Sunday, August 30, 2009

சப்பை கேள்வியும் மொக்கை பதிலும் - 1


காலையில் இந்த வார ஆனந்த விகடன் அட்டைபடத்தில் சட்டை போட்டு போஸ் கொடுத்திருந்த சினேகாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்துவீட்டு வாண்டுப் பையன் வீட்டுக்குள் வந்தான். 'அண்ணா' என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்தான். ஏழாம் வகுப்புதான் படிக்கிறான்.

ஆனால் பிஞ்சிலேயே பழுத்த பழம். சாதாப்பழம் இல்லை பலாப்பழம்.

"என்னான்னா, சினேகாவ உத்து உத்து பாக்றீங்க!" என்றான் நக்கலாக.

'சும்மா பாத்தேண்டா'

அவன் விடவில்லை "ஐ, சைட் அடிக்கிறீங்கதானே"

"டேய், என்ன வேணும் சொல்லு"

"இல்ல... உங்களுக்கு சினேகாவைப் பிடிக்குமான்னு கேட்டேன்?"

"பிடிக்கும்"

"பாவனா?"

"பிடிக்கும்"

"த்ரிஷா"

"பிடிக்கும்"

"தமன்னா?"

"ரொம்ப.., என்னடா வரிசையா லிஸ்ட் போட்ற?"

'நான் ஒன்னு கேட்கட்டா?'

'சப்பையா கேக்காம உருப்படியா எதாவது கேளு'

"இல்ல, இத்தனை நடிகைல உங்களுக்கு யாரோட போட்டோ பாக்கும் போது ரொம்ப மூடுவரும்?"

ஆகா, ஓவராப்போறானே, இவனை ஒரு வழிபண்ணாம விடப்போறதில்லைன்னு முடிவு பண்ணி விளக்கமா பதில் சொன்னேன்.

"தம்பி, ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சிக்கோ!, எல்லாத்துக்குமே நம்ம மனசு தான் காரணம். ஒரு போட்டோவப் பார்த்து நமக்கு உணர்ச்சி உண்டாகும்னா அது நம்ம மனசிலேர்ந்து தானே வருது. போட்டோ வெறும் காகிதம் தானே. நல்லா கேட்டுக்கோ. நம்ம மனசும் உடம்பும் சுகமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் போது எல்லாத்தையுமே ரசிக்கத் தொணும். மனசோ உடம்போ சரியில்லைன்னா எல்லாமே வெறுப்பா இருக்கும்.

யோசிச்சுப் பாரு! நம்ம மனசும் உடம்பும் சந்தோஷமா இருந்தா அறுபது வயசு கிழவியைப் பாத்தா கூட கிளர்ச்சி இருக்கும். இல்லன்னா பதினாறு வயது பெண்ணைப்பார்த்தாலும் வெறும் தோலும் சதையும் தெரியுமே தவிர உணர்ச்சி வராது.

அதனால ஒரு பெண்ணை ரசிப்பதும் அவளைப் பார்த்து மயங்குவதும் நம்ம உடம்புக்குள்ள இருந்து வர உணர்ச்சி தானே தவிர பெண்ணால் உண்டாவது ஒன்றும் இல்லை.

உனக்குள்ளிருந்து வரும் உணர்ச்சியை நீ முதலில் புரிந்து கொள்.

'அகம் மூடாஸ்மி !' என்று முடித்தேன். கடுப்பாகி விட்டான்!

"ன்னா...ஏன்னானா இப்டி மொக்க போட்றீங்க.. நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்றீங்க.. போங்கன்னா."

"டேய் நீ இப்படி சப்பையா கேட்டா நான் மொக்கையா தாண்டா சொல்ல முடியும்..சரி.. உங்கப்பா நேத்து உன்னை அடிச்சாராமே எதுக்கு?"

"ன்னா...போங்கன்னா...நல்ல நேரத்தில மூட் அவுட் பன்றீங்க" என்றவன் ஏதோ மேட்ச் இருப்பதாகவும் பசங்க வெளிய வெயிட் பன்றதாகவும் சொல்லிட்டு ஓடிவிட்டான்.

மவனே அடுத்த முறை அவன் உள்ளே வரட்டும். கட்டிலில் கட்டிப்போட்டு பட்டினத்தார் கதை சொல்ல தீர்மானித்திருக்கிறேன். வருவானா பார்க்கலாம்.

Saturday, August 29, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 4


சென்றவாரத் தொடர்ச்சி...

குகை முழுவதும் சிலந்திகளின் வலைகளால் பின்னப்பட்டிருந்தன. கூரிய வாளை வெளியே எடுத்து அத்தனை வலைகளையும் வெட்டிப் பிய்த்துக்கொண்டு உள்ளே சென்றான். முனிவன் சொன்னதைப் போலவே ஒரு முருங்கை மரமும் தென்பட்டது.

அதன் அருகே மெதுவே சென்ற விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அடர்த்தியான மிக உயர்ந்த முருங்கை மரம். அதில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது பெரிய உருவத்துடன் ஒரு வேதாளம்.

அங்கே பெருத்த நிசப்தம் நிலவியது. அசைவற்ற நிலையில் தொங்கியது வேதாளம். விக்கிரமாதித்தன் ஒரு கனம் திகைத்தான். வேதாளத்தின் அருகிலே மெதுவாக அடியெடுத்து வைத்தான். அசைவில்லாமல் அமைதியாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தின் முகத்திற்கருகே குனிந்து பார்த்தான்.

சட்டென்று கண்களை அகலத்திறந்த வேதாளம் லக லக லக லக வென சப்தமாக அலறியது. வேதாளம் கர்ஜனை செய்த சப்தம் காடு முழுவதும் எதிரொலித்தது. சரசரவென நிமிர்ந்த வேதாளம் குகை முழுவதும் பறந்து அலறியபடி சுற்றியது. பிறகு முருங்கை மரத்தின் உச்சியில் சென்று நின்று கொண்டு விக்கிரமாதித்தனை ஏளனமாகப் பார்த்தது.

கடும் கோபத்துடன் விக்கிரமாதித்தன் மீது மரக்கிளைகளை ஒடித்து எரிந்தது. விக்கிரமாதித்தன் சற்றும் பயப்படாமல் மரத்தின் மீதேறி வேதாளத்தை பிடிக்க முயன்றான். வேதாளம் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து விழுந்தது.

விதுர நீதி

விக்கிரமாதித்தனும் விடாமல் கீழிறங்கி வந்தான். வேதாளம் சளைக்கவில்லை. பருத்த உடலைக்கொண்டு விக்கிரமாதிதனின் உடலை இறுக்கிப் பிடித்து தலைகீழாய்ச் சுற்றி வீசியது. தூரச்சென்று விழுந்த விக்கிரமாதித்தன் அசராமல் எழுந்து ஓடி வந்தான்.

வேதாளத்தின் மீது மிக ஆக்ரோஷமாக மோதி அதன் கழுத்தில் தன் கைகளிரண்டையும் சுற்றி சங்கிலியைப் போல பிடித்துக் கொண்டான். சும்மா விடுமா வேதாளம். தன்னைத்தானே சரசர வென சுற்றி உடலைச் சிலுப்பியது. அவ்வளவு தான் மீண்டும் விக்கிரமாதித்தன் குகையின் மூலையில் சென்று சடேரென விழுந்தான்.

இந்த முறை விக்கிரமாதிதனின் உடலில் வலி ஏற்பட்டது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத, நினைத்ததை முடிக்கும் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தைப் பிடிப்பதில் உறுதியாக இருந்தான்.

அப்போது வேதாளம் மறுபடியும் மரத்தின் மீது ஏறத்துவங்கியது. இம்முறை விக்கிரமாதித்தன் கடும் கோபத்துடன் ஒரே சுழற்றலில் அகன்ற முருங்கை மரம் முறியுமாறு வாளைச் சுளற்றி வீசினான்.

