Wednesday, April 28, 2010

தினமலரின் நேரடி ஒளிபரப்பு!

சித்திரைத் திருநாளின் அற்புத்தத் திருநாளான திரு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை தினமலர் தனது வலைதளத்திலேயே நேரடி ஒளிபரப்பு செய்தது. தொழில் நுட்பத்தை காலத்திற்கேற்ப அற்புதமாக உபயோகப்படுத்தும் நாளிதழாக தினமலர் இருக்கிறது.


ஆனால் இவர்களின் தொழில் திறமையுடன் போட்டி போட முடியாமல் தான், தினமலர் ஒரு பார்ப்பன பத்திரிக்கை என்றும் தமிழர்களுக்கு எதிரான பத்திரகை என்றெல்லாம் சேற்றை வாரிப்பூசுகிறார்கள் தினமலரின் போட்டியாளர்கள் என்றே தோன்றுகிறது. இவ்வளவிற்கும் தமிழகத்தின் நாங்கள் தான் நம்பர் ஒன் பத்திரிக்கை என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கை அப்படியே தினமலரின் செயல் திட்டங்களை காப்பியடிக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக மாணவர்களை ஒருங்கினைத்து ஒவ்வோர் ஊரிலும் தினமலர் நடத்தும் ஜெயித்துக் காட்டுவோமை அப்படியே வேறுபெயரில் காப்பியடிக்கின்றன நம்பர் ஒன் பத்திரிக்கைகள்...நேரடி ஒளிபரப்பை நன்றாகவே காண்பித்தார்கள். கொஞ்சம் காமெராவை ஆட்டாமல் பிடித்துக்கொண்டிருந்தால் தெளிவாக காணமுடியும் என்பதை படமெடுப்பவர்களிடம் யாராவது சொல்லுங்களேன்!


Tuesday, April 27, 2010

அனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்!அறிவியலோடு ஒத்துப்போகாத மதங்கள் இருப்பதை விட அழிவதே மேல். மனிதர்களை தொடர்ந்து இருட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அந்த மதங்கள் உடனேயே அழிந்து விடுவது மனித குலத்திற்கு நல்லது - சுவாமி விவேகானந்தர்.

இந்து தர்மம் என்றைக்குமே அறிவியலோடு பொருந்திப் போவதாகவே இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. உதாரணமாக ஸ்ரீமன்நாராயணனின் தசாவதார வடிவங்கள் பரினாம வளர்ச்சியின் சித்தாந்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. நீர்வாழ் உயிரியில் தொடங்கி படிப்படியான உருமாற்றத்தால் மனித உருவை வெளிப்படுத்தும் இந்த தசாவதாரக் கருத்தியல் வேறு எந்த மதத்திலும் கண்டறிய முடியாத அறிவியலோடு பொருந்திப்போகும் ஒரு விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேப்பிலை, மஞ்சள் என்று நம் கலாச்சாரத்தில் நாம் அறிவிலை பல வகைகளில் இறையியலோடு தொடர்புபடுத்தி கையாண்டு வந்திருக்கிறோம்.

இப்படி பல்வேறு நிலைகளில் இயற்கையோடும் அறிவியலோடும் நம் மதங்களும் நம்முடைய இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்களும் ஒன்றி வாழும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.

இன்றைக்கு ஒரு இதிகாச கதாபாத்திரத்தைப் பற்றியும் அதன் சிறப்புத் தன்மை எப்படி அறிவியலோடு பொருந்தியிருக்கிறது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.!

ராமாயணம்!

ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார்.

அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப்பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப்பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இத்தனை சிறப்பு பெற்ற ராமாயனத்தில் யாரை மறந்தாலும் ஒருவரை மறக்கவே முடியாது.

ஆஞ்சனேயர்!

ஆஞ்சனேயர் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் ராமாயனத்திற்கு சிறப்பே இல்லை
எனலாம். முழு ராமாயனத்தையும் கேட்டு முடிக்கும் நம்மக்களுக்கு ராமர் மீது பக்தி வருகிறதோ இல்லையோ ஆஞ்சநேயர் மீது கண்டிப்பாக பக்தியும் விருப்பமும் பாசமும் வந்து விடும். எல்லோரையும் கவரும் அந்தக் கதாபாத்திரம் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியோடு ஒத்துப்போகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம். கண்டிப்பாக ஒத்துப்போகிறது என்பேன் நான். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

அதற்கு முன்பாக ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிபற்றி கொஞ்சம் பார்ப்போம். 1905-ல் ஆல்பர் ஐஸ்டீனுக்கு இருபத்தி ஐந்து வயது தான். அப்போதே ஆராய்ச்சியாளர். ஒளியின் வேகத்தைப் பற்றி இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அதை சில ஆராய்ச்சிகள் மூலம் அதிரடியாக நிரூபித்து அதிரவைத்த அதிர்வேட்டுக்காரர். அதாவது ஒளியின் வேகம் என்பது பூமிப்பந்து சுழலும் திசையிலும் சரி அதன் எதிர் திசையிலும் சரி மாறவே இல்லை. அது எப்படி? என்று ஒரே குழப்பம்.

இதற்கு ஐன்ஸ்டீன் கொடுக்கும் தீர்வு எப்படி ஆஞ்சநேயர் பறப்பதோடு ஒத்துப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்!ஒளியின் வேகம் பூமிப்பந்து சுழலும் திசையிலும், எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் எப்படி பிரயானிக்க முடியும் என்பதை இவ்வாறு விளக்குகிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல் என்று கூறப்படுகிறது. இந்த வேகத்தில் ஒரு பொருள் பிரயானித்தால் கண்டிப்பாக அந்த பொருளின் மீது ஒரு மாற்றம் உண்டாகும் என்கிறார் ஐன்ஸ்டீன். அந்த மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரயானிக்கும் எந்தப் பொருளும் பூமியின் சுழற்சியின் எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் பிரயானிக்க முடியும் என்பது அவரது வாதம்.

