Saturday, October 31, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


கிணற்றுக்குள் விழுந்த வைர மோதிரம்!

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,"

என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர்.

"ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார்.

"பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

Sunday, October 25, 2009

உலக நீதி உலகநாதர்





எக்கல்வி கற்றாலும் தமிழ் கற்றோனே மனிதனாவான் என்னுமளவிற்கு தமிழ் மொழி ஒரு மனிதனை மனிதாக வாழவைக்க நிறைய பொக்கிஷத்தைக்
கொடுத்திருக்கிறது. வேறெந்த மொழிக் கல்வியிலும் இல்லாத மாபெரும் சிறப்பு நமக்கே உரித்தானது நாம் பெற்ற பாக்கியம் அல்லவா.


அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்.


ஒழுக்க நீதிகளை எடுத்துச்சொல்லும் உலக நீதி.  எழுதியவர் உலகநாதர் என்று சொல்லப்படுகிறது. தலைப்பிலேயே உலகில் மனிதனாகப் பிறந்த 
எல்லாருக்குமே பொருந்தும் நீதி இது என்பதை அற்புதமாக விளக்கியுள்ளார்.


உலகநாதர் 13 விருத்தங்களில் (அதாவது பத்திகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்) உலகியல் சார்ந்த நீதிகளை உலகநீதி என்னும் தம் நூலில் உரைக்கின்றார்.  நாத்திகம் பேசுவதுதான் தமிழனுக்கு அழகு என்ற ரீதியில் மக்களை இறையியலிலிருந்து பிரித்துச் செல்வோர் இருக்கும் 
இக்காலத்தவர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒவ்வொரு பாட்டும் முருகனை வாழ்த்தி முடிதல் இதன் தனிச்சிறப்பாகும். 


இறையியல் இல்லாமல் தமிழ் இருந்ததில்லை என்பதற்கு இது போன்ற பல இலக்கியச் சான்றுகள் உள்ளன.


விளக்கத் தேவையில்லாத எளிய வாக்கியமேயாகையால் அப்படியே சாப்பிடுங்கள்.


#1


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே


#2


நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#3


மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#4


குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே




#5


வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#6


வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே


#7


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே


#8


சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#9


மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#10


மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே


#11


அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே


#12


கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#13


ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!





அன்பான சகோதரர்களே! ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஆன்மீகதில் வைராக்கியம் இல்லாதவர்களால் மன அமைதியை உணர முடியாது. மனத்தில் பரிபூரண அமைதியுடன் கூடிய வைராக்கியமும் இல்லாவிடில் முக்தியை அடைய முடியாது.


நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களில் பெரிய யோகிகளான முனிவர்கல் இருப்பது போல், தேவர்களிலும் யோகிகள் உண்டு. நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். 


ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன.


அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் 'எங்கே செல்கிறீர்கள்? என்றான். ' நான் சொர்கத்திற்குச் செல்கிறேன்' என்றார் 


நாரதரி. 'அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும்' என்று கேட்டுக்கொண்டான் அவன்.


நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரிக் கண்டு , 'நாரதரே! எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான். நாரதரோ 'நான் சொர்கத்திற்குச் செல்கிறேன்' என்றார். 'அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி 


அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும்' என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.


சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், 'நாரதரே! என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா?' என்றான். ' ஆம் ' என்றார். நாரதர். 'பகவான் என்ன சொனார்?' என்று கேட்டான் அவன். 'நீ இன்னும் நான்கு 
பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார்' என்றார் நாரதர்.


அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி, 'என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன்' இன்னும் நான்கு பிறவிகளா?'. எல்லாம் வீனாகிப்போனதே!" என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான்.


நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். 'பகவானிடம் கேட்டீரா, நாரதரே?' என்றான் அவன். 'ஆம், கேட்டேன், அந்தப் புளியமரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான்' என்று நாரதர் கூறினார். 


அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே 'இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே!' என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது 'மகனே! இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன்' என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. 


அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது.


நாளை என்ற நிச்சயமற்ற தன்மைக்காக இன்றைய உயர்ந்த லட்சியத்தை விட்டுவிடாதீர்கள். அடுத்தப் பிறவியில் தானே முக்தி கிடைக்கிறது என்பதற்காக இந்த பிறவியில் அதை அடையும் நோக்கத்தை கைவிட்டு விடாதீர்கள். அதற்கான முயற்சியை இந்தப் பிறவியிலேயே துவங்கி விடுங்கள். இல்லையேல் அடுத்த பிறவியிலும் ஆன்மவிசாரத்தின் ஆரம்ப நிலையிலேயே நீங்கள் இருப்பீர்கள். பிறகு எத்தனைப் பிறவி எடுப்பினும் ஆத்ம முக்தி கைக்கெட்டாததாகவே போய்விடும். 


