Wednesday, July 31, 2013

அறம் இல்லாத துறை - 3



இடிந்த நிலையில் பாதுகாக்கப்படாமல் குப்பை மேடாக இருக்கும் தரங்கம்பாடி கைலாசநாதர் கோயில்

அறநிலையத்துறையின் செயல்பாடுகளும் அதிலிருக்கும் குறைபாடுகளையும் தொடர்ந்து பார்த்து வந்தோம். இது குறித்து ஒரு முக்கியமான தகவல் 30.07.2013 தினமலர் செய்தியில் வெளியானது. அது பற்றி பார்ப்போம்.

செய்தி:

இந்து சமய அறநிலையத்துறை, பொதுநிதி திட்டத்தின் கீழ், எந்த கோவிலுக்கு எவ்வளவு செலவழித்தது என்பது குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்காததுடன், தகவல் கேட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், பதில் அளித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, கோவில்கள், அறநிலையங்கள் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும், வரவு - செலவு திட்டத்தில், "பொதுநல நிதி என்ற தலைப்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு கால பூஜை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், எத்தனை கோவில்களுக்கு, எவ்வளவு செலவழிக்கப்பட்டது போன்ற தகவல்களை அறிந்து, அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய, ஆலய வழிபடுவோர் சங்கம் முடிவு செய்தது. அதற்கு, ஏதுவாக, 2005 முதல், 2012 வரை, பொது நல நிதி மூல செலவழிக்கப்பட்ட தொகை, ஒவ்வொரு இனம் குறித்தும் - கோவில்கள் - அறநிலையங்கள் என, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பாரதி மனோகர் விவரம் கேட்டார். ஆனால், அவர் கேட்ட விவரங்களை தராத இந்து சமய அறநிலையத்துறை, தகவல் கேட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக பதில் அளித்துள்ளது.

அறநிலையத்துறை அனுப்பிய பதில்: மனுதாரர் குறிப்பிட்ட ஒரு கோவில் அல்லது அறநிறுவனம் குறித்து, விவரம் கேட்கவில்லை. ஒட்டுமொத்தமாக, எட்டு ஆண்டுகளில், பொதுநலநிதி வழங்கப்பட்ட, அனைத்து கோவில்களின் பெயர் விவரம் கேட்கப்பட்டுள்ளதால், இதை வழங்க இயலவில்லை. இக்கேள்வி, பணிச்சுமையை உருவாக்கும் உள்நோக்கத்துடன் அமைந்துள்ளது. மேலும், மனித ஆற்றலை பாழாக்கும் வகையில் உள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும் விதத்தில் உள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*
தகவல் அறியும் சட்டம் 2005" ன் கீழ் ஒவ்வொரு துறையும் சில முக்கியத் தகவல்களையும், ஆவணங்களையும் தாமே முன் வந்து தர வேண்டிய தகவல்கள் யாவை என அச் சட்டத்தில் விளக்கமாகக் கூறப்படுள்ளன, மேலும் ஒவ்வொரு துறையும் அத் துறையின் தகவல் வழங்கு அதிகாரிகளின் பெயர், மேல் முறையீட்டு அலுவலர் பெயர் முதலியன பலரும் அறியும்படிச் செய்ய வேண்டும்.

ஒரு தகவல் அறியும் விண்ணப்பத்தைப் பரிசீலித்து கேட்கப்படும் தகவலை கொடுக்காமல் இருக்கும் போதோ அல்லது மறுக்கும் போதோ காரணங்கள் விளக்குவதோடு, அது குறித்து யாருக்கு மேல் முறையீடு செய்யலாம் என்ற விபரமும் தரப்பட வேண்டும். இவை அனைத்தையும் பின்பற்றாத ஒரே தமிழக அரசுத் துறையாக இந்த அறம் நிலையாத துறை பல வருடங்களாக விளங்குகிறது.

மேலும் அறம் அற்ற துறை எப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது எனப்பார்ப்போம்.

தான் வசூலிக்க வேண்டிய குத்தகைத் தொகைகளையும் கட்டிட, நில வாடகைகளையும் வசூலிக்காமல் கோயிலின் நலன்களையும், பழக்க வழக்கங்களையும், ஆகம விதிகளையும் புறந் தள்ளி விட்டு வேறு வழிகளில் பணம் பெற முயல்கின்றது இத்துறை. கோயிலுக்கு வெளியே தயார் செய்யப்பட்டு, ப்ரசாதம் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி விற்கப்படும் "ப்ரசாதக்' கடை வைத்திருப்பவராக இருப்பார். இவருக்கும் இத் துறை அதிகாரிகளுக்கும் எழுதப்படா உடன்படிக்கைகள் சில இருக்கும், அவ்வுடன்படிக்கைகள் காரணமாகவே அந்த நபர் தொடர்ந்து இம் மோசடிக் கடைகளை நடத்தி வருவார்.