நமக்குப் புரியும் வகையில் ஒரு உதாரனம் பார்ப்போம். சித்திரைப் பொருக்காட்சிக்குப் போகிறோம். அங்கே ஜெயன்ட் வீல் ராட்டினத்திலோ, அல்லது ரோலர் கோஸ்டரிலோ நாம் பிரயானிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு நம்மைக் கொண்டுபோய் அப்படியே கீழே விழுந்து விடுவது போல புவியீர்ப்பு விசையின் வேகத்திலேயே நம்மை தரைக்குக் கொண்டு வரும். மயிற்கூச்செரிய உணர்ச்சி மேலிட கூச்சலிடுவோம். நாம் அப்படி கூச்சலிடவும் காரனம் இருக்கிறது. புவியீர்ப்பு விசையின் வேகத்தில் நாம் கீழே இறங்கும் போது ரத்த அழுத்தம் வழக்கத்தை விட மாறுபட்டு உடலின் ரத்தத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை சமாளிக்கவே அதில் பயணிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆக ராட்டினத்தில் ப்ரயானிக்கும் போதே நம் உடலில் மாறுதல்கள் உண்டாகுமானால் ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஒரு பொருளின் மீது என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் ஐன்ஸ்டீன் இதை கற்பனை செய்தது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தும் விளக்கினார். ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் பிரயானிக்கும் போது அதன் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன் அளவு பாதியாக குறைந்து விடுகிறது. அதாவது ஆறடி இருக்கும் ஒரு மனிதன் ஒளியின் வேகத்தில் பிரயானித்தால் மூன்று அடியாக மாறிவிடுகிறான் என்கிறார்.ஒளியின் வேகத்தில் பிரயாணிப்பதால் காலக்கட்டுப்பாட்டை அவர் கடந்து விடுகிறார் என்றும் கூறுகிறார். ஒளியைத் தவிற வேறு எந்த ஊடகமும் ப்ரபஞ்சத்தில் தடையற்ற முறையில் பறக்க முடியாது என்பதாலும், ஒளியின் வேகத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் உண்டாவதாலும் அதன் வேகம் பூமியின் சுழற்சிதிசையிலும், அதன் எதிர் திசையிலும் மாறாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆராய்ச்சிக் கூடத்தில் அனுத்துகள்களைக் கொண்டு இதை ஆராய்ச்சி செய்து சக விஞ்ஞானிகள் மத்தியில் நிரூபித்தும் காண்பித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரெலேட்டிவிட்டி தியரி ஆங்கிலத்தில் இங்கே

சரி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்ததற்கும் இந்த ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஏற்படும் பொருளின் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு கற்பனை ஒப்பீடு.

அனுமார் சஞ்சீவி மலையை கொண்டுவர கிளம்பும் முன் தனது உடலை பல மடங்குப் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார். பிறகு ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார். இப்போது அவரது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஏற்கனவே மலைபோல உருவமும் அதற்கேற்ற எடையும் கொண்ட வடிவெடுத்திருக்கும் அனுமார் தன்னுடைய சம எடையுள்ள மலையை கையில் தாங்கிக் கொள்கிறார். பின்னர் ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார் என்று கொண்டால், இப்போது அனுமாரின் எடை இரண்டு மடங்காகி விடுகிறது. அதாவது சஞ்சீவி மலை அவரது எடையில் பாதி. ஆக தனது எடையில் பாதியாக போய்விட்ட சஞ்சீவிமலை அனுமாருக்கு இப்போது கனமில்லை தானே!

மேலும் ஒளியின் வேகத்தில் வரும்போது உருவம் பாதியாகி விடுவதால் பெரிய மலையை தலைக்கு மேல் தூக்கிக் கொள்ள வசதியாகி விடுகிறது. இல்லை யென்றால் சம அளவு பெரிய உருவத்தை கையில் பிடிக்க வசதி இருக்காதே! மேலும் ஒளியின் வேகத்தில் பறப்பதால் காலத்தின் கட்டுப்பாட்டையும் உடைத்தெரிந்து விடுவதால் அவர் நினைத்த வினாடிகளில் ராமரை அடைந்து ராம லக்ஷ்மனரைக் காப்பாற்றி விடுகிறார்.

இப்படி ப்ரபஞ்சத்தின் கால அளவைகளுக்குள் கட்டுப்பட்டும் அறிவியலின் நிரூபிக்கப்பட்ட சித்தாந்ததுக்குள்ளேயே இந்த கதாபாத்திரம் செயல் பட்டிருப்பதால் அனுமார் சஞ்சீவி மலையையே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்க வாய்ப்பிருப்பது சாத்தியமே என்று என்னத் தோன்றுகிறது. ஆக ஒரு மலையைத் தூக்க முடியுமா அல்லது இப்படி தூக்கிக் கொண்டு ஏ பி டி பார்சல் சர்வீஸ் படத்திலிருப்பது போல பறக்கத்தான் முடியுமா? இது ஒரு கட்டுக்கதை. மாயாஜாலம் என்று கூறுபவர்களுக்கு... ஒளியின் வேகத்தில் பறந்து பாருங்கள்...ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி சாத்தியமே!தற்காலத்தில் கூட ப்ரானனைக் கட்டுப்படுத்தி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடக் கற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பறந்து காட்டி இருக்கிறார்கள். எந்த உபகரனமும் இல்லாமல் மனிதனால் உடலோடு பறக்கமுடியும் என்பது வரை இந்தக் காலத்திலும் கூட நிரூபிக்கப்பட்ட ஒன்றே. அதை டூப் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒளியின் வேகத்தில் பிரயானிக்கும் அளவிற்கு பயிற்சியெடுத்தவர் யாரும் இல்லை. அப்படி பிரயானித்தால் அப்போது அவர் பெயர் அனுமார்.

