Showing posts with label கலியுகம். Show all posts
Showing posts with label கலியுகம். Show all posts

Sunday, November 13, 2011

அவன் பெயர் கலியமூர்த்தி !



ஒவ்வொரு யுகங்களிலும் யுக புருஷர்கள் உருவாகி மக்களின் துன்பங்களை களைவார்கள் என்றும் யுகங்களின் இறுதியில் கடவுளே அவதாரமாக வந்து மனிதர்களை வழிநடத்துவார் என்றும் என் வீட்டுப் பெரியோர்கள் உரையாடும் போது அடிக்கடி கூறுவார்கள்.

தற்போது கலியுகம். இந்த யுகத்தில் இறைவன் கலியமூர்த்தியாக அவதரித்து கல்கி அவதாரமாய் வந்து நல்லோர்களை கொடியவர்களிடமிருந்து காத்து ரட்ஷிப்பார் என்று கூறப்படுகிறது. நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகரிக்கும் போது யுக யுகங்களுக்கும் நான் அவதரிப்பேன் என்று கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறான். அதே போல அவதரிப்பானென்றும் நம்பிக்கை கொண்டோர் அநேகம் அநேகம்.

இந்த நம்பிக்கையின் காரணமாகவும் இறைவன் மேலிருக்கும் பக்தியின் வெளிப்பாடாகவும் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு கலியமூர்த்தி என்றும் பெயர் வைப்பதைப் பார்த்திருப்போம்.

எனக்கு கூட அந்தப் பெயரில் ஒருவர் வாய்த்தார், மேலதிகாரியாக. அவதார புருஷனைக் குறிக்கும் பெயரில் இப்படி ஒருவரா? அநேகமாக நான் சொல்லப்போகும் லட்ஷனங்களுடன் அப்படியே பொருந்துமாறு உங்கள் அலுவலகங்களில் கூட யாரேனும் ஒருவராவது அப்படி இருப்பார் என்று நினைக்கிறேன்!

'கலியமூர்த்தி'

அவருடைய துறையில் தான் நான் பணியாற்ற அனுப்பப் படுகிறேன் என்று கேள்விப்பட்ட உடனே உடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னை பரிதாபமாகப் பார்த்தனர்.

'தம்பி, உனக்கு ஏதோ நேரம் சரியில்ல போலிருக்கு, அதான் இப்டியெல்லாம் நடக்குது. ஆனா அது பத்தி கவலப்படாம சாமி மேல பாரத்தப் போட்டு வேலையப் பாரு' என்றார்.

இன்னொருவரோ, 'த பாரு, என்ன நடந்தாலும் வாயே தொறக்காத, அமைதியா வேலையப் பாரு, நமக்கு வேலை தான் முக்கியம்' என்றார்.

மற்றொருவர் 'யப்பா, அவன் கிட்ட வாய குடுக்காத மோசமான ஆளு' என்றார்.

இப்படி பயமுறுத்தும் அளவிற்கு ஒருவர் இருக்கத்தான் முடியுமா? 

அலுவலகத்தில் யாருக்கும் அவர் மீது நல்லபிப்பிராயம் கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்திருப்பார்.

உடன் பணிபுரிகிறவரைப் பற்றி மேலதிகாரிகளிடம் உணர்ச்சி பொங்க கோள் முட்டுவது அவருக்கு காலைக் கடன்களில் ஒன்று. அதைச் செய்யாவிட்டால் அந்த நாள் இனிய நாளாக வாய்க்காதோ என்ற பயம் அவருக்கு.

சரி அவரோடு பிணங்கி நிற்காமல் இணங்கி நின்று நட்புடன் சிரித்துப் பேசினால் இப்படி செய்யமாட்டார் என்று எண்ணுபவருக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிரித்துப் பேசுபவர்கள் பற்றி சிரித்தபடியே கோள்மூட்டுவார். கடுப்படித்தால், காட்டமாக கோள்மூட்டுவார். இதில் யாருக்கும் அவர் பாரபட்சமே பார்ப்பதில்லை.

அவருக்குச் சம்மந்தம் இல்லாத வேலைகளில் கூட மூக்கை நுழைப்பார். தன்னை நம்பித்தான் மொத்த நிறுவனமும் இருப்பதாய் மேலதிகாரிகள் உட்பட அனைவரிடமும் காட்டிக் கொள்வார். அவரிடம் எந்த வேலையையும் கொண்டுபோகவே மற்றவர்கள் பயப்படுவார்கள். காரணம் ஒரு சின்ன தவறைக் கூட பெரிய பிரச்சனையாக மாற்றி அதை அனைவரும் பேசும்படிச் செய்து பின் அந்தப் பிரச்சனைக்கு அவரே தீர்வும் கண்டு தீர்த்தும் வைப்பார்.