தியானம் செய்வதன் மூலமாக மன அமைதியை உணரவும் ஆத்மாவை உணரவும் பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இருபது நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். 


குறைந்தபட்சம் மனக்குவிப்பு பயிற்சியில் வைராக்கியம் கொண்டிருப்பவர்களே படிப்படியாக அடுத்த நிலைக்குச் செல்லமுடிந்தவர்களாவார்கள்.


- சுவாமி விவேகானந்தர்


  
 சுவாமி விவேகானந்தரின் அரிய புகைப்படம்.

Friday, October 23, 2009

சும்மா தெரிஞ்சுக்கங்க - டைப்பாஸ் நொருக்ஸ்




1. பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 6 மடங்கு அதிகமாக மின்னலால் பாதிக்கப்படுகின்றனர். 

- மின்னலே நீயுமா ஜொல்லுப்பார்ட்டி!

2. மாடுகளின் உரிமைக்காக சட்டம் கொண்டுள்ள நாடு இந்தியா 

     -  ஆம்பளைங்களுக்கு தான் இல்லை. மாடுகளுக்காவது இருந்திட்டுப் போட்டும்.

3. மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா 

     -  கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டீ...

4. மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ).

     -  பத்தாக்கொறைக்கு இந்தியாவும் வேணுமாமே!

5.  கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

     -  பொம்பளைங்க அறிவியல் அறிவோட தான்யா அழறாங்க.

6.  ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.

    -  ஆகா! இது தெரியாமல்ல பசங்க ஏமாந்து போறாங்க.

7.  விலங்குகளில் அதிக பற்கள் உடையது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்கும்.

    -  ஆகா! கவ்வினா அரைக்கிலோ போய்டுதே இதான் காரணமா??

8. பல் குத்தும் குச்சியை உலகிலேயே அமெரிக்கர்கள் தான் அதிகமாக 
பயன்படுத்துகின்றனர்.

     -  பின்ன, திங்கிறது தானெ அவங்க வேலை. உழைக்கிறது நம்மாளுங்க தானே!

9. வரிக்குதிரையின் நிறம் வெள்ளை தான். அதன் மீது கறுப்பு கோடுகள் 
உள்ளன.

    -  உலகத்திலேயே பழைய மிருகம். ஏன்னா அதுதானே ப்ளாக் அண்டு வைட்.

10. காலண்டர் முறையைக் முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எகிப்து.

     -  மவனே திங்கக்கிழமைய அவன் தான் கண்டுபிடிச்சானா?? அவன் மட்டும் கையில கிடைச்சான்.......

அவ்ளோதான்...மிச்சம் அப்பாலிக்கா...வர்ட்டா!

Wednesday, October 21, 2009

ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!


ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும், வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் சிறப்பான பாடல்கள் பல பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.

1. சங்க கால ஒளவையார்
2. பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.
3. சோழர் கால ஒளவையார்
4. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்
5. தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.

இப்பகுதியில் நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். இவர் எங்கே பிறந்தார் என்பதற்கு வரலாறில்லை. இவர் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடிய நாலு கோடிப்பாடல்கள் குறிப்பிடதக்கவையாகும்.

ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா...! என்று தருமியைப் போலப் புலம்பத் துவங்கி விட்டார்கள் புலவர்கள். எப்படிப் பாடுவது என அஞ்சினார்கள்.

அந்த வழியாக வந்த ஒளவையார், புலவர்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தார். புலவர்களோ "எப்படிச் சிக்கிருக்கோம் பார்த்தீங்களா??" என்று வடிவேலு ரேஞ்சுக்கு நடந்ததைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட ஒளவைப் பாட்டி "பூ இவ்வளவு தானா?" என்று சொல்லி 'சிறப்பான பண்புளைக்' குறிக்குமாறு நான்கு பாடல்களை ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம் எனப் பொருள் படும்படியாகப் பாடி அந்த நான்கு பாடல்களையும் புலவர்களிடம் தந்தார்.

மறுநாள் புலவர்கள் அந்தப் பாட்டை மன்னரிடம் பாடிக்காட்டினார்கள். மன்னனுக்கோ மிகவும் ஆச்சரியம். இத்தனைச் சிறப்பு வாய்ந்த பாடலை இவ்வளவு சமயோசிதமாகப் பாட ஒளவையாராலேயே முடியும் என்று கூற புலவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

பெருமகிழ்ச்சியடைந்த மன்னன் ஒளவைப்பாட்டியை அழைத்து அவருக்கு பெரு மரியாதை செய்து பரிசுகளும் கொடுத்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு.