இப்படி இந்து தர்மத்தின் பல இதிகாச கதாபாத்திரங்கள் அறிவியல் மற்றும் மனோவியல் சூட்சமங்களோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டவையாகவே இருந்திருக்கிறது எனலாம்.

ஆகவே தான் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Saturday, April 24, 2010

தாலி - ஒரு குழு விவாதம்!

க்ரூப் மெயில்களில் சில நேரங்களில் சூடான சமாச்சாரங்கள் விவாதிக்கப் பட்டுவிடும். குழுவில் இருக்கும் நண்பர்கள் தத்தமது கருத்துக்களை அவரவர் கண்ணோட்டத்தில் எடுத்து வைப்பார்கள். அது போல சூடான ஒரு விவாதத்திற்கு பதில் எழுத நேர்ந்தது. அதை பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கேயும் கொட்டுகிறேன்.

விஜய் டிவியின் தாலி பற்றிய நீயா நானா நிகழ்ச்சி குறித்து அவரவர் கருத்து பரிமாறப்பட்டது. அதில் ஒரு சகோதரி கிழ்கண்டவாறு தம்முடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

****

விவாதங்கள் விவாதிக்க மட்டுமே ஒவ்வாரு ஊடகங்களும் மக்களை கவரும் தலைப்பை மட்டுமே விவாதிக்கும். நீங்கள் குறிப்பிட்டிருந்த விவாத தலைப்புகள் யாவையும் சமுதாயத்தின் பொழுது போக்கும் வார்த்தைகள். எந்த ஒரு ஊடகமும் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தவும்,நதி நீர் இணைப்பை பற்றியும் இளைஞர்களிடமும்,அனுபவசாலிகளிடமும் விவாதிப்பதும் இல்லை யோசனை கேட்பதும் இல்லை. தாலி தேவையா இல்லையா என்பது தலைப்பு. தாலி என்னும் பண்பாடு நம்முடைய நாகரீகத்தில் இடையில் தோன்றியது. இராமாயணத்தில் ராமர் சீதைக்கு தாலி கட்டியதாக குறிப்பிடவும் இல்லை. கிருஷ்ணன் ராதைக்கு மெட்டி அணிவித்ததாக குறிப்பிடவும் இல்லை. நம் முன்னோர்கள் உடன்போக்கு என்னும் முறையை திருமணத்திற்க்கு பின்பற்றயுள்ளனர்.

அதாவது ஒருவரை ஒருவர் பிடித்த ஆணும் பெண்ணும் தன் இல்லத்தார் விருப்பதுடன் தனி ஒரு இல்லத்தில் இனிது வாழும் முறை. பின் வந்த சமுகத்தால் இடைச் செருகல் ஆனது தாலி என்னும் சம்பிரதாயம் . தாலி அணிவதால் மட்டுமே எந்த ஒரு பெண்ணும் தெய்வமாக முடியாது எந்த ஒரு ஆணும் பக்தனாக முடியாது. இருவரின் இல்லற வாழ்க்கையின் இனிமையை மனம் ஒன்று மட்டுமே தீர்மானிக்கும். இன்று உள்ள இந்த சம்பிரதாயம் நாளைய தலைமுறையிடம் காணாமல் கூட போயிருக்கலாம்.

இலை உடுத்தி, மண்பாண்ட சோறு உண்ட மனிதன் இன்று நாகரீக உடை அணித்து காரில் போகிறான். அவன் முன்னோர் கண்ட பல நல்லவைகளை இன்றைய காலகட்டதிற்காக மாற்றிகொள்கிறான். ஆனால் தனக்கு சாதகமான விசயத்தில் மட்டும் பண்பாடை காரணம் காட்டி மனம் மாற மறுக்கிறான். எந்த ஒரு கிருத்துவனும் தன்னையும் தன் மதத்தையும் புண்படுத்தியதாக எப்போதும் கூறுவதில்லை. எந்த ஒரு முஸ்லிமும் இதே கூற்றை கூறியதில்லை. ஆனால் இந்துக்கள் மட்டுமே தங்களை அவமதித்தாக கூறிக்கொண்டும் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும் உள்ளனர்.

இந்திய நாடு இந்துத்துவ நாடாக கருதபட்டாலும் எல்லா மதத்தினரும்
பாதுகாப்பாக வாழும் நாடு. எந்த மதத்தினரும் ஆளும் நாடு இதுவே. இதற்கு
இந்துக்களின் சகோதரத்துவமே காரணம். இளம் செடியை பிடுங்கலாம் ஆலமர வேரை அசைக்க முடியாது. இந்து மதமும் அது போலவே. நாயன்மார்களும்.ஆழ்வார்களும் நீர் ஊற்றி வளர்த்த மரம் இது.

ஒரு சிறிய பொருளிகே ஆயிரம் விவாதம் உண்டு. இது நம் உணர்வோடு வேரூன்றியது. அசைத்து பார்க்கும்போது சிறிது வலிக்கும் ஆனால் உணர்த்து பார்க்கும்போது உண்மை நிலை புரியும். கருத்து சொல்லவும் விவாதிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் உள்ள கூற்றை ஆதரிக்கவும் எதிர்க்கவும் உரிமை உண்டு. ஆனால் அதில் உள்ள சிறந்ததை எடுத்து கொள்ள நீரை நீக்கி விட்டு பாலை பருகும் அன்னபறவையின் திறன் மட்டுமே நமக்கு வேண்டும். கருத்துகளும் எண்ணங்களும் சுதந்திரமானவை அவற்றை ஏற்றுகொள்ளும் பக்குவமும் , வீணற்றதை தூக்கி எரியும் மனமும் வேண்டும்.

