Sunday, June 27, 2010

மரணத்திற்கு அப்பால் - 15
"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்."

பொதுவாக தியானம் எனப்படுவது புலன்களை உள்நோக்கி செலுத்துவது என்பார்கள். பார்த்தலையும், கேட்டலையும், முகர்வதையும், சுவையறிதலையும் இந்த உடலின் உள்நோக்கி செலுத்த முயற்சித்தால், அதில் ஒருவர் வெற்றியடைந்தால் அவரே ஆன்மாவை தரிசனம் செய்ய முடிபவர் ஆகிறார் என்கிறார் எமதர்மன். இதற்கு முதல் படி புலன்களை நாம் நினைக்கும் இடத்திற்கு செலுத்த நாம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான பயிற்சிக்கு தியானம் உதவுகிறது.

உதாரணமாக ஒரு துறவியிடம் ஒருவர் தியானம் கற்க வந்தார். அவரிடம் அந்தத் துறவி "காட்டுக்குள் அமைதியாக அமர்ந்து அங்கே நீ என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றை என்னிடம் வந்து சொல்" என்று கூறி அனுப்பினார். தியானம் கற்க வந்த அந்த நபரும் அடர்ந்த காட்டுக்குள் சென்று அமர்ந்தார். ஓரிரு நாட்களில் மீண்டும் துறவியிடம் வந்து "காட்டுக்குள்ளே பறவைகளின் சப்தங்களைக் கேட்டேன், மிருகங்களின் கர்ஜனைகளைக் கேட்டேன், பறவைகளின் இறைச்சலைக் கேட்டேன், மரம் செடிகொடிகள் மற்றும் சறுகுகள் காற்றில் ஆடுவதன் சப்தத்தைக் கேட்டேன்" என்கிறார்.

துறவியோ, "நீ தியானம் செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை. மனதை இன்னும் ஒரு நிலைப்படுத்தி இன்னும் அமைதியாக இன்னும் புதியனவாக என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றைச் சொல்" என்கிறார். மீண்டும் காட்டுக்குள் போய் அமர்ந்து புலன்களை கூர்மையாக்கி சூழலை உணரத் துவங்குகிறார் அந்த சீடர். சில நாட்களுக்குப் பின் துறவியிடம் திரும்பி வந்து "ஐயா! தூரத்தில் அருவித் தண்ணீர் கீழே விழும் சப்தத்தைக் கேட்டேன். காற்றி கிளைகளுக்கிடையே ஓடிடும் சப்தத்தைக் கேட்டேன். எறும்புகள் ஊறும் சப்தத்தைக் கேட்டேன், மொட்டுக்கள் மலர்ந்திடும் சப்தம் கேட்டேன்" என்கிறார்.

துறவியோ இது போதாது மீண்டும் செல் என்கிறார். மீண்டும் சென்று பல நாட்கள் கழித்து திரும்பி வந்தவர் "இத்தனை நாள் காதில் கேட்க முடியாத மிகச்சிறிய சப்தங்களைக் கூட கேட்க முடிந்த நான் இந்த முறை எதையுமே கேட்கவில்லை. மனம் லயித்த நிலையில் என்னுள்ளேயே நான் இருந்து விட்டேன். என்னால் என் சூழலை உணரக்கூட முடியவில்லை. நான் முழுமையான நிசப்தத்தையே உணர்ந்தேன்" என்கிறார். துறவி கூறினார் "நீ தியானம் கற்றுக்கொண்டாய், இனி இதைத் தொடர்ந்து செய்துவா, உன்னை நீயே தரிசிப்பாய்" என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

இவ்வாறு புலன்களை ஒரு இலக்கை அடையும் நோக்கோடு, இலக்கை நோக்கிச் செலுத்தும் பயிற்சியை மேற்கொள்ளும் போது அது தானாகவே நம் மனதுள் அடங்கும் என்பதை விவரிக்கிறது இந்தக்கதை. இவ்வாறு புலன்களை யார் உள்நோக்கிச் செலுத்திகிறாரோ அவரே ஆன்மாவை தரிசிக்கிறார் என்கிறார் எமதர்மன்.

எமதர்மன் மேலும் தொடர்கிறார், "நசிகேதா! பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குடையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்"

"கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பது போல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்."
அரணிக்கட்டை என்பது நெருப்பை பற்ற வைக்க உதவும் ஒரு மரப்பொருள். அரணிக்கட்டைகள் இரண்டை எடுத்து ஒன்றாக உரசும் போது அதிலிருந்து அக்னி வெளிப்படும். யாக குண்டத்தில் தீமூட்ட இந்த கட்டைகளை பயன்படுத்துவார்கள். எமதர்மன் ஆன்மா ஒரு மனிதருக்குள்ளே எப்படி உரைந்திருக்கிறது என்பதை இந்த அரணிக்கட்டையை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார். அரணிக்கட்டையை உரசும் போது அக்கினி தோன்றுகிறது. அதாவது அரணிக்கட்டைக்குள்ளே அக்னி கருப்பொருளாக உரைந்து இருக்கிறது. இரு கட்டைகளை உரசும்போது அது வெளியே வருகின்றது. அல்லாமல் அந்த மரத்துக்குள் அக்னி இருப்பதை கண்ணால் பார்க்க முடியாது. அதைப்போலவே நமக்குள்ளே உரைந்திருக்கும் அக்னி போன்றதே ஆன்மா என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே."

"யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ" என்று எமதர்மன் கூறுவதிலிருந்தே இறைவன் எனப்படுவது பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்திருக்கும் ஒருவகை சக்தி என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆக அளப்பறிய பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எதுவோ அதுவே இறை சக்தி எனக் கொள்க. பிரபஞ்சத்தின் சக்தியால் தான் பூமியின் சுழற்சியும் அதன் மாற்றங்களும் உண்டாகிறது. பூமியின் அந்த மாற்றங்களால் தான் நம் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. இவ்வாறு பிரபஞ்ச சக்தியை மீறி தனியாக எதுவும் நிகழ்வதில்லை என்பதையும் அத்தகைய பிரபஞ்சத்தின் சக்தியாக எதை நம்மால் ஊகிக்க முடிகிறதோ அதுவே நம்முள்ளில் இருக்கும் ஆன்மா என்று விளக்குகிறார்.

"நசிகேதா! இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்."

"அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை" என்பதை சித்தர்கள் மொழியாகக் கூறுவார்கள். அதைத்தன் உபநிஷத்தின் மூலமாக எமதர்மனும் விளக்குகிறார். நமது அறிவால் அளக்க முடியாத மிகப்பெரிய சக்தியான சூரியன், பூமி மற்றும் கால அளவைகளில் அடங்காத மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள் இருக்கும் சக்தி. அதன் பெயரே ஆன்மா என்று எமதர்மன் கூறுகிறார். அதையே இன்னும் விளக்கி நம்முள் என்ன சக்தி இருக்கிறதோ, நம்முள் இருக்கும் ஆன்மாவின் சக்தி எதுவோ அதுவே பிரபஞ்சத்தின் சக்தியாகும். பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது. இதை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் தான் தனக்குள்ளே ப்ரபஞ்சத்தின் முழுமை இருப்பதை உணர்வார்கள். அவர்களே நிரந்தரமான அந்த சக்தியோடு கலக்கிறார்கள் என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்"

"இறைவனுக்குப் பிரியமானவனே! எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே. புகையற்ற ஒளி போல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே, நீ கேட்ட பொருளும் அவரே!"ஆன்மாவை புகையில்லாத ஒரு தீபம் எப்படி நிலைத்தெரியும் ஒரு வடிவத்தைக் கொண்டதோ அத்தகைய வடிவமாக இதய மையத்தில் நிலைத்திருக்கும் சக்தியாக எமதர்மன் கூறுகிறார். இதயக்குகை என்பது எது...? உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயமா என்றால் இல்லை. அது இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது. அதை உணர்பவர் ஆன்மாவை உணர்பவராகிறார் என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்"

ப்ரபஞ்சத்தின் நிலையான சக்தி எதுவோ அதுவே ஆன்மாவின் சக்தி என்பதை புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சம் வேறு, நான் வேறு என்று நினைப்பவர்கள், நிலையாக இருக்கும் அந்த சக்தி வேறு நான் என்ற நினைப்பவர்கள் நிரந்தரமான சக்தியுடன் ஐக்கியம் ஆகாமல் மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள்.

"நசிகேதா! தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்"

தண்ணீர் கடலில் இருந்தாலும், கிணற்றில் இருந்தலும், குளத்தில் இருந்தாலும் அது தண்ணீர் தான். எந்த பாத்திரத்தில் இருந்தாலும் தண்ணீரின் இயல்பு ஒன்றாகவே இருக்கிறது. அது போலவே பிரபஞ்சத்தின் சக்தியும் நம்முள் இருக்கும் ஆன்மாவும் ஒன்றே. அதுவே உலகின் சகல ஜீவராசிக்குள்ளும் இருக்கிறது. அவை வெவ்வேறு உடலைப் பெற்றிருக்கிறதே தவிற அதன் குணங்கள் ஒன்றே. அத்தகைய ஆன்மா ப்ரபஞ்சத்துடன் ஐக்கியமாகும் போது தண்ணீரின் இரண்டு துளிகள் ஒன்றாக இணைந்து ஒரே துளி ஆவதற்குச் சமமாகும் என்று விளக்குகிறார் எமதர்மன்.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

மேலே கூறப்பட்டதில் பூர்ணம் என்பதற்கு பதிலாக தண்ணீர் என்று கூறி படித்துப் பாருங்கள். ஆன்மாவின் தன்மையை அறிவீர்கள்!


"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆன்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.மரணத்திற்கு அப்பால் - 16

Saturday, June 26, 2010

கீதோபதேசம் - ஞானத்தை பெற்று செயல்படு!"பரந்தாமா! வேள்விகளில் சிறந்தவையாக கருதப்பட வேண்டியது எது என்பதை எனக்கு விளக்குவாய்" என்று அர்ஜுனன் கேட்கிறான்.

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

"அர்ஜுனா! பொருட்களால் வேள்வி செய்வதை விட ஞான வேள்வியே மிகவும் மேலானது. செயல்கள் அனைத்தும் ஞானத்திலேயே வந்து முடியப் பெருகின்றன.

மெய்ப்பொருளைக் கண்ட ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். அதை வணக்கத்துடனும், தொண்டு செய்வதன் மூலமும், கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதாலும் நீ அதைக் கற்றுக் கொள்".