இதை சத்தமில்லாமல் அவரே செய்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால் நாம் வேலை செய்கிறோம் என்று நிர்வாகத்திற்குத் தெரியவேண்டும் என்று தத்துவம் பேசுவார்.

மொத்தத்தில் சக நண்பர்களின் சாபங்களை பேரமே பேசாமல் மொத்தமாக வாங்கிக் கொள்ளும் குத்தகைதாரர்.

அன்றைக்கு என்னுடைய முறையை ஆண்டவன் கொடுத்தான் போலும், எழுதிய பேனா மக்கர் செய்ய, காசோலையில் ஒரு எழுத்து அழுந்திப் பதிந்து விட்டது. ஆனால் எழுத்தென்னவோ சரியாக இருந்தாலும் அது மட்டும் திருத்தி எழுதியது போல துருத்திக் கொண்டு நின்றது.

இதுக்கெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று நம்பி கையெழுத்திற்குப் போனால் 'என்னப்பா செக் போட்டிருக்க?' என்றார். ஆகா, ஆரம்பிச்சுட்டாரய்யா என்று நினைத்துக் கொண்டேன்.

'என்ன சார்?'.

'என்ன ஓவர் ரைட் பண்ணிருக்க'

'இல்ல சார் பேனா...

'பேங்க் காரங்க கிட்ட அதெல்லாம் சொல்ல முடியாதுப்பா?'

'எழுத்து க்ளியரா தான் சார் இருக்கு, திருத்தம் இருந்தாதான் செல்லாது'

'நீ யாருய்யா அத சொல்றதுக்கு? உனக்குத் தெரியுமா? செக் ரிட்டன் ஆனா நீயா பதில் சொல்லுவ? என்னயில்ல கேப்பாங்க?'

'பாஸாயிடும் சார்',

ஆகலைன்னா, நீ பதில் சொல்றியா? நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ வா எங்கூட, விருட்டென்று எழுந்து, ஜி எம் ரூமுக்குப் போய்விட்டார்.

'சார், என்ன சார் இந்தப் பையன் இப்டி இருக்கான். செக் போடறது சரியில்லன்னு சொன்னா எங்கிட்டயே ஆர்க்யூ பன்றான் சார்?"

அவ்வளவு தான், அன்றைக்கு சனி என் உச்சந்தலைக்கு மேலே சஞ்சாரித்தது தெரியாமல் இருந்துவிட்டேன் போலும். கேலண்டரில் என் ராசிக்கு என்ன போட்டிருந்தான் என்று பார்த்துவிட்டு கிளம்பியிருக்கலாமோ என்றெல்லாம் தோன்றியது.


அன்று முழுவதும் பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்தேன். மீண்டும் அதே சக நண்பர்கள், அதே பரிதாபப் பார்வை. 'அவன் அப்படித்தான் சகிச்சிக்கோ' என்று அறிவுரைகள்.


பிறகு பல சிறிய காரியங்களுக்குக் கூட உரக்கக்ப் பேசி அவமதிக்கும் செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அலுவலகக் கூடத்தில் ஒருகணம் அனைவரும் திரும்பிப் பார்த்து அமர்வார்கள். மறுத்துப் பேசும் போது ஈகோ அதிகரித்து கோபம் பொங்கினால் சில சமயம்கையை ஓங்கிக்கூட பேசிவிடுவார். அவரை கண்டிக்க ஆள் இருக்காது.


சில சமயங்களில் வாழ்க்கை தரும் அழுத்தத்தால் இது போன்ற கொடுமைகளை எதிர்கொள்ள முடியாத இயலாமையில் இருக்க நேரிடும். இயலாமையினால் ஒரு கொடுமையை எதிர்க்க முடியாமல் போவது மிகவும் பரிதாபத்திற்குரிய தருணம்.