இது போன்ற நிகழ்சிகள் பொழுது போக்க மட்டுமே. நம் மனதை பழுதுபாக்க அல்ல.

****

தனது கருத்தை மிகவும் அழகாக அதே நேரத்தில் இந்து மதம் என்பது ஆலமரம் அதை அசைக்க முடியாது என்கிற தனது நம்பிக்கையையும் ஒரு சேர வெளிப்படுத்தியிருந்தார் அந்தச் சகோதரி. தாலி என்பது இடைச் செருகலாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடிருக்கிறது. ஆனால் எனக்கு இந்துக்கள் தான் சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள் என்ற தொனியில் அவர் எழுதியிருந்தது உறுத்தியது. அதனால் கீழ்கண்டவாறு பதில் மடலும் இட்டேன்.

***

//எந்த ஒரு கிருத்துவனும் தன்னையும் தன் மதத்தையும் புண்படுத்தியதாக எப்போதும் கூறுவதில்லை. எந்த ஒரு முஸ்லிமும் இதே கூற்றை கூறியதில்லை. ஆனால் இந்துக்கள் மட்டுமே தங்களை அவமதித்தாக கூறிக்கொண்டும் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும் உள்ளனர். //

சகோதரி , நீங்கள் மத சமூகத்திற்கு வெளியே இருக்கிறீர்கள். இதே விஜய் டிவி முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்ப தேதியும் குறித்து விளம்பரமும் போட்டது. உடனே முஸ்லீம் கட்சியான தமுமுகவும், முஸ்லீம் மத இமாம்களும் எங்கள் மத சம்பிரதாயத்தை அசிங்கப்படுத்தும் நிகழ்ச்சி இது. இதை ஒளிபரப்பினால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். விஜய் டி வி முன்பு போரட்டம் பெரியளவில் நடத்துவோம் என்று அறிவிப்பு செய்து, கமிஷனரிடம் ஒரு பெட்டிஷனும் கொடுத்து அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் தடுத்தே விட்டனர்.

கிறிஸ்தவர்களோ ஏசுவைப் பற்றி விமர்சனம் செய்வதாக அமைந்த டாவின்ஸி கோட் என்ற திரைப்படத்தை இந்தியாவின் பல இடங்களில் (தமிழ் நாடும் அடங்கும்) வெளியிட விடாமலேயே செய்துவிட்டார்கள். இதுவெல்லாம் ஏன் உங்களுக்குத் தெரியவில்லை என்று புரியவில்லை?.


இந்துக்களின் இந்த எதிர்ப்பு தாலி வேண்டுமா வேண்டாமா என்பதற்க்கல்ல. ஊடகங்கள் அதுவும் விஜய் டிவி இந்துக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சார விஷயங்கள் பற்றியே தொடர்ந்து விமர்சனப்படுத்தியும் நீயா நானாவில் ஒளிபரப்பியும் இந்து மதம் மீதான தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் கிறுஸ்தவரான மெர்குரி கிரியேஷன் நிர்வாகி தனது லாபகராமான வேலையாகவே இந்துக்களை புன்படுத்தும் விஷயத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் தாக்குதலின் மீதான எதிர் விளைவுதான் இந்தப் பதிவே தவிற தாலி வேண்டும் என்று கட்டாயப்படுத்த அல்ல.

இன்னும் சொல்லப்போனால் இந்துக்களின் எந்தப் பெண்ணும் தாலிகட்டும் போது கட்டிய அதே மஞ்சள் கயிறோடு திரிவதில்லை. அழகான தங்கச் சங்கிலியாக மாட்டி அதை ஆபரனமாகத்தான் அணிந்து கொள்கிறார்கள். அங்கேயே அது தாலி என்பது மறைந்து ஆபரணமாகி வெகுநாளாகிவிட்டது. குடும்பம் என்ற அமைப்பு இங்கே முக்கியத்துவம் பெற வேண்டுமே அன்றி தாலி இல்லை. எதிர்காலத்தில் இது தேவையில்லாமலும் போகலாம். ஆனால் ஊடக்ங்கள் இந்து மதத்தைப் பற்றியே குறிவைத்து தாக்குவது ஒத்துக்கொள்ள முடியாது. அதை ஒருமனதாக கண்டிக்க வேண்டுமே தவிற புரட்சிகரமாக பேசுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர்களுக்கே ஜால்ரா தட்டக் கூடாது. அது நம்மை தான் பாதிக்கும்.

மேலும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவு என்ற போர்வையில் நம் மதத்தை நாமே கேலி பேசுக்கொள்ளும் புத்தியை நம்மிடம் திணித் திருக்கிறார்கள் நாத்திக வாதிகள் என்ற சுயநலக்காரர்கள். தன் கையாலேயே தன் கண்ணைக் குத்துக்கொள்ளும் தன்மையிலிருந்து வெளியே வாரவேண்டும். தயவு செய்து இந்து தர்மத்தைகாப்பாற்ற அதை அழிக்க நினைப்பவர்களை அடையாளம் கண்டு எதிர்க்க ஒன்று கூடுங்கள். உங்களுக்கு அரைகூவல் விடுகிறேன்.

***

என்று முடித்தேன்.

