Sunday, April 8, 2012

வாஸ்துவும் முருங்கைக்காயும்!


முன்பெல்லாம் மொத்தமாக சில காய்கறிகள் வாங்கத்தான் பட்ஜெட் போட வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் ஏதாவது ஒரு காய் வாங்க நினைத்தால் கூட அதுக்கு தனித்தனியாக பட்ஜெட் போட வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

முருங்கைக்காய், கருவேற்பிலை, எலுமிச்சை, பச்சை மிளகாய், மனத்தக்காளி போன்ற வீட்டு சமையலுக்கு அடிக்கடி பயன்படும் சில வகைக் காய்கறிகளை வீட்டு நிலத்தில் சிறிதளவு மண் நிலம் இருந்தால் கூட நாம் விதைத்து விடமுடியும். அவற்றை வளர்த்து பயனடைய முடியும். ஆனால் நாம் அதைச் செய்வதில்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் இடங்களைக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சிமெண்ட் போட்டு மூடி விடுகிறோம். ஏன் சிலர் கிணற்றைக் கூட இடித்து மூடி போட்டு மேலே மூடி அந்த சமதளத்தை கார் பார்க்கிங்காக ஆக்கி விடுகிறார்கள்.

இப்படி எல்லோருமே இருக்கும் நிலத்தை உபயோகிக்காமல் மூடி போட்டு மூடி விட்டால் வானத்தில் இருந்தா காய்கறி கொட்டும்? யாரொ ஒருவர் நிலம் வைத்திருக்கிறார், அவர் விளைவித்துக் கொடுப்பார் என்று நம்பி எல்லோருமே சிமெண்ட் போட்டு மண்ணை மூடிவிட்டால் விளைவிக்கப் போவது யாரோ?

வீட்டில் தோட்டம் வைப்பது என்பது இன்றைக்கு ரோஜாப்பூந்தொட்டியை வாங்கி வைப்பதும், பணம் கொட்டும் என்று மணி ப்ளேன்ட் வாங்கிப் படர விடுவதற்கும் என்று ஆகிப்போனது. அன்றாடக் காய்கறிக்கும் பலகோடி மக்கள் சில ஆயிரம் விவசாயிகளை நம்பி இருந்தால் எதிர்காலத்தில் காய்கறி கிடைக்குமா?

உள்ளங்கையளவு நிலம் இருந்தாலும் அதில் அன்றாடத் தேவைக்கான ஏதாவது ஒரு காய்க்கும் செடியை விதைத்து அதிலிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும். சொந்த வீடு வாடகை வீடு என்றில்லாமல் எங்கே வசித்தாலும் அங்கே கொஞ்சம் மண் இருந்தால் அதில் காய் விளையும் செடிகளை விதைத்து அது இலவசமாகக் கொடுக்கும் கொத்துக் கொத்தான காய்களை அனுபவிக்கலாம். பூமி அதற்கு நம்மிடம் காசு வாங்குவதில்லை. 'விதைத்து வை போதும், நாம் தருகிறேன்' என்கிறது. ஆனால் நாம் அதற்கு தயாரில்லை. அதை விட்டு விட்டு காய்கறி விற்பவரை நொந்து கொள்கிறோம்!

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

முருங்கைக் காயும், முருங்கைக் கீரையும் மருத்துவ குணம் கொண்டது என்பர். ஆனால் அதை விதைப்பதை பலர் விரும்புவதில்லை. அவர்கள் கூறும் காரணம் 'அதிலே கம்பளிப் பூச்சி வரும்'. அது கடிக்குமாம்! சார்புயிரி இல்லாமல் எந்தப் பயிரும் விளைவிக்க முடியாது. சார்புயிரி இல்லாமல் எந்த ஜீவனும் வாழவும் முடியாது. மனிதனே ஒரு சார்புயிரி தானே. ஆனால் இதனைப் புரிந்து கொள்ளாமல் முருங்கை மரத்தை வளர்க்க யோசிக்கிறோம்.

அப்படியே யாரேனும் அந்தக்காலத்திலிருந்தே முருங்கை மரம் வளர்த்து வந்து அதிலிருந்து கொத்துக் கொத்தாக முருங்கைக் காய் மற்றும் கீரையை அனுபவித்து வந்திருந்தால் அதற்கும் இப்போது வினை வந்து விட்டது. அதற்குப் பெயர் வாஸ்து!

எந்த வாஸ்து புத்தகத்தில் யார் சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை.., நிறையபேர் வீட்டில் இருந்த முருங்கை மரங்களையெல்லாம் வாஸ்து பிரகாரம் செய்ததாகக் கூறி வெட்டி விடுகிறார்கள். வாஸ்துக்காரர்களுக்கு முருங்கை மரம் மேல் ஏதாவது கோபமா? வேதாளத்திற்கும் முருங்கை மரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நம்பிவிட்டார்களா? அல்லது ஏதாவது ஒரு முருங்கை மரத்தில் அவசரத்துக்கு ஒதுங்கிய வாஸ்துக்காரரின் 'அந்த' இடம் பார்த்து கம்பளிப் பூச்சி விழுந்து தொலைத்ததோ என்னமோ?, பல வீட்டு முருங்கை மரத்திற்கு வாஸ்துக்காரர்கள் இப்போது எமனாகி இருக்கிறார்கள்.