சிலருக்கு இப்படித்தான், யாரையாவது மிகவும் கஷ்டத்தில் ஆழ்த்தி அந்த சங்கடத்தில், அவர்கள் செய்வதறியாது நிற்கும் நிலையில் அவர்களிடம் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளும் மனோபாவம் இருக்கும். உன்னைவிட நான் பெரியவன் என்கிற சுய ஈகோவின் வெற்றிக் கொடிநாட்டி நான் என்கிற அகம்பவத்தை ஆழமாக வெளிப்படுத்தும் குணம் இருக்கும். அந்த குணத்தை இழந்து விட்டால் அத்தகையோர் தாங்கள் உயிருடன் இருப்பதாகவே உணர மாட்டார்கள்.

இத்தனைக் கொடுமைக்காரர்களாக மனிதர்கள் இருக்க முடியுமா?

அதுவும் எப்பொழுதுமே அதே மனநிலையில் இருந்துவிட முடியுமா? கலியுகத்தில் இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கொடுமைக்கு இந்த ஜன்மத்திலேயே தண்டனை கிடைத்து விடுமாமே..! இது போன்ற மனிதர்களுக்கு அப்படி தண்டனை எதுவும் கிடைக்காதா?

எல்லோரும் ஒரே மாதிரி மனிதர்களாக இருக்கும் போது சிலரால் மட்டும் எப்படி இவ்வாறு பிறரை கொடுமை செய்து பார்ப்பவர்களாய் இருக்க முடிகிறது. நான் ஏன் இவரிடம் வந்து மாட்டிக் கொண்டேன்?

நிறைய கேள்விகள் என்னைத் துளைத்தன. ஆனால் என்னைக் கூட ஒருமுறை 'கொடுமை செய்பவன்' என்று எனது பள்ளிக்கூட ஆசிரியை திட்டியது நினைவிற்கு வந்தது.


அரைக்கால் டவுசர் போட்டு பதின்ம வயதை அடுத்த வருடம் அடைந்துவிடும் பருவத்தில் இருந்த காலம்.

பெரியவனாகவும் சிரியவனாகவும் ஒரே நேரத்தில் உணரும் மாணவப் பருவம். மாணவர்களைத் தரையில் அருகருகே உட்கார வைத்து பாடம் நடத்திய பள்ளிக்கூடம் அது.

ரம்யமான காலகட்டம். பத்து பைசாவிற்கு கடுக்காய் பழமும், நாலணாவிற்கு கொடிக்காய் புளியும் கைநிறைய வாங்கி ஆளுக்குக் கொஞ்சமாய் பகிர்ந்துண்ட பள்ளிக்காலம்.

மாங்காய் கீற்றை உப்புதடவிச் சுவைக்கவும், முழுநெல்லிக்காயை வாயாலே தவில் போல செதுக்கி அதை கையிலெடுத்து மீண்டும் சுவைப்பதுமாய் கழிந்த பருவங்கள்.

யாருக்கும் மறக்க முடியாத எளிதாய் மனதிலிருந்து அழிக்கமுடியாத காலகட்டம் என்று இருக்குமானால் அது பள்ளிப்பருவமாகத்தான் இருக்க முடியும்.

அன்று அனைவரும் வகுப்பு மாறி உட்கார்ந்தோம். இனி முழு வருஷமும் அங்கே தான் வகுப்பு நடக்கும் என்றார்கள். இதுவரை அருகே இருந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில். இப்போது அருகே இருப்பவனைப் பார்த்தேன். சிரித்தான். நானும் சிரித்தேன்.

அவனுக்கு என்னைப் பிடித்திருந்தது. ஏனோ எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. காரணம் தெரியாது. பிடிக்கும், பிடிக்காது என்பதைத் தவிற ஏன் எதற்கு என்று யோசிக்கத் தெரியாத பருவம்.

ஆனால் நல்ல பையனாக இருந்தான். பாவமாக இருந்தான். மிகவும் மெலிந்த சன்னமான குரலில் பேசுபவனாக இருந்தான். தொள தொள என்ற சதையுடன் குண்டாக இருப்பான். அதற்கு காரணம் உண்டு. அவன் சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவன் என்று ஆசிரியை மற்றவர்களிடம் கூறக்கேட்டேன்.

அவன் பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்குப் போகும் போதும் அவன் வீட்டு வழியே போகும் பள்ளிச் சிறுவர்களில் யாராவது அவனை கைத்தாங்கலாகப் பிடித்து கூட்டிப்போவார்கள். அதே போல பள்ளிக்கு வரும் போதும் கூட்டி வருவார்கள்.

சில நேரங்களில் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் முதுகில் சுமந்தும் அழைத்துப் போகும் சிறுவர்கள் உண்டு.

