Sunday, September 30, 2012

சீதோஷ்ன நிலையும் ஜீவராசிகளும்!

படம்: ச. திருமலை


அருமை நண்பர் திரு ச.திருமலை தன் குடியிருப்புப் பகுதியின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். படிக்க மிகச்சுவையாக இருந்ததால் நண்பர்களுக்காக இங்கேயும்!

இனி திருமலை :

நேற்று காலை மதுரையில் இருந்த என் தந்தையை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். புரட்டாசி வந்து விட்டது இன்னும் வெயில் கடுமையாக வாட்டுகிறது. தாங்க முடியாத அனல் வீசுகிறது கரெண்ட் வேறு இல்லை என்று புலம்பித் தள்ளினார். மதுரையில் மட்டும் இல்லை இங்கு கலிஃபோர்னியாவிலும் கூட செப்டம்பர் மாத இறுதிக்கு கடும் வெயில் அடிக்கிறது, இன்று இங்கும் கூட 100 டிகிரி வெப்பம் இந்த வார இறுதியிலும் நூறைத் தாண்டப் போகிறது என்று அவரைத் தேற்றினேன். அவருக்கும் அங்கு கொஞ்சம் வெப்பம் குறைந்த மாதிரித் தோன்றியிருந்திருக்கலாம். அவரிடம் பேசி விட்டுக் காரைக் கிளப்பி வழக்கம் போல என்.பி.ஆர்/கேக்யூடி ரேடியோவுக்குக் காதை ஒப்படைத்த பொழுது நேற்றிரவு காட்டப் போகும் அவர்கள் எடுத்திருக்கும் ஒரு விவரணப் படம் குறித்து ஒரு கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. அதாவது மாறி வரும் பருவ நிலைகளினால் கலிஃபோர்னியா மாகாணத்தில் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தான படம் அது. நேற்றிரவு அவர்களது டி வி யில் காண்பிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக அந்த கலந்துரையாடலை நடத்திக் கொண்டிருந்தார்கள். கலிஃபோர்னியாவில் மெதுவாக வெப்பம் அதிகரித்து வருகிறது. சாதாரமாக ஒரு வருடத்தில் ஒரு 20 நாட்களில் 100 டிகிரிக்கும் மேலாக இருக்கும். ஆனால் அவை இப்பொழுது மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. வரும் வருடங்களில் ஒட்டு மொத்தமாக ஒரு 2 டிகிரி வரை ஏறலாம் என்கிறார்கள். ஒரு பத்து நாட்கள் கூடுதலாகக் கோடை இருப்பதினால் ஏதும் அதிக பாதிப்பு வந்து விடாது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அந்த நிகழ்ச்சியைக் கேட்ட பொழுது நிலமை அவ்வளவு எளிமையானது இல்லை என்பது புரிந்தது.

மெல்ல மெல்ல அதிகரித்து வரும் சீதோஷ்ணத்தினால் விவசாயத்துக்கு ஏற்கனவே கடும் பாதிப்புகள் ஏற்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். கலிஃபோர்னியாவின் நீர் வள ஆதாரமே அதன் கிழக்கே ஓடும் சியாரா மலைத் தொடரின் மலைச் சிகரங்களில் பெய்யும் வெண்பனிப் பொழிவுதான். அந்த மலைகளில் குளிர் காலங்களில் நவம்பர் மாதம் துவங்கி அனேகமாக ஏப்ரல் மே மாதம் வரை தொடரும் குளிர் காலங்களில் எவ்வளவு பனி பெய்து பனி மலையின் உயரம் கூடும். பல அடி உயரங்கள் வரை இந்த ஸ்நோ ஃபால் சேர்ந்து கெட்டியாகி பனிப்பாறையாக மாறி நிற்கும். அடுத்து வரும் ஜீன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவை உருகி வரும் தண்ணீர் கட்டுப்படுத்தப் பட்ட அணைகள் மூலமாகவும் ஆறுகள் மூலமாகவும் மாகாணத்தின் நடுவே இருக்கும் நீண்ட பள்ளத்தாக்கின் விவசாயத்திற்கு பாயும். அப்படி ஸ்நோ (பனி என்ற வார்த்தை எனக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை வேறு ஏதாவது நல்ல தமிழ்ச் சொல் இதற்காக உருவாக்கப் பட வேண்டும்) பெய்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலையில் சில டிகிரிகள் அதிகமானாலும் கூட ஸ்நோவாகப் பெய்வதற்குப் பதிலாக மழையாகவே பெய்து விடும். ஆகவே ஸ்நோவாக பெய்து அவை கட்டியாகி மெதுவாக உருகி ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருகுதவற்குப் பதிலாகக் குளிர் காலத்திலேயே மழையாகவே கொட்டி அவை கடலில் சென்று வீணாகி விடுகின்றன. அவற்றை சேமிக்கத் தேவையான அணைகள் கட்டப் படவில்லை. ஆகவே ஜூன் ஜூலை ஆகஸ்ட் போன்ற மழையில்லாத கோடை காலங்களில் ஸ்நோ உருகுவதன் மூலமாக வரவிருக்கும் தண்ணீர் வருவதில்லை. ஆதலால் கடும் வறட்சியை உருவாக்குகிறது. 110 டிகிரி வெப்பத்திற்கு சர்வ சாதாரணமாகப் பழகிப் போன நமக்கு ஒன்றிரண்டு டிகிரி வெப்பம் கூடுவதினால் என்ன பெரிதாக இழப்பு நேர்ந்து விடப் போகிறது என்று தோன்றக் கூடும். ஆனால் அதன் இழப்பு மிகப் பெரிதாகவே இருக்கிறது. ஒரு சில டிகிரி வெப்ப அதிகரிப்பு மாநிலம் முழுவதும் கடும் வறட்சியை ஏற்படுத்தி விடும் என்றார்கள். இது விவசாயத்துக்கு விழும் முதல் அடி.