விடிவதற்குள் பாடப்பட்ட அந்த நான்கு கோடிப்பாடல் என்னவென்று கேட்கிறீர்களா? இதோ கீழே:

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

(ஒளவையார் தனிப் பாடல்:42)


என்பதே அப்பாடல்.

இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

இப்படி நான்கு கோடிப்பாடலை எழுதியதால் ஒளவையார் சோழ மன்னனால் மிகவும் போற்றப்பட்டார்.

நம் கலாச்சாரத்தில் பெண்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை என்பதற்கும், ஆணோ பெண்ணோ அவரவர் பெற்ற ஞானத்திற்கும் அறிவுக்கும் தகுந்த மரியாதை எக்காலத்திற்கும் கிட்டும் என்பதற்கு ஒளவைப்பாட்டியே சான்று.

Sunday, October 18, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 9


விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! "யமுனை நதிக்கரையில் பிரம்மஸ்தலம் ஒன்று இருக்கிறது. அங்கே அக்னிஸ்வாமி என்ற பிராமனன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்கள் முழுமையும் அறிந்தவன். அவனுக்கு மந்தாரவதி என்னும் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள்.

படைத்த பிரம்மனே பார்த்து வியக்கும் அழகு கொண்ட அந்த பெண்ணை கண்டவர்களெல்லாம் காதல் கொள்வர். அத்தனை அழகு.

காலம் சென்றது. அவள் இளம் பருவத்தை அடைந்தாள். அவளுக்கு ஏற்ற படி எல்லா அம்சங்களும் நிறைந்த மூன்று பிராமன இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் அந்தப் பெண்ணைத் தனக்கே மணம் செய்து கொடுக்குமாறு அவளது தந்தையை வேண்டினர்.

அவளை வேறு யாருக்காவது கொடுத்தால் தன் உயிரையே விட்டுவிடுவதாக ஒவ்வொருவனும் கூறினான். ஒருவனுக்கு மணமுடித்தால் மற்ற இருவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற பயத்தில் அவளது தந்தை யாருக்கும் அவளை மணமுடிக்காமல் இருந்தான்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென நோய் தாக்கி படுக்கையில் விழுந்தாள். குனப்படுத்தவே முடியாமல் இறந்தும் போனாள்.

அவளையே நினைத்து வாழ்ந்து வந்த மூன்று இளைஞர்களும் மிகவும் மனவேதனையும் துக்கமும் அடைந்தனர். அவள் உடல் சுடுகாட்டில் தகணம் செய்யப்பட்டது. அம்மூவருள் ஒருவன் சுடுகாட்டிலேயே தங்கிவிட்டான். அவளது நினைவு மிகவும் வாட்டவே அந்தப் பெண்ணை தகணம் செய்த சாம்பலையே படுக்கையாக ஆக்கி அதிலேயே உறங்கி அங்கேயே தங்கத் துவங்கினான்.

மற்றொருவன் அவள் மூது கொண்ட பாசத்தால் அவளது அஸ்திகளை எடுத்துக் கொண்டு கங்கையில் கரைக்க போனான்.

மூன்றாமவனோ துக்கத்தால் துறவியாக மாறி தேசாந்தரம் போகத்துவங்கினான்.

இப்படி தேசாந்திரமாகத் திரிந்த மூன்றாமவன் ஒருநாள் ஒரு ரிஷியின் வீட்டில் சாப்பிடச் சென்றான். அந்த வீட்டில் அவனுக்கு மரியாதையான உபசரிப்புச் செய்து அவனுக்கு வயிரார உணவளித்தனர். அந்த நேரத்தில் அந்த ரிஷியின் வீட்டில் இருந்த குழந்தை விளையாடிக் கொண்டே அடுப்பில் இருந்த நெருப்புக்குள் விழுந்து விட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குழந்தை உடல் கருகி சாம்பலானது.

குழந்தையின் தாய் கதறி அழத்தொடங்கினாள். மூன்றாமவனோ செய்வதறியாது திகைத்தான். அப்போது ரிஷி இருவரையும் சமாதானப்படுத்தினார். "கவலை கொள்ளாதீர்கள்! நான் அவனை பிழைக்கவைத்து விடுவேன்" என்று கூறி சஞ்சீவி மத்திரம் அடங்கிய ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, மந்திரங்கள் சொன்னவாறே ஒரு பிடி மண் எடுத்து குழந்தை எரிந்த சாம்பல் மீது வீசினான்.