பணம் கொடுப்பதால் முன்னுரிமைப் பெற்று கொயிலுக்கு வருபவர்கள் அதர்ம தரிசனம் செய்வது பெரும்பாலும் தமிழ்நாட்டிலும் ஆந்திரமாநிலத்திலும் தான் காணப் பெறுகின்றது. பணம் பெற்று முன்னுரிமை அளிக்கும் இச்செயல் அரசியல் சாசன அடிப்படை உரிமை 25 க்கு விரோதமானது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் சபரிமலைக் கோயிலிலோ அல்லது குருவாயூர் கோயிலிலோ இவ்வநியாயத்தைக் காண முடியாது.

தரிசனக் கட்டணங்கள் போதாவென்று ரூ.5 லட்சம் கொடுத்து ஒரு தங்க அனுமதிச் சீட்டு (GOLD CARD) - இதற்குப் பெயர் புரவலர் திட்டமாம்) இவ் அறமற்ற துறையிடம் இருந்து வாங்கினால் அந்நபரும் அவரைச் சேர்ந்தவர்களும் (ஐந்து பேர்) தமிழ்நாட்டில் எந்தக்கோயிலிலும் வரிசையில் நிற்காமல் சன்னதிக்கு நேராகச் செல்லலாம். இப்பொழுது தமிழக அரசு பிளாட்டினம் கார்ட் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ரூபாய் 1 கோடி மேல் செலுத்துவேருக்கு 10 பேர் வரை இலவசமாக எங்கும் காத்திராமல் கோயில்களில் தரிசனம் செய்யலாம் என்ற திட்டத்தை அறிவித்து இருக்கிறது. மேலும் 15 கோயில்களுக்குச் சொந்தமான விடுதிகளில் இவர்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். இவர்கள் நன்கொடை பெறுவதற்காக கோயிலையும், கோயில் சொத்துக்களையும் இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். பணத்திற்காக இன்னமும் கடவுள் சிலைகளை வாடகைக்கு விடவில்லை என்ற அளவில் நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

தரங்கம்பாடி கைலாசநாதர் கோவில் சீர்படுத்தப்படாமல் இடிந்த நிலையில்

இப்படி வழிபாட்டுத்தலங்களை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அறம் இல்லாத துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது குறித்து ஆலயவழிபடுவோர் சங்கத்தலைவர் சங்கத் தலைவர் திரு ரமேஷ் அவர்கள் கீழ்கண்ட விஷயங்களைத் தெரிவிக்கிறார்.

கோயில்கள் 'அற நிலையங்கள்' என்கிற அடைமொழிக்குட்பட்டதல்ல, அவை 'வழிபாட்டுத்தலங்களே'.

கோயில்கள் அரசாங்கத்தின் அல்லது அற நிலையத்துறையின் சொத்துக்கள் அல்ல. அவை பொதுச்சொத்துக்களும் அல்ல. அவை ஹிந்து சமுதாயங்களுக்குச் சொந்தமானவை.

அறநிலையத்துறைக்கு கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும் அவற்றின் முறையான வருமானங்களை தவறாமல் பெறவே சட்டத்தில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு உள்ளே இவர்களுக்கு சுத்தமாக அதிகாரங்கள் கிடையாது. அவ்வாறு கோயில் உள்விவகாரங்களில் அரசாங்கமோ அறநிலையத் துறையின் அதிகாரிகள் குறுக்கிட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரலாம்.

மைனாரிட்டி மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்துக்களைப் போன்ற மத உரிமைகளே உள்ளன. அவர்களுக்கு என்று வெசேஷ மத உரிமைகள் எதுவும் இல்லை. மைனாரிட்டி மத வழிபாட்டு இடங்களை நிர்வாகம் செய்யாத அரசு ஹிந்து மத வழிபாட்டுத் தலங்களை நிர்வாகம் செய்வது பெரும் மோசடி.

அறநிலையத் துரையினால் பல பழம் பெரும் கோயில்கள் கண்மூடித்தனமாக நாசம் ஆக்கப்பட்டு வருகின்றன. இத்துறையைச் சார்ந்த அதிகாரிகளும், ஸ்தபதிகளும் நம் மன்னர்கள் கட்டிய அரிய கலை அம்சம் மிக்க பாரம்பரிய கோயில்களை சர்வசாதாரணமாக இடித்தும் நாசம் செய்தும் வருகிறார்கள்.இவை எல்லாம் ஹிந்து மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்புக்கள்.

அறநிலையத்துறையின் பெரும் ஊழல்களால் தமிழ்நாட்டு ஹிந்துக் கோயில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5000 கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது என அவர் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...