படம்: ச.திருமலை
அடுத்ததாக கோடை நீள்வதன் காரணமாகவும் காலம் திரிவதன் காரணமாகவும் இது நாள் வரை குளிர் சீதோஷ்ண நிலையில் கலிஃபோர்னியாவில் காணப் பட்டிராத ஏராளமான பூச்சிகள் உருவாகி வருகின்றன என்றார்கள். ஏற்கனவே நிலவி வந்த குளிர்ச்சியான சீதோஷ்ணம் மாறி கோடைக்காலம் நீளும் பொழுதும் சில டிகிரி வித்தியாசங்களிலும் பல்வேறு புழுக்களும் பயிர்க் கொல்லிப் பூச்சிகளும் கட்டுக்கடங்காமல் உருவாகின்றன என்கிறார்கள் இங்குள்ள விவசாயிகளும் பூச்சியியல் நிபுணர்களும். அதன் காரணமாக 6 பில்லியன் டாலர் அளவிற்கான உருளைக் கிழங்கு வறுவல் வியாபாரம் பெருத்த அடி வாங்கும் என்கிறார்கள். வெப்ப மாறுதலினால் உருளைக் கிழங்கின் உள்ளே வரி வரியாக பூச்சி அரிக்கிறதாம். அந்த வரிப்புலி அரிப்பினால் உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் அதன் ருசியை இழப்பதுடன் கெட்டுப் போகவும் வாய்ப்பிருக்கிறது ஆகவே முதலில் உருளைக் கிழங்கு வியாபரம் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகப் போவதாகத் தெரிவித்தார்கள். உருளைக் கிழங்கின் விலை ஏறினால் அமெரிக்காவில் பல உணவுப் பொருட்களின் விலைகளும் கூடவே ஏறும். மேலும் இந்தப் பூச்சிகளைக் கட்டுப் படுத்த கடுமையான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிவிப்பது மூலமாக அது வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கும் என்றும் இது ஒரு விஷச் சுழற்சியை ஏற்படுத்துவதாகவும் கவலைப் பட்டார்கள்.

உருளைக் கிழங்கைத் தொடர்ந்து செர்ரிப் பழங்கள் போன்ற ஒரு சில பழ வகைகள் விளைவதற்குத் தேவையான உறை குளிர் சீதோஷ்ணம் குறைந்து வருவதினால் செர்ரி அறுவடையும் வெகுவாகக் குறையப் போவதாக செர்ரி விவசாயிகளும் தொடர்ந்து பல்வேறு காய்கறி கனிகளில் இந்த மெல்லிய தட்ப வெட்ப்ப வேறுபாடுகள் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களைச் சொன்னார்கள். அமெரிக்காவின் தக்காளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தக்காளிகள் கலிஃபோர்னியாவின் சமவெளி வயல்களில் விளைகின்றன. நெடுஞ்சாலை எண் 5ல் செல்லும் பொழுது பத்து நிமிடத்துக்கு இருபது தக்காளி வழியும் ராட்சச டிரக்குகளைக் காணலாம். தக்காளியில் இந்த நீள் வெப்பம் காரணமாக ஒரு வித புதுவிதமான புழு தோன்றி அழிப்பதாகச் சொன்னார்கள். கலிஃபோர்னியா ஒயின் உற்பத்திக்குப் பேர் போனது. இங்கு திராட்சை அதிகம் விளையும் ஒயின் மாவட்டம் முழுவதும் இந்த தொடர் கோடை ஒரு விதமான நோயையையும் விளைச்சல் குறைவையும் சுவை மாறுபாட்டையும் உருவாக்குவதாக கவலையடைந்தனர். வறட்சி காரணமாக பெரும்பாலான தோட்டங்களில் சொட்டு நீர் பாசனத்துக்கு மாறி விட்டிருக்கிறார்கள். சொட்டு நீர் பாசனத்தில் நீர் பெருகி ஓடாது. வேர்களில் மட்டுமே நீர் பாயும் அதனால் மண்ணில் அதிக நீர் ஓடாததன் காரணமாக மண்ணின் உப்புத் தன்மை அதிகரிப்பதாகவும் அது அனைத்து விளை பொருட்களின் உற்பத்தியையும் பெரும் அளவில் பாதிப்பதாகவும் குறை பட்டனர். இப்படி ஏராளமான பிரச்சினைகளை பருவ நிலை மாறுதலினாலும் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் கோடைக்காலத்தின் விளைவுகளாகவும் அனைவரும் கவலையுடன் அச்சப் பட்டனர்.