அவனது பராக்கிரம பலத்தால் முருங்கை மரம் சட சட வென்ற த்ததுடன் முறிந்து விழுந்தது. முருங்கை மரத்தில் பாதியில் ஏறிக்கொண்டிருந்த வேதாளம் முறிந்து விழுந்த முருங்கை மரத்தின் அடியில் வசமாகச் சிக்கிக் கொண்டது. அதனால் விருட்டென்று பறக்க முடியாமல் தடுமாறியது. ஆனாலும் பலசாலியான வேதாளம் முருங்கை மரத்தை அப்படியே தூக்கி எறிய முற்பட்டது.

அதற்குள் விக்கிரமாதித்தன் மின்னல் வேகத்தில் சென்று வேதாளத்தை இறுகப் பிடித்துக் கொண்டான். மரத்தின் பாரமும் விக்கிரமாதித்தனின் வேகமும் தடுமாற்றத்தைக் கொடுத்ததால் வேதாளம் சற்று அமைதியாக நடப்பதை கவனிக்கத் துவங்கியது.

விக்கிரமாதித்தன் வேதளத்தை அருகே இருந்த கயிறு கொண்டு இறுகக் கட்டினான். பின்னர் மரத்தை அவனே அகற்றிப் போட்டு வேதாளத்தைத் தூக்கி தோளில் போட்டு நடக்கலானான்.

இப்போது வேதாளம் பேசத்துவங்கியது. "சளைக்காத வீரனே! நான் நினைத்தால் உன்னை இந்த இடத்திலேயே உன் தலை வெடித்து நீ இறக்கும்படிச் செய்ய முடியும். உன் வீரமும் வேகமும் என்னை கட்டுப்பட வைத்து விட்டது. சொல்! நீ யார்? எதற்க்காக என்னோடு சண்டையிட்டாய்? என்னை இவ்வளவு பிரயத்தனப்பட்டு எங்கே கொண்டு போகிறாய்?" என்றது.

விக்கிரமாதித்தனும் வேதாளத்திடம் மறுமொழியளித்தான். "ஏய் அடங்காத வேதாளமே! என் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினியின் அரசன். உன்னை கொண்டுவரும்படி ஒரு முனிவர் எனக்கு உத்தரவிட்டதால் நான் உன்னைத் தூக்கிச் செல்கிறேன்!" நீ முரண்டு பிடிக்காமல் என்னுடன் வர வேண்டும்" என்றான்.

விக்கிரமாதித்தனின் பேச்சை மதித்த வேதாளம் அவனுக்கு ஒரு நிபந்தனை விதித்தது. "வீரனே விக்கிரமாதித்தா! நான் உன்னுடன் வருவதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. அதன் படி நீ நடந்தால் தான் வருவேன். சம்மதமா சொல்?"

"என்ன நிபந்தனை?" என்றான் விக்கிரமாதித்தன்.

தமிழ் வருடப்பிறப்பு எப்படி உண்டானது?

வீரனே "வழி நெடுகிலும் நீ வாய் திறந்து பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நான் மீண்டும் பறந்து போய் மரத்தில் தொங்கி விடுவேன். பிறகு போராட்டம் உனக்குத்தான் எனக்கில்லை. அதே நேரத்தில் நான் வழியில் உனக்கு நல்ல நல்ல கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவேன். நீ அதனை நன்றாகக் கேட்க வேண்டும்."

"அப்படியே செய்கிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.

"பொறு, நான் வெறுமனே கதை மட்டும் சொல்ல மாட்டேன். கதையின்முடிவிலே புதிரான கேள்வி ஒன்று கேட்பேன். அதற்கு நீ சரியாக பதில்சொல்ல வேண்டும். நன்றாகக் கேள் வீரனே! நீ தவறாகப் பதில் சொன்னால் உன் தலை சுக்கு நூறாக வெடுத்துச் சிதறிவிடும். என் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாயா? அல்லது நான் இப்போதே முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளவா?" என்றது.

எப்படியாவது வேதாளத்தை அந்த இடத்தை விட்டு கொண்டு போய் விட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டதால் விக்கிரமாதித்தன் வேதாளத்தின் நிபந்தனையை மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான்.

விக்கிரமாதித்தன் வேதாளத்தை முதுகில் சுமந்தவாறு குகையை விட்டு வெளியேறி
காட்டுக்குள் நடக்கலானான். இருண்ட காட்டில் அமைதியான பாதையில் வேதாளத்துடன்
தனியே வந்து கொண்டிருந்தான். சற்று தூரம் சென்ற பின் வேதாளம் பேசத்துவங்கியது.

"விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!" என்றது வேதாளம். கதையின்
முடிவில் என்ன புதிர் இருக்குமோ என்று சிந்தித்தவாறே நடந்து கொண்டே கதையைக் கேட்கத்துவங்கினான் விக்கிரமாதித்தன்.

கேட்கலாம்..பொறுங்கள்...

லக லக லக லக லக லக.....

Wednesday, August 26, 2009

வள்ளுவர் வாக்கு


யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.

அவ்வாறு உடல், பொருள்கள் மீது எனது என்று பற்று வைக்காமல் நான் என்பது ஆத்மா தான். உடலும் பொருளும் நாம் வாழ உதவும் ஒரு கருவியே என்று மனதார நினைத்துக் கொண்டால், இறப்பிற்குப் பின்னும் ஆத்மா வாழ்ந்து வந்த பொருள்கள் மீது ஆர்வம் கொள்ளாது கற்ப்பனைக் கெட்டாத இந்த பரந்த பிரபஞ்சத்தில் சஞ்சாரித்து அதனுடன் கலந்துவிடும்.

இந்த பக்குவம் ஒரே நாளில் வந்து விடாது. தினம் தினம் நாம் ஆத்மா என்பதை யார் ஒரு முறையேனும் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மெல்ல மெல்ல கைகூடும். இன்பமும் துன்பமும் ஒன்றாகும். ஆத்மா சமநிலை அடையும். காலம் கடந்த பின் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிம்மதியான மேலுலகம் அடைவார்கள்.

இதையே வள்ளுவர் இரண்டடிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற்று வந்த சீடன் ஒருவனுக்கு தேகாபிமானம் மட்டும் குறையவே இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையும் கூடவே பயணித்தது.

உயிர் மீது கொள்ளும் ஆசை உடலைக் காக்கச் சொல்லும். உடல் மீது கொள்ளும் ஆசை அதனைக்காக்கும் பொருட்டு பொருளீட்ட வைக்கும். பொருளீட்டத் துவங்கினால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். விரும்பியதை அடைய முற்படுவதிலேயே பவகாரியங்களும் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஆசைகள் முடிவற்றவை. எனவே பற்றுதல் அற்று இரு என்று சீடனுக்கு எவ்வளவோ போதித்தும் அவன் கேட்கவில்லை. சரியான தருணம் வரும் போது அவனுக்கு உணர்த்தலாம் என்று குரு காத்திருந்தார்.

திருமணத்தின் போது அக்னியைச் சுற்றி ஏழு அடிகள் நடப்பது ஏன்?

ஒரு முறை குருவும் சீடர்களும் கடுமையான குளிர் பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கே வெட்ட வெளியில் சீடர்களை அமரவைத்தார் குரு. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில், தேகத்தின் மீது பற்றுதல் கொண்ட சீடன் கேட்டான் "குருவே, குளிர் இன்னும் அதிகமானால் என்ன செய்ய?"

குரு கூறினார் "கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொள்"

"குருவே! குளிர் அதை விட அதிகம் என்றால்?"

"ஒரு கம்பளி எடுத்து போர்த்திக் கொள்?"

"கம்பளி போர்த்தியும் தாங்க முடியாத குளிர் என்றால்"

"நெருப்பை மூட்டி கதகதப்பாய் இரு"

"குருவே! நெருப்புக்கும் அடங்காத குளிர் என்றால்?"

"உறைந்து போ!" என்றார் குரு.

உணர்ந்து கொண்டான் சீடன்.