(எதைச் சொன்னாலும் அதை விசுவாசிக்க வேண்டும், அப்படியே நம்ப வேண்டும் என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கூறவில்லை. கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு அறிந்து கொள்ளச் சொல்கிறார். இந்து தர்மத்தின் சிறப்பம்சமே அதுதான்).

"பாண்டவ! அதைத் தெரிந்து கொண்ட பிறகு, மீண்டும் நீ இத்தகைய மதி மயக்கத்தை அடைய மாட்டாய். அதன் மூலம் உயிர்கள் அனைத்தையும் எனக்குள்ளும், உனக்குள்ளும் காண்பாய்."

ஒரு தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். துறவி ஒருவர் அவர்களை விலக்கி விடச் சென்றார். ஆனால் கோபத்திலிருந்த அவர்கள் துறவியையும் தாக்கி விட்டனர். இதைப் பார்த்த துறவியின் சீடரோ அவரை பத்திரமாக கூட்டி வந்து அவருக்கு ஒத்தடம் கொடுத்தார். "என்ன நடந்தது" என்று வினவினார். அதற்கு துறவியோ "அங்கே அடித்தாய், இங்கே அரவனைக்கிறாய்" என்றார். தன்னை அடித்ததும் அனைத்ததும் ஒரே உயிர் தான் என்பதை துறவி இவ்வாறு விளக்குகிறார்.

"அர்ஜுனா! நீ பாவிகளுக்குளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும், ஞானமாகிய படகின் உதவியால் பாபங்கள் அனைத்தையும் கடந்து விடலாம்..

"பார்த்தா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்து சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பானது எல்லாப் பாபங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது."

"ஞான விட தூய்மையாக்கும் பொருள் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. குற்றம் குறை இல்லாமல் பூரணமாக யோகத்தைப் பயிற்சி செய்து பக்குவம் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஞானத்தைத் தன்னிடத்தில் தானே காண்கிறார்கள்.

அறியாதவனும், நம்பிக்கை இல்லாதவனும், சந்தேகத் தன்மை கொண்டவனும் ஒருவன் அழிவை நோக்கிச் செல்கிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமோ, மறு உலகமோ அல்லது இன்பமோ எதுவும் கிடையாது.

"தனஞ்செய! யோகத்தினால் செயல்களை எல்லாம் துறந்தவனும், ஞானத்தால் எல்லாச் சந்தேகங்களையும், போக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆளும் ஒருவனைச் செயல்கள் கட்டுப்படுத்தாது.

எனவே, உன் அறியாமையால் தோன்றி உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றிய சந்தேகத்தை ஞானமாகிய வாளால் வெட்டி வீழ்த்தி விடு. யோகத்தையே சரணாக அடைந்து விடு. எழுந்து செயல்படு அர்ஜுனா!"

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.Thursday, June 24, 2010

தமிழுக்கு மாநாடு நடத்த தகுதி கொண்டவர் யார்?


உண்மையான தமிழ்தாத்தா - டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் உ.வே.சாமிநாதய்யர்.

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே.சாமிநாதய்யர்!

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் பனை ஓலையில் எழுதப்பட்டிருந்தன. இவற்றையே ஏட்டுச் சுவடிகள் என்று கூறுவர். இவ்வாறு ஓலையில் எழுதப்பட்டிருந்தவைகளை அச்சிலேற்றி நூல் வடிவாக்கி காக்க வேண்டும் என்ற எண்ணம் உ.வே.சாமிநாதய்யருக்குத் தோன்றியது. இவர் இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார்.

அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு கடுமையாக மனம் புண்பட்டார். தமிழன் தமிழன் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தமிழில் இப்படி பொக்கிஷங்கள் பல இருந்தனவா என்று கூட அறிந்திருக்காத காலம் அது. அத்தகைய ஒரு காலகட்டத்தில் அழிவு நிலையில் இருந்த தமிழ் பொக்கிஷங்களை உயிராகக் கொண்டுவந்து உலகத்திற்கு கொடுக்க பேரார்வம் கொண்டார்.

அந்த காலத்தில் எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தான் இருந்தன. இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் பயின்றார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மணலில் தான் எழுத்துக்களை எழுதிப் பழகுவார்கள். அப்படித் தமிழ் கற்ற உ.வே.சாமிநாதய்யர் தான் பின்னாளில் அழகுத்தமிழை அச்சிலேற்றினார். இவ்வாறு தமிழ் கற்ற உ.வே.சாமிநாதய்யர் பிற்காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இன்றைக்கு திராவிடர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்த கூட்டங்கள் அன்றைக்கும் இருந்தன. ஆனால் அவர்களில் யாருக்கும் தமிழின் அழிவு நிலை குறித்து கவலை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் உ வே சுவாமிநாதய்யர் பெருங்கவலை கொண்டார்.

இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாத ஐயருக்கு கொடுத்து உதவியிருக்கிறார் என்கிறது அவரது வரலாறு.

