரே. மனம் வெறுத்துப் போனதால் நான் பதவி விலகிவிட்டேன்"

"என்ன? விலகிவிட்டீர்களா...? தெளிவாகச் சொல்லுங்கள்.. மன்னர் நீக்கினாரா? நீங்களே
விலகினீர்களா?"

"அரசியாரே.. நானே விலகிக்கொண்டேன்."

"காரணம்.?"

"என்னதான் உங்கள் மீது கோபம் இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செய்வதுபோல மன்னர் நடந்து கொள்வாரா? நான் எப்படிச் சொல்வேன்.. அரசியாரே..உங்களை நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விட்டு மன்னர் வேறு திருமணம் செய்ய பிடிவாதமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்"
என்றார் பீர்பால்.

அரசிக்குத் தூக்கிவாரிப்போட்டது. விளையாட்டுக்குத்தானே சண்டை போட்டேன். மன்னர் நிஜமென்று நம்பிவிட்டாரா என எண்ணிக் குழம்பினாள். அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே பீர்பாலை அழைத்துக் கொண்டு மன்னரிருக்கும் இடம் தேடி ஓடலானாள்.

பீர்பாலுடன் அரசியார் வருவதைக் கண்ட அக்பர் மகிழ்ந்தார். தான் நினைத்தது போலவே பீர்ப்பால் சவாலில் ஜெயித்ததை கண்டு பூரிப்படைந்தார். மிகுந்த பதைபதைப்புடன் வந்த அரசியை சமாதானப்படுத்தினார் அக்பர்.

பீர்பாலும் அரசியிடம் தான் நடத்திய நாடகத்தை தெரிவித்தார். அரசி பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைக் கண்டு மிகவும் பாராட்டினார். இருவரும் மகிழ்ச்சியுடன் பீர்பாலுக்கு அன்பளிப்புக்கள் கொடுத்து மகிழ்வித்தனர்.

அந்த நாள்முதல் அரசி பீர்பாலை விரட்டும் எண்ணத்தை அடியோடு கைவிட்டார்.


அந்த அரசனும் அரசியும் இவங்கதானோ!
.

Wednesday, October 13, 2010

மஹாபாரதத்தில் ஒரு நாள் - 4 செய்வனத் திருந்தச் செய்!
மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது.

பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. யுத்தம் தொடங்குவதற்கு முன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலே ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.

நமது உறவினர்களையே கொலைபுரியும் இந்தப் போர் தேவைதானா? என்று அர்ஜுனன் செயலற்ற நிலையில் நின்றிருந்தபோது, "அர்ஜுனா, போர் செய்வதும் தர்மத்தை நிலைநாட்டுவதும் க்ஷத்ரியனான உனது கடமை. உன் கடமையிலிருந்து நீ தவறாதே" என்று எடுத்துரைத்து கடமையாற்றுவதால் அடையக்கூடியதான பூரண நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

"அர்ஜுனா! தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையைச் செய்து கொண்டே அவனால் எவ்வாறு பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன். கேள்.!"

"இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ,
யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்த கடவுளை தனக்குரிய கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்."

"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

"குந்தியின் மகனே! குறை உள்ளது என்றாலும் தனக்கு என இயல்பாய் அமைந்த கர்மத்தை விட்டுவிடக் கூடாது. தீயைப் புகை சூழ்வது போன்று வினைகள் எல்லாம் கேடுகளால் சூழப்பட்டுள்ளன. அவற்றை நீக்கி நீ உன் கர்மத்தை தவறாது செய்வாய்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

இவ்வாறு ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து அர்ஜுனனுக்கு போதித்தார் ஸ்ரீ க்ருஷ்ணர். அப்படிப்பட்ட அர்ஜுனன் தன் குருவாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணரின் செயல் கண்டு பதறிய நாள் ஒன்று வந்தது.

ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.

அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள்.

பகல் முழுக்கப் போரிட்டகளைப்பால் அர்ஜுனன் அன்று நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள்மேல் கவனம் செலுத்துவான்.

வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.

ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.

ஒரு நாள், அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான். எழுந்து கண்ணன் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.

இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.


உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?'' என்றான்.

"அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா? அது மட்டு மல்ல; இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல. நீ எஜமானன்; நான் உனக்கு சாரதி. ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்; மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன்.

கீதை உபதேசம் கேட்ட நாளைவிட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.

அந்தநாள் முதல் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.

போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் தலைவர்களைக் கொண்ட இந்த சமூகத்திற்கு ஸ்ரீ க்ருஷ்ணர் ஒரு வாழும் பாடமே! ஆம், மகாபாரதம் வாழும் தர்மம்!"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


*******************

இவர் கலியுக க்ருஷ்ணரோ?


.

Tuesday, October 5, 2010

மரணத்திற்கு அப்பால் - 19
"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம சஞ்சாரத்தில் மேலான நிலை எது என எமதர்மனிடம் வினவுகிறான் நசிகேதன்!


"நசிகேதா! எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று கூறப்படுகிறது"


செயலற்ற நிலை எனப்படுவது சோம்பலாக வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கும் நிலை என எடுத்துக்கொள்வது தவறு. புத்தி விழிப்படைந்த நிலையில் புற உடலும் இகலோக வாழ்வும் வேறு என்றும் உள்ளிருக்கும் ஆன்மா வேறு என்ற நிலையான உண்மையை புரிந்து கொண்டு மனமும் உடலும் ஆழ்ந்த அமைதி கொள்ளும் நிலையை செயலற்ற நிலை என எமதர்மன் விளக்குகிறார். இந்நிலையில் ஆசைகளின் உந்துதலால் மனம் செயல்பட வேண்டிய அவசியம் உண்டாவது தடுக்கப்படுகிறது. எனவே இந்நிலையை ஐந்து புலன்களும் ஓய்வு நிலையில் இருக்கும் சமயமாக எமதர்மன் எடுத்துக் கூறுகிறார்.