மேலும் இங்கே சில விஷயங்களை அடுக்க நினைக்கிறேன். சமீபகாலமாக பத்திரிக்கையை அலங்கரிக்கும் சில செய்திகள் பாதிரியார்களைப் பற்றியதாக இருந்தும் அதைப் பற்றி எந்த தொலைக்காட்சியும் செய்திகளின் சில வினாடிகளைக் கூட நிரப்பி காண்பிக்கவில்லை.

உதாரணமாக வடநாட்டிலிருந்து குழந்தைகளை கடத்தி வந்து காப்பகம்
நடத்துகிறேன் என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து பணம்கறக்கும் பாதிரிமார்கள், தன்னுடைய தலைமையில் இயங்கும் பள்ளிச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தகாத முறையில் நடந்து கொள்ளும் பாதிரியார்கள் போன்றவர்கள் பற்றி எந்த தொலைகாட்சியும் நீயா நானா நடத்தவுமில்லை, "பாதிரியார்களின் அட்டூழியம் இன்றைய நிஜத்தில்" என்று காட்டவும் இல்லை.

சமீபத்தில் கூட ஊட்டியில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்கிற பாதிரியார் மீது அமெரிக்காவில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு அது கிட்டத்தட்ட நிருபிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கிருந்து தப்பி இங்கே ஊட்டியில் சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கு பிஷப்புகளின் ஆதரவும் உண்டு. இதைப்பற்றி எந்த தொலைக்காட்சியும் தங்கள் நிஜத்திலோ அல்லது நீயா நானாவிலோ விவாதிக்கவே இல்லை.

அதுமட்டுமா, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளிடம் இருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கத்தைப் பற்றியும் விலாவாரியாக 'ஆமென்' என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இப்போது இரண்டாம் பாகம் எழுதிக்கொண்டு இருக்கிறாராம், தலைமறைவாய். இதைப்பற்றி எந்த தொலைக்காட்சியும் தங்கள் நிஜத்திலோ அல்லது நீயா நானாவிலோ விவாதிக்கவே இல்லை. ஜெஸ்மி பற்றி இங்கே

எனவே ஊடகங்களுக்கு இந்து அடையாளங்கள் மீது மக்களிடம் ஒரு கசப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடவேண்டும் என்கிற முனைப்பு மிக அதிகமாகவே இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. அறிவு சார்ந்த விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும் இந்துக்களே...

தேவை எச்சரிக்கை!

கொசுறு: தினமலரி வெளியான ஒரு மதமாற்றச் செய்தி இங்கே . இதனைக் கேட்ப்பார் கிடையாது.
அது சரி.. கோபிநாத்துக்கு கல்யாணம் ஆச்சே.. தாலி கட்டி தானே கல்யாணம் செய்தார். அவர் வீட்டு விசேஷத்தில் மட்டும் பகுத்தறிவு நாசமாய்ப் போனது ஏன்?
வாழ்க வளமுடன்!

தோப்புக்கரனம் போடுங்க!வலது கையால் இடது காதைப் பிடித்துக் கொண்டும், இடது கையால வலது காதைப் பிடித்துக் கொண்டும் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இது தோப்புக்கரனம். பிள்ளையார் முன்னாடி இதைச் செய்தால் நமக்கு நல்ல புத்தியையும் படிப்பையும் பிள்ளையார் கொடுப்பார் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தால் அதை மூட நம்பிக்கை என்று ஆராயாமலே கூறிவிடுவார்கள் நம்மூர் அறிவு ஜீவிகள். பிள்ளையார் கொடுக்கிறாரோ இல்லையோ நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பயிற்சி அதற்கான வேலையைச் செய்யும் என்பதே அதன் அர்த்தம். அதையே வெள்ளையர்கள் ஆராய்ச்சி செய்து இரு கைகளால் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து எழுந்தால் உடலில் என்ன நடக்கிறது என்று கண்டுபிடித்து அதை இப்போது ஒரு மருத்துவ வகுப்பாகவே நடத்துகின்றனர் வெள்ளையர்கள்.கண்ணுக்குத் தெரியாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொருளின் மீது ஏற்றிச் சொல்லும் போது அது நம்பிக்கையை அதிகரிக்கும், தொடர்ந்து அதைச் செய்து நன்மை அடைவார்கள் என்ற பொது நோக்கோடு இப்படி பல விஷயங்கள் இறை நம்பிக்கையின் மீது ஏற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை ஆராயாமலே மூட நம்பிக்கை என்று சொல்லி புறந்தள்ளி விடுகிறோம்.தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர்கள் ஆராய்ந்த போது மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். பரிசோதனையில் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் கூறுகின்றனர். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"Ang showed that the results from EEG (electroencephalography) readings after doing this exercise indicate the right and left hemispheres of the brain had become synchronized. EEG readings measure the neuron firings in the brain via electrodes on the scalp, and are used to determine brain wave normalcies and abnormalities."

ஆங்கிலத்தில் மேலும் படிக்க இங்கே

சரி, எதையுமே வெள்ளைக்காரன் சொல்லிவிட்டால் அதை ஆராயாமலேயே அது தான் அறிவு என்று ஏற்றுக்கொள்ளும் நம்மூர் சாம்பிரானிகள் இதை தோப்புகரனம் என்று சொல்லாமல் சூப்பர் ப்ரெயின் யோகா செய்கிறேன் என்று வீட்டில் குட்டி சுவற்றின் முன்னால் உக்கி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'சூரிய நமஸ்காரம்' என்றால் அது ஆன்மீகம் ஆகிவிடும் என்று கூறிவிட்டு அதே நமஸ்காரத்தை 'ஞாயறு போற்றுதும்' என்று தானே பெயரிட்டு மீசையில் மண் ஒட்டாமல் சாமிகும்பிடும் சைக்கோக்கள் அடங்கிய நாடு தானே நம் நாடு! தோப்புக்கரனத்தையும் சூப்பர் ப்ரெயின் யோகா என்று கூறி செய்வார்கள் என்று நம்புவோம்! எப்படியோ நல்லதை கடைபிடித்தால் சரிதான்!