குழந்தை முன் இருந்தபடியே உயிர் பிழைத்து எழுதுந்தது.

இதனை பார்த்து அதிசயித்துப் போன துறவியாக இருக்கும் இளைஞன் தனது நேசம் மிக்க காதலியை நோய்க்கு கொடுத்துவிட்டு அவள் சாம்பலானதைப் பார்த்து துக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தான். அதனால் தனக்கும் இந்த மந்திரத்தைக் கற்றுத்தரும்படி இளைஞன் ரிஷியிடம் கேட்டுக்கொண்டான். அவன் மீது இரக்கப்பட்ட ரிஷியும் அவனுக்காக அந்த மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார்.

மந்திரங்களைக் கற்றுக்கொண்ட மூன்றாமவன் மந்தாரவதையை தகணம் செய்த இடத்திற்கு விரைந்து வந்தான். அங்கே மற்றவன் சாம்பல் மீதே படுத்துக் கொண்டு அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். மற்றவன் அவளது அஸ்தியைக் கரத்து விட்டு அப்போது தான் மயானத்திற்கு வந்திருந்தான்.

மந்திரங்களைக் கற்றுக்கொண்ட இளைஞன் நான் மந்தாரவதியை உயிர்பிக்கும் மந்திரம் வைத்திருக்கிறேன் என்றும் அவளை உயிருடன் வரவழைக்கிறேன் என்றும் கூறி சாம்பல் மீது இருந்தவனை விலகச் சொன்னான். இரு இளைஞர்களும் அவனுக்கு விலகி வழிவிட்டனர்.

இப்போது சில மந்திரங்களைச் சொல்லி ஒரு பிடி மண் எடுத்து மந்தாரவதியின் சாம்பலில் போட்டான் இளைஞன். எல்லோரும் வியக்கும் வண்ணம் மந்தாரவதி உயிருடன் எழுந்து
நின்றாள்.

அவளது அழகைக் கண்டு மூவரும் அவள் மிது தாள முடியாத மையல் கொண்டனர். மூவரும் தன்னைத்தான் இவள் மணக்க வேண்டும் என்றனர்.

"அவளை உயிர்பித்தவனோ என் மந்திரத்தால் தானே இவள் பிழைத்தாள் அதனால் இவள் எனக்குத்தான் சொந்தம்" என்றான்.

மற்றவனோ "அவளது அஸ்தியை கங்கையில் கரைத்து அவளது ஆத்மாவை ஜீவனுடன் வைத்திருந்தது நான் தான் அதனால் அவள் எனக்குத் தான் சொந்தம்" என்றான்.

இன்னொருவன் "அவளது சாம்பலிலேயே படுத்துறங்கி அதை பத்திரமாக பாதுகாத்ததால் தானே அவளை உங்களால் உயிர்ப்பிக்க முடிந்தது எனவே, அவள் எனக்கே சொந்தம்" என்றான்.

இப்போது கதையை நிறுத்தி விட்டு வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது "விக்கிரமாதித்தா! இந்தப் பேரழகி மந்தாரவதி யாரை மணக்க வேண்டும் என்று நீ சரியான தீர்ப்பைச் சொல்" விடை தெரிந்து வாய் திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து விடும் நினைவில் கொள் என்றது.

விக்கிரமாதித்தன் பேசலானான். "எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் மந்திர வலிமையால் அவளைப் பிழைக்கச் செய்தவன் உயிரி கொடுத்தவன் என்ற முறையில் அவளுக்கு தந்தையாவான். எலும்புகளைக் கொண்டு சென்று கங்கையில் கரைத்தவன் ஈமக்கடன் செய்த மகனாவான். அவள் மீது கொண்டுள்ள ஆசையால் அவன் சாம்பலை விட்டுப் பிரியாமல் மயானத்திலேயே தங்கித் தபசு செய்து அதனைத் தழுவிக் கிடந்தவனே அவள் புருஷனாவான்!" என்றான்.

இதனைக் கேட்ட வேதாளம் மிகச் சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா. ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் உன்னை விட்டுப் போகிறேன். இதோ பார்...இப்பொழுது முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விக்கிரமாதித்தன் பிடியிலிருந்து தப்பி மீண்டும் குகையை நோக்கிப் பறந்தது வேதாளம்.

Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


மங்களம் பொங்கும் தீப ஒளித்திருநாள் எல்லோர் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் நாளாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!





Wednesday, October 14, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


குளிரில் நின்றால் பரிசு

ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.

