Monday, November 30, 2009

வாரியாரின் பொன்மொழிகள்!


பசியானது அறிவைப் போக்கும், தரும சிந்தனையைக் கெடுக்கும். பசி வந்தால் ஞானமுள்ளவனும் தைரியத்தை இழந்து விடுவான். எவன் பசியை வெல்லுவானோ நிச்சயமாக அவன் சொர்கத்தை வெல்லுவான்.

கோபத்தையும் புலனையும் வென்றவர்கள் சொர்கத்தின் வாயிலைப் பார்கின்றனர்.

ஆயிரம் கொடுக்கச் சக்தி இருக்க நூறு கொடுப்பவனும், நூறு கொடுக்கச் சக்தியுள்ளவன் பத்துக் கொடுப்பவனும், சக்திக்குத் தக்கபடி தண்ணீரைக் கொடுப்பவனும் ஆகிய எல்லாரும் சமமான பலனை அடைகின்றனர்.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

வீட்டு வாசலைப் பூட்டி விட்டு உள்ளே வாருங்கள் என்றழைத்தால் யார் வரமுடியும். அதேபோல உன் இதயத்தை மும்மலமாகிய கதவினால் பூட்டி விட்டு இறைவனை அழைத்தால் எப்படி வருவான். உள்ளத்தை தூய்மையாக திறந்து வைத்தால் இறைவன் உன்னிடத்தில் பிரகாசிப்பார்.

எல்லா உயிர்களும் இறைவனின் கோவில்களே. உயிர்கள் தோறும் இறைவன் இருக்கிறான். ஆதலால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாயிரு. உயிர்களிடத்தில் செலுத்தும் அன்பு இறைவனைச் சேரும்.

- சுவாமி கிருபானந்த வாரியார்

Tuesday, November 24, 2009

குதிரையாகிய புலன்களை கட்டுப்படுத்துங்கள்!

வாழும் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார். ஆனால் நீங்கள் சர்ச்சுகளையும் கோவில்களையும் கட்டிக் கொண்டு பல கற்பனைப் பிதற்றல்களை நம்பிக்கொண்டு திரிகிறீர்கள்.

மனித உடம்பில் உள்ள ஆன்மா ஒன்றே வழிபடத்தக்க கடவுள்.

எல்லா விலங்குகளும் கூடக் கோயில்களே. ஆனால் மனிதனே இவற்றுள் மிகச் சிறந்தவன்.

ஒவ்வொருவரும் உடல் எண்ணும் கோவிலினுள் உள்ள ஆன்மா என்ற கடவுளை உணர்கின்ற தருனமே நம்மை கட்டியுள்ள பந்தங்கள் எல்லாம் விலகுகின்றன. மனித மனம் சுதந்திரம் அடைகிறது.

மகான்களின் சக்தியெல்லாம் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்து நீங்கள் அறிய வில்லையா? எங்கே? புத்தியிலா? அவர்களுள் யாராவது தத்துவ நூலோ, மிக நுணுக்கமான தர்க்க நூலோ எழுதியிருக்கிறார்களா. இல்லவே இல்லை. அவர்கள் சிறிதே பேசினார்கள். புத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.

இறைவன் உள்ளத்தால் தான் காணப்படுகிறார். அறிவால் அல்ல.

இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், அடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

- சுவாமி விவேகானந்தர்.

Sunday, November 22, 2009

எலுமிச்சை அளவு சாதம்!

ஒரு தேசாந்திரி ஓர் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிட உணவு கொடுக்கும்படி அந்த உணவு விடுதி நடத்தும் பெண்மணியிடம் கேட்டான். அவளோ சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது ஒன்றும் இல்லை என்றாள்.

"அம்மா பசி காதை அடைக்கிறது. ஒரு தங்க காசு தருகிறேன். ஒரு எலுமிச்சங்காய் அளவு சாதம் போட்டாலும் பரவாயில்லை" என்றான் தேசாந்திரி.

அந்தப் பெண்மணி தேசாந்திரியிடமிருந்து ஒரு தங்க காசை வாங்கிக் கொண்டாள்.

தேசாந்திரியோ கைகால் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். அவன் முன்னால் ஒரு வாழை இலையைப் போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர் இலையில் ஓர் எலுமிச்சங்காயளவு சாதத்தை வைத்துச் சிறிது குழம்பு விட்டு "சாப்பிடு"! என்றாள்.

நிரம்ப பசியில் இருந்த தேசாந்திரி ஏமாற்றத்துடன் "என்ன, அநியாயமாக இருக்கிறதே! ஏதோ பேச்சுக்காக ஒரு எலுமிச்சையளவு சாதம் என்று சொன்னால் ஒரு தங்கக் காசுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு மட்டுமே சாப்பாடா?, நான் பட்டியியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். உன்
சாப்பாடு வேண்டாம். என் காசைத் திருப்பிக் கொடு" என்றார்.