பிள்ளையாருக்கு தோப்புக்கரனம் போடும் இளம் பெண்கள்!

அட! தோப்புகரனத்தை 'மட்டும்' பாருங்கப்பா!
Thursday, April 22, 2010

கீதோபதேசம் - பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது எது?
க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாபம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாபம் செய்யத் தூண்டுவது எது? - அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

நெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது.

குந்தியின் மகனே! தீயைப்போல் தணிக்க முடியாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக்கொண்டிருக்கிறது.

புலன்கள், மனம், புத்தி ஆகியவைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்றன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது.

எனவே பரதரில் சிறந்தவனே! நீ முதலில் உன்னுடைய புலன்களை கட்டுப்படுத்தி சாஸ்திர அறிவையும், அநுபவ அறிவையும் அழிக்கிற பாபத்தின் உருவமான இக்காமத்தை அறவே ஒழித்திடு.

புலன்கள் உடலை விட மேலானவை. அவற்றை விட மேலானது மனம். மனதை விட புத்தி மேலானது. புத்தியைவிட மேலானது ஆத்மா.

உயிர்தோழா! நீ இவ்வாறாக புத்தியைவிட மேலான ஆத்மாவை உணர்ந்து, புத்தியினால் மனதை நன்றாகக் கட்டுப்படுத்தி வெல்வதற்குக் கடினமானகாமம் என்ற எதிரியைக் கொல்வாயாக.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.
இங்கே ஒரு ஆழமான மனோவியல் விஷயத்தை மிக எளிதாக ஸ்ரீ க்ருஷ்ணர் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது. காமம் என்ற ஆசைகளைத் தூண்டும் உச்ச உணர்வு தான் ஒருவன் பாபங்கள் செய்யாமல் இருக்க நினைத்தாலும் அவனை செய்யத் தூண்டுகிறது. காமத்தின் வடிகால் இல்லாதவர்கள் கோபக் காரர்களாகவும், கொலைபுரியும் அளவு குரோதம் கொள்பவர்களாகவும் மாறிவிடுவதையும் கூட பார்க்க முடிகிறது.

காமத்தின் அதீத உந்துதலை கையாளத்தெரியாமல் சைக்கோக்களானவர்கள் பற்றிய நீண்ட குற்றவியல் வரலாறுகளும் உண்டு. அமெரிக்காவில் பெஞ்சமின் மில்லர் என்பவர் கறுப்புப் பெண்களாகத் தேர்தெடுத்து கொலை செய்வானாம். அவனுக்கு 'ப்ரா' கொலைகாரன் என்று பெயர் உண்டு! பெண்களின் கழுத்தை பெஞ்சமின் மில்லர் நெரித்துக் கொல்வது, அந்தப் பெண்களின் 'ப்ரா' வை உபயோகித்துத்தான். அரை டஜன் கொலைகளுக்குப் பிறகும் யாருமே அவனை சந்தேகிக்கவில்லை. காரணம் கனெக்டிகெட் என்ற ஊரில் இருந்த சர்ச்சில்
அவன் பாதிரியார். பாபத்திற்குத் தூண்டுதல் காமம்.

பெஞ்சமின் மில்லர் இங்கே .

காமத்தின் மீதான அதீத கற்பனையும், மனதில் கட்டுப்பாடற்ற ஆசைகளையும் கொண்டு அவற்றை கையாள முடியாத சிக்காட்டிலோ என்ற ரஷ்ய நாட்டுக்காரன் ஒரு சைக்கோகில்லராக பத்து வருடங்களுக்கு மேல் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கொலை புரிந்திருக்கிறான். இவன் மாட்டிக்கொண்டது கூட ஒரு சுவாரசியமான விஷயம். சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய ஒரு ஆய்வறிக்கயை மனோவியல் மருத்துவர் மூலமாக தயாரித்தனர் காவலர்கள். அதில் கொலைகாரனைப் பற்றி தங்கள் யூகங்களை எழுதியிருந்தனர். அதாவது கொலைகாரன் ஒரு நாற்பது வயது ஆள். அவன் குழந்தைப்பருவம் கொடூரமாக இருந்திருக்கும். அன்புடன் பழக ஆளில்லாதவனாகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக்வும் இருப்பான். இருபாலருடனும் பாலுறவு வைத்துக்கொள்ளும் அதீத ஆசை கொண்டவனாக இருப்பான். மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பான். அவன் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் வாய்ப்புண்டு" என்று எழுதியிருந்தார்கள்.

ஒரு நாள் சிக்காட்டிலோ ஒரு சிறுவனிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த காவலர்கள் வெறுமனே விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். சில விசாரனைக்குப் பிறகு தாங்கள் எழுதி வைத்திருந்ததை அவனிடம் படித்துக் காண்பித்தனர். சும்மா இருக்காமல் "அட என்னைப் பற்றி அப்படியே எழுதியிருக்கிறார்களே" என்று உளறி விட்டான். பத்து வருடங்களுக்கு மேலாக டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த கொலைகாரன் பிடிபட்டான். ஆம் அவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கொலைக்குக் காரணம் காமம்.

சிக்காட்டிலோ இங்கே .