அக்பர் பீர்பாலை பார்த்து " பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா... எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்" என்றார்.

"அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?" என்றார் பீர்பால்.

"யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்" என்றார் அக்பர்.

அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து " அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து "இன்று இரவு போட்டிக்கு தயாராகு" என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார்.

யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள்.

அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. "இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் "அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்" என்றான்.

"இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது" என்றார்.

பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார்.

பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார்.

"பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அக்பர்.
"அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்" பீர்பால்.

"உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?" என்றார் அக்பர் கோபத்துடன்.

"அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?' என்றார் பீர்பால்.

மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து... முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.

Sunday, October 4, 2009

கலாச்சாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்! - 2

தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

இவ்வாறு பெரியோர்களால் வகுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் நம் சமூக மக்கள் சிறந்த கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்தனர். வள்ளுவர் இப்படி ராவாக சொல்லியிருக்கும் விஷயங்களை மனதில் பதியும் மசாலாக்களுடன் கூடிய கதைகளாச் சொல்லியும் இதிகாசங்கள் மூலமும் மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்கின்றனர் நம் முன்னோர்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டுவரும் இதிகாசமே ராமாயணம்.

மனிதர்கள் மத்தியில் நடக்கும் குற்றங்கள் பெண்ணுக்காக அல்லது பொருளுக்காக மட்டுமே நடக்கிறது. இதை மீறி குற்றங்களுக்கு வேறு காரணங்களை பொதுவாக பார்க்க முடியாது. மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் இவ்விரு உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

பிறன் மனைவி நோக்காப் பேராண்மையாளனாக ராமனையும், கற்புக்குச் சிறந்தவளாக சீதையும் கதாநாயகன் கதாநாயகியாக நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தோர்களாக எடுத்துச் சொல்லி அது போல் வாழவேண்டும் என்று மக்கள் மனதில் ஆழப்பதியச் செய்கின்றனர். தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.

இப்படி தங்களை பாதிக்கும் கதாநாயகனும் நாயகியும் ஏக பத்தினி விரதத்தைக் கொண்டவனாக இருந்தால், கதாநாயகி கற்புக்கரசியாக காட்சியளித்தால் இவர்களை உதாரணமாக வைத்து தாமும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டாவார்கள். ராமனைப் போல ஆண்களும் சீதையைப் போல பெண்களும் வாழ்வதே சிறந்த உயர்ந்த வாழ்க்கை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. கேட்பவர்களும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக தானும் இருக்கவேண்டும் என்ற உத்வேகம் கொள்வார்கள்.

ராமாயணத்திலிருந்து சில துளிகளை இப்போது பார்க்கலாம்...


சீதையை அடைய பல முயற்சிகள் செய்யும் ராவணனிடம் ஒரு யோசனை சொல்லப்பட்டது. நீ ராமனாகவே சென்று அவள் முன் நின்றால் அவள் ஏமாந்து உன்னிடம் வந்து விடுவாள் என்றார்கள். அதற்கு ராவணன் சொன்னான் "எவ்வளவோ செய்த எனக்கு இதைச் செய்ய முடியாதா? நானும் ராமனாக உருமாறிப்பார்த்தேன். ஆனால் நான் எப்போது ராமனாக மாறினேனோ அப்போதே அடுத்தவர் மனைவிமீது ஆசைப்படும் எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எனக்கு சீதை மீது ஆசையே வரவில்லையே! நான் என்ன செய்ய?" என்று புலம்பினான்.

அதாவது பிறன் மனை நோக்கும் இச்சை கொண்டவனே ராமனாக ஆனவுடன் அந்த ஆசை அற்றுப் போனது என்று சொல்லுமளவிற்கு ராமனின் ஏக பத்தினி விரதம் போற்றிச் சொல்லப்பட்டது. அவ்வாறு வாழ்வதே ஆண்களுக்குச் சிறப்பு என்றும் போதிக்கப் பட்டது. பின்னால் நாகரீகத்தைப் போற்றியவர்கள் என்ன செய்தார்கள்? ராமாயணம் மூட நம்பிக்கை என்றார்கள். ராமன் இன்ஜினியரா? அவன் தான் பாலம் கட்டினானா? என்றார்கள்.

ராமாயனத்திற்கு ஆதாரம் இல்லை என்று அறிவியல் கொண்டு ஆனியடித்தார்கள். இப்படி சிதைத்தவர்கள் ராம நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. அவர்கள் சிதைக்க முயற்சித்தது ராமனாக வாழ முடியும் என்கிற கலாச்சார நம்பிக்கையை. இப்படி நாகரீகம் கலாச்சாரத்தின் அடிமரத்தை வெட்டிக்கொண்டே இருந்தது. மேலை நாட்டு நாகரீகமே சிறந்தது என்றும் பெருமை பேசப்பட்டது.