Monday, August 24, 2009

விக்ரமாதித்தன் கதைகள் - 3


சென்ற வார தொடர்ச்சி

முனிவன் குறிப்பிட்ட தினமும் வந்தது. விக்கிரமாதித்தனும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காட்டுக்கு முனிவன் குறிப்பிட்ட இடத்தைத் தேடி தன்னந்தனியாகச் சென்றான்.

முனிவனும் விக்கிரமாதிதனை வரவேற்று உபசரித்து உட்காரவைத்தான். விக்கிரமாதித்தன் அந்த இடத்தை அமைதியாகச் சுற்றிப்பார்த்தான்.

மிகவும் பாழடைந்த ஒரு கோவில், அருகில் மிகவும் நிசப்தமாக ஒரு பெரிய மண்டபம். வினோதமான சப்தங்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. கோவிலின் உள்ளே ஒரே ஒரு அம்மனின் திரு உருவம் பிரதீஷ்டை செய்யப்பட்டிருந்தது. மண்டை ஓடுகள் மாலையாக, சிவந்த நாக்கும் பெரிய கண்களும் காலடியில் ஒருவனை மிதித்துக்கொண்டிருக்கும் கோலத்துடன் அந்த சிலை பார்க்கவே திகிலைக் கூட்டியது.

விக்கிரமாதித்தன் சற்றும் பயப்படாமல் அமைதியாக முனிவனிடம் கேட்டான்.

"மா முனிவரே, எனக்கு என்ன கட்டளை இடப்போகிறீட்கள், சொல்லுங்கள், செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.

வஞ்சக முனிவனும் இது தான் சமயம் என்று விக்கிரமாதித்தனை பலிகொடுக்கும் சூழ்ச்சியைத் துவங்கலானான்.

"வீரனே, நீ எனக்கு ஒரு மகத்தான உதவி ஒன்றைச் செய்ய வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே இரண்டு யோஜனை தூரத்தில் (ஒரு யோஜனை என்பது எட்டு மைல்களாகும்) ஒரு மயானம் இருக்கிறது. அங்கே ஒரு முருங்கை மரத்தில் யாருக்கும் அடங்காத ஒரு வேதாளம்
பல வருடங்களாகத் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

எத்தனை மந்திர சக்திக்கும் அடங்காத அந்த வேதாளத்தை உன்னுடைய புஜ பலத்தாலும், பராக்கிரமத்தாலும் அதைக் கட்டி இழுத்து என் முன் கொண்டு வர வேண்டும். அப்படி நீ கொண்டு வந்து விட்டால் எனது பூஜையை இடையூறு இல்லாமல் தொடர பேருதவியாய்
இருக்கும். செய்வாயா?" என்றான் முனிவன்.

உதவி செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு வந்தமையால் விக்கிரமாதித்தன் பதிலேதும் பேசாமல் முனிவனின் பூஜைக்கு உதவ வேதாளத்தை எப்படியாவது கொண்டு வருவதற்கு
பிரயத்தனப்பட்டு புறப்பட்டான்.

அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. பயங்கரமான மைஇருள் எங்கும் சூழ்ந்து கொண்டிருந்தது. மரக்கிளைகளும் வேர்களும் மேலும் கீழுகாக தொங்கிக்கொண்டிருந்தன. நரிகளும் ஆந்தைகளும் ஆங்காங்கே ஊளையிட்டுக்கொண்டிருந்தன.

நடக்கும் திசைகளிலெல்லாம் பாம்புகள் காலைச் சுற்றிக்கொண்டன. அவைகளை எல்லாம் கலங்காமல் விலக்கி விட்டு எதற்கும் அஞ்சாமல் விக்கிரமாதித்தன் தொடர்ந்து முனிவன் காட்டிய பாதையில் நடக்கலானான். வெகுதூரம் கடந்து வந்த பிறகு ஓரிடத்தில் குகை ஒன்று தெரியலானது. மங்கிய வெளிச்சம் அதன் வாயிலில் தென்பட்டது.

விக்கிரமாதித்தன் அந்த குகையை நெருங்கலானான். குகையின் அருகே செல்லச் செல்ல பலத்த சூரைக்காற்று வீசத்துவங்கியது. அடி மேல் அடியெடுத்து வைக்க விடாமல் ஆளைத்தள்ளிச் சென்றது காற்று.

காற்றுடன் மழையும் பிடித்துக் கொண்டது. ஆந்தைகள் பலமாகக் கத்தின. மரங்கள் வேறோடு சாயத்துவங்கின. எதிரில் இருப்பது என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட்டது. எல்லாவற்றையும் சமாளித்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து விக்கிரமாதித்தன் குகையின் வாயிலை அடைந்தான்.

குகைக்குள் தெரிந்த மங்கிய வெளிச்சத்தை பயன்படுத்தி குகையின் வாயிலுக்குள் முதல் அடியை எடுத்து வைத்தான். அந்த நிமிடம் காற்றும் மழையும் நின்று போனது. காட்டு விலங்குகளின் சப்தங்ளும் ஆந்தை வெளவால் என பறவைகளின் சப்தங்ளும் அற்றுப் போனது. மொத்தப் பகுதியும் நிசப்தமாக மாறியது.

மையிருட்டும் சட்டென்று மாறிய சூழ்நிலைகளையும் கவனித்துக் கொண்டே விக்கிரமாதித்தன் குகைக்குள் தைரியமாக நுழையலானான். குகை முழுவதும் சிலந்திகளின் வலைகளால் பின்னப்பட்டிருந்தன. கூரிய வாளை வெளியே எடுத்து அத்தனை வலைகளையும் வெட்டிப்
பிய்த்துக்கொண்டு உள்ளே சென்றான்.

முனிவன் சொன்னதைப் போலவே ஒரு முருங்கை மரமும் தென்பட்டது. அதன் அருகே மெதுவே சென்ற விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

காத்திருங்கள்...

Saturday, August 22, 2009

விநாயர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!



அன்பர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

எல்லோரும் நலம் வாழ விநாயகரைப் பிரார்த்திக்கிறேன்!

அன்புடன்

நண்பன் ராம்!

நல்லது செய்தால் நல்லது நடக்கும்!


"நீ பிறருக்கு நல்லது செய்தால் உனக்கு யாராவது நல்லது செய்வார்கள்!" "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்". இவையெல்லாம் இந்து தர்மத்தில், நமது கலாச்சாரத்தில் தர்மத்தை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காக காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் வாக்கியங்கள்.

தற்கால சூழ்நிலையில் இதை நம்புவது சற்று கடினமே. நான் ஒருவருக்கு நல்லது செய்தால் அவர் தான் எனக்கு பிரதிபலனாக நல்லது செய்யவேண்டும் அது தானே முறை. எனக்கு சம்பந்தம் இல்லாத வேறு யாரோ ஒருவர் எனக்கு எப்படி நன்மை செய்வார் என்று தோன்றும். தற்காலத்தில் இது வெறும் சமாதானத்திற்கான வார்த்தையாகவே தோன்றும். நான் எல்லோருக்கும் தான் நன்மை செய்கிறேன். ஆனால் எனக்கு உபத்திரவம் செய்பவர்கள் தான் ஜாஸ்தி. நான் விழுந்து விழுந்து நல்லது செய்தாலும் எனக்கு தீமை தான் நடக்கிறது என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதும் சரியாகவே இருக்கும். ஆனால் இவை ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் இந்த புலம்பலை விட்டு விட்டு மேற்கொண்டு நன்மைகள் செய்யவும் பிறரை செய்யத் தூண்டுவதற்கும் நமது மனம் உந்தப்படும்.


ஆம்! சொர்கத்தையும் நரகத்தையும் நம் கண்முன்னே நமக்கு மிக அருகாமையில் இதோ பார், இது தான் சொர்கம். இதோ பார் இது தான் நரகம் என்று மிக எளிதாக காட்டக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான தெய்வீக தத்துவத்தை மிக எளிய வாக்கியத்தில் உள்ளடக்கி இருக்கிறது இந்து தர்மம். கண்ணை மூடிக்கொண்டு இந்த வாக்கியத்தை சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் நம்பி அதன் படி வாழ்ந்தாலே போதும், சொர்கத்தை நாம் வாழும் காலத்திலேயே கண்முன்னால் காணலாம்.