"நசிகேதா! புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக நிலை வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது."


ஆன்மாவை உணரும் தருனத்தை தன்னுணர்வு என்று கீதையில் கூறப்படுகிறாது. சுவாமி விவேகானந்தர் 'உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதை பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை எல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்' என்கிறார் அவர்.


எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. 'இருகிறது' என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?"


"இந்த உண்மை 'இருக்கிறது' என்று முதலில் அறிய வேண்டும். பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். 'இருக்கிறது' என்ற நிலையில் ஆழமாக உணரும் போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி, இயல்பாக வாய்க்கிறது".


ஒரு மலை ஏறப்போகிறோம். அடிவாரத்தில் இருந்து கொண்டு 
மலையைப் பார்த்தால் உச்சிக்குப் போக பாதையே இல்லாதது போல தெரியும்.
ஆனால் அருகே செல்லச்செல்ல மலையை ஏறி உச்சியை அடைய அங்கேயும் 
ஒரு பாதை இருந்தே தீரும். பாதை இருக்கிறது என்று நம்பிச் செல்பவனுக்கே
அப்பாதைகள் தெரியவரும். அல்லாமல் பாதை இருக்குமா என்ற 
ந்தேகத்துடனும் பாதை கிடையாது என்று நினைப்பவனும் அடிவாரத்தை
தாண்ட மாட்டார்கள்.


அது போல எல்லையற்ற சக்தி மற்றும் ஆன்மா போன்றவற்றை சந்தேகக் கண்ணோடு மட்டுமே பார்ப்பதும் அதை அறியும் முயற்ச்சியே இல்லாமல் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனாலும் ஆன்மாவை அடையமுடியாது. எல்லையற்ற இறை சக்தியை அறிய முடியாது. எவன் ஒருவன் 'இருக்கிறது' என்று தீர்க்கமாக நம்பி அதை அறியும் பொருட்டு முயற்சிக்கிறானோ அவனே அளப்பறிய இறை சக்தியையும் ஆன்மாவையும் அறிகிறான் என்கிறார் எமதர்மன்.


மனிதன் எப்போது மரணமற்றவன் ஆகிறான் என்று நசிகேதன் கேட்க


எமதர்மன் தொடர்கிறார் "நசிகேதா! மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும் போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். இங்கேயே இறைநிலையை அடைகிறான்."


"இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்."


ஆக ஆன்மாவை ஆசைகளைக்கடந்த மன ஆழ்மன அமைதியுடன் அடைந்து அது தான் நாம் என்பதை உணர்ந்து உச்சந்தலை நாடி மூலம்உடலை விட்டுப் பிரிந்து மரணமற்ற தன்மையை அடையலாம் என்றும் அவ்வாறு அடையும் நிலையை அடைபவன் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான் என்று எமதர்மன் கூறுகிறார்.


கடைசியாக ஆன்மா பற்றி எமதர்மன் இவ்வாறு கூறுகிறார்..


"நசிகேதா! உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்கும் குச்சியைப் பிரிப்பது போல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது,  அழிவற்றது என்று அறிந்து கொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்து கொள்"


நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய கடைசி உபதேசம் இது. பெருவிரல் அளவுடைய ஒளிப்பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதுவே ஆன்மா. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும். இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை எமதர்மன் அதை நினைவு நசிகேதனிடம் நினைவுகூறுகிறார்.


இவ்வாறு நசிகேதன் கேள்வி கேட்க எமதர்மன் பதில் கூற கட உபநிஷத்தின் ஆன்மாவை அறிய உதவும் பாடம் இத்துடன் நிறைவு பெறுகிறது.


"எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான். பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்."


ஆக உபதேசத்தை கேட்பதுடன் நில்லாமல் நசிகேதன் அதை சாதகம் செய்து இறைநிலையை அடைகிறான்.


கடைசியாக நீங்கள் தான் ஆன்மா என்பதை கீழ்கண்டவாறு தொடர்ந்து சிந்துப்பது ஆன்மாவை உணர்வதற்கு உதவும்.


1. அனைத்திற்கும் சாட்சி நான்
2. காலத்தின் தலைவன் நான்
3. ஆதியில் தோன்றியவன் நான்
4. பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நான்
5. ஆன்ம அக்கினி நான்
6. ஆணையிடுபவன் நான்
7. உடம்பைக் கடந்தவன் நான்
8. உடம்பு வீழ்ந்து, உயிர் வெளியேறிய பிறகும் மாற்றமின்றி இருப்பவன் நான்.
9. அனைத்தும் தூங்குகின்ற போதும் விழித்திருப்பவன் நான்
10. வாழ்க்கையே நான்.


மேலே உள்ளவைகளை படிக்கும் போது 'நான்' என்ற பதம் வாசிப்பவராகிய நீங்கள் தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அந்த 'நான்' என்பதே இறைவன். கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் 'எல்லா உயிர்களிடத்திலும் உறைந்திருப்பவன் நானே' 'நான்' என்று யாரெல்லாம் கூறிக்கொண்டாலும் அவற்றின் உருவகம் ஒன்றே! ஏனெனில் எல்லா உயிர்களிலும் உரைந்திருப்பதும் அழிக்கமுடியாததும் அடையாளம் அற்ற 'நான்' என்ற ஒரே "ஆன்மா".  


"அதுவே நீ"


(முற்றும்)