கமலஹாஸன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று சொல்லவில்லை அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார். இவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் இவர் பேசுவது மலை மேல் நின்று பேசுவது போல் பரவும் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் மேலை நாட்டு நாகரீகத்தை இவர்கள் பரப்பி இந்திய கலாச்சாரத்தை முட்டாள் தனம் என்று தூற்றுவதை நிறுத்து வதில்லை.

ராமாயனத்தில் பெண்ணின் உயர்வைக்காட்டும் இன்னொரு இடம்..

காட்டில் சீதைக்காக மான் பிடிக்கச் சென்ற ராமன் வெகுநாரம் ஆகியும் திரும்பவில்லை. சீதை கவலையில் ஆழ்ந்தாள். அப்போது மாரீச்சனின் கபடக்குரல் ராமனின் குரலாகக் கேட்டது. "லக்ஷ்மனா...காப்பாற்று...!! லக்ஷ்மனா...காப்பாற்று...!!" என்று. இந்தக் குரலைக் கேட்ட சீதை கலங்கினாள்.

தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறினாள். உடனே சீதை லக்ஷனனைப் பார்த்து என்னவென்று கண்டுவரச் சொன்னாள். ஆனால் லஷ்மனனோ "அபயக்குரல் எழுப்பும் அளவிற்கு அண்ணன் ராமன் கோழையல்ல. அப்படி ஒரு ஆபத்து தன் அண்ணனைச் சூழப்போவதும் இல்லை அதனால் கலங்காமல் இருங்கள் என்று தாய் சீதையிடம் எடுத்துரைக்கிறார். தாயே என்று கூறி அழைக்கும் லக்ஷ்மனனை சீதை கோபமாகப் பார்க்கிறாள். "என் கணவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், நீ என்னை அடையலாம் என்று எண்ணுகிறாயா?" என்று சற்றும் எதிர் பார்க்காத வகையில் கேட்டுவிட லக்ஷ்மனன் உடனே ராமனைத் தேடி புறப்பட்டு விடுகிறான். பிறகு நடந்த கடத்தல் கதை நமக்குத் தெரியும்.

ஆனால் இங்கே உணர்த்தப்படுவது என்ன? கணவர் இல்லாத போது உடனிருப்பது அவரது தம்பியாக இருந்தாலும் அவன் நல்லவனாகவே இருந்தாலும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஒரு பெண்ணின் முதல் நினைவாக இருக்கவேண்டும் என்பதும் அதுவே தனது கணவனுக்கு உண்மையாக இருப்பதாகும் என்பதும் உணர்த்தப்படுகிறது. Perception என்று சொல்வார்களே அதுதான்.

நாகரீகம் என்ற மாயத்தோற்றத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்தக்காலத்தில் அப்படி Perception னுடன் நடந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற நாகரீகம் இன்று கணவனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது. படுக்கை அரையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வித்தியாசமில்லை என்னுமளவிற்கு எல்லோருடனும் பெண்கள் ஒரே மாதிரியாகப் பழகுவதை சகஜமாகவே பார்க்க முடிகிறது. நாகரீகம் என்ற பெயரில் சீதையாக வாழ்வது பழம்பஞ்சாங்க நிலையென எள்ளி நகையாடப்படுகிறது. இந்த நிலை தான் தவறான உறவுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

பெண்களும் தன்னுடன் பழகும் ஆண்களில் யாருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் சீதைக்கு இருந்த அந்த Perception இல்லாமல் பழகி தவறான உறவில் விழுந்து விடுகின்றனர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்பது நீண்டநாள் நீடிக்காது. காதல் அல்லது காமத்தில் விழாமல் ஆணும் பெண்ணும் பழக முடியாது என்பதே உண்மை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதே வேலையாகக் கொண்ட பலர் இந்த நட்பு நாகரீகத்தைப் பரப்பினார்கள். திரைப்படங்களும் ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியும் என்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து பணம் சம்பாதித்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கலாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றனர். பூனையும் எலியும் ஒன்றாய் உறங்கலாம் பூனை எலியைக் கடிக்காது என்றனர்.