கலிஃபோர்னியாவின் அணைக்கட்டுகளில் அதிக நீரைச் சேமித்து வைக்க முடியாததற்கு மற்றொரு காரணத்தையும் சொன்னார்கள். அதிகரித்து வரும் வெப்பத்தினால் மெல்ல மெல்ல ஏறி வரும் கடல் நீரின் காரணமாக அதிக அளவு உப்பு நிலப் பகுதிக்கும் புகுந்து விடுவதாகவும் அதை உள்ளே தள்ள பெரும் அளவு நதி நீர் உள்ளே செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் சொன்னார்கள். நதி நீரையெல்லாம் கடலுக்கு அனுப்பாமல் உள்நாட்டுக்குள்ளேயே பயன் படுத்திக் கொள்ள முடியாது என்பதையும் விளக்கினார்கள்.

இப்படியாக நீண்டதொரு உரையாடல் தொடர்ந்தது. ஏராளமான விவசாயிகளும் பொது மக்களும் அழைத்து உரையாடினார்கள். நான் இன்னும் அந்த விவரணப் படத்தைப் பார்க்கவில்லை. அவசியம் பார்க்க வேண்டும். சரி, இங்கு எதற்காக நான் இதைச் சொல்ல வந்தேன்?........படம். ச.திருமலை
மதிய நேரத்தில் வெயில் தாங்காமல் ஆபீஸ் வாசலில் படுத்து ஹாயாக உறங்க வந்த நரி. யாரோ அதனிடம் இங்கு ஃபயர் ஃபாக்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள்   போலிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது நானும் சிலவற்றை உணர ஆரம்பித்திருப்பதை உணர்ந்தேன். அதற்கும் கோடை நீண்டதற்கும் தொடர்பு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக இங்கே பாம்புகளை அவ்வளவாகக் காண முடியாது. காட்டுப் பகுதிகளில் இருக்கும் பாம்புகள் கூட அவ்வளவாக வெளி வராது. ஜெயமோகன் இங்கு வந்திருந்த பொழுது நல்ல கோடைக்காலம் தான் அப்பொழுது கூட ஒரு சின்ன புழு பூச்சி கூட அவர் கண்களில் தட்டுப் படவில்லை. ஆனால் கடந்த இரு வருடங்களாக நான் பாம்புகளை அதிக அளவில் கண்டு வருகிறேன். சாதரணமாக அலுவலக வளாகத்தில் நடக்கும் பொழுது கூட பாம்புகளைக் கண்டு துள்ளித் தாவிக் கடப்பது இப்பொழுது சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. சென்ற வருடம் மத்தியானம் கையில் காப்பிக் கோப்பையுடன் அலுவலகக் கதவைத் திறந்து பின்னால் உள்ள பேட்டியோவுக்குச் சென்ற பொழுது அங்கு சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நரி ஒன்றின் மீது மிதிக்க இருந்தேன். பின்னர் நான் காமிரா கொண்டு வந்து போட்டோ எடுத்தது கூடத் தெரியாத ஆழ் உறக்கத்தில் அந்த நரி அங்கு கிடந்தது. வீட்டின் அருகே நடக்கும் பொழுதும் கூட அடிக்கடி பாம்புகளும் பிற மிருகங்களும் அதிக அளவில் தென்படுகின்றன. செப்டம்பர் 1 அன்று நானும் நண்பர் அருணகிரியும் ஒரு கடற்கரைக்குச் சென்றிருந்த பொழுது அனேகமாக அழிந்து போனதாக நினைத்து எண்டேஜர்ட் ஸ்பீஸிஸ் பட்டியலில் சேர்த்திருந்த ஒரு அரிய வகைப் பாம்பை நாங்கள் கண்டோம். அது நிதானமாக நின்று எங்கள் ஃபோட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்து விட்டுத்தான் சென்றது. ஒரு வேளை இந்த வெப்பத்தினால் குளிர்ச்சி தேடி அவை அதிகமாக வெளி வருகின்றனவா என்பதும் தெரியவில்லை. பாம்புகள் என்று மட்டும் அல்ல சாதரணமாக வீட்டுக்கருகே உலாவும் ஸ்கங்க் என்னும் மிருகமும் ராக்கூன் என்ற மிருகமும் அவ்வளவாக வெளி வருவதில்லை. இப்பொழுதெல்லாம் அவற்றின் பெருக்கம் அதிகரித்து விட்டது வீட்டுக்குள் நுழைவதற்கு அவை துணிந்து விட்டன.
skunk