தவம் செய்ய வேண்டாம். தியாணம் செய்ய வேண்டாம். துறவு வாழ்க்கை வாழ வேண்டாம். எல்லோரும் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்தால் போதும். சொர்கம் மிக அருகில் உங்கள் கண் முன்னே இருப்பதை உணர முடியும். அத்தகைய ஒரு அற்புத ஆத்ம தத்துவத்தை இந்து தர்மமும் நமது கலாச்சாரமும் வெறும் ஒற்றை வாக்கியத்தில் உள்ளடக்கியிருப்பது உலகில் வேறெந்த நாட்டிலோ வேறெந்த மதத்திலும் காணமுடியாத அற்புதம் ஆகும்.

சரி, இந்த வாக்கியத்தில் உள்ள சூட்க்ஷமம் என்ன?. இந்த பிரபஞ்சமே ஒரு அலை வடிவாகும். ஆம். நீரிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் நீங்கள் காண்பது என்ன?. கல்லின் அதிர்வு உண்டான இடத்திலிருந்து வட்ட வடிவமான அலை ஒன்று புறப்பட்டு நீரின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த அலை வடிவம் தான் நிரந்தரத் தத்துவம். நாம் பார்க்கும் இந்த வாக்கியத்தின் சூட்சமமும் அது தான். இந்த பிரபஞ்சமும் அதே அலை பரவல் முறையில் தான் இயங்குகிறது. கண்ணுக்குத் தெரிந்த , தெரியாத எல்லா இயக்கங்களும் அலை வடிவிலே தான் உள்ளன.

அண்ட வெடிப்பு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்வில் உண்டான அலை தான் நாம் வசிக்கும், பார்க்கும் இந்த கிரகங்கள். யோசித்துப் பாருங்கள், அலை வடிவம் பிரபஞ்சத்தில் இல்லையென்றால் ஏன் கிரகங்கள் எல்லாம் ஒரு வட்டப் பாதையில் சுற்ற வேண்டும். அலை வடிவமே யாவற்றுக்கும் மூலம். இந்த உலகில் நடக்கும் எல்லா மாற்றங்களுக்கும் பரவும் எல்லா நன்மை தீமைகளுக்கும் இந்த அலை வடிவமே பிரதானம். இதை மனதில் நன்றாக விளங்கிக் கொண்டால் நீங்கள் ஆன்மீகத்தின் அடித்தளத்தையே அழகாக புரிந்து கொள்பவர்களாவீர்கள்.

இந்த அலை வடிவத்திற்கு உதாரணம் சொல்கிறேன் உற்றுப் பாருங்கள். என்னை அல்ல. பூமியை. ஜப்பானில் ஒருநாள் பூகம்பம் வருகிறது. ரிக்டர் அளவில் 6 அல்லது 7 என்று செய்திகளில் சொல்லப்படும். பிறகு சில நாள் கழித்து மீண்டும் ஒரு பூகம்பச் செய்தி வரும். எங்கே? இந்தோனேசியாவில்! பிறகு சில நாள் கழித்து மற்றொரு பூகம்பச் செய்தி வரும். எங்கே? இந்தியாவின் வடக்கே, அல்லது பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான், பிறகு ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டில், பிறகு அமெரிக்காவின் ஒரு பகுதியில் இப்படியே ஒரு வட்ட வடிவமாக இந்த அலை பிரயானப்பட்டு மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நிற்கும். "இன்று ஜப்பானில் பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவானது" என்று செய்திகள் வாசிக்கப்படும்.

பூமி ஒரு திடப்பொருளே. ஆனாலும் அதுவும் இந்த அலைவடிவத் தத்துவத்திலிருந்து விலகி இருக்க முடியாது. கடலில் அலை நம் கண்ணுக்குத் தெரிந்ததே. சுனாமி ஒன்றே போதும். எங்கேயோ துவங்கிய அலை ஆப்பிரிக்கா வரை தாக்கிய இந்த அலை வடிவத்தை நாம் கண்கூடாகக் கண்டோம். தென்றல் காற்றும், கொடும் புயலும் அலை வடிவே. இப்படி பிரபஞ்சத்திலும் பூமியிலும் வியாபித்திருக்கும் அலை நம்மிலும் தானே இருக்கும். நம் உடல் மற்றும் மனம் அதாவது உணர்ச்சி இரண்டுமே இந்த அலை வடிவ தத்துவமாகவே இயங்குகிறது.

உடலில் இது எப்படி வேலை செய்கிறது? யோசித்துப் பாருங்கள், பசியால் உங்கள் வயிறு சுருங்கும் போது தலையில் வலி ஏற்படுகிறது. வயிற்றுப்பகுதியில் உணவு இல்லாமல் அழுத்தம் குறைவுபடும்போது அந்த அழுத்தம் தலையில் உண்டாகிறது. தலைவலிக்கு இதுவே காரணம். இது தான் அலைவடிவ விளைவு.


இந்த விளைவு நமது உணர்ச்சியிலும் உண்டு. ஒருவர் முன் உட்கார்ந்து கொண்டு நீங்கள் வாய் விட்டுச் சிரியுங்கள். உங்கள் எதிரில் இருப்பவர் நீங்கள் என்னவென்று சொல்லாமலேயே சிரிக்கத் துவங்குவார். உங்கள் மனதில் உள்ள மகிழ்ச்சியான உணர்வு சிரிப்பு என்ற அதிர்வின் மூலம் வெளிப்பட்டு அலையாகப் பரவி அடுத்தவர்களை சென்று அடைகிறது. இதே போல் நீங்கள் ஒருவரை முறைத்துப் பாருங்கள், காரணம் சொல்வதற்கு முன்னடியே அவர் மனம் ஒரு பதற்றத்திற்கு வந்து விடும். இதுவும் அப்படியே!

தெருவில் உங்களிடம் ஒருவர் கோபப்படுகிறாரா? முன் தெருவில் அவரை யாரோ கோபப்படுத்தியிருப்பார்கள். உங்களிடம் ஒருவர் அன்பு காட்டுகிறாரா, அவர் பிறரால் அன்பாக நடத்தப்பட்டிருப்பார் என்பது நிச்சயம். நீங்கள் ஒரு ஏழைக்கு உதவுகிறீர்களா, அவருக்கு வசதி வந்தவுடன் அவர் பிறருக்கு உதவுவார். அவரால் உதவி பெற்றவர்கள் மற்றவர்களுக்கு, இப்படி மனிதனின் எல்லா நடவடிக்கைகளும் ஒரு அலை வடிவில் இந்த சமூகத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது. தீமைகளும் அவ்வாறே.




உணர்ச்சியின் அலை வடிவம் தான், நாம் செய்யும் நன்மையும் தீமையும் சுற்றி சுற்றி நம்மையே வந்தடையும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக நாம் ஒரு சாலையில் செல்கிறோம், எதிரே வாகனத்தில் வருபவர் நம்மீது லேசாக இடித்து விடுகிறார். நாம் அவரிடம் கோபப்படாமல், "பரவாயில்லை பார்த்துச் செல்லுங்கள்" என்று அவரிடம் சமாதானமாகச் சொல்லியனுப்பினால், அவர் செல்லும் போது மனது அமைதியாகவும், சக மனிதர் தன் மீது காட்டிய அன்பை நினைத்தும் பயணம் செய்வார்.

இப்போது அவர் மீது யாரேனும் மோதினால் கூட அதே போல அவரும் சமாதானமாக பேசி அனுப்புவார். இது அன்பின் அலை பரவுவதற்கு உதாரணம். இது மாறாக நடந்தால் என்ன ஆகும். வழியில் நாம் சண்டை போட, அதே கோபத்தில் அவர் இன்னொருவரிடம் சண்டை போட இப்படியே கோபமும் துன்பமும் ஒரு அலையாகப் பரவும். இது நாம் எளிதில் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் தான்.