அந்தப் பெண்மணியோ தான் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

அந்த தேசாந்திரிக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது. பசியும் கோபமும் சேர்ந்து கொண்டது. அவர் மரியாதை ராமனைப் பற்றி கேள்விப்பட்டார். நேராக மரியாதை ராமனிடம் சென்று தன் வழக்கைக் கூறினார்.

"அய்யா, ஒரு பேச்சுக்காக அந்த அம்மாவிடம் ஒரு எலுமிச்சை அளவு சாதம் போட்டால் ஒரு
தங்கக் காசு தருகிறேன் என்று கூறினேன். ஆனால் அந்த பெண்மணியோ என்னிடம் ஒரு
தங்கக் காசு வாங்கிக் கொண்டு உண்மையாகவே எலுமிச்சங்காயளவு சாதம் போட்டார்கள்.
சாதம் வேண்டாம் காசைத் திரும்பக் கொடுத்து விடு என்றால் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்" என்றார் தேசாந்திரி.

"இவர் சொல்லுவது உண்மை தானா?" என்று உணவு விடுதிப் பெண்மணியிடம் கேட்டான் மரியாதைராமன்.

அந்தப் பெண்மணியும் ஆமாம் என்றாள். மேலும் "அவர் தான் எலுமிச்சங்காய் அளவுள்ள சாதம் போடு என்றார். நான் அதைத்தானே செய்தேன்" என்றாள்.

உடனே மரியாதை ராமன் "நீங்கள் இவருக்குப் போட்ட சாதத்தைக் கொண்டு வந்து காட்ட முடியுமா?" என்றான்.

அந்தப் பெண்ணும் இலையில் அப்படியே இருக்கிறதென்று சொல்லி இலையில் போட்டபடியே இருந்த அந்த சாதத்தை அப்படியே கொண்டு வந்து காட்டினாள்.

இலையில் இருந்த சாதத்தைக் கூர்ந்து பார்த்த மரியாதை ராமன், "ஒரு சாதம் கூட எலுமிச் சங்காயளவு இல்லையே?" என்றான்.

"எலுமிச்சங்காயளவு சாதமா?" என்று வாயைப் பிளந்தாள் அந்தப் பெண்மணி.

"ஆமாம் இவர் எலுமிச்சங்காயளவுள்ள சாதம் தானே போடச் சொன்னார். நீ மிகச்சிறிய வடிவமாக இருக்கும் பல சாதங்களைக் கொண்டு வந்து எலுமிச்சங்காயளவு போட்டிருக்கிறாய். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீ ஒப்புக்கொண்டபடி எலுமிச்சங்காயளவுள்ள சாதத்தைப் போட முடியுமானால்
போடு. இல்லையேல் இவருக்கு ஒரு தங்க காசை திருப்பிக் கொடுத்து விடு." என்றான் மரியாதைராமன்.

ஒவ்வொரு பருக்கையும் எலுமிச்சங்காயளவு இருப்பதைப் போல சாதத்தை போட முடியாத உணவுவிடுதிப் பெண்மணி தோல்வியை ஒப்புக்கொண்டு தேசாந்திரிக்கு தங்கக் காசை திருப்பிக் கொடுத்தாள்.

உணவு விடுதிப் பெண்ணின் பேராசையை சமயோசிதமாக கையாண்டு தீர்வு சொன்ன மரியாதை ராமனை அனைவரும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை வெட்டியது ஏன்?


ஒரு கைக்குழந்தை அழுது கொண்டிருந்தது. யார் யாரோ தூக்கி சமாதானம் செய்கிறார்கள். குழந்தை அழுகையை நிறுத்த வில்லை. அதன் தாய் வந்தாள். குழந்தையைத் தூக்கினாள். மார்போடு அனைத்துக் கொண்டாள். குழந்தை அழுகையை நிறுத்தியது.

ஒரு கைக்குழந்தைக்கு தன் தாய் இவள் தான் என்பதை எதை வைத்து தீர்மானிக்கிறது. அனைத்துக் கொள்ளும் தாயின் வாசனையும் அவள் உடலின் கதகதப்புமே முழுமுதற்காரணம்.

வாசனையை முகர்தல் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரிய சூட்சமமான குணம். அந்த சூட்சம குணம் தான் மனிதன் சமூகத்தில் வாழ பல ரூபங்களில் உதவுகிறது.

இந்த முகர்தல் என்ற சூட்ஷம குணத்தில் லக்ஷ்மனன் கைவைக்கப் போய்தான் ராமாயணப் போரும் ராவண வதமும் உண்டானது எனலாம். அந்த சூட்ஷமத்தை கொஞ்சம் ஆய்வோம்.

ஸ்ரீ ராமரும் சீதாதேவியும் வனவாசத்தை மேற்கொண்டு வந்தனர். லக்ஷ்மனன் சகோதரனுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக உடனிருந்து உதவி வந்தான்.