நாஞ்சில் நாடன் வந்திருந்த பொழுது தினசரி இரவில் அவர் ஸ்கங்கையும், ராக்கூனையும் தரிசனம் செய்யாமல் அவர் உறங்கப் போவதில்லை. அவற்றின் மீது அவருக்கு அலாதியான காதல் பிறந்து விட்டது. ஒரு நாள் பார்க்காவிட்டாலும் என்ன இன்றைக்கு நம்ம ஸ்கங்க்கைக் காணோமே என்பார். அவருக்காகவே அவை அசைந்து அசைந்து ஃபேஷன் ஷோ அழகிகள் நடைமேடையில் நடப்பது போல உலா வந்து அவருக்கு ஹலோ சொல்லி விட்டுப் போயின. அவை நடக்கும் பொழுது அலை அலையாக எழும்பி எழும்பி நடந்து வரும். எலக்ட்ரோஸ்கோப்பில் வரும் சைனுசாய்டல் அலைகள் போல அவற்றின் நடை இருக்கும். ஒரு நாள் இரவு உறக்கம் வராமல் கண்ணாடி வழியாக எட்டிப் பார்க்க வீட்டு வாசலில் இருக்கும் நீச்சல் குளத்தின் நீல ஒளி பரவிய நீரில் இரண்டு ராக்கூன்கள் ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்தன. அருகே போயிருந்தால் பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா என்று இரண்டும் டூயட் பாடிக் கொண்டிருந்திருக்கலாம்


படம்: ச.திருமலை
அவற்றின் ஆனந்தமான நீராடலை நான் குலைத்து கண்ணாடிச் சன்னலை ஒதுக்கி விட்டு ஹலோ என்று குரல் கொடுத்து விட்டேன். அவ்வளவுதான் இரண்டும் அடித்துச் சுருட்டிக் கொண்டு கரையேறி டர்க்கி டவல் துணையில்லாமல் ஒரு சிலிர்ப்பில் நீரை உலுப்பி விட்டு வேக வேகமாக அலை நடை நடந்து என் வீட்டை நோக்கி வர ஆரம்பித்து விட்டன. நான் ஏதோ விருந்துக்கு அழைத்ததாக நினைத்து விட்டன போலும் நேராக வீட்டு வாசல் கதவில் வந்து நின்று கதவை உரச ஆரம்பித்து விட்டன. கதவைத் திறந்திருந்தால் சோபாவில் வந்து ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு டி வியில் நெட் ஃப்ளில்ஸில் ஏதாவது நல்ல படமாகப் போட்டு விட்டு எங்களுக்கு சாப்பாடு தயார் செய் என்று உத்தரவிட்டிருந்திருக்கலாம். நடு ராத்திரியில் இது ஏதடா வம்பு கதவைத் திறந்து விருந்தினரை உபசரிப்பத்து மனைவியிடம் திட்டு வாங்குவதா வேண்டாமா வாசல் வரை வந்த விருந்தினர்களை உபசரிக்காத விஷயம் ஜெயமோகனுக்குத் தெரிய வந்தால் அவர் வேறு கோபித்துக் கொள்வாரே என்ற கவலையில் தர்மசங்கட பண்பாட்டுச் சிக்கலுக்கு உள்ளானேன். சிறிது நேரம் காத்திருந்து விட்டு தமிழர் பண்பாடு காப்பாற்றாத என்னை திட்டிக் கொண்டே அவை சென்று விட்டன. என் மனைவியை எழுப்பி விஷயத்தைச் சொன்ன பொழுது இப்படித்தான் இணையத்திலும் கண்ட பேர்களிடம் வம்பு இழுத்துக் கொண்டு திட்டு வாங்குகிறீர்கள் என்று அவள் பங்க்குக்கு ரெண்டு திட்டு திட்டி வைத்தாள். ஆனால் இந்த ஸ்கங்க் என்ற மிருகம் ஒரு வித கெட்ட நாற்றம் ஏற்படுத்தும் திரவத்தை வேறு பீச்சி விட்டுப் போய் விடும் ஆனால் இணைய வசவு நாற்றத்திற்கு அது தேவலாம் என்றேன்.

ஆக இந்த மிருகங்களும், பாம்புகளும், பூச்சிகளும் பெருத்துப் போனது இயல்பானதா அல்லது பருவ நிலை மாற்றத்தினாலா என்று உறுதியாகத் தெரியவில்லை. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது மலை உச்சியில் கார் திக்கித் திணறி ஏறிக் கொண்டிருந்த பொழுது சாலையை அடைத்துக் கொண்டு சென்ற அந்த மிருகத்தை நான் இதுவரை கலிஃபோர்னியாவில் கண்டதேயில்லை. அந்தக் காட்டில் மலைச் சிங்கங்கள் உள்ளன. அவற்றைக் கண்டிருந்தால் கூட அவ்வளவு ஆச்சரியம் அடைந்திருக்க மாட்டேன். சாலையைக் கடந்து கொண்டிருந்ததோ ஒரு பெரிய மலைப் பாம்பு. அது மலையின் உச்சி சிகரம் அங்கு பாம்புகள் தென்படுவதில் ஆச்சரியமில்லை ஆனால் இத்தனை பெரிய பைத்தானை ஒத்த பாம்புதான் ஆச்சரியம் ஏற்படுத்தியது. ஒரு எட்டு அடி நீளமும் ஒரு ஜான் அகலமுகாக ஏதோ சீன ஓவியம் வரையப் பட்ட வழுவழுபான சீனப் பட்டினால் ஆன ஒரு திண்டு ஒன்று கடந்து கொண்டிருப்பதாக முதலில் தோன்றியது. 
படம்: ச. திருமலை


காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு இரு பக்கமும் விரைந்து கொண்டிருந்த கார்களை நிறுத்தினேன். மிகவும் பெருத்த அந்தப் பாம்பினால் விரைவாக நகர முடியவில்லை. நல்ல செமத்தியான நீளமான ஏதோ ஒரு இரையை உண்டு விட்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும் அல்லது சூல் கொண்டிருக்க வேண்டும். பொறுமையிழந்த காரோட்டிகள் சிலர் என் மீது கோபமாகி ஹார்ன்களை அழுத்த ஏற்பட்ட திடீர் சப்தத்தினால் கலவரமான அந்த வாசுகி அல்லது கார்கோடன் சற்றே பதட்டத்துடன் சாலையை வேகமாகக் கடக்க முயன்றது. பெரிய கடல் யானை தன் 3000 பவுண்டு உடலை இழுக்க முடியாமல் இழுத்து இழுத்து நகர்வது போல அந்தச் சீனத்துப் பட்டுத் திண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பெருத்த உடலுக்கு ஒவ்வாமல் சிறிய தலையைக் கொண்டிருந்தது. அதன் வேகத்துக்கு உடல் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வேகமாக நகர முடியாத அந்தப் பாம்பு மெதுவாகத் தலையைத் தூக்கி என்னை பரிதாபமாக ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்று விட்டது. எனக்கோ நாஞ்சில் நாடனின் வனம் நினைவுக்கு வந்தது. போ மோளே பதுக்கப் போ, எந்தக் கார் காரனும் என்னை மீறி வந்து விட மாட்டான் என்னை நசுக்காமல் உன்னை நசுக்க முடியாது தைரியமாச் செல்லுஎன்று அருகே போய் நின்றேன். பெருத்த பெருமூச்சுடன் மீதமிருந்த சில அடிகளை தன் உடலை இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டு கடந்து பத்திரமாக அடர்ந்த காட்டுக்குள் சென்ற பிறகு இரு பக்கமும் இருந்த கார்களைச் செல்ல வழி விட்டேன். என்னை பழித்துக் கொண்டு வேகமாகக் கடந்தார்கள்.
படம்: ச.திருமலை


கலிஃபோர்னியாவில் எங்கள் பகுதியில் இருப்பதாகப் பட்டியலிடப் பட்டுள்ள பாம்பு இன வகைகளில் இத்தனைப் பெரிய பாம்பை நான் கண்டதேயில்லை. ஒரு பெரிய மலைப்பாம்பை ஒத்திருந்தது. ஆனால் இங்கோ மலைப்பாம்பு வகையே கிடையாது. அப்படியானால் இதுவும் பருவ நிலை மாற்றத்தின் கோளாறுதானா? காலையில் ரேடியோவில் கேட்ட செய்தி நினைவுக்கு வந்து வயிற்றைக் கலக்கியது. இப்படியே போனால் அடுத்த வருடம் அமோசானில் வாழும் அனகோண்டா மலையேறி இங்கு வந்து விடுமோ என்று நினைத்த பொழுது தமிழ்ப் பத்திரிகைகளின் பாணியில் சொல்வதானால் நான் பீதியில் சற்று உறைந்து போய்தான் விட்டேன்.

கலிஃபோர்னியாவில் இருந்து
ச.திருமலை

Saturday, September 29, 2012

கீதோபதேசம் - வேள்வி செய்தோரின் நிலை என்ன?அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.


அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.


அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.


Wednesday, September 19, 2012

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!


நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

செல்லக் கடவுளாம் விநாயகர் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும் நன்மைகளும் உண்டாக அருள் புரிய வேண்டுமென பிரார்திக்கிறேன்!


Sunday, September 16, 2012

விரதங்களும் அதன் நன்மைகளும் - 2


மௌன விரதம் - மனதுக்கு மருந்து!

"வாயை மூடு!" என்று சில லொடலொடப்பைகளை நாம் கடிந்து கொள்வதுண்டு. பேசாமல் இருப்பது என்பது அவ்வளவு கஷ்டமான வேலையா?

ஆம். பேசாமல் இருக்க முடியாது. ஏதாவது காரணத்திற்காக, காரியத்திற்காக நாம் பேசிக்கொண்டே இருப்பது அவசியம். ஆனால் நாம் காரியத்திற்காகவோ அல்லது அவசியத்திற்காகவோ மட்டும் தான் பேசுகிறோமா? இல்லை.