ஒரு சில பெண்களை அவர்களின் கணவன்மார்கள் 'சரியாக' கண்டு கொள்ளவில்லையெனில் அவர்கள் வீட்டில் யார் மீதாவது அடிக்கடி எரிந்து விழுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். காமத்தை கையாள முடியாததால் வரும் வினை. யானைக்கும் மதம் பிடிக்கிறது. காமத்தை காலத்தே கொள்ளாமையால்.

ஆனால் எத்தனை முறை காமம் கொண்டாலும் அதன் மீதான ஆசை சாகும் வரை தீர்வதில்லை. அதனாலேயே ஒரு நிலையில் அந்த உணர்வை கையாள கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உணர்வுகளை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்தால் பாபம் செய்யும் தூண்டுதல்கள் குறைவுபடும் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

அதனாலேயே ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் "பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்."இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்"


Wednesday, April 14, 2010

மரணத்திற்கு அப்பால் - 13எங்கு சென்றால் மீண்டும் இங்கே திரும்பமுடியாதோ, அந்த மேலான நிலையை அப்பால் தேட வேண்டும். - பகவான் ஸ்ரீ க்ருஷ்னர்.

மரணத்திற்கு அப்பால் தொடரின் அடுத்த கட்டத்திற்கு போகும் முன் சில விஷயங்களை சற்றே கவனிப்போம். மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி நம்மிடம் எழலாம். அப்படித் தெரிந்து கொள்வதால் என்ன பலன் என்றும் தோன்றலாம். சிலரோ மரணத்திற்கு அப்பால் ஒன்றும் இல்லை. மறுபிறவி என்பதே பொய் என்றும் கூறலாம்.

சரி மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஏன் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

உதாரணமாக ரிடையர்மென்ட்க்கு பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தால் மிகவும் அச்சமாக இருக்கும். அப்பறம் பணத்திற்கு என்ன செய்வோம் என்று மனதில் ஒரு சிந்தனை உண்டாகும்.

அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.

எப்படி ரிடயர்மென்டுக்குப் பின்னால் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே தீர்மானிக்கிறோமோ அப்படித்தான் மரணத்திற்குப் பின்னாலும் எப்படி வாழவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ரிட்டையர்மெண்ட்க்கு பிறகு என்ற வாழ்க்கை இப்போதே நம் கண்களுக்கு எப்படி தெரிவதில்லையோ அப்படித்தான் மரணத்திற்கு பின்னால் வரப்போகும் வாழ்க்கையும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

ஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.

நாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

கண்களுக்குத் தெரிவதில்லை என்பதற்காக நாம் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்காமல் இருந்துவிடுகிறோமா என்ன? அதே போலத்தான் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதற்க்காக மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடாது. அதனால் அதைப்பற்றி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அவற்றை ஆராய்ந்து எடுத்துரைத்த பெரியோர்களின் விளக்கங்களை புறந்தள்ளியும் விடமுடியாது. எனவே தொடர்ந்து பார்ப்போம்.

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மார்கங்களில் மறுபிறப்பு தத்துவம் ஏற்கப்படுவதில்லை. அதுவும், ஆதிகால கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருந்ததாகவும் பின்னால் கிறிஸ்தவம் மார்கெட்டிங் மதமாக்கப்பட்ட பிறகு கிறிஸ்துவை நம்பினால் தான் மோட்ஷம் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவத்தின் மார்கெட்டிங்க் எக்ஸிகியூட்டிவ்கள் பரப்ப முனைந்த பொழுது மறுபிறப்பு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனாலேயே பின்னாட்களில் கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு என்பது கிடையாது என்ற கொள்கை மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மறுபிறப்பு இல்லை என்ற தர்கத்தை நாம் ஏற்கவேண்டுமென்றால் சில கருத்துக்களை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதன் உட்பட ஒரே முறை ஜனனம் மற்றும் ஒரே முறை மரணம் என்றால் அவைகளை இறைவன் தான் படைத்தான் என்றால், அப்படிப்பட்ட ஜீவராசிகளை இறைவன் ஏன் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும். ஒரு ஜீவனை மிருகமாகவும் இன்னொன்றை மனிதனாகவும் ஏன் படைக்க வேண்டும். எல்லா ஜீவராசிகளையும் உயர்ந்த பிறப்பாகக் கருதப்படும் மனிதப்பிறப்பாகவே படைத்திருக்கலாமே!

ஒரே ஒரு முறை மட்டுமே மனிதனை இறைவன் படைக்கிறான் என்றால் ஏன் ஒருவனை குருடனாகவும், ஒருவனை முடவனாகவும் படைக்க வேண்டும். பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல மனிதன் உயர்வுதாழ்வு அடைகிறான் என்ற தத்துவம் நிராகரிக்கப்பட்டால், எல்லா மனிதர்களும் இறைவனின் விருப்பத்திற்கினங்கவே ஒரே முறை மட்டுமே படைக்கப்படுகிறார்கள் என்றால் அந்த இறைவனுக்கு ஏன் ஓரவஞ்சனை இருக்க வேண்டும்?

இதற்கு முன்னால் பிறக்காதவரான இப்போது தான் முதன்முதலில் பிறக்கப்போகும் இருவரில் ஒருவனை அழகாகவும் ஒருவனை முடமாகவும் படைக்குமளவிற்கு இறைவன் கருனை இல்லாதவனாக ஏன் இருக்க வேண்டும்? ஒரே முறை மட்டுமே இறைவன் படைக்கிறான் என்றால் ஒருவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் ஒருவனுக்கு துக்கமாக வாழ்க்கையையும் கொடுக்கும் அளவிற்கு ஏன் கருனையற்றவனாக இருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகிறது.

ஆனால் இந்து தர்மத்தில் மட்டுமே இதற்கான தெளிவான பதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

உபநிஷத்தில் இப்படி கூறப்படுகிறது "மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்".

இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்று மறுபிறவிக் கோட்பாடு கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிறைவான நிலையை அடைய அவன் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டலே கீதையும் உபநிஷத்துக்களும். மனதை அமைதியாகவைத்து தீவினைகள் அகற்றி ஆத்ம சாந்தி அடைபவனே பிறப்பறுந்த நிலை எய்த முடியும் என்ற வழிகாட்டுதல் கூறப்படுகின்றது.

கீதையில் ஸ்ரீ க்ருஷ்னர் கூறுகிறார் "அர்ஜுனா! அகங்காரம், பலம், இறுமாப்பு, காமம், கோபம் முதலிய தீயகுணங்களை மேற்கொண்டு அவர்கள், தங்களுடைய உடலிலும் மற்றவர்களுடைய உடலிலும் இருக்கும் என்னை வெறுத்து அவமதிக்கின்றனர். அத்தகைய நிந்திக்கும் கொடிய குணம் கொண்டவர்கள் மனிதகுலத்திற்கும் கீழானவர்கள். இழிவானவர்கள். அவர்கள் அசுர இயல்புள்ளவர்களின் கருப்பையிலேயே தள்ளப்படுவார்கள். அப்படி அசுரகுணம் கொண்டவர்களின் வழியாக பிறப்பெய்துபவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் மேலும் மேலும் கீழ்த்தரமான நிலையையே அடைவார்கள்!" என்கிறார்.

அதாவது குணங்களுக்கேற்றபடி தான் பிறப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பகவான் தெளிவுபடுத்துகிறார். மேலும் அத்தகைய இழிகுணத்துடன் பிறப்பெய்துபவர்களாலேயே பாபங்கள் பரவுவதும் நடக்கின்றது. இதன் காரணமாகவே பூமியில் இன்ப துன்பங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனாலேயே ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதும் ஒருவன் துன்புற்று அழிவதும் ஒரு காலச் சக்கரமாக நடைபெறுகின்றன. எனவே இந்த சக்கரச்சுழற்சியைத் தடுக்க வேண்டுமானால் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒரே மாதிரியான நல்ல தர்மங்களைக் கடைபிடித்து அந்த இறைவனையே நினைத்து அவனை அடையமுயல வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் அத்தகைய முயற்சியின் பாதையில் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டால் முழு சமூகமுமே சொர்கமான வாழ்க்கைச் சூழலை அடையும் என்பதும் தெளிவாகிறது.

என்வே மறுபிறவி என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதும் அதைத் தடுத்து பரம் பொருளை அடைவதற்கான வழியை இந்து தர்மம் உபநிஷத்துக்கள் மூலம் எடுத்துரைக்கின்றது. அதைத் தொடர்ந்து பார்ப்போம்."எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்." - எமதர்மன்மரணத்திற்கு அப்பால் - 14

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!மலையாள நண்பர்கள் அனைவருக்கும் இனிய விஷு பண்டிகை வாழ்த்துக்கள்!உங்கள் பார்வைக்கு!

தமிழர்கள் பிறந்தநாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?தமிழ் புத்தாண்டை சித்திரை ஒன்றில் கொண்டாடுவது ஏன்?
அன்புடன்
ராம்

Sunday, April 11, 2010

மரியாதை ராமன் கதைகள் - ஜான் நீளமா? முழம் நீளமா?


அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன் கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன் என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி இருந்தார்.

வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல் அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார்.

ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு கடுமையாகக் கேட்டார்.

முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன் பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின் வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன். கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார்.

"இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை எடுத்து முருகேசனிடம் காட்டினார்.

உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில் இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக் கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார்.

இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார்.

முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்? நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம் கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே" என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த வையாபுரி மரியாதை ராமனிடம் நடந்ததை முறையிட்டார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மரியாதை ராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன் பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்

"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.

"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன். அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.

மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.

மரியாதைராமன் முருகேசனிடம், "நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது உண்மையா?" என்று கேட்டார்.

"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.

"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக் கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார் மரியாதைராமன்.

"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன் பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.

மரியாதை ராமன் வையாபுரியைப் பார்த்து "இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.

"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.

உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது. "ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்? ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.

இதைக்கேட்ட மரியாதை ராமன்"ஆமாம் அவரை அப்படி புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லிவிட்டீர்" என்றார். பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டுவிட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.

மரியாதை ராமன் சாதுர்யமாக உண்மையை வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.


Saturday, April 10, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள் நசுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்றுபோகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வந்து சேரும்; உதவி வந்து சேரும்; அசைக்கவே முடியாத உறுதியான வலிமை வந்து சேரும்.


உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவு, முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு. உன் விதியில் நீ நம்பிக்கை கொண்டிரு. அது, கையில் காசில்லாத உன்னை நம்பித்தான் இருக்கிறது. 


கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரப்புங்கள். செயலாற்றுங்கள்! செயலாற்றுங்கள்! வேலை செய்யும்போது ஒரு வேலைக்காரனைப் போல இருங்கள். சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். எல்லையற்ற பொருமையைக் கடைபிடியுங்கள். வெற்றி உங்களுடையதே!


கவனமாக இருங்கள். உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருங்கள். மெதுவாகவே என்றாலும் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி.


இன்றைய இளைய தலைமுறைகள் நவீன தலைமுறைகளான உங்கள் மீது தான் எனது நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக்கருத்துக்கள் பரவும் வரையிலும் , என் மீது பேரண்புகொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே செல்வார்கள்.


மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மை குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.


எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது நல்லதை விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.


- சுவாமி விவேகானந்தர்.