மகிழ்ச்சி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் போது சமூகத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இப்படி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மகிழ்ச்சி பரவும் போது அந்த மகிழ்ச்சியின் அலையும் அது பரவும் மடங்கும் பல மடங்காக உயர்கிறது. மகிழ்ச்சியும் நன்மையும் மொத்த சமூகத்திற்கும் ஒன்றாகப் பரவினால் முழு சமூகமும் சொர்க்கத்தைப் போல மகிழ்ந்திருக்கும் என்பதற்காகவே இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பல்வேறு பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடுகிறோம்.

இப்படிப் பண்டிகைகளைக் கொண்டாடும் போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் ஒரே நேரத்தில் மகிழ்ந்திருப்பர். அந்த நாளில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பதால் குற்றங்கள் எதுவும் நடக்காது. நல்ல நாளும் அதுவுமாக கோபப்படக்கூடாது என்பதால் கோபங்கள் வெளிப்படாது. குறிப்பிட்ட ஒரு நாளில் யாருமே கோபப்படவில்லையென்றால் எப்படி இருக்கும். அந்த சமூகம் சொர்கம் தானே.



எப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒரே மாதிரியான பண்டிகையைக் கொண்டாடும் போது மொத்த சமூகமும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறதோ, அதே போல ஒவ்வொரு தனி மனிதரும் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்பி நன்மை செய்யும் போது முழு சமூகமும் நன்மைகள் கொண்ட சமூகமாகவே இருக்கும். இப்படி வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்மைகள் மட்டுமே செய்து வாழ்ந்தால் மொத்த சமூகமும் நன்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த சமூகமாகத்தானே இருக்கும். சமூகத்தில் குறையுள்ள மனிதர்களே இருக்க மாட்டார்களே! குறையற்ற மனிதர்கள் வாழும் சமூகம் சொர்கமே!

இப்படி மகிழ்ச்சி அலையாகப் பரவினால் அந்த சமூகம் சொர்கத்தை கண்ணால் காணும்.

மாறாக தனிமனிதர்கள் தீயகாரியங்களில் ஈடுபட்டு, தானும் துன்பத்தில் ஆழ்ந்து மற்றவர்களையும் துன்புறச்செய்தால் அந்த துன்ப அலையே சமூகத்தில் பரவும். இப்படி துன்பம் இரட்டிப்பாகி மொத்த சமூகத்திலும் அந்த அலை பரவினால் அந்த சமூகம் சச்சரவுகளும் போராட்டங்களு கொண்டதாகவே இருக்கும். யாரும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படி அமைதியும் மகிழ்ச்சியும் இல்லாத சமூகம் நரகமாகவே கருதப்படும். சொர்கமும் நரகமும் இப்படித் தான் தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி நாம் செய்யும் நன்மை தீமைகள் யாவும் அலைவடிவில் ஒரு சுற்று சுற்றி திரும்பி நம்மையே வந்தடைகிறது என்பதை நன்கு புரிந்து கொண்டால் நாமும் நல்லது செய்வோம் பிறரையும் நல்லது செய்யத் தூண்டுவோம். ஏனெனில் அது தானே திரும்பி நமக்கு வரும். ஆக நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பது உண்மையான தத்துவமேயன்றி வெறும் வாக்கியம் அல்ல. ஆகவே தீர்க்கமாக நம்புவோம். நல்லது செய்தால் நல்லது நடக்கும். நல்லதே செய்வோம்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

கொசுறு: இது இன்னும் புரியவேண்டும் என்றால் சிரஞ்சீவி நடித்த "ஸ்டாலின்" என்ற தெலுங்கு படத்தை பாருங்கள். ஒரு அற்புதமான தத்துவத்தை இவ்வளவு அழகாக காட்சி வடிவில் கொடுத்த ஒரே திரைப்படம் என்று இதை தைரியமாகச் சொல்லுவேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சரிதானே!

மீண்டும் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்


Thursday, August 20, 2009

விதுர நீதி! - உயர் குடும்பங்கள் என்பது எவை?


விதுர நீதி!

திருதிராஷ்ட்டிரன்: விதுரா! உயர் குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் மதிப்புக்குரியவன் ஆகிவிடுவானா?


விதுரர்: இல்லை! ஒழுக்க நியாயமற்றவன் அவனுடைய பரம்பரையை மட்டும் வைத்து, மரியாதைக்குரியவன் ஆகிவிட மாட்டான்.

ஒருவனுடைய பிறப்பு எப்படிப்பட்டதாயியும், ஒழுக்கத்தை ஒட்டியே ஒருவனுக்கு மரியாதை கிட்டுகிறது.

ஏமாற்று வேலை மூலமாக வாழ்க்கை நடத்தும் மோசக்காரனை அறிவு காப்பாற்றி விடாது. கூட்டை விட்டு பறந்து செல்லும் பறவைகளைப் போல, அறிவு அவனை விட்டு விரைந்து ஓடுகின்றன.

திருதிராஷ்டிரர் கேட்டார்: 'நன் குணத்தையும், உலக நன்மையையும் போற்றும் கடவுள்கள் உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள் பால் அக்கறை காட்டுகிறார்கள். விதுரா! உயர் குடும்பங்கள் என்பதுதான் எவை?

விதுரர் சொல்கிறார்: 'சுய கட்டுப்பாடு, பொறுமை, தியாகம், அன்னதானம், தூய்மையான திருமணங்கள், தவம், பிரம்மத்தை உணர்ந்த தன்மை, மற்றவர்களைத் திருப்தி செய்யும் குணம் - இந்த எட்டு குணங்கள் எந்தக் குடும்பங்களில் எப்போதும் நிலவுகின்றனவோ, அவை உயர் குடும்பங்கள் ஆகும்.

பசுக்களும், செல்வமும் மிகுந்திருந்தாலும், நன்னடத்தையும் நற்குணமும் இல்லாத குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் ஆக மாட்டா!"

Wednesday, August 19, 2009

விக்ரமாதித்தன் கதைகள் - 2


சென்றவாரத் தொடர்ச்சி

தன் பக்கத்திலிருந்த பீடத்தில் அந்தப் பழத்தை மன்னன் வைத்தான். அந்த சமயம் அரண்மனையில் அருமையாக வளர்ந்து வரும் கருங்குரங்கு அங்கு ஓடி வந்து மாதுளம் பழத்தை எடுத்து ஆசையோடு கடித்தது. அதனுள்ளிருந்து இரத்தினக் கற்கள் கலகலவென்று கீழே கொட்டின. இதனைக் கண்ட விக்கிரமாதித்தனும் அரசவையில் இருந்த அனைவரும் பிரமித்து விட்டனர்.

உடனே தன் பொக்கிஷ அதிகாரியை வரவழைத்து, "நான் தினமும் உன்னிடம் கொடுத்துவரும் மாதுளம் பழங்களை என்ன செய்கிறாய்?" என்று கேட்டான்.

"அவைகள் அனைத்தையும் பொக்கிஷத்திலேயே வைத்திருக்கிறேன்!" என்று அதிகாரி சொல்லி விட்டு அவற்றை அங்கு கொண்டு வந்தான். மாதுளம் பழங்களை உடைத்துப் பார்க்கையில் ஒவ்வொன்றிலும் ரத்தினக் கற்கள் இருப்பது வெளியாயிற்று.

ரத்தினக் கற்களைப் பார்த்த விக்கிரமாதித்தன் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தான். இருப்பினும் அவைகளை பரீக்ஷித்துப் பார்க்க ரத்தின வியாபாரியை அழைத்து வரச் செய்தான்.

அவற்றை நன்றாக பரிசோதித்த ரத்தின வியாபாரி பெருதும் ஆச்சரியத்துடன் மன்னனிடம் விளக்கினான். "அரசே இது வரை இப்படி அதீத பளபளப்பும் மகிமையும் கொண்ட ரத்தினக் கற்க்களை நான் பார்த்ததே இல்லை. இதற்கு மதிப்பு சொல்ல என்னால் இயலாது. மன்னா இந்த கற்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் வாழும் இந்த பூமிக்கு நீங்கள் என்ன மதிப்பு கொடுப்பீர்களோ அதற்கு நிகரான மதிப்பு என்றே கொள்ளுங்கள்" என்றான்.

தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 1

இதைக் கேட்டவுடன் விக்கிரமாதித்தன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். ரத்தின வியாபாரிக்கு நிறைய பொன்னும் பொருளும் பட்டாடைகளும் கொடுத்து வழியனுப்பினான். பிறகு அத்தகைய மாதுளங்கனிகளைக் கொடுத்த முனிவனை விசாரியாமல் போனோமே என்று அவன் வருந்தினான். ஒரு நாள் முனிவன் வழக்கம் போல மாதுளம் பழங்களோடு வந்தபோது மன்னன் அவனை வரவேற்று உபசரித்தான்.

பின்னர் அந்த முனிவரிடம் மன்னன் கேட்கலானான் "முனிவரே! தாங்கள் மாதுளங்கனிகள் மூலம் எனக்கு அளித்திருக்கும் ரத்தினக் கற்களுக்கு என் ராஜ்ஜியமே கூட ஈடாகாது. அப்படியிருக்க எதற்காக எனக்கு இந்த விலையுயர்ந்த ரத்தினக் கற்களை பரிசளித்தீர்கள்? அந்த காரணத்தைச் எனக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டினான் விக்கிரமாதித்தன்.

முனிவரோ "மன்னா! இம்மாதிரியான விஷயங்களை பகிரங்கமாகப் பேசுவது நல்லத் அல்ல. ஆதலால் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும்" என்றார் கபட முனிவர்.

அவ்வாறே விக்கிரமாதித்தனும் முனிவரை தனியே அழைத்துச் சென்று பேசலானான். "முனிவரே, நீங்கள் எனக்கு ஏராளமான ரத்தினக் கற்களைக் கொடுத்தீர்கள். ஆனால் நான் ஒருநாள் கூட உங்களை கவனிக்காமல் இருந்து விட்டேன். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்" என்றான் மன்னன்.

கபட முனிவர் கூறினார் "மன்னா! மாவீரா! எனக்கு ஒரு லட்சியம் உண்டு! அதை அடைய நீ உதவுவதாக வாக்குக் கொடுப்பாயானால் நான் சொல்கிறேன்." என்றார். அவ்வாறே விக்கிரமாதித்தனும் வாக்கு கொடுத்தான்.

"முனிவரே! நான் வாக்கு கொடுத்து விட்டேன், இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?" என்றான் விக்கிரமாதித்தன்.

"மன்னா! நான் வனாந்திரத்திலுள்ள துர்க்கையம்மனை துதித்து யாகங்கள் செய்யப் போகிறேன். அதனால் எனக்கு அஷ்டமா சித்திகளும் கிடைக்கும். அதற்காக நீ ஒருநாள் முழுவதும் என்னுடன் துனையாக இருக்க வேண்டும். இதைத் தான் நான் உன்னிடம் கேட்கிறேன் என்றான் கபட முனிவன்.


தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 2


"சரி, நான் வருகிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.

"வருகிற கிருஷ்ண பக்ஷத்து, சதுர்த்தசியும் செவ்வாய் கிழமையும் கூடிய தினத்தில் ராத்திரியில் நீ மட்டும் ஆயுதம் தாங்கி தனியாக வர வேண்டும்" என்றான் முனிவன் வஞ்சகமாக.

முனிவன் குறிப்பிட்ட தினமும் வந்தது. விக்கிரமாதித்தனும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காட்டுக்கு முனிவன் குறிப்பிட்ட இடத்தைத் தேடி தன்னந்தனியாகச் சென்றான்.

வேதாளம் வரும்.....

Sunday, August 16, 2009

இலவசங்கள் தருவது நல்லாட்சியா?


நமது இந்து தர்மப் புராணக் கதைகளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பது எல்லா காலத்திற்கும் ஏற்ப அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.

அகங்காரத்துடன் வாழக்கூடாது, அகங்காரம் பாவம் என்பதை பல முற்கால சம்பவங்கள் மற்றும் கதைகள் மூலம் விளக்கி உள்ளனர் பெரியோர்.

அவற்றில் ஒரு துளியை இங்கே பார்ப்போம்.

மகாபாரதத்தின் நிறைவு காலம். அதாவது பாரதப்போர் முடிந்து தருமரின் ஆட்சி நடந்து வந்தது. தருமரின் ஆட்சி தருமத்தின் ஆட்சியே ஆகும்.

தருமரின் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். பருவநிலைகள் சீராக இருந்தது. விவசாயம் பெருகியது. திருட்டு கொள்ளை மற்றும் பிற துர்காரியங்கள் எதுவும் நடக்காமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர். பசித்தவர்கள் யாருமே இல்லாமல் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். இப்படி நல்லாட்சியை சிறப்பாக நடத்தி வந்தார் தருமர்.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒரு முறை ஸ்ரீ க்ருஷ்ணர் தருமரைப் பார்க்கச் சென்றார். அங்கே நல் ஆட்சி நடப்பதையும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையும் தருமரிடம் பேசுவதன் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

அவை யாவையும் கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு தருமருக்கு தனக்கு நிகராக நல்லாட்சி நடத்துபவர் யாரும் இல்லை என்பது போன்ற கர்வம் உண்டாகியிருப்பது புரியத்துவங்கியது. தருமருக்கு பாடம் புகட்ட எண்ணினார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

ஒரு நாள் தருமரை பாதாள உலகில் ஆட்சி புரிந்துவரும் மகாபலி என்னும் அரசனிடம் அழைத்துச் சென்றார் ஸ்ரீ க்ருஷ்ணர். மகபலி சகல மரியாதைகளுடன் தர்மபுத்திரரை வரவேற்றார்.



மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?


க்ருஷ்ணர் மகாபலியிடம் கூறினார்: "உனக்குத் தர்ம புத்திரரைப் பற்றித் தெரியுமா? தான, தர்மங்களின் இருப்பிடம் இவர்தான், நாள் தவறாமல் ஒவ்வொரு தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உனவு அளிக்கிறார். இப்படிப்பட்ட நல்லாட்சி நடத்தும் ஒரு அரசனை நீ எங்காவது பார்த்திருக்க முடியுமா?" என்றார்.

இதைக்கேட்ட மகாபலி சிரித்தார், "தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தன்னிடம் பிச்சை எடுத்துதான் தின்ன வேண்டும் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது, இவருடைய ஜம்பத்தைத்தானே காட்டுகிறது? இப்படி நடத்தப்படும் ஆட்சி ஒரு ஆட்சியா? எனது நாட்டில் நான் ஒரு ஊரைக் கொடுக்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட, என்னிடம் எந்தப் பிரஜையும் உணவுக்காக வந்து காத்திருக்க மாட்டான்.

இப்படிப் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை வளர்த்து, தனது மமதையைக் கட்டிக் காத்துக் கொள்ளும் இந்தத் தர்மபுத்திரரா பெரிய அரசர்? இவரது ஆட்சியா நல்லாட்சி? தூ...! என்று காரி உமிழ்ந்து பரிகாசித்து விட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ம புத்திரரின் இறுமாப்பு அடியோடு ஒழிந்து அமைதியும் அடக்கத்துடனும் ஆட்சி செய்தார் என்கிறது பாரதம்.

இத்தகைய குணம் கொண்டவர்கள் எல்லாக்காலத்திலும் உள்ளார்கள். இந்த காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் தானே!

ஆதலால் தான் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Friday, August 14, 2009

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!

எண்ணம், சொல், செயல் மூன்றாலும், தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடல் உணர்ச்சிக்கோ துன்பம் விளையாத அளவோடும் முறையோடும் எச்செயலையும் ஆற்றும் பண்பாடுதான் ஒழுக்கமாகும்.

பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும். செய்யும் செயல் பாப புண்ணியத்தைக் கணிப்பதில்லை, செயலின் விளைவின் மூலமாகவே அது அறியப்படுகிறது. நமது செயல்கள் யாவும் நமக்கோ பிறருக்கோ இன்பத்தைக் கொடுக்குமானால் அது புண்ணியச் செயல் மாறாக நமது செயல் நமக்கோ அல்லது பிறருக்கோ துன்பத்தை உண்டாக்கினால் அது பாபச் செயல் எனப்படுகிறது.

ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத இன்மொழியனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும். வாழ்வை வெற்றிகரமானதாக்கித் தரும்.

இன்ப நிலை நீடிக்க வேண்டும் எனில் உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் என்ற ஐந்தையும் அலட்சியப்படுத்தவோ, மிகையாகவோ அல்லது முரணாகவோ உபயோகிக்கக் கூடாது.

வாங்கும் கடனும் தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும். வாழத்தெரியாதோர் பலர் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்.

உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் மனிதனாகப் பிறந்தவனின் நித்தியக் கடனாகும்.

வெளிச்சத்திலே இருள் நிறைந்து இருப்பது போல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறது. அதாவது அகக்கண்ணைத் திறந்து சுய தேடுதல் செய்தால் தான் இறைவன் தென்படுவான்.

இதை விளக்கக் ஒரு குட்டி கதை!

இரண்டு நண்பர்கள். ஒருவன் குருடன். இருவரும் ஒரு வீட்டில் கூடி பேசிக்கொண்டிருந்தனர். பார்வையற்றவன் வெகு நேரம் ஆகி விட்டது நான் கிளம்புகிறேன் என்று கூறி புறப்பட்டான்.

மற்றவனோ "நண்பா! இப்போது இருட்டி விட்டது, இந்த விளக்கை எடுத்துப்போ என்றான்! பார்வையற்றவனோ, "எனக்கு விளக்கு எதற்கு. எப்போதுமே அகக்கண்களால் தானே நடமாடுகிறேன்" என்றான்.

நண்பனோ "அதற்கில்லை, உனக்கு வெளிச்சம் தேவையில்லை ஆனால் உனக்கு எதிரில் வருபவர்களுக்கு நீ நடப்பது தெரிந்தால் ஒதுங்கிச் செல்வார்கள் இல்லையா!" என்று கொடுத்தனுப்பினான்.


இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது சப்தமாக மேளம் வாசிப்பது ஏன்?


பார்வையற்றவன் விளக்குடன் இருளில் சென்றான். பாதையில் ஒருவர் சடேரென்று அவன் மீது மோதினார். கண் தெரியாதவன் கேட்டான் "ஏனய்யா, எனக்குத்தான் கண் தெரியாது, உனக்குமா தெரியாது. இப்படி வந்து மோதுகிறீர்களே" என்றான். மோதியவனோ "மன்னித்து விடுங்கள் இருட்டில் தெரியவில்லை என்றான்".

பார்வையற்றவனோ "நான் தான் கையில் விளக்கை வைத்திருக்கிறேனே, அந்த தைரியத்தில் தான் சற்று வேகமாக நடந்தேன், அதைக்கூடவா நீங்கள் பார்க்கவில்லை?"

மோதியவன் சொன்னான் "தம்பி நீ விளக்கு வைத்திருக்கிறாய். ஆனால் அது அனைந்திருக்கிறது".

பார்வையற்றவன் விளக்கைத் தூக்கி எறிந்து விட்டு நடக்கலானான் தன் அகக்கண்களை நம்பி.

Wednesday, August 12, 2009

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தின் அர்த்தங்கள்

"உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க யுக யுகங்களுக்கும் நான் அவதரிப்பேன்!"

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

இவ்வாறு கண்ணன் பூலோகத்தில் அவதரித்த நாளே க்ருஷ்ண ஜெயந்தி. க்ருஷ்ணன் அவதரித்த நாள் கோகுலாஷ்டமி. இதை ஜென்மாஷ்டமி என்றும் கூறுவார்கள். உலகமெங்கும் உள்ள பக்தர்கள் ஆனந்த பரவசத்துடன் கொண்டாடும் நாள் கோகுலாஷ்டமி. கோகுல கிருஷ்ணன் ஸ்ரவன மாதத்தில், ரோகிணீ நக்ஷத்திரத்தில், அஷ்டமி திதியில் புனித நாழிகையில் அவதரித்தார். அதனால் கோகுல அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பிறக்கும் பொழுதே சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் காட்சியளித்தான் கண்ணன். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கி சாதாரணக் குழந்தை வடிவெடுத்தான்.


இப்படிப்பட்ட குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எப்பேற்பட்ட பேறு என்று லயித்து "என்ன தவம் செய்தனை, யசோதா! என்ன தவம் செய்தனை... எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க , என்ன தவம் செய்தனை! என்று பூரிப்புடன் பாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

இறைவன் பூலோகத்தில் பல அவதாரங்கள் எடுத்து அவதரித்திருப்பினும் கிருஷ்ணாவதாரமே "பூர்ணாவதாரம்" ஆகும். குழந்தை வடிவெடுத்து , பாலகனாக குறும்பு செய்து, இளமையில் காதல் கொண்டு, வீரத்துடன் போரிட்டு கம்சனைக் கொன்று, முதிர் பருவத்தில் உலகுக்கு நீதியை எடுத்துச் சொல்லி பரமாத்மாவான தன்னை எல்லோரும் உணரச் செய்து, சர்வமும் நானே என்று உலகிற்கு உணர்த்தினான் கண்ணன்.

ஒரு மனிதன் எந்த நாட்டில் எந்த மதத்தில் , எந்த ரூபத்தில் வாழ்ந்தாலும், கருப்போ சிவப்போ, நகர வாசியோ அல்லது காட்டுவாசியோ, கிருஸ்தவரோ முஸ்லீமோ யாராயிருப்பினும் உலகில் பிறந்த எல்லா மனிதர்களும், தனது வாழ்க்கையின் எல்லாப் பருவங்களிலும் ஸ்ரீ க்ருஷ்ணரைப் போலவே வாழ்வார்கள் என்று ஒட்டு மொத்த மனித வாழ்க்கையை ஒரு ஃபார்முலா போல எடுத்துக் காட்டி இருக்கிறது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.

உதாரணமாக எல்லோரும் அவரவர் குழந்தைப்பருவத்தையே இதற்கு சுய ஆதாரமாகக் கொள்ள முடியும். சிறு வயதில் வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் திண்பண்டங்களை நைசாக எடுத்து தின்றிருப்போம். குறைந்த பட்சம் ஹார்லிக்ஸையோ பூஸ்ட்டையோ அல்லது சர்க்கரையையாவது எடுத்து திருட்டுத் தனமாக வாயில் போட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்திருப்போம். ஒரு வேளை அம்மா கண்டுபிடித்திருந்தால் அவளிடம் சிக்காமல் தெருவெல்லாம் ஓடியதும் நினைவிருக்கலாம். சிலர் ஒரு படி மேலே போய் தந்தையின் பையிலிருந்து கொஞ்சம் காசை எடுத்து பள்ளிக்கூடக் கடையில் வாங்கி தின்றிருப்பார்கள். கண்ணன் வெண்ணெய் திருடுவதும் இதுவும் ஒன்றே.

"உபநிஷத்து கதைகள்"

அதனால் தான் இதற்கெல்லாம் இ பி கோ தண்டனைகள் எந்த வீட்டிலும் கொடுப்பதில்லை. அதாவது க்ருஷ்ணாவதாரத்தின் மூலம் இந்த வயதில் மனிதன் இப்படித்தான் இருப்பான் என்று ஒரு ஃபார்முலாவை ஏற்கனவே அறிவித்து விட்டார் இறைவன். அதாவது இங்கே சைல்டு சைக்காலஜி ஒரு கதாபாத்திரம் மூலம் விளக்கப்பட்டு விட்டதை யோசிக்காமலேயே புரிந்து கொள்ளலாம்.