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஏன் தூக்கத்தில் கூட ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். காரணம் பேசுவது என்பது வெறும் விஷயத்தை வார்த்தைகளால் பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்வாக இருப்பதில்லை. பேசுவதென்பது உணர்ச்சிகளின் வடிகாலாக இருக்கிறது. உணர்ச்சிகளின் உந்துதல் பேசினால் தீர்ந்துவிடுகிறது. கோபம், பாசம், காதல், காமம் என்று பல விஷயங்களை பேசித் தணிக்கும் குணம் நம்மிடயே இருக்கிறது.

உணர்ச்சியின் உந்துல் எண்ணங்களின் உற்பத்தியால் உண்டாகிறது. எண்ணங்கள் மனத்தில் தொடர்ந்து தோன்றுவது உணர்வுப்பூர்வமாக நம் மனதில் ஓர் உந்துதல் ஏற்படக் காரணமாகிறது. அந்த உந்துதலே எண்ணங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்தச் செய்கிறது. மௌன விரதத்தின் மூலம் வார்த்தைகள் வெளிப்படுவது முதலில் தடுக்கப் படுகிறது. அவ்வாறு வார்த்தைகளைப் பேசாத சூழலில் எண்ணங்கள் மட்டும் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும். அப்போது நம்மையறியாமல், அந்த எண்ணங்களின் மீது நாம் கவனத்தைச் செலுத்துகிறோம். அவற்றைப் புரிந்து கொள்ள முயல்கிறோம். பேச முடியாத சூழலில் எண்ணங்கள் தோன்றுவது நமக்கே ஒரு உபத்திரவமாக இருக்கத் துவங்கும். அதனால் எண்ணங்கள் உண்டாவதை நாமே தடுத்து நாம் அப்போது செய்து கொண்டிருக்கும் வேலையிலேயே முழுக்கவனத்தைச் செலுத்தத் துவங்குவோம். 

இதனால் நம் மனதில் எண்ணங்கள் உற்பத்தியாவது நம்மாலேயே தடுக்கப் படுகிறது. எப்போது நம் எண்ணங்களை நாம் கட்டுப்படுத்தத் துவங்குகிறோமோ அப்போதே நம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. விழித்திருக்கும் போதே தியானம் செய்யும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறோம். காரணம் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படாத சூழலில் மனம் ஒருநிலைப் பட்டிருக்கும். அதுவே தியானத்தின் முதல் படி. 

எண்ணங்கள் இல்லா மனது அலைகளில்லா ஆழ்கடல் போன்றது. அச்சூழலில் மட்டுமே ஆழ்மனம் விழித்திருக்கும். ஆழ்மனம் வெளிமனத்துடன் ஒன்றிச் செயலாற்ற சலனமற்ற மனமே உதவும். நல்ல நினைவாற்றால் பெருகவும் செய்யும் காரியங்களில் நேர்த்தி கிடைக்கவும் இந்த சலனமற்ற மனம் பயன்படும். 


அமைதியான மனத்துடன் நாம் இருக்கும் போது நம் சுவாசம் மிகவும் சீராக இருக்கும். சீரான சுவாசம் ரத்த ஓட்டத்தையும் சீராகக்கும். இதனால் ரத்தக் கொதிப்பு உண்டாகாமல் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க மௌனவிரதம் வகை செய்கிறது. பொதுவாக எல்லா வியாதிகளுமே சுவாசத்தின் சமச்சீர் குலைவிலிருந்து தான் துவங்குகிறது.

உடல் பாகங்கள் அனைத்திற்கும் சமமான அளவு மூச்சின் வேகமும் ரத்தத்தின் ஓட்டமும் தொடர்ந்து இருக்குமேயானால், உடல் பாகங்கள் அனைத்திற்கும் சீரான ஆக்ஸிஜன் கிடைக்கும். நரம்பு நாளங்கள் உயிர்ப்புடன் இருக்கும். அதனால் வியாதிகள் உண்டாவது குறைவுபடும். நம் சுவாசம் தான் ரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே சுவாசத்தை சீராக வைத்திருந்தால் ரத்த ஓட்டமும் சீராகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும். இவற்றை உணர்ந்தே பேசாமல் இருப்பதன் மூலமாக மனம் சலனமடைவதைத் தடுத்து உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் சுவாசத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீர்படச் செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதை ஒரு பயிற்சியாகவே மேற்கொண்டனர் நம் வீட்டுப் பெரியவர்கள்.


பள்ளிக்காலத்தில் எனது பாட்டி அமாவாசை தினமானால் மௌனவிரதம் இருப்பார். அதிகாலை எழுந்தது முதல் வீட்டு வேலைகளை வழக்கம் போலச் செய்து கொண்டே இருப்பார். ஆனால் அவர் யாரிடமும் பேச மாட்டார். யாரும் அவருடனும் பேசக்கூடாது. இதை கண்டிப்பாக கடைபிடிப்பார்.