பெற்றோராக இருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் இதை அப்படியே நம்பி விட்டார்கள். இதனால் தன் வீட்டுப் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் மணிக்கனக்கில் தொலைபேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதை தவறு என்று சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் புழு பூச்சி போல பார்க்கப்பட்டனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகளாக கண்டிக்கப்பட்டனர். பெண்ணை அடிமைப்படுத்துவதாக சித்தரித்தனர். போதாக்குறைக்கு பெண்ணியம் என்ற பூதம் வேறு கிளம்பி கலாச்சார கட்டுக்கோப்பை புரட்டிப்போட்டது. இந்த பெண்ணிய பூதத்தால் சமூக கட்டுபாடுகள் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. தான் செய்வதெல்லாம் சரி, ஆண் செய்வது மட்டும் தான் தவறு என்பது பெண்ணிய சித்தாந்தம்.

ஆண்களின் நிலைமை அதுவும் கணவன்மார்களின் நிலைமை மிகவும் பரித்தாபத்திற்குரிய்தாக மாறிப்போனது. தனக்கென்று ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அவளை தனக்காக தக்கவைத்துக் கொள்வதற்குள் போதும் போதும் என்றானது ஆண்மகனுக்கு. வேறு ஆண்மகனிடம் மனைவி எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் யார் அவன் என்ற கேள்வியைக் கேட்கவே பயப்படும் ஆண்கள் தான் பலர். எங்கே தான் சந்தேகப்படுவதாக பெண்டாட்டி நினைத்துவிட்டால் குடும்ப உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. மீறி கேள்வி கேட்டு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? இதையெல்லாம் அலுவலகத்திலேயே பேசி முடித்துவிட வேண்டியது தானே என்று கேட்டுவிட்டால் போதும். அன்று முதல் அவனுக்கு வீட்டில் மரியாதை போச்சு. நாகரீகத்தின் விளைவு.

அதுமட்டுமா? பெண்ணியப் பேச்சாளர்கள் கற்பு என்ன கடைச்சரக்கா? என்னவிலை என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி விமர்சித்து கண்டனங்கள் எதிர்கொண்டதும் நமக்குத் தெரிந்ததே.
அதுமட்டுமா? உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பை குஷ்பு
வரவேற்றார். இவர்களைப் போன்றவர்கள் தறிகெட்ட வாழ்க்கைக்கு அச்சாரம்
தேடி அலைகிறார்கள் அல்லது அடுத்த தலைமுறையை சீரழிவுப்பாதைக்கு தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சினிமாக்களிலும் சீரியல்களிலும் சந்தேகப்படும் ஆண்கள் அவமானப் படுத்தப்படுவார்கள். "சீ, கட்டின பொண்டாட்டியை சந்தேகப்படுகிறாயே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா" என்று வசனம் வைப்பார்கள். பின்ன பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியையா சந்தேகப்பட முடியும்? ஒரு பெண்ணுக்கு மூன்று நான்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய நாகரீகப் பெண்களின் நிலையாக ஆகிப்போனது. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்ய மறந்து விட்டனர். மாறாக ஆணோடு ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது.

பொது இடங்களில் ஆண்களுக்கும் மனக்கட்டுப்பாடு கட்டாயம் தேவை. அலுவலகத்திலோ அல்லது பிற இடங்களிலோ திருமணமான பெண்ணிடம் பேசுகிறோம் என்று தெரிந்தும் தேவையில்லாமல் வலிய போய் சிரித்து பேசி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது.
தனக்கு உரிமை இல்லாத அதுவும் மணமான பெண்களின் உடை மற்றும் அழகை வர்ணித்தோ அல்லது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலோ பேசுவது நாகரீகமற்ற செயல் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ராமனைப் போல வாழ்வதின் சிறப்பை மனதில் ஆழ்ப் பதிந்து கொள்ள வேண்டும்.
மணமான பெண்ணிடம் வழியும் ஆண்கள் தன் மனைவியிடம் வேறொருவர் அவ்வாறு நடந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்து வேறொரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்பதை கண்டிப்பாக மனதில் வைத்து விலகியிருக்க வேண்டும்


தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த ஆண்பெண் நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்.

1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.

2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினேன், என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.

3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.

4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.

5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.

