Thursday, December 14, 2006

சிறுகதை - நம்பிக்கை

சார் உங்களை ஹெட் கூப்பிடறார்,

அப்படியா இதோ போறேன்..

கதவை திறந்து உள்ளே போனேன்..

"வாங்க சார்"! என்று வேகமாக அழைத்தார் பாண்டியன். அவர் தான் எங்கள் புராஜக்ட் ஹெட். "மிஸ்டர் மணி, ஹெட் ஆபீஸ்ல சொல்லி க்ளையண்ட் கிட்ட பேசிட்டோம்
ப்ரொஜக்ட் முடிக்க அவகாசம் குடுத்திருக்காங்களாம். அதனால இன்னும் ஒரு வாரம் நமக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள வேலையை முடிச்சு குடுத்திடீங்கன்னா நல்லாருக்கும்..என்ன சார் ஓகேயா?

உடனே யெஸ் சார்ன்னு சொன்னேன்.

"சே! கேக்க வேண்டியதை கேக்காம சரின்னு சொல்லிட்டேனே.." மனஸுக்குள்ள நினைச்சிக்கிட்டேன்.

"என்ன மணி யோசிக்கிறீங்க?" அதற்க்குள் அவரே கேட்டுவிட்டார்..

"இல்லசார் வந்து...ஒரு மூணு நாள் லீவு வேணும்.."
"லீவா! எதுக்கு?"
"வந்து சார் என் மாமனார்க்கு அறுபதாம் கல்யாணம்..கண்டிப்பா ஊருக்கு போகவேண்டியிருக்கு அதான்..."

"என்ன மணி இது இப்படியெல்லாம் கேக்கறீங்க.."
"உங்களுக்கு தான் நல்லா தெரியுமில்ல..நாம எவ்வளோ நெருக்கடியில் இருக்கோம்..."

"அதில்ல சார்...மனைவி வீட்ல பெரிய குடும்பம் ..எல்லோரும் வந்து நான் மட்டும் போகலைன்னா நல்லா இருக்காது அதான் ..எதாவது அட்ஜஸ் பண்ண முடியுமான்னு..
"நோ சான்ஸ் மணி, இப்படி யெல்லாம் கேக்காதிங்க, போய் வேலையப்பருங்க.."

"யெஸ் சார்.."


ச்சே! இதுக்கு கேக்காமலே இருந்திருக்கலாம்... என என்னை நானே நொந்து கொண்டு என் இருக்கையில் சென்று உட்கார்ந்தேன். மானிட்டரையே வெறித்து பார்த்து கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பினார் பாலு.

"என்ன மணி லீவு கேக்கணும்ன்னு பொனீங்களே என்ன ஆச்சு?"

"போங்க சார், ஆ ஊன்னா ப்ரோஜக்ட்டு... டார்கெட்டுன்னு சும்மா சொன்னதையே சொல்லி உயிர வாங்கறார்...ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் வேலை செய்யறொம் , மூணு நாள் லீவுக்கு அட்ஜஸ் பன்னமாட்டாங்களா? பொண்டாட்டி என்னன்னா ஊருக்கு சேந்து போனாலே ஆச்சுன்னு உயிர எடுக்கறா. பெரிய எடத்துல கல்யாணம் பண்ணினாலே இப்படித்தான் சொல்றபடியெல்லாம் ஆடனும்.!" என் முழு ஆதங்கத்தையும் கொட்டித்தீர்தேன் அவரிடம்.

"ஏம்பா இதுக்கு போய் பெரிசா நொந்துக்கறே! நாம எல்லாம் ஒய்ட் காலர் ஸ்லேவ்ஸ்...அட்ஜஸ் பண்ணீதான் போகனும்....என்ன லீவு கேட்ட, கெடைக்கல அவ்ளோதானெ!, நாளைக்கு மறுபடியும் கேட்டுப்பாரு. இன்னொரு வாட்டி கேட்டா கொறஞ்சு போய்டுவோமா என்ன?. அவர் ஹெட்டு அவர் கஷ்ட்டம் அவருக்கு..அதனால அப்படி சொல்றாரு நமக்கு தேவையானது கிடைக்கிறவரைக்கும் நாம தானே தம்பி முயற்சி பண்ணனும்..மறுபடி கேளுப்பா ...என்ன?" என்று சொல்லி நகர்ந்தார்.

மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் நான் என்ன பிச்சைக்காரனா, திரும்பி திரும்பி போய் கெஞ்சவா முடியும்.?

அன்று வண்டியை சர்வீஸ் கொடுத்திருந்தேன். போறவழியில் எடுத்துக்கொண்டு போங்க சார், ரெடியாயிடுச்சின்னு மெக்கானிக் சொல்லியிருந்தான். வேறு வழியில்லாமல் பேருந்தில் செல்ல வேண்டியிருந்ததால் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றேன்.

பத்துபேருக்கு மேல் நின்று கொண்டிருந்த கும்பலில் வலது ஓரத்தில் நானும் சென்று சேர்ந்து கொண்டேன். நின்று கொண்டிருந்த நேரத்தில் இடது ஓரத்தில் ஒரு பிச்சைக்கார கிழவர் கண்களில் தட்டுப்பட்டார்.

"நான் என்ன பிச்சைக்காரனா?" என நான் சொன்ன என் குரல் எனக்கே அசரீரியாக எதிரொலித்தது.