பிள்ளைகளுக்கு தோசை வாத்துப் போடுவார். வழக்கமாக போதும் என்று கூறினால் 'இரு இன்னொன்னு சாப்பிடு" என்று கூறுபவர், மௌனவிரதம் இருக்கும் நாளில் 'போதும்' என்றால் ஆழ்ந்து ஒரு முறை பார்த்து விட்டு அடுத்த தோசைக்கு மாவு ஊற்றும் வேலையில் இறங்கிவிடுவார். கண்டுகொள்ள மாட்டார். காரணம் 'ஐயோ பிள்ளை  கொஞ்சமா சாப்பிடுதே' என்கிற உணர்ச்சிப் பெருக்கையெல்லாம் அவர் அன்று அடையமாட்டார். அதன் பொருட்டு பேசவும் மாட்டார். 

வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட முகம் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்பிற்காக தலை ஆட்டி விட்டு வேலையை பார்க்கத் துவங்கி விடுவார். வேறு பேசிருக்காது. வந்தவர்களிடம் பேசவில்லையே என்கிற பதட்டமும் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு நாள் துறவி தான். எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அன்றைய வேலையை முடித்து நிம்மதியாகத் தூங்கப் போய்விடுவார்.

இவ்வாறு இருப்பதை ஒரு பயிற்சியாகக் கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. அமைதி அடைகிறது. ஏதோ ஒரு சுதந்திர உணர்வுகிடைக்கிறது. ஆழ்மனம் ஆனந்தம் கொள்கிறது. பறவைகள் சப்தமிடுவதும், தூரத்தே பசுக்கள் கத்துவதும், கன்றுக்குட்டி ஓடி விளையாடுவதையும் மனத்தால் கவனிக்க முடிகிறது. மனம் ஒரு நிலைப்படும் போது நாம் உள்முகமாக நம்மை தரிசிக்கும் ஒரு வாய்ப்பு உண்டாகிறது.

தினசரி சச்சரவுகளைத் தாண்டி ஏதோ ஒன்றை நாம் அடையாமல் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றத் துவங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சச்சரவுகளற்ற வாழ்வை விரும்பத் துவங்குவோம். அமைதியான மனத்தின் காரணமாக குடும்பத்தில் எத்தகைய பிரச்சனை வந்தாலும் அமைதியைத் தரும் தீர்வு எது என்பதையே நாடுவோம். ஈகோ இறந்து போகும். ஆனந்தம் மட்டுமே நிலை கொள்ளும். இந்த இன்பத்தை அதே வழியில் அனுபவிக்கும் போது தான் உணர முடியும்.

எதற்காக மௌனத்தைப் பயிற்சியாகக் கொள்ள வேண்டும்?

'பஜகோவிந்தம்' பாடலில் ஆதிசங்கரர் இவ்வாறு எழுதுகிறார்:-

"பணம் சம்பாதிக்க முடிகிற காலம்வரை உன்னோடு அனைவரும் சேர்ந்திருப்பர் உடல்நடுங்கி ஆரோக்கியம் இல்லாத வயோதிகம் வந்த பின்னே உன்னைப் பார்த்துக் கொள்ளவோ உன்னோடு ஒருவார்த்தை பேசவேனும் யாரும் இருக்கப் போவதில்லைஎனவே கோவிந்த நாமம் பாடு மூடனே கோவிந்த நாமம் பாடு" என்பார் சங்கரர்.

ஆக வயோதிக காலத்தில் நாம் கண்டிப்பாக பேச ஆளில்லாமல் தனிமையில் இருப்போம். அத்தகைய சூழலில் பேசியே தீரவேண்டும் என்ற உந்துதலை தடுக்கவும் வயோதிகத்தை எதிர்கொள்ளவும் மௌனவிரதப் பயிற்சி பெரிதும் உதவுகிறது.

எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, மௌனமாக இருந்து மனதை அமைதியாக வைத்திருக்கவோ அறியாமல் வயோதிகத்தில் பாடு பட்டவர்களும் உண்டு.

எனக்கொரு அத்தைப் பாட்டி இருந்தார். அதாவது தாயாருக்கு அத்தை என்பதால் எனக்கு அத்தைப் பாட்டி. எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கிச் செல்வார். அவர் வந்து விட்டால் திரும்பிச் செல்லும் வரை வீடு வார்த்தைகளால் நிரம்பி வழியும். அவரால் தூங்கும் நேரம் தவிற மீத நேரத்தில் பேசாமல் இருக்க முடியாது. அவருடைய பேச்சுக்கள் பெரும்பாலும் உறவுகள் பற்றியதாகவே இருக்கும். யாருக்குக் குழந்தை பிறந்தது, யாருக்கு யார் வீட்டில் பெண்ணெடுத்தார்கள், அல்லது பெண்கொடுத்தார்கள், யார் குடும்பத்தில் என்னவெல்லாம் நடந்தது, சண்டை சச்சரவுகள் இத்யாதி இத்யாதி எனப் பேசிக்கொண்டே இருப்பார். பேசிக் கொண்டே இருப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதை விட பேசாமல் இருக்க முடியாது என்பதே சரி. பேசாமல் இருந்துவிட்டால், தான் தனிமைப்பட்டு விட்டதைப் போல உணர்வார். அதனால் எப்போதும் அவர் சப்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

வருடங்கள் பல ஓடின. அத்தைப் பாட்டி உடல் நடுங்கி ஆரோக்கியம் இல்லாத அந்த வயோதிகத்தை அடைந்தார்.