அப்போது அசுர குலத்தை அழிக்கவே அவர்களுடன் பிறந்தது போன்ற பெண்ணான சூர்ப்பனகை ராமர் இருக்கும் வனத்திற்கு வந்தாள். அவள் ராமரின் கட்டுடலும் அழகையும் கண்டு இப்படியொரு ஆண்மகனைப் பார்த்ததில்லை. இவனோடு கூடி நான் இன்பத்தை துய்த்தே தீருவேன் என்று உறுதி கொண்டு மனதிற்குள் எல்லையில்லா ஆனந்தத்துடன் ராமரை நோக்கி நடந்தாள். தன் உருவை மிக அழகான யுவதியாக ஆக்கிக் கொண்டாள்.

ஸ்ரீ ராமரிடம் சென்று தான் திருமணம் ஆகாத கன்னிப் பெண் என்று பொய்யைக் கூறி , தான் ராவணனின் தங்கை என்றும் ராமனை மணக்கும் ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினாள்.

இதைக் கேட்ட ஸ்ரீ ராமரோ 'பெண்ணே! நீ விச்சிரவசு என்ற பிராமணரின் மகள். நான் தசரத ராஜகுமாரன். ஒரு பிராமணரின் மகளை சத்ரிய அரசன் மணந்து கொள்ளக் கூடாது. அன்றியும் ராவணன் முதலிய உன் தமையனார்களின் அனுமதி இன்றி உன்னை நான் மணந்து கொள்வது பிழை. மேலும் நான் ஏற்கனவே மணமானவன். ஏக பத்தினி விரதம் பூண்டவனாக இருக்கிறேன். எனவே உன்னை மணப்பதென்பது என்னால் ஆகாது. நீ உனது எண்ணத்தை மாற்றிக்கொள். மனதில் அமைதி கொள். இங்கிருந்து சென்று விடு. உன் வருகை எங்களுக்கு துன்பம் உண்டாக்காதிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.' என்றார்.

அந்த நேரம் அங்கே சீதை வந்து கொண்டிருந்தாள். சீதையைப் பார்த்த சூர்ப்பனகையோ இவ்வளவு அழகு நிறைந்த பெண் மனைவியாக இருப்பதால் தானே ராமன் எண்ணை புறக்கனிக்கிறான் என்று எண்ணி சீதையை கொன்றால் இனி ராமன் தனக்குத்தான் என்று வேகமாகச் சென்று சீதையை கொல்ல முயற்சிக்கிறாள்.

நடக்கும் விஷயங்களைப் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மனன் தன் அன்னியாரான சீதாதேவியின் உயிருக்கு சூர்ப்பனகையால் ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அடுத்த கனமே சூர்ப்பனகையின் முன் சென்று அவளைத் தடுத்து அவள் மூக்கை வெட்டி விடுகிறான். 'இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மன்னில் உருளும். பெண் என்பதால் எச்சரிக்கிறேன். போய் விடு' என்று அங்கிருந்து சூர்ப்பனகையை விரட்டி சீதையின் உயிரைக் காத்தான். அதற்குப் பின் ராவணன் கோபம் கொண்டு சீதையை கடத்தியதும் அனுமன் வந்ததும் இலங்கையில் போர் நடந்ததும் நமக்குப் பரிச்சியமானகதை தான்.

ஆனால் இவற்றில் முக்கியமாக கவனிக்கத்தக்கது லக்ஷ்மனன் கோபம் வந்த போது ஏன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான். ஒருவர் மீது கோபம் வந்தால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம் தலையை வெட்டலாம். ஆனாலும் அவ்வளவு கோபத்திலும் பதட்டத்திலும் கூட லக்ஷ்மனன் ஏன் சூர்ப்பனகையின் மூக்கை குறி பார்த்து வெட்ட வேண்டும். அதன் சூட்ஷமம் என்ன?

மேலும் பார்ப்போம். ஒரு புத்தகத்தில் வாசனையும் உணர்ச்சிகளும் என்ற தலைப்பில் இதைப் படித்தேன். நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களை விட அதிக சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. Memory Triggers எனப்படும் இந்த நினைவு தூண்டல்களிலேயே, நறுமணத்தினால் ஏற்படும் உணர்வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமான நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் 'Proustian Phenomenon' என்று அழைக்கப்படுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லப்பட்டிருந்தது.

கொஞ்சம் புரியும் படியாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

நம் மூக்கில் எண்ணிலடங்கா வாசனை உணரும் நரம்புகள் உள்ளன. அவைகளின் மூலமாக நாம் உணரும் வாசனைகளுக்கும் நமது உணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரடித் தொடர்புகள் உண்டாகின்றன.

காம உணர்ச்சியைத் தூண்டுவதற்கு வாசனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு ஆணோ பெண்ணொ ஒருவரை ஒருவர் வாசனையாலேயே முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் உண்டாகும் தூண்டுதலே ஒருவர் மீது ஒருவர் மோகம் கொள்ளக் காரணமாகிவிடுகிறது. வாசனையை முகர்தல் காதலிலும் காமத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சித் தூண்டுதலுக்குக் காரணமாக இருக்கிறது.