ஆனால் அப்படிப்பட்டவனிடம் எனக்கு எந்த வித கரிசனமோ, பரிதாபமோ, பாசமோ தோன்றியிருக்கவில்லை. காரணம் அந்த வாடை.

அவனிடம் ஒரு கெட்ட சுபாவம் இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் எப்பம் விட்டுக் கொண்டே இருப்பான். அது வனது வியாதியா, வயிற்றுக் கோளாரா என்றே தெரியாது. அவனது பெற்றோர்களுக்கு அது பற்றித் தெரியுமா, அல்லது அவனுக்கே கூட தனக்கு ஏன் அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருக்கிறது என்கிற யோசனை வந்ததா என்றும் தெரியாது.

ஆனால் ஏப்பம் விட்டுக் கொண்டே இருப்பான். சத்தமில்லாமல் அடிவயிற்றிலிருந்து. அதில் என்னக்கென்ன பிரச்சனை இருந்தது? ஆம், கவுச்சி வாடை என்று கூறுவார்களே அது தான். ஒவ்வொரு முறையும் அவனிடமிருந்து வெளிவரும் கவுச்சி வாடை அறவே பிடிக்காமல் போனது. அதனால் அவனையும் பிடிக்காமல் போனது.

இதை ஒரு பிரச்சனையாக வெளியே சொல்லவும் வெட்கமாக இருந்ததால், எனது 'பிடிக்காது' என்னும் குணம் வெறுப்பாகவே மாறியிருந்தது.

அந்த வெறுப்பின் காரணமாக அவன் எப்பொழுதெல்லாம் ஏப்பம் விடுகிறானோ அப்போதெல்லாம் அவனைக் நறுக்கென்று கிள்ளி விடுவேன்.

அவன் ஒரு பாவம். அவனால் எதிர்க்க முடியாது. எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான். ஆனால் வலிக்கும், முகத்தை சுளித்துக் கொள்வான். அவனால் ஏப்பத்தை அடக்க முடியாது. அதனால் அடிக்கடி என்னிடம் கிள்ளு வாங்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் கிள்ளுவதில் அழுத்தம் அதிகரிக்கும். 'கிள்ளாதே, வலிக்குது' என்று பாவமாய் தனது சன்னமான மெல்லிய குரலில் பேசுவான். இப்போதெல்லாம் அந்த நாட்களை நினைத்தால் எனக்கே வருத்தமாக இருக்கும். காரணம் இயலாமையினால் ஒரு கொடுமையை எதிர்க்க முடியாமல் போவது மிகவும் பரிதாபத்திற்குரிய தருணம். 

ஒரு முறை நான் கிள்ளுவதையும், அவன் கிள்ளாதே, ஐயோ வலிக்குது என்று வலிதாங்காமல் சத்தமாகச் சொல்லுவதையும் ஆசிரியை பார்த்து விட்டார். அவருக்கு அந்தப் பையன் மீது கருணை ஜாஸ்தி.

அவருக்கு கடுமையாக கோபம் வந்தது. 'ஏண்டா அந்த புள்ளைய போட்டு 'கொடுமை பன்ற', நானும் அப்போதேருந்து பாத்துக்கிட்டிருக்கேன், கைய வெச்சிக்கிட்டு சும்ம இருக்க மாட்டே.....அடி வேணுமா உனக்கு? இன்னொரு முறை அவன் மேல கைய வெச்சன்னா பெரம்பு பிஞ்சிரும் ஜாக்கிரதை!' என்றார் கடுமையான முறைப்புடன்.

வருத்தமும் அவமானமுமாக அவன் முகத்தைத் திரும்பி பார்த்தேன்.

இதுவரை இல்லாத பிரகாசமாய் அவன் என்னைப் பார்த்தான். 'நல்லா வேணும்' என்பதைப் போல இருந்தது அந்தப் பார்வை.

வாயெல்லாம் பற்களாகத் தெரிய சிரித்தான்.

அவன் பெயர் 'கலியமூர்த்தி' !
.

Monday, May 24, 2010

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!


மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி!



தூர்தர்ஷனில் முன்பு ஒளிபரப்பிக் கொண்டிருந்த மகாபாரதத்தில் காட்சி ஆரம்பிக்கும் போது ஒரு சக்கரம் சுழலும். 'நான் காலம் பேசுகிறேன்' என்று பின்னனியில் குரல் ஒலிப்பதாகக் காண்பித்திருப்பார்கள்!

சாந்தனு மகராஜனில் துவங்கி பல தலை