வாழ்க்கையின் ஓட்டத்தினால் உண்டான நீண்ட இடைவெளிக்குப் பிறகு வயதான அத்தைப் பாட்டியைப் பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

வீட்டின் கூடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்.

அருகே சென்று அமர்ந்தோம். சலனமே இல்லாமல் எங்களைப் பார்த்தார்.

"யார் நீங்க? என்னைத் தெரியுமா உங்களுக்கு?" என்றார். சற்றே அதிர்ந்தோம்.

'அம்மாக்கு ஞாபக சக்தி முன்ன மாதிரி இல்லை!' அவர் மகன்.

பிறகு என் தாயார் சுய அறிமுகம் செய்து கொண்டார்.

உடனே முகம் மலர்ந்தவர், 'அடடே நீயா? பிள்ளைகளோட வந்திருக்கியா?"என்று கேட்டுக் கொண்டே என்னைப் பார்த்தார்

"டேய், ராமா, நல்லாருக்கியா? எவ்வளோ நாளாச்சு..! எங்கூடப் பேசேன்! யாருமே எங்கூட பேசறதில்லை! கொஞ்ச நேரம் எங்கூட பேசிட்டிருங்களேன்...!" என்றார் மிகவும் ஏக்கத்துடன்.

சரியென்று என்று நானும் அத்தைப்பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு,

"என்ன பாட்டி, உங்க பேரன் அமெரிக்கா போயிட்டானாமே? போன்ல பேசறதுண்டா?" என்றேன்.

என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

"யார் நீங்க? என்னைத் தெரியுமா உங்களுக்கு?" என்றார்.

எத்தனை உறவுகள் இருக்குமோ அத்தனைக் குடும்பங்களையும் நினைவில் வைத்து வாழ்நாள் முழுதும் நிறுத்தாமல் பேசியே பழகியவருக்கு பேரப்பிள்ளைகளைக் கூட அடையாளம் காண முடியவில்லை. ஆனால் தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்கிற ஆதங்கம் மட்டும் நீங்காமல் அவருக்கு இருந்தது.

கொஞ்சம் மௌனத்தைக் கற்றுக் கொண்டிருந்தால் மனம் அமைதியாக இருந்திருக்கும். கடைசி காலத்தில் நிம்மதியாக இருந்திருக்கலாம்.

வயோதிகம் பற்றிய ஆதிசங்கரரின் வரிகள் நினைவுக்கு வந்தது.

ஓரிரு மாதங்கள் கழித்து தொலைபேசி அழைத்தது. அத்தைப் பாட்டி நிரந்தரமான அமைதியை தேடிச் சென்றுவிட்டார் என்று.

அப்பொழுது புரிந்தது.

மௌனம் விரதம் மட்டுமல்ல. அது ஒரு தவம்.

பெரியோர்கள் நமக்களித்த வாழ்க்கைப் பாடம்!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Saturday, September 15, 2012

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மீகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத் தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவின் பாரம்பரியமிக்க மகாத்மியத்தை அழிக்க நினைப்பவர்கள் தோல்வியையே தழுவுவார்கள்.

எனது அருமைச் சகோதரா! ஒரு பழைய விளக்கை எடுத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள், பட்டி தொட்டிகள், காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலை சிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு, பார்க்கலாம்.

நமது தாய்நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருகும் கடன் மகத்தானது. நாட்டுக்கு நாடு எடுத்துஒப்பிட்டுப் பார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருப்பதைப் போன்று, பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்.

கிரீஸ் நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரீகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக் கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரீகம் இருந்து வந்திருக்கிறது. ஏன், அதற்கும் முன்பேகூட வரலாற்றிலே குறிப்புகளே கண்டுபிடிக்க முடியாத, சரித்திரமே புக முடியாத, இருண்ட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் அன்புடனும் வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே இருந்துவந்திருக்கின்றன.

ஓர் முனிவர் தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையிலே வைத்திருந்தார். அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றித் தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி ஒரு கதையை நாம் குழந்தைகளாக இருந்த போது கேட்டிருக்கிறோம். அதே போன்றது தான் நம் நாட்டின் கதையும். நம் நாட்டின் உயிர் மதத்தில் தான் இருக்கிறது. இதை ஒருவராலும் அழித்துவிட முடியவில்லை. எனவே தான் பாரத நாடு எத்தனை எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

-- ஸ்வாமி விவேகானந்தர்