6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவரின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

7. உடல் அங்கங்களை அப்பட்டமாகக் காட்டும் இறுக்கமான ஆடைகளை குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ஒரு பெண் அணிந்துகொண்டு அலுவலகங்களுக்குச் செல்வது மற்ற ஆண்களைக் கவர்ந்திழுக்கவே வழி செய்யும். அந்தப் பெண் இரு குழந்தைக்குத் தாய் என்ற எண்ணம் வராது. அதனால் மரியாதையை ஏற்படுத்தும் வகையிலான ஆடைகளையே அணிய வேண்டும். இன்றைய நாகரீகப் பெண்கள் இவற்றைச் கவனிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதால் தவறிழைக்க நினைக்கும் பெண்களுக்கு அதுவே உடலுறவுச் சுதந்திரத்தைக் கொடுத்து விடுகிறது. காமத்தைத் தேடத்துவங்கும் வாலிபர்களுக்கும் நடுத்தர அல்லது வயோதிகப் பெண்களுக்கும் இடையிலான முறையற்ற உறவுகள் பற்றிய செய்திகளே அதிகம் காணப்படுகிறது. செய்திகளில் கண்டது ஒரு சோறு பதம் என்ற நிலையே. எனவே கையில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அதைக் குடும்பத்திற்க்காக மட்டுமே என்று காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு பெண்களுடையது தான் என்பதை பெண்கள் தான் நினைவில் கொள்ள வேண்டும். கணவன் பெண்டாட்டியைக் காப்பாற்றிக் கொள்ளும் வேலையையே செய்யவேண்டியிருந்தால் அவன் பணம் சம்பாதிப்பது எப்படி.

கணவன் இல்லாத நேரத்தில் சபலம் கொள்ளும் பெண்களே, உங்கள் கணவன்மார்கள் உங்களைக் காக்கும் பொருட்டே வீட்டிற்கு வெளியே உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஒரு கனம் நினையுங்கள்.

அப்படியானால் ஆண்கள் ராமனாக இருக்கமாட்டார்கள், பெண்கள் மட்டும் சீதையாகவே இருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சுருக்கமாக ஒன்றைச் சொல்ல முடியும். இன்றைய இந்திய பீனல் கோட் இருக்கிறதே அது பெண்களுக்காகத்தானே ஒழிய ஆண்களுக்காக இல்லை.

பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது.

ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ இரட்டை அர்த்த தொனியில் பேசினாலோ பெண்கள் உடனே (உண்மையாக) கண்டித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு ஆண் செல்வதை தடுக்க முடியும். அந்த வகைப் பேச்சுக்களுக்கு ஆசைப்பட்டு சீ, போ என்றெல்லாம் குழைந்தால் சிக்கிட்டாடா சீமாட்டி என்று அடுத்த அடியை எடுத்து வைக்க எந்த ஆணும் தயங்க மாட்டான்.

அதையும் மீறி துன்புறுத்துபவனா?, சமூக அச்சம் இல்லாமல் துனிகிறானா? இருக்கவே இருக்கு காவல் துறை லாடம் கட்ட.

இப்படி எல்லா விதமான பாதுகாப்பையும் சட்டதின் மூலம் செய்து கொடுத்த பின்னும் ஆண் நண்பர்கள் என்ற பெயரில் கணவனின் கண்ணில் மன்னைத்தூவி செல்லும் பெண்ணே பின்னாட்களில் செய்திப்படங்களாகிறார்கள் என்பது உறுதி. நாகரீகத்தின் உச்சம் செய்தித் தாள்களில் சிரிக்கிறது?

சமீபத்தில் சிரித்த அனந்த லட்சுமி கொலைவழக்கைப் பாருங்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இப்படி நிகழும் என்று? அந்தப் பெண் நள்ளிரவில் மணிக்கணக்கில் கணவர் அல்லாதானிடம் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகி யிருக்கிறது. விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் அந்தப் பெண்ணா? அப்படியா? என்றே கேட்டிருப்பார்கள். காரணம் ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று வெளியே பழகத்துவங்கியது, பின் அடி மேல் அடிவைத்து நள்ளிறவு அரட்டையாக மாறியிருக்கிறது.

சீதையைப் போல் Perception அதாவது தவறு நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வு அந்தப்பெண்ணுக்கு கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா? விளைவு குடும்ப மானம் நாளிதழ்களில் பல்லைக்காட்டியது.

எச்சரிக்கை:

உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இரவு எட்டு மணிக்கு மேல் கூட ஆண்கள் தொலைபேசியில் அழைக்கிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண்கள் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத ஆண்களுடன் தொலைபேசியில் அரைமணி நேரம் பேசுகிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண்கள் அதிகநேரம் பேசுகிறார்கள் ஆனால் யாருடன் என்பதை சொல்லும் போது சமாளிக்கிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண் ஏதேனும் ஆபத்தை எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடும்.

ஜாக்கிரதை. உங்கள் குடும்ப மானத்திற்கு சிரிப்பு மூட்ட நாளிதழ்கள் காத்திருக்கின்றன.

கலாச்சாரத்தைக் கட்டிக்காப்போம், குடும்பத்தைக் காப்போம்.