இதில் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். மேலை நாடுகளில் குழந்தைகளே பிடிக்காது என்று சொல்வதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. குழந்தைகளின் சேட்டையை தாங்க முடியாமல் அந்தக் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கோவத்தில் சுத்த விட்ட பெண்களைப் பற்றியும் செய்திகளில் பார்த்திருப்போம். அவர்களுக்கெல்லாம் குழந்தைகள் ஏன் இப்படி அடங்காத குறும்பு செய்கின்றன. என் சொல் பேச்சை ஏன் கேட்பதில்லை என்பதெல்லாம் புரிவது கிடையாது.

"கீதோபதேசம்"

மாறாகக் குழந்தைகளின் மீது கோபம் கொள்வர். ஆனால் நம் நாட்டில் குழந்தைகளை ஸ்ரீ க்ருஷ்ணராகவே பார்ப்பதால் குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு மனோரீதியான புரிதல் இந்த அவதார மகிமையால் உண்டாகியிருப்பதாலும் குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கவே செய்வார்கள். இது இந்து தர்மம் கொடுத்த பக்குவம். இந்து தர்மம் இந்நாட்டு மக்களுக்கு கொடுத்த கொடை.

சரி குழந்தைப் பருவத்திலிருந்து வளர் இளம் பருவத்திற்கு வருவோம். அதாவது டீன் ஏஜ். இந்தப் பருவத்தில் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் வரும் இயல்பான கவர்ச்சி. ஆண்கள் பெண் நண்பிகளுடன் அளவலாவுவதை அதிகம் விரும்புவர். இரு பாலருக்கும் அதில் ஒரு இனம் புரியாத மயக்கம் இருப்பது இயல்பாகவே தெரியவரும். அதே நேரத்தில் இளம் பருவத்தினர் தங்கள் வயதுடைய பெண்களிடம் குறும்பாக விளையாடுவதும் இயற்க்கையாகவே நடக்கக் கூடியதாகும். (இந்தக் காலத்தில் ஈவ் டீசிங் என்று ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள், இது தற்கால சமூகம்).



இளம்பருவத்தில் க்ருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடுவதும், அவர்களிடம் குறும்பாக விளையாடுவதையும் நாம் காண்கிறோம். இந்த இளம் வயதில் ஆண்பெண் ஈர்ப்பு உருவாகும் என்பதை இந்த அவதாரமகிமை தெளிவாகச் சொல்கிறது. நம் முன்னோர்கள் கூட , அநேகமாக நம் தாத்தா பாட்டிகள் எல்லாம் இந்த வளர் இளம் பருவத்தில் தான் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.(தற்காலத்தில் அது குழந்தைத் திருமணம்). உறவுக்கு ஆசைப்படும் வயது அதுவே என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லா மனிதரிடத்திலும் இந்த வயதில் இப்படிப்பட்ட உணர்வு தான் இருக்கும் என்று மானிட மனோவியலை அருமையாக எடுத்துச் சொன்ன அவதாரம் க்ருஷ்ணாவதாரம்.

சரி இன்னும் கொஞ்சம் வளர்ந்து இளம் பருவத்திற்க்கு வருவோம். இந்தப்பருவத்தில் மீசை முளைத்த ஆண் மகனாய் நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் ஆண்மகனாக ஒவ்வொருவரும் நடமாடுவதை கண்ணனும் செய்கிறான்.தனது இளமையின் வீரியத்தின் காரணமாகவும் அவதார நோக்கத்தை நிறைவு செய்யவும் கம்சனுடன் போரிட்டு வெல்கிறான்.

எந்த நாட்டிலும் இந்த இருபது வயதைத்தொடும் இளம் வயதில் ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் நெஞ்சு நிமிர்த்தி நான் வீரன் , தைரியசாலி என்று காட்டிக் கொள்வதற்கும் ஆசைப்படும் வயது இந்த இளம் பருவம். இதை க்ருஷ்ணாவதாரம் கண்முன்னே கொண்டு வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டக்கல்லூரி மாணவர்களின் திமிர் சண்டையும் சரி, ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்டப் போட்டிகளின் போது இளைஞர்கள் அடித்துக் கொள்வதும் இது போன்ற இளமைச் சண்டைகளே. ஆனால் ஸ்ரீக்ருஷ்ணரின் சண்டையின் நோக்கம் வேறு. இந்த மானிடர்களின் அநாகிரீகச் சண்டையின் நோக்கம் வேறு அவ்வளவே. இந்த வயதுடையவர்களின் உணர்வுகளை மனோவியல் ரீதியாக எடுத்துக் காட்டியது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.

விதுர நீதி

இந்த இளமைப் பருவத்தையும் தாண்டி மனிதன் முதிர் பருவத்தை அடையும் போது இயல்பாகவே அவன் ஒரு சமூக மனிதனாக தன்னைப் பார்க்கத் துவங்குவான். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களை கவனிக்கத்துவங்குவான். தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில் அக்கரை காட்டத் துவங்குவான். தன்னால் முடிந்த வரையில் அந்த சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளவும் முடிந்தால் வழிநடத்தவும் தயாராவான். அந்த பருவமே ஸ்ரீ க்ருஷ்ணரின் முதிர் பருவமான கீதோபதேசப் பருவம். தன் உற்றாரை உற்று நோக்கினான் கண்ணன். தர்மம் செய்தவனையும் அதர்மம் செய்தவனையும் பிரித்துப் பார்த்தான் கண்ணன். தர்மத்தைக் காத்தான். அதர்மத்தை அழித்தான். உலகிற்க்கு போதித்தான். தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் மெய் ஞானத்தால் ஆட்கொண்டான். பரம ஞானத்தை கீதையாக உபதேசித்து அவனை நம்புபவர் நம்பாதவர் என அனைவரையும் வழிநடத்தினான் கண்ணன்.

ஒரு குறிப்பிட்ட பருவம் வந்தவுடன் சமூகத்தில் நான் ஏதாவது தடத்தைப் பதித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் பருவமும் அது தான். எல்லா மனிதருக்கும் உருவாகும் இந்த உணர்வைத் தன்னுடைய அவதார மகிமையால் உணர்த்தினான் கண்ணன்.

இப்படி இந்த உலகில் எந்த மூலையில் பிறக்கும் மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் இந்த பருவங்களையும் அதற்கான உணர்வுகளையும் தாண்டி வாழ்ந்திருக்க முடியாது. ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று தெள்ளத் தெளிவாக தன்னுடைய அவதாரம் மூலமாகவே எடுத்துச் சொல்லும் கடவுள் வேறு எந்த மதத்திலும் கிடையாது. இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டால் தெய்வமாக‌, தோழனாக‌, குழந்தையாக‌ ஸ்ரீ க்ருஷ்ணன் ஒரு முழுமையான அவதாரமாக உங்கள் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்பதை மனதார உணர்வீர்கள்.

க்ருஷ்ண ஜெயந்தியன்று மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்திருக்கும். வாசல் முழுக்க கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அரைரை சின்னச் சின்ன கால் சுவடுகளை வரைவது வழக்கம். பலவித இனிப்பு பலகாரங்களுடன் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல், பழங்கள், கார வகைகள் ஆகியனவை நிவேதனம் செய்யப்படும். நாள் முழுக்க விரதமிருந்து நிவேதன வெண்ணெயினை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வர். இளைஞர்கள் உரியடித்திருவிழாவைக் கொண்டாடுவார்கள். உயர்ந்த தூண் முழுவதும் எண்ணெய் தடவி, தூணின் உச்சியில் பக்ஷணங்களையும், பணத்தையும் மூட்டையாகக் கட்டி வைத்திருப்பார்கள். இளம் பருவத்து ஆண்கள் வழுக்கும் தூணில் ஏறி மூட்டையை எடுப்பது தான் உறியடித்திருவிழா. இப்படிக் கோலாகலமாக க்ருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமும் மகிழ்ச்சியுடன் கண்ணனின் நாமத்தைக் கொண்டாடுவோம்.



"யதா யதாஹி தர்மஸ்ய க்ளானிர் பவதிபாரத
அபுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்மயம்"

"பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே!


அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட யுக யுகங்களுக்கும் நான் அவதரிக்கிறேன் - ஸ்ரீ க்ருஷ்ணர்