அதுவும் வீட்டில் கொல்லைப் புறத்தில் முருங்கை மரம் இருப்பது வீட்டுக்கு ஆகாது என்றும் பரப்பி வருகிறார்கள் இந்த வாஸ்துக்காரர்கள். வீட்டுக்கொல்லையில் தோட்டம் வைப்பது தானேய்யா காலங்காலமாக நடந்து வருகிறது. வாஸ்தவமாகச் சொன்னால்இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொடுப்பதுதான் வாஸ்து என்பார்கள். ஆனால் இன்றைக்கு வாஸ்துப் பெயரைச் சொல்லி இயற்கையை அழிக்கிறார்கள். இந்த வாஸ்துக்காரர்கள், ஏதேனும் காய்கறி விற்கும் சூப்பர் மார்கெட் காரர்களுக்கு கைக்கூலிகளாக மாறி விட்டார்களா என்றும் தெரியவில்லை. கலிகாலம், எதுவும் நடக்கும்.

இது பற்றிப் பேசும் போது தான் தெரிந்தது, என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு பேர் இதே போல் வாஸ்துக்காரன் சொன்னார் என்று அவரவர் வீடுகளில் இருந்த அருமையாக காய்த்துப் போடும் முருங்கை மரத்தை வெட்டியிருக்கிறார்கள். நான் அவர்களைக் கடிந்து கொண்டேன், "ஏன் சார், ஒரு முருங்கைக்காய் பத்து ரூபாய்க்கி வெளியே விக்குது, ஓசிக்கு கொத்துக் கொத்தா குடுத்துக்கிட்டு இருந்த மரத்தைப் போய் வெட்டிட்டீங்களே!' எப்டி சார் மனசு வந்தது?" என்றேன். ஹி ஹி என அசடு வழிந்தனர்.

இப்போ எதுக்கு இந்தப் பேச்சு என்கிறீர்களா...சொல்றேன்.

இன்று என் பக்கத்து விட்டுக்காரர் காய்கறி விற்கவந்த தள்ளுவண்டிக் காரனை ஏதோ திட்டிக் கொண்டே வந்தார். என்ன வென்று விசாரித்தால்...

"ஈர்குச்சி மாதிரி இருக்கும் ஒரு முருங்கைக்காயை ஏழு ரூபாய்ங்கறான் தம்பி! கொஞ்சம் தடிசா இருக்குதேன்னு இன்னொன்னைக் கேட்டா பத்து ரூபாய்ங்கறான்! முருங்கைக்காய் கெட்ட கேட்டுக்கு பத்துரூபாயா குடுக்றதுநல்லாத்தான் கொள்ளையடிக்றாங்க!" என்று கூறியபடியே உள்ளே சின்றுவிட்டார்.

பின்னே, அவர் கோபம் ஞாயம் தானே! 'முருங்கை கெட்ட கேட்டுக்கு!!' இவ்ளோ விலை கொடுக்க அவரால் முடியுமா?? ஏனெனில், போனவாரம் தான் வாஸ்துவின் பெயரால் அவர் வீட்டுக் கொள்ளையில் இருந்த ரெண்டு முருங்கை மரங்களை வெட்டிக்கொன்றார்.

ஒரு கேள்வி: முருங்கை மரத்தை வெட்டிக் கொன்ற பாவம் வீட்டுக்காரருக்கா? அல்லது வாஸ்து சொன்னவருக்கா?

7 comments:

Arun Ambie said...

கொல்லையை கொள்ளை கொள்ளை என்று எழுதியிருக்கிறீர்களே.... விலைவாசி அந்த அளவு பாதித்துவிட்டதோ??
உங்கள் கேள்விக்கு பதில்: கண்டிப்பாக வாஸ்து சொன்னவருக்கே கொலைப் பாவம் போய்ச் சேரும். தெரியாத விஷயத்தை தன்னை நம்பிக் கேட்பவருக்கு தவறாக வழிகாட்டுவது அவர்தானே!!

gujjan said...

nice share

hayyram said...

///கொல்லையை கொள்ளை கொள்ளை என்று எழுதியிருக்கிறீர்களே.... விலைவாசி அந்த அளவு பாதித்துவிட்டதோ??///

வருகைக்கும் சுட்டியமைக்கும் நன்றி அம்பி! எப்போது பார்த்தாலும் கொள்ளையர்களையும், கொள்ளையையுமே நினைத்துக் கொண்டிருந்தால் எழுத்து தானே இப்படி ஆகிவிடும் போல! பூமி இலவசமாகக் கொடுத்தாலும் ஒரு கருவேற்பிலைச் செடியைக் கூட நட்டு வைக்க நாம் தயாராக இல்லை. நாகரீகத்தின் போக்கை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. பலபேர் சம்பிரதாயத்துக்காகவாவது வீட்டில் துளசி வளர்த்து வந்தார்கள். இப்போது அப்பார்ட்மென்ட் வீட்டில் அதற்கும் இடமில்லை. முருங்கைக்காயை விட வேகமாக கலி முற்றுகிறது.

hayyram said...

மிக்க நன்றி குஜ்ஜன்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : என் வீட்டுத் தோட்டத்தில்

Unknown said...

முருங்கை கன்று விதை விதைக்களாமா? வீட்டு கொள்ளையில்.

Unknown said...

முருங்கை கன்று விதை விதைக்களாமா? வீட்டு கொள்ளையில்.