இன்னும் சொல்லலாம். ஒருவர் எதிர்பாலினர் மீது காமுறும் பொழுது முதலில் சுறுசுறுப்படைவது
மூக்கின் நரம்புகளே. மூக்கின் நரம்புகள் விழிப்படைந்து முகர்தலுக்கு தயாராகிவிடுகிறது.
அந்த தயார் நிலையாலும் முகர்தலாலும் தூண்டப்பட்டு உயிர் உறுப்புகள் உறவுக்குத் தங்களைத்

ஒருவர் கோபம் கொள்ளும் போது மூக்கு விடைத்துக் கொள்ளும். சிவந்து போகும். கண்கள் விரிய குரல் உயர காது மடல்கள் சிவக்கச் சண்டை பொடுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு கோபப்படும் போதும் மூக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் கோபத்தால் சில நேரங்களில் அதுவே உடைந்து போய் ரத்தக்களரியாவது வேறுவிஷயம்.


உங்களுக்குத் தெரியுமா? சுவையின் எழுபத்தைந்து சதவீதத்தை வாசனை கொண்டே நாம் உணர்கிறோம். மூக்கை மூடிக்கொண்டு அதாவது சுவாசம் செய்யாமல் ஒரு பொருளை கடித்து முழுங்க்ப் பாருங்கள். அதன் சுவை என்னவென்று உங்களால் துல்லியாமாகச் சொல்ல முடியாது. வாசனையுடன் முகர்ந்து உண்ணும்பொழுதே உணவின் சுவையை முழுவதும் ருசிக்கிறோம். அனுபவிக்கிறோம். காரணம் மூக்கு.

ஞாபக சக்திக்கு பெரிதும் உதவுவது வாசனை உணரும் முகரும் சக்தியே ஆகும். உதாரணமாக ஒரு மலை சார்ந்த இடத்திற்குச் செல்கிறோம். அங்கே பூக்களும் , பச்சை பசேல் என்ற மரமும் செடி கொடிகளும் நிறைய இருக்கும். அதன் அழகை ரசிக்கிறோம். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்குச் செல்கிறோம். அங்கே ஓரிரு கட்டிடங்கள் வந்திருக்கும். நாம் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோமா என்று நமக்குச் சந்தேகம் வந்துவிடும். காட்சிகள் நம்மை ஏமாற்றும். ஆனால் அந்த இடத்தில் நாம் உணரும் வாசனைதான் நமக்கு பழைய ஞாபங்களை மீட்டுக் கொண்டுவந்து நாம் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும். காரணம் மூக்கு.

சாமி கும்பிடும் போது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவை ஏற்று வைத்து சாமி கும்பிடுவதன் காரணம் அந்த வாசனையை நாம் முகரும் போதெல்லாம் தெய்வீக உணர்வு நம் மனதில் குடி கொண்டு விடும். காரணம் மூக்கு.

எனது பாட்டி இறந்த அன்று அவர் அருகில் ஒரு ஊதுபத்தி ஏற்றி வைத்தார்கள். இன்றைக்கும் எங்காவது யார், வீட்டிலாவது அப்படி ஒரு வாசனை வந்தால் எனக்கு அந்த நாள் ஞாபகத்திற்கு வந்து விடும். இப்படி நினைவாற்றலுக்கும் வாசனை முகர்வுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. காரணம் மூக்கு.

ஒரு சில திரையரங்கில் ஏ சி மிஷினிலிருந்து குளிர்ந்த காற்றுடன் நல்ல வாசனை திரவியத்தை கலந்து அரங்கம் முழுவதும் நறுமணத்துடன் இருக்குமாறு பரவச்செய்வார்கள். அப்படி சில்லென்ற காற்றுடன் நல்ல வாசனையை நாம் நுகர்ந்தவுடன் மனம் அமைதியடைகிறது. ஒரு வித மகிழ்ச்சி கொள்கிறது. இன்பமாக படத்தை பார்க்கச் செய்கிறது. காரணம் மூக்கு. இந்த அனுபவம் யாருக்கேனும் இருக்கிறதா?

பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஆண்களைக் கடந்து சென்றாலே அந்த வாசனை ஆண்களுக்கு ஒரு வித ஈர்ப்பை உண்டு பண்ணிவிடும். நமது கலாச்சாரத்தில் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளுதல் என்ற வழக்கம் முக்கியத்துவம் பெற்றதும் அப்படித்தான். தான் விரும்பும் ஆணை தன் மீது எப்போதும் மயக்கமுற்றிருக்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகவே அவன் கையால் பூவாங்கி அவன் முகரும் வன்னம் தலையில் வைத்து அவன் முன்னேயே நடமாடுவர். ஒருவருக் கொருவர் காதல் பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் குதூகலமும் பெருகும். காரணம் மூக்கு.

இப்படி மூக்கு ஒரு வாசனையை நாம் எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் முகர்ந்தோம் என்பதை ஆழ்மனதில் பதியச்செய்து விடுகிறது.

இவ்வாறு காமம், கோபம், இன்பம், மகிழ்ச்சி என உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தூண்டப்பட்ட உணர்ச்சியால் வீரியமாக செயல் பட வைப்பதற்கும் மூக்கு பெரும் பங்கு வகிப்பதாலோ என்னவோ லக்ஷ்மனன் சூர்ப்பனகையின் மூக்கைப் பதம் பார்த்திருக்கிறார்.

ராமனின் மீது ஆசை கொள்வதற்கும், காமத்தின் உந்துதலினால் சீதையை கொல்ல முயன்றதற்கும் இவளது உணர்ச்சியைத் தூண்டும் மூக்கே காரணம் என்று மூக்கை வெட்டியிருக்கிறார் லக்ஷ்மனன். பாவம் மூக்கு.

ஆக லக்ஷ்மனன் உளவியல் மற்றும் உடலியல் பற்றி நல்ல அறிவு பெற்றவராக
இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். ராமாயணம் போன்ற இதிகாசங்கள் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட கற்பனைக் கதை யென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் நடவடிக்கைகளின் சூட்ஷமத்தை யெல்லாம் இவ்வளவு டீட்டெயிலாக யோசித்து எழுதிக் கொண்டிருந்திருப்பாரேயானால் வாழ்க்கையே முடிந்துவிடும்.

எனவே ராமாயணம் நடந்த நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பதற்கு உளவியல், உடலியல் மற்றும் புவியில் சார்ந்த பல காரணிகள் சாதகமாகவே இருப்பதை நாம் உணரலாம்.

ஆகவே இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

Tuesday, November 17, 2009

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

வலை தளங்கள் நிறைய கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி செய்யும். கருத்து மோதலுக்கும் குறைச்சல் இருக்காது. அவ்வாறு நிகழ்த்தப்படும் கருத்துப் பரிமாற்றங்களில் சிலருடைய கருத்துக்களால் ஈர்க்கப் படுவோம்.

அவ்வகையில் என்னை கருத்துக்களால் ஈர்த்தவர் திருச்சிக்காரன் (புனைப் பெயர் தான்). அன்பு நண்பர். அவர் சிறந்த ராம பக்தர் என்பது அவரது பதிவுகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீக விவாதம் என்று வந்தால் ஆழமாகவும் நிதானமாகவும் பல கருத்துக்களை எடுத்து வைப்பவர். பைபிளை படித்து குடித்தவர். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். நாத்திகம் பேசுபவர்களைக் கூட கண்மூடித்தனமான நாத்திகத்தை விட்டு நிஜத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் என்று அழைப்பவர்.

தனியாக அமர்ந்து அவரது எழுத்துக்களை பற்றி அவதானித்துக் கொண்டிருந்தேன். சரி எல்லோருக்கும் சொன்னால் கும்பலாக சிந்திக்கலாமே என்று அவர் எழுதியதை இங்கே அளிக்கிறேன். கம்பைண்டு ஸ்டடி.

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?
எழுதியவர்: திருச்சிக்காரன்

“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

பகுத்தறிவாளர் என்பவர் யார்?

இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.


சரிதானே ?

பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில்
உழல்வதாக கூறுகிறார்.

“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?

மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிஞரிடம் முன் வைத்தாரா?

அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம். ஆனால் நாம் முழுவ‌தும் காமெடி பீசாக‌ ஆகி விட‌ நேர்ந்தால் அது இன்னும் அதிக‌ சிக்க‌லில் ந‌ம்மை சேர்க்கும். என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்! ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

Because Truth can never be defeated- it is the property of the truth!

Truth shall prevail! No body can defeat the Truth.

Hence let us all strive to find the truth.

- திருச்சிக்காரன்
__________________________________________________________________________________________

ஆக ஆராய்ந்தறிவோம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். அது தானே பகுத்தறிவு. ஒரேயடியாக கடவுள் இல்லை என்று சொல்வது, அல்லது ஒரு புள்ளியைக்காட்டி இது தான் கடவுள் என்று சொல்வது ரெண்டுமே ஒன்றுதான். அதைத் தாண்டி சிந்திக்கவேண்டும்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்னர் அர்ஜுனனிடம் சொல்கிறார் - 'அர்ஜுனா! நான் சொல்வதை எல்லாம் கேட்டு, அதில் எது சரியென்று நீ நினைக்கிறாயோ அதையே செய்!' என்கிறார். சொன்னவர் கடவுள். நான் தான் கடவுள், நான் சொல்வதை அப்படியே கேள் என்றாலும் அர்ஜுனன் சரி என்று கேட்டிருப்பான். ஆனாலும் அந்தக் கடவுளே அர்ஜுனனுக்கு போதித்துவிட்டு நீ சிந்தித்து முடிவெடு என்கிறார்.

அது தான் இந்து தர்மத்தின் சிறப்பம்சம். இந்து தர்மம் சிந்திக்கத்தூண்டும் மதம். கட்டளை பிறப்பிக்கும் மதம் அல்ல.

சிந்திப்போம். ஞானம் பெறுவோம்.

ஜெய் ஸ்ரீ க்ருஷ்னா!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

தர்மவானாகினும் கர்வம் கொள்ளாதே! எல்லாம் மாயை!


வாழ்க்கையில் எல்லாமே மாயை என்று ஞானம் பெற்ற பெரியோர்கள் சொல்வதுண்டு. மனிதனால் உணரப்படக் கூடிய எந்த ஒரு உணர்ச்சியையும் அவன் முழுமையாக புரிந்து கொள்வதே கிடையாது. உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதன் மீது பிரயாணிக்கிறவர்களே ஞானியாக அறியப்படுகிறாகள்.

ஆனால் நம்மைப் போன்றவர்களிடம் நடப்பது என்ன? இன்பம், துன்பம், சுகம், துக்கம், ஆசை, நிராசை, அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவித உணர்வுகளும் நமக்குளே புகுந்து நம் வழியாக அவை பிரயாணப்படுகின்றன. ஆதலால் நாம் மானுடர்களாகவே இருக்க நேர்கிறது.

ஒரு புராணக் கதை ஒன்று சொல்வார்கள்.

ஒரு முறை மகாராஜா தர்மர் உலகம் போற்றும் வகையில் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டு பொன்னும் பொருளுமாக தான தருமங்கள் செய்து கொண்டு இருந்தான்! அவன் பிறருக்கு தானங்களை வழங்கிய போது பல தங்க நாணயங்கள், தரையில் சிதறிக் கிடந்தன. அப்போது ஒரு கீரிப் பிள்ளை அங்கே ஓடி வந்தது. அந்த கீரிப் பிள்ளையின் முதுகின் ஒரு பாதி தங்கமாக மின்னிக்கொண்டிருந்தது. அந்த கீரிப் பிள்ளை கீழே விழுந்து கிடந்த தங்க காசுகளின் மேல் இடமும் வலமுமாகப் புரண்டது.

அதைப் பார்தது வியந்த தர்மர், “உனக்கு என்ன வேண்டும்? நீ யார்?” என்று கேட்டார்.

அதற்க்கு அந்தக் கீரி சொன்னது, “நான் காட்டில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் மிகவும் வறுமையில் வாடினார்!

அந்த வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டன! அந்த அந்தணர் சிரமப்பட்டு சிறிது தானியம் சேகரித்து வந்தார். அந்த தானியத்தைக் குற்றி மாவாக்கி, 4 உருண்டைகள் பிடித்தனர். அப்போது ஒரு விருந்தாளி (முன்பு அறிமுகம் இல்லாதவர்) அவர் வீட்டுக்கு வந்தார். அவரின் பசிக்கு உணவாக, அந்த அந்தணர் தான் உண்ண வைத்து இருந்த மாவு உருண்டையைக் குடுததார். கணவன் உண்ணாததால், மனைவியும் தன் பங்குக்கு இருந்த உருண்டையை விருந்தாளிக்கு குடுததார் . அப்படியே அவரின் மகனும், மருமகளும் குடுத்து விட்டனர்.

அந்த விருந்தினர் பசி தீர்ந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார். அன்று இரவு, அவர்கள் நால்வரும் பசிக் கொடுமையால் இறந்து விட்டனர்!

நான் அந்த வீட்டை விட்டு வெளியேறிய சமயம், அந்த விருந்தினர் உண்ணும் போது கீழே விழுந்த மாவில், நான் விழுந்து விட்டேன். அந்த மாவு பட்டு என் முதுகின் ஒருபுறம் தங்கமாக மின்னியது! நீ பெரிய தருமவான் என்று எல்லோரும் சொல்வதால், என் முதுகின் மறு பகுதியை தங்கம் ஆக்க நினைத்து, உன் தானத்தில் சிதறிய பொருளின் மீது புரண்டேன். ஆனால் உன் தானம் அவ்வளவு சிறப்பு இல்லை. என் முதுகு தங்கம் ஆகவில்லை” என்று கூறி சென்று விட்டது!

இந்தக்கதையின் மூலம் கூறப்படும் செய்தி என்ன? தங்கமும் வைரமும் தானம் செய்த தர்மராஜரை விட, தான் பசித்திருக்கும் போதும் யாசகம் கேட்டு வந்த விருந்தினருக்கு தான் உண்ண வேண்டிய உணவை தானம் செய்து மடிந்த அந்த ஏழை அந்தணரின் தானமே சிறந்தது என்று இந்தக் கதை மூலம் எடுத்துக் கூறப்படுகிறது. தியாகத்தின் உயர்வு சொல்லப்ப்ட்டிருக்கிறது.

தான் நிறைய தர்மம் செய்கிறேன் என்றென்னியபடி தானங்கள் செய்து கொண்டிருந்த தர்மருக்கு உண்மையான தானத்தை இந்த கீரிப்பிள்ளை புரிய வைத்தது.

இங்கே தான் உணர்வுகளின் சூட்சமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏழை அந்தணர் தான் தர்மவான் என்று நினைத்து அதனால் தானம் செய்யவில்லை. அவர் பசித்தவருக்கு தானம் செய்வதை தனது கடமை என எண்ணி அவ்வாறே அதைச் செய்து, அவரது குடும்பத்தாரும் அவரைத் தொடர அனைவரும் மடிந்தார்கள்.

ஆனால் தர்மரோ சிறந்த தர்மவான் என்று ஏற்கனவே புகழப்பட்டவர். அவர் தான் தர்மவான் என்பதை உணர்ந்தே தானம் செய்யலானார். அதனால் அவரது புகழ் கூடலாம். அவற்றால் மற்றவருக்கு நல்வாழ்க்கையும் கிடைக்கலாம். ஆனால் அதிலே மமதை உண்டானது. அந்த மமதை கீரிப்பிள்ளையின் செயலால் தகர்ந்து போனது. தர்மவான் என்ற மாயை விலகியது.

நாம் நல்லவர்களாக வாழவேண்டும். ஆனால் நான் நல்லவன் என்ற நினைப்பிலேயே வாழக்கூடாது. அது ஒரு உணர்வுச்சிறைக்குள் நம்மைத் தள்ளிவிடும். நாம் தர்மவானாகவே வாழவேண்டும். ஆனால் நான் தர்மவான் என்ற நினைப்பிலே வாழக்கூடாது. அது கர்வத்தை கொடுத்துவிடும்.

இப்படித்தான் நட்பு, பாசம், திறமை என எல்லாவற்றிலும் நம்மை சிறப்படுத்தும் மாய உணர்வு தொடர்ந்து வரும்.

இந்த உணர்ச்சியின் மாயையை ஒரு நடைமுறை விளக்கத்துடன் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்தில் நாம் வேலை பார்க்கிறோம். நாம் நன்றாக வேலை செய்வதாக தப்பித்தவறி மேலதிகாரி சொல்லிவிட்டால், பாராட்டிவிட்டால்
அதில் நாம் மகிழ்ந்து விடுகிறோம். மயங்கி விடுகிறோம். இன்னும் நன்றாக வேலை செய்யவேண்டும். இன்னும் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று தொடர்ந்து முயல்கிறோம். நல்லது தான். ஆனால் அந்த தொடர் முயற்சி நம்மையறியாமல் நம்மை ஒரு உணர்வுச்சிறைக்குள் தள்ளி விடுகிறது.

அதை விட்டு வெளியேற மறுக்கிறோம். வீட்டுக்குக் கூட போவதை தவிர்க்கிறோம் தள்ளிப்போடுகிறோம். இன்னும் நற்பெயர் அதன் பலனாக நல்ல சம்பளம் என்று எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம் சுயத்தை இழக்கத் துவங்குகிறோம். சிரிக்க மறக்கிறோம். பேச மறக்கிறோம். மகிழ்ந்து விளையாடும் குழந்தை மனதைத் தொலைக்கிறோம். எல்லாம் தொலைந்த பின் தூங்கி விழிக்கிறோம். அப்போது நம் குடும்ப மகிழ்ச்சி என்ற அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கும். நண்பர்கள் தொலைந்து போயிருப்பார்கள். உறவுகள் மறந்து போயிருப்பார்கள். சிலர் கண்காணாமல் மறைந்தும் போயிருப்பார்கள். காலம் நம்மைக் கடந்து போயிருக்கும். வாழ்க்கையின் பாதி தொலைந்து போயிருக்கும்.

இத்தனைக்கும் காரணம் என்ன என்று அடிப்படையை ஆராயத்துவங்கினால் 'இவன் நல்ல வேலைக்காரன்' என்று நமக்குக் கிடைத்த புகழ்ச்சியே காரணமாயிருந்திருக்கும்.

இந்த கஷ்டம் ஏன் வந்தது. நாம் இயல்பாகவே நல்ல வேலைக்காரனாக இருப்பதில் தவறில்லை. ஆனால் நான் நல்ல வேலைக்காரன் என்று நினைத்துக் கொண்டே வேலை செய்தது நம்மையறியாமலே ஒரு கர்வத்தை உண்டாக்கி அதிலிருந்து மீளமுடியாத சூழலை நமக்கு கொடுத்து விடுகிறது.

ஆக நாம் என்னவாக வாழ்கிறோம் என்பது மாயை இல்லை. நாம் என்ன மாதிரியாக அதை உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே மாயரூபமாகிறது.

நாம் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் உணர்வுகள் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என்று கொஞ்சம் சிந்திக்கக் கற்றுக்கொண்டு வாழத்துவங்கினால் மாயா லோகத்திலிருந்து மீண்டு நிரந்தர உலகத்தை அடையும் வழியை கற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு கற்றுக் கொண்டவர்களே ஞானிகள் என்றழைக்கப் படுகிறார்கள். நாமும் ஞானிகளாகலாம். முயற்சிப்போம்.

எனவே தர்மவானாகிலும் கர்வம் கொள்ளாதீர்!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Sunday, November 15, 2009

மரியாதை ராமன் கதைகள்!


நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன.

எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர்.

நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்ப்ட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர்.

அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள்.

இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கலகள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர்.

ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான்.

அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான்.

அன்று இரவு பூனை விளக்குப் பக்கம் போகவே அதன் காலில் சுற்றியிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. தன் காலில் சுற்றப்பட்டிருந்த துணியில் நெருப்புப் பிடுத்துக் கொண்டதும் பூனை மிரண்டு போய்ப் பஞ்சு மூட்டைகளின் மேல் ஓடியது. உடனே பஞ்சு மூட்டைகள் அனைத்திலும் நெருப்பு பிடித்துக் கொண்டது.

இதனால் அந்த பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

வியாபாரிகளில் மற்ற மூவரும் துணி சுற்றியவனைப் பார்த்து, "நீ எண்ணெய்த் துணி சுற்றி வைத்ததால் தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் கொடுக்க வேண்டும்" என்றனர்.

அவனோ தான் வேண்டுமென்றே செய்யவில்லை, எதிர்பாராவிதமாக நடந்து விட்டதற்குத் தன்னை மன்னிக்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டான்.

ஆனால் மற்ற மூவரும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. பிரச்சனை மரியாதை ராமனிடம் சென்றது. மூவரும் பூனையின் இவனுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்ட கால்களால் தான் இத்தனை நஷ்டம். ஆகவே இவன் தான் அந்த நஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று கூறினர்.

விஷயம் முழுவதையும் கேட்ட மரியாதை ராமன் இவ்வாறு தீர்ப்பு சொன்னான் 'பூனையின் ஒரு காலில் அடிபட்டுள்ளது. அந்தக்காலால் நடக்கவோ, ஓடவோ அதனால் முடியாது. அந்த சமயத்தில் அது மற்ற மூன்று கால்களால் தான் ஓடியிருக்க வேண்டும். எனவே உங்கள் மூவருக்கும் சொந்தமான கால்களால் ஓடித்தான் அது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீங்கள் மூவரும் தான் இந்த நாலாமவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான்.

வேறு வழியில்லாமல் மூவரும் நஷ்டத்தை பகிர்ந்து மீண்டும் கடையை நடத்த துவங்கினர். மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.

Saturday, November 7, 2009

ஒளவைப்பாட்டியின் மதிநுட்பம்!


ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும், வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் சிறப்பான நூல்கள் அல்லது பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.

1. சங்க கால ஒளவையார்
2. பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.
3. சோழர் கால ஒளவையார்
4. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்
5. தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.

இப்போது நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். ஒளவையார் மிகவும் மதி நுட்பம் கொண்டவர்.

சோழ அரசர்களுக்கு ஒளவையார் மீது தனிப்பிரியம் இருந்தது. அரசு விழாக்களில் பங்கேற்க ஒளவையாருக்கு எப்போதும் தனி அழைப்பு வந்து விடும்.

அன்றும் அப்படியே, குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி பாடல்களைப் பாடி மன்னரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘வரப்புயர’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்.

இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

என்று பாடி மன்னனை வாழ்த்தி முடித்தார் ஒளவையார். மன்னரும் அவையோரும் பெரு மகிழ்ச்சியடைந்து ஒளவையாரை பாராட்டினார்கள்.

அது சரி 'வரப்புயர' என்ற வார்த்தை மூலம் மன்னனை எப்படி வாழ்த்தினார்? இப்படித்தான்..

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்றும் ஒளவைப் பாட்டி விளக்குகிறார்.

அதாவது மன்னனின் பணி மக்கள் பசிப்பிணி போக்குவதே என்பதையும், விவசாயம் நல்ல முறையில் நிகழ்ந்தால் தான் நாடு சுபிக்ஷமாக இருக்கும் என்றும், ஒரு நாட்டு மன்னனின் பெருமை ஒரு வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே இருக்கிறது என்றும் உணர்த்த ஒரே வார்த்தையாக 'வரப்புயர' என்று சொல்லி பின்னர் விளக்கியிருக்கிறார் ஒளவையார்.

இதிலிருந்து ஒளவைப்பாட்டி உழவுத் தொழில் நுட்பத்தை பற்றியும் நன்கு உணர்ந்தவர் என்பதையும் ஒரு வார்த்தையின் மூலமே மிகப்பெரிய அர்த்தங்களை உணர்த்துவதில் மிகுந்த மதிநுட்பம் கொண்டவர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா!

நம் கலாச்சாரத்தில் பெண்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை. ஆணோ பெண்ணோ அவரவர் பெற்ற ஞானத்திற்கும் அறிவுக்கும் தகுந்த மரியாதை எக்காலத்திற்கும் கிட்டும் என்பதற்கு ஒளவைப்பாட்டியே சான்று.

Friday, November 6, 2009

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ' இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்' என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.

சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ' என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?' என்றார்.

சீடரோ திகைப்புடன் ' என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?' என்றார்.

சுவாமிஜியோ 'படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.

சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.

சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.

சீடர் புத்தகத்தை வைத்து விட்டு 'இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!' என்றார்.

ஆனால் சுவாமிஜியோ 'ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன' என்றார்.

இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.

இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.

ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.

இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.

எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) அவசியம்.

- சுவாமி விவேகானந்தர்.