கரையானின் அரிப்பில் கிடந்து சத்தமே இல்லாமல் கண்கானாமல் அழிந்து போக இருந்த தமிழை வெளி உலகிற்கு கொண்டு வர உ.வே.சாமிநாத ஐயர். அரும்பாடு பட்டார். அவரது பேரார்வத்தையும் உழைப்பையும் கண்டவர்கள் அவர்கள் பலரும் அவருக்கு உதவ முன் வந்தனர். இப்படி ஏடுகளைச் சேகரித்து முதன் முதலில் பதிப்பித்த நூல் தான் "சீவகசிந்தாமணி'. எழுத்தானியால் எழுதப்பட்டு ஏட்டில் இருந்ததை அச்சில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார் உ. வே சாமிநாத ஐயர்.

அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சாமிநாதய்யர் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்படி கரையான்களுக்குத் தீனியாகவிருந்த சிலப்பதிகாரத்தை தூசி தட்டி எடுத்து அச்சிலேற்றி உ வே சாமிநாத ஐயர் காத்திராவிட்டால் இன்று கன்னகிக்கு சிலை ஏது? கண்ணகி சிலைக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற இவர்களது போலி போராட்டங்கள் ஏது?

இதன் பின்னர் "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். பின்னர் தொடர்ச்சியாக இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றியிருக்கிறார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சாமிநாதய்யர் பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

குறிப்பாக ஓசைச்சுவடிகளில் இருக்கும் கையெழுத்துக்களை அப்படியே புரிந்து கொள்ள முடியாது. ஒரு எழுத்தை பல ஏடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அந்த எழுத்தை உள்ளடக்கிய வார்த்தை என்ன பொருளைக் குறிக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னரே அவற்றை அச்சேற்ற முடியும். அதற்கு சரியான உரை எழுதவும் முடியும். அவ்வாறு பல பல எழுத்துக்களையும் வார்த்தைகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து தெளிவாகப் புரிந்து கொண்டு உலகிற்கும் எடுத்துரைத்து நமக்கெல்லாம் பழந்தமிழைக் காத்துக் கொடுத்த உ.வெ.சாமிநாதய்யரின் உழைப்பும் அர்பணிப்பும் ஈடு செய்ய முடியாதவை.

அத்தகைய இவரது உழைப்பிற்கும் அர்பனிப்பிற்கும் அவர் எடுத்து வைத்து, எழுதி வைத்த தமிழை படித்து விட்டு தமிழ் பேசி அத்தமிழ் செம்மொழியானதற்கும் தானே காரணம் என்றும் கூறி அதற்கு மாநாடு நடத்துபவர்கள் ஈடாவார்களா?

1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் (தமிழ்நாடு அப்போது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் ஒரு இலக்கிய மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் உ வே சாமிநாதய்யர் உரை நிகழ்த்தினார். அவரது தமிழார்வமும் செந்தமிழ் உரையையும் கேட்டு மெய்சிலிர்துப் போன காந்தியடிகள் "இவரது உரையைக் கேட்கும் போது, இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டும் என்ற பேரார்வம் உண்டாகிறது" என்றார்.

இவ்வாறு தனது தீராத தமிழார்வத்தாலும் தமிழர்களுக்கு அழிவிலிருந்த பல தமிழ் பொக்கிஷத்தை மீட்டுக் கொடுத்து அரும்பெரும் பணியைச் செய்தும் "தமிழ் தாத்தா" என்று பெயர் பெற்றார் உ.வே.சாமிநாதய்யர். இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதினார். நம்மைப் போன்ற இக்கால சந்ததியினர் உ.வே.சாமிநாதய்யர் பற்றியும் அவர் தமிழுக்காக அரும்பணியாற்றியதைப் பற்றியும் தெரிந்து கொள்ள இவரது எழுத்து உதவுகிறது. ஆக உ.வே.சாமி நாதய்யரின் இத்தகைய உழைப்பு இருந்திருக்காவிட்டால் நம் சந்ததியினர் இன்றைக்கு எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு என்றெல்லாம் படிப்பதற்கு பாடங்கள் இருந்திருக்காது. அத்தகைய பழந்தமிழர் பொக்கிஷங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக சத்தமில்லாமல் மக்கிப் போயிருக்கும்.

உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்த நூல்களின் பட்டியல் வாய்பிளக்கும் அளவிற்கு இவ்வாறு நீள்கிறது.

1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878

அத்தகைய இவரது உழைப்பிற்கும் அர்பனிப்பிற்கும், அவர் எடுத்து வைத்து, எழுதி வைத்த தமிழை படித்து விட்டு அத்தமிழைப் பேசி, அத்தமிழ் செம்மொழி ஆனதற்குத் தாமே காரணம் என்றும் கூறி அதற்கு மாநாடு நடத்துபவர்கள் ஈடாவார்களா? தமிழ் தானே செம்மொழியாக இருக்கும் போது அதற்கு அந்த அந்தஸ்தை ஒருவர் வாங்கிக் கொடுக்க முடியுமா? பல கோடி மனிதர்களின் தரமான ஒரு மொழிக்கு தனி ஒரு மனிதரால் சர்டிபிகேட் வழங்க முடியுமா? தமிழ் தனக்குத் தரச்சான்றிதழ் வேண்டுமென்று தமிழர்களிடம் கேட்டதா? அப்படி ஒரு சான்றிதழை தனி ஒரு மனிதன் தாமே வாங்கிக் கொடுத்ததாய் விழா எடுப்பதும் தமிழுத்தான் பெருமையா?

தமிழை யாரும் வளர்க்க முடியாது. தமிழுக்காக ஒருவன் உழைக்கத்தான் முடியும். தமிழன் உழைத்தால் மட்டும் தான் தமிழ் வளரும். அவ்வாறு உழைப்பின் மூலம் தமிழின் கூடவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களே! அத்தகைய மனிதரைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி கூட செம்மொழி மாநாட்டில் நடத்தப்படவில்லை. யாரோ வெள்ளைக் காரனான ஒரு காடுவெல்ஸைப் பற்றி புலகாங்கிதம் அடைந்து பேசும் மாநாட்டுத் தலைவர், உ.வே.சாமிநாதய்யரின் தமிழுக்கான உழைப்பைப் பற்றி வாய்திறக்கவில்லை. அவரைப் புகழ்ந்து பேசவில்லை. தாமே தமிழ்த்தாத்தா என்று உலகிற்குச் சொல்ல ஆசைப்படுபவர் உண்மையான தமிழ்த்தாத்தா பற்றிக் கூறிவிடுவாரா என்ன? காரணம் ஜாதிக்காழ்புணர்ச்சி. உ.வே.சாமிநாதய்யர் என்பதே அவரது முழுப்பெயராக இருக்கும் போது, அதில் ஐயர் சேர்ந்து விட்ட காரணத்தாலேயே அவரது முழுப்பெயரைச் சொல்வதைத் தவிர்த்து உ.வே.சா என்றே சுருக்கிக் கூறுகின்றனர். இது தான் அவருக்கு இத்தகைய தமிழறிஞர்கள் செய்யும் மரியாதை எனக்கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள், தமிழுக்கு மாநாடு நடத்த தகுதி கொண்டவர் யார்?

அடியேன் எடுத்தியம்பியது மிகச்சிறிய தகவலே. உ.வே.சுவாமிநாதய்யர் பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்!


தமிழ்த்தாத்தாவே! உம்மை வணங்குகிறோம்!

Saturday, June 19, 2010

மரணத்திற்கு அப்பால் - 14

"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

மரணத்திற்கு அப்பால் மனிதன் என்ன ஆகிறான் என்ற கேள்வி நசிகேதனைத் துளைத்தெடுக்க அதே கேள்வியை ஒரு வேள்வியாகவே நினத்து எமதர்மனிடத்தில் விடாமல் கேட்கிறான் நசிகேதன். அதற்கு எமதர்மன் நசிகேதனுக்கு விளக்கியதை சுருக்கமாக பார்ப்போம்.

இதுவரை நசிகேதனுக்கு ஆன்மா பற்றி எமதர்மன் விளக்கியது:

1. மனிதன் உடல் வேறு ஆன்மா வேறு.
2. ஆன்மா என்பது சலனமற்றது. நிரந்தரமானது. அது அழியாதது. மீண்டும் பிறப்பெய்தக் கூடியது.
3. ஆன்மா தொப்புளிலிருந்து ஒரு ஜான் உயரத்தில் இதயக்குகையில் ஒரு கட்டைவிரல் அளவில் இருக்கக்கூடியது.
4. புலன்களை ஒரு தேரோட்டி போல கட்டுப்படுத்துபவன் மட்டுமே அதனை உணர முடியும்.
5. உலகப் பொருட்கள், மனம், புத்தி, ப்ரபஞ்ச ஆற்றல் இவற்றையெல்லாம் முழுமையாக வசப்படுத்தினால் கடைசிப் புகலிடமான இறைசக்தியை அடையலாம்.
6. பேச்சைக் குறைத்தால் மனம் வசப்படும், மனம் வசப்பட்டால் புத்தி விழிப்புற்றிருக்கும், புத்தி விழிப்புற்றவன் ஆன்மாவை அறிவான்,

என்று எமதர்மன் போதிக்கிறார். இனி எமதர்மன் நசிகேதனுக்கு "அதுவே நீ"" என்று ஆன்மாவை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறார்.

எமதர்மன் நசிகேதனுக்கு ஆன்மாவை புரியவைக்க முயற்சிக்கிறார். மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே நிகழுகிறது. மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பினுள் உள்ளது. "அதுவே நீ " என்கிறார் எமதர்மன். "அது" எனப்படுவது ஆன்மாவைக் குறிக்கும் சொல்லாக உருவகித்து ஆன்மாவை பல கோணங்களில் எமதர்மன் உபதேசிக்கிறார்.

நமக்கு உள்ளே இருந்தாலும், ஆன்மாவை நம்மால் உணரமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை முதலில் விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! வெளியில் உள்ளவைகளை உணருவதற்காகவே புலன்களை புறநோக்குடனேயே இறைவன் அமைத்துள்ளார். அதனால் அவை வெளியில் பார்க்கின்றன. அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை. மரணமற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அக நோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்."

"மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோகப் பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர்கள் வீழ்கின்றனர். ஆனால், நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகளே அறிகின்றனர். எனவே அவர்கள் சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை." என்கிறார் எமதர்மன்.

அதாவது கண் காது மூக்கு வாய் போன்ற உடலின் அவயவங்கள் யாவும் உடலுக்கு வெளியே இருப்பதை உனரவே உதவுகின்றன என்கிறார் எமதர்மன். கண் புறப்பொருளைப் பார்க்கிறது. குறைந்த பட்சம் கண்ணை உள்பக்கமாக உருட்டி மூளையை பார்க்க முடியுமா? முடியாதே! காது வெளியின் சப்தத்தைக் கேட்கிறது. நமது காது தான், ஆனாலும் நம் காதால் நமது இதயத் துடிப்பையே கேட்க முடியவில்லையே! மேலும் மூக்கு வாய் போன்ற உறுப்புக்கள் யாவும் புறப் பொருளை நுகரவே பயன்படுகின்றன என்பதை யோசிக்க வேண்டும். அதனால் தான் இவைகள் புறப்பொருட்கள் மீது ஒரு மோகத்தை நம்மனத்தில் வளர்த்து விடுகிறது. அவ்வாறு மனம் மயங்கி விடுவதால் ஆன்மதேடுதலை மறந்து உலக நாட்டத்தில் மனம் சிக்கிக் கொள்கிறது என்கிறார் எமதர்மன். மேலும் இவற்றை நன்றாக உணர்ந்து கொள்ளும் விவேகி எவனோ அவன் புலன்களால் உண்டாகும் போகத்தில் மயங்கமாட்டார் என்று விளக்குகிறார் எமதர்மன்.ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்கலில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்து கொள்கிறானோ அது வே நீ கேட்ட பொருள்"

உதாரணமாக நாம் உணவைச் சுவைக்கிறோம், அதன் சுவையை சுவைத்து பின் மறந்து போகிறோம். சுவையின் நினைவு நாக்கிலேயே ஒட்டிக் கொள்வதில்லை. அந்த உணவு நன்றாக இருந்தது என்பது மட்டுமே நம் மனதில் வைத்திருக்க முடியும். நாக்கால் உணரப்பட்ட எந்த சுவையையும் நாம் வார்த்தையால் விளக்கி விட முடியாது. ஒரு மாதிரி புளிப்பாய், உப்பாய், கொஞ்சம் துவர்ப்பாய் என்று இழுப்போமே ஒழிய எந்த சுவையையும் வார்த்தைப்படுத்த முடியாது. காரணம் சுவை என்ற புற உணர்வு ஒரு மாயையாகவே இருந்து விடுகிறது. மீண்டும் அதே உணவை சுவைக்கும் போது தான் அந்த சுவையை நம் நாக்கு உணரும். இப்படி ஒரு மாயையான உணர்வை நாம் உணரக் காரணமாக இருப்பது நம்முள் உயிர்ப்புடன் இருக்கும் ஆன்மாவே! ஆக சுவையை மறந்த பின்னும் எஞ்சி இருக்கும் உணர்வு எதுவோ அதுவே ஆன்மா என்று உணர்க என போதிக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா. அது மகிமை வாய்ந்தது. எங்கும் நிறைந்தது. அதனை அனுப்பூதியில் உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.

"நசிகேதா! கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை அருகில் இருப்பதாகவும், அதே வேளையில் இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்குத் தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்."

நமது கடந்த காலங்களின் செய்கைகளே நிகழ்கால விளைவாகிறது. நிகழ்கால நமது நடத்தைகளே எதிர்கால வினையை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் விருப்பு மற்றும் வெறுப்பு சார்ந்த உணர்ச்சிகளே அவன் கர்மம் செய்யத் தூண்டுதாலாக இருக்கிறது. இவற்றை உணர்பவர்கள் யாரையும் வெறுப்பதில்லை. இதை உணர்பவர்கள் யாரோ அவர்கள் கடந்த காலங்கள் பற்றிய துக்கத்தையும் எதிர்காலம் பற்றிய கவலையையும் துறந்து நிகழ்காலத்தில் வாழ்பவர்களாக திகழ்வார்கள். இவ்வாறு காலக்கட்டுகளைக் கடந்து நிலையாக உணரப்படக் கூடிய பொருள் எதுவோ அதுவே ஆன்மா என்கிறார் எமதர்மன்.

ஆன்மாவை தரிசிப்போம்...
மரணத்திற்கு அப்பால் - 15

தெனாலி ராமன் கதைகள்!ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.

விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் தெனாலிராமன்.

ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை உண்பதே தனி சுகம் தான்" என்றார்.

தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவறை நோக்கி ஓடினார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார்.

"அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.

தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

Wednesday, June 16, 2010

பதின் வயது திருமணம் குற்றமா?
பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடத்தில் பிள்ளை பெற்றாள். நல்ல செய்தி!

ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டு சென்றுள்ளார் என்கிறது அந்த செய்தி. மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளதாம் பள்ளி நிர்வாகம். பின்ன, ஒரு பள்ளிக்கூடம் என்ன தான் செய்ய முடியும். ஆட்டு மந்தைகளை கூடத்தில் அடைப்பது போல ஆள் சேர்ப்பது, பின்னர் டி சியை கொடுப்பதும் மட்டுமே வேலையாக கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்களால் வேறென்ன செய்ய முடியும். கலாச்சாரம் , ஒழுக்கம் போன்றவற்றை பள்ளிக்கூடங்கள் போதிப்பதற்கு முன்னால் கற்பு பற்றியும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் குஷ்பு போன்றவர்கள் கற்றுக்கொடுத்து விடுகின்றனரே! பிறகு பள்ளிக்கூடங்களால் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்க முடியும்!

செய்தியின் மிச்சத்தையும் படியுங்கள் - "தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இந்த யுவதி திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் வழங்கினர்." செய்தி இங்கே .

சரி. இப்படி நடந்தது அதிர்ச்சியான தகவலா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த இயற்கையின் படைப்பில் ஆடு, மாடு, நாய், நரி, ஓநாய், கழுதை, குதிரை, பன்றி, யானை, ஒட்டகம், ஈ, கொசு, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், மீன்கள் மற்றும் மரம் செடி கொடிகள் என்று எல்லா ஜீவராசிகளுமே இனப்பெருக்கத்திற்கான வயதை எட்டியவுடன் தன் இனையைக் கூடுகிறது. இது இயற்கையின் நியதி தானே!

அதைப் போலத்தானே இப்போது இந்த பள்ளியில் படிக்கும் யுவதியின் விஷயத்திலும் நடந்திருக்கிறது. இணை சேரும் காலம் வந்தது. இணையைக் கூடினாள். இயற்கையின் நியதிப்படி இது சரியே! இந்தச் செய்தியில் அடிபட்ட யுவதியோ அல்லது அவளுடன் கூடியவனோ தண்டிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. பருவம் எய்தியவுடன் இணையைக் கூடுவது குற்றமும் அல்ல.

ஆனால் மனிதர்களாக வாழும் நாம் உணர்ச்சிப் பூர்வமாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உணர்வுகளின் அடிப்படையில் எழும் சில உணர்ச்சிப் போராட்டங்களைத் தவிர்க்கவும், உரிமைப் போராட்டங்கள் இல்லாமல் அமைதியாக வாழவும், வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முயன்றும் சில விதிகளை நமக்குள்ளே நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பெயர் தான் நாகரீகம். அது தான் நாகரீகம் அடைந்தோம் என்று நம்மை நாமே கூறிக்கொள்ளும் மனித வாழ்க்கை ஆகும்.

விலங்குகளைப் போல கூடினோமா, குட்டிப்போட்டோமா பின் விட்டுச் சென்றோமா என்று சென்று விடுவது எளிது தான். ஆனால் பெற்றுப் போட்ட குட்டியின் நிலை என்ன என்ற உணர்ச்சிப் பூர்வமான கேள்வியை மனிதன் சிந்தித்த நாள் முதல் தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடத்துவங்கி இருப்பான். இந்த சிந்தனை விரிவடைந்து ஒரு ஆணும் பெண்ணும் தான் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பாகிறார்கள் என்ற ஆத்மார்த்தமான சிந்தனை தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து மேலும் செம்மையான நாகரீகத்திற்கு கொண்டு போனது என்றால் மிகையாகாது.

இப்படி ஒருவர் வாழ்க்கைக்கு மற்றவர்கள் தானாகவே பொறுப்பேற்றுக் கொண்டதனால் குடும்பம் என்ற அமைப்பு உண்டானது. குடும்பம் என்ற அமைப்பு உணர்வுப்பூர்வமாக உண்டான ஒரு அமைப்பு. இந்த அமைப்பை முறைப் படுத்தவே சில வழி முறைகளை பின்பற்றப்பட்டன. அதில் முக்கியமான வழி முறை தான் திருமனம் என்று அழைக்கப் படுகிறது.

இப்போது விஷயத்திற்கு வருவோம், நமது தாத்தா பாட்டி காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட வயதைக் கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக எல்லோரும் இணை தேடும் பருவத்தில் மணம் புரிந்து கொண்டிருப்பார்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் பத்தாம் பசலிகளும் இல்லை. ஒன்றும் தெரியாத முட்டாள்களோ, காட்டு மிராண்டிகளாகவோ இருக்கவில்லை. பன்பட்ட நாகரீக மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஆடு, மாடு, நாய், நரிகளைப் போல வாழாமல் முறையான மனித வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பருவத்தே கூட வேண்டியது இயற்கையின் நியதி என்பதை புரிந்து கொண்டு அதற்கு அணை போடாமல் அதை முறைப்படுத்தி, குடும்பம் என்ற அமைப்பு சிதையாமலும் தாங்களே தங்கள் வாரிசுகளுக்கு வயதிற்கேற்ற வரன் தேடிக்கொடுத்தும், முறையான வழியில் இணையைச்
சேரக் கற்றுக் கொடுத்தும் வாழ்கைக்கு வடிகால் வைத்துக் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் பதின் வயதில் திருமணம் செய்து கொள்வதை நாம் இன்று குழந்தைத் திருமணம் என்று அழைக்கிறோம். இது என்ன முரண்பாடு? பதினைந்து வயது யுவனும் யுவதியும், பாதுகாப்பு முறைகளுடன் உடலுறவு கொண்டால் தவறில்லை என்பது நாகரீகம் என்கிறார்கள். அதே பாதுகாப்பை ஒரு குடும்பம், திருமணம் என்ற அங்கீகாரத்துடன் அதே யுவனுக்கும் யுவதிக்கும் கொடுத்தால் அதை மூட நம்பிக்கை என்கிறார்கள். திருமண வயது பதினெட்டு என்பது என்ன கணக்கு? ஏன் பதினைந்து என்று வைத்துக் கொண்டால் யார் குடி முழுகிப்போகிறது?

பதின் வயதுகளில் இனக்கவர்ச்சி உண்டாகும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் சைட் அடிப்பது வயதிற்குரிய மாற்றம் என்று ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காதல் வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காம உணர்வு வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், அத்தகைய காதல் காம உணர்வுகளுக்கான வடிகால்கள் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்வதில்லை? அப்படியே வெளிப்படையாக சொல்வதாகக் கூறிக் கொள்பவர்கள் உடலுறவு செய்து கொள்ளுங்கள். ஆனால் கருத்தடை சாதனங்களை உபயோகியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. இது தான் முறையான வடிகால் என்பதா?

பதினைந்து வயதில் உடலுறவு கொள்வது சட்டப்படி தவறில்லை என்றால், அதை திருமணம் மூலம் குடும்பம் என்ற அமைப்போடு முறைப்படுத்துதலை மட்டும் சட்ட விரோதம் ஆக்கி இருப்பது என்ன நியாயம்? பதின் வயது உடலுறவு சட்டப்படி தவறில்லாத போது அதை முறைப்படுத்தும் திருமணத்தையும் சட்டப்படி தவறில்லை என்று அறிவிக்க வேண்டும். பதினான்கு வயது பூர்த்தியானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு முன்னால் அவர்களை பாதுகாப்பாக குடும்ப அமைப்புக்குள் கொண்டு வந்து வாழ்க்கையின் பொறுப்புக்களை புரிய வைக்க ஒரு வழியாவது கிடைக்கும். கருத்தடை சாதனங்களை மளிகை சாமான் லிஸ்டிலேயே சேர்த்து வாங்கிப் போட்டு விட்டால், கண்டவர்களுடன் உறவு கொள்ளாமல் கணவன் மனைவி உறவாக உடலுறவு முறைப்படுத்தப்பட்டு வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் குடும்பத்தில் வாழ்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வாவது மிஞ்சும். இதைத்தான் அக்காலத்தில் நம்முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள். காந்தியடிகளுக்கு பதிமூன்று வயதில் திருமணம் நடந்ததாம்! என்ன குறைந்து போனது? தேசத்தந்தை ஆகவில்லையா?தேசத்தந்தை காந்தி மனைவியுடன்

நம் பிள்ளைகளை குடும்பத்தந்தையாகவேனும் ஆவதற்கான முறையான வழிகாட்டுதல் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் தந்தை பெயர் தெரியாத ஒற்றைப் பெற்றோர்கள் இந்தியாவிலும் பெருகிவிடுவார்கள் என்பது தின்னம்.

பிறகு கண்ட இடத்தில் கூடி, கழிவறையில் குட்டி போட்டு நாய்க்கும் மனிதர்களுக்கும் வேறுபாடில்லாத மிருக வாழ்க்கையைத் தான் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்ளும். குஷ்புவும் மகிழ்ச்சி அடைவார்.
__________________________________________________________________________

எச்சரிக்கை: இந்திய நாணயங்களில் தொடர்ந்து கிறிஸ்தவ மதச் சிலுவையும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிக்களின் படங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன. நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது இத்தாலியில் வாழ்கிறோமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.கேரளாவைச் சேர்ந்த மறைந்த கன்னி(?)யாஸ்திரி அல்போன்ஸாவின் உருவத்தைப் ஐந்து ரூபாய் நாணயங்களில் பொறித்து இத்தாலி அரசு கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இதேயே பி ஜெ பி காலத்தில், நாணயத்தில் ராமர் படமோ, சாய் பாபா படமோ போட்டிருந்தால் இந்துத்துவாவைத் தினிக்கிறது என்று கூறி ஒரு கலவரத்தையே நிகழ்த்த முன்னின்றுவிடும் நமது அரசியல் கட்சிகள் இப்போது மட்டும் வாய் மூடி வேடிக்கை பார்ப்பதேன்!

இந்து கடவுளரின் உருவம் பொறிக்கப்படும் போது இந்துத்துவா தினிக்கப்படுகிறது என்று கொண்டால், கிறிஸ்தவ பாதிரிகளின் படம் பொறிக்கப்படும் போது கிறிஸ்தவத்தை தினிப்பது ஆகிறதே! இதை தட்டிக்கேட்க மட்டும் தமிழகத்தின் பகுத்தறிவு வாதிகள் காணாமல் போய்விட்டனரே!

தமிழக அரசுச் சின்னத்தில் கோபுரம் இருப்பது மதச்சார்பாக இருக்கின்றது என்று கூறி அதை அகற்றி விட்ட கருணாநிதி, இந்திய ரூபாய் நாணயங்களில் பொறிக்கப்படும் மத சின்னங்களை எதிர்த்துப் பேசுவாரா? கோபுரத்திற்கு எதிராக சட்ட சபையில் உரை நிகழ்த்தியவர்கள், இந்த கிறிஸ்தவ அடையாளங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

இந்துக்களே நினைவில் கொள்ளுங்கள்!. காங்கிரஸ் மற்றும் தி மு க ஆகிய இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரானவையே! இந்துக்களின் பாரம்பரியத்தை அழிக்க அவதாரம் பூண்டவையே! இனி இறக்கும் வரை இவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்று இந்துக்கள் தீர்மானித்தாலே ஒழிய இந்துக்கள் சொந்த நாட்டின் மத அடிமைகளாகப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!