"இன்னொரு வாட்டி கேட்டா கொறஞ்சு போய்டுவோமா என்ன?" என்று பாலு சார் சொன்னதும் திரும்பி திரும்பி கேட்டது.

என்னையரியாமல் என் கண்கள் பிச்சைக்காரனிடம் நிலை கொண்டது.

கும்பலில் இருந்த முதல் ஆளிடம் அவன் கையை நீட்டி முகத்தைச் சுருக்கி கண்களை இடுக்கி பார்வயாலேயே பிச்சை கேட்டான்.
அவனும் கையை காற்றாடி போல் அசைத்து இல்லை என்று சொல்லிவிட்டான்.

ஆம், இது பிச்சைக்காரனின் முதல் தோல்வி. பசித்த முகம் ஒட்டிய வயிறு , சக்தி இல்லாத கால்.. இருப்பினும் அவன் துவளவில்லை.
அடுத்த நபரிடம் நகர்ந்தான், ஐயா என்றான் மீண்டும் அதே முகபாவத்துடன். மீண்டும் தோல்வி . இப்பொழுதும் அவன் கால்கள் நகர்ந்தன, மூன்றாம் நபரை நோக்கி .ஐயா என்றான், அந்த நபர் சட்டைப்பையில் உடனே கையை விட்டு துளாவினான். இப்பொழுது பிச்சைக்காரனின் முகத்தில் பிரகாசம் உண்டானது. கண்கள் லேசாக விரிந்தன. கண்டிப்பாக ஒரு ரூபாய் கிடைக்கும் என்று நம்பிக்கை வந்தவனாய் பார்த்தான். ஆனால் துளாவியவன் பைக்குள்ளிருந்து கையை எடுத்து சில்லரை இல்லை என்று சொல்லி வேறு புரம் திரும்பிக்கொண்டான். பிச்சைக்காரனின் சில விநாடி நம்பிக்கையும் பொய்த்துப்போனது.

ஆம் அவனுக்கு ஒரு ரூபாய் அல்ல ஒவ்வொரு ரூபாயும் வருமானம் தானே அன்றைய வயிற்றுக்கு.. மேலும் அவன் கால்கள் நடந்தன. அடுத்தவன் ஏமாற்றவில்லை. இப்போது அவனுக்கு ஒரு ரூபாய் கிடைத்தது. இந்த தருணத்தில் கிடைத்த ஒரு ரூபாயில் அவன் மனம் ஒரு சிறிய பெருமூச்சு விட்டது. சின்ன வெற்றியின் அடையாளம் கண்களில் தெரிந்தது. முகம் சாந்தம் அடைந்தது. ஆனால் அது அவன் வயிற்றுக்கு பத்தாதே..ஆதலால் மீண்டும் முதலில் இருந்து துடங்கினான் அடுத்த ஒரு ரூபாய்க்காக.


இந்த காட்சியையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மனசு கனமானது.
ச்சே! ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு ஒரு முகத்தைப்பர்க்கிறான். உடனே அவன் நிராகரிக்கப்படும் போது ஏமாற்றத்தை அனுபவிக்கிறான். தோல்வியை உணர்கிறான். அடுத்த கனமே மீண்டும் புதிய நம்பிக்கையுடன் அடுத்த முயற்ச்சி செய்கிறான். அவனுடைய தேவை அவனை இந்த அளவிற்க்கு உந்துகிறது. ஒருசில விநாடிகளிலேயே அவனது உணர்வுகள் சந்திக்கும் தோல்வியும் மீண்டும் பூக்கும் நம்பிக்கையும் என்னை சிந்திக்க வைத்தன.

"பட்டினியில் இருப்பவனுக்கே இத்தனை முறை நம்பிக்கை பூக்கும் என்றால், எல்லா சுகத்துடன் வாழ்கிற நான் மூணு நாள் லீவு கிடைக்கலைன்னு இவ்வளவு டென்ஷ்னானேனே. எவ்வளவு பெரிய முட்டாள் நான்! நாளை மறுபடியும் போய் கேட்டுப் பார்ப்போம். நான் கொறஞ்சா போய்டுவேன்...!"
என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே பேருந்து வந்து நின்றது காலியாக. மகிழ்வுடன் ஏறி பயணம் செய்தேன்.

வீடு வரை காலியாக பயணம் செய்தது பேருந்து மட்டுமல்ல ...என் மனதும் தான்!


(இனிதே முற்றும்.)

3 comments:

Anonymous said...

Ice for Boss. "Mani"

Vijay said...

Just started reading your blog. In this story it was great that you got your inspiration from a beggar for hope however the beggar cannot afford to lose his hope it is life and death issue. If he loses hope he will starve. I cannot put it across in english however I felt that this particular phrase "even a beggar is not losing hope...." won't apply for us because we, in this case you are not in life threatening situation. I sincerely apologize if you this that I have gone overboard.

hayyram said...

//"even a beggar is not losing hope...." won't apply for us //

i don think so vijay...

வாழ்க்கை பயம் எல்லோருக்கும் இருக்கும். நிரந்தரம் இல்லாத வாழ்க்கையின் உணர்வை புரிந்து கொண்டால் பிச்சைக்காரனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை. இருக்கும் இடமும் செய்யும் தொழிலும் தான் வித்தியாசம்.

நிறைய பேசலாம் அடிக்கடி வாங்க. உங்க கருத்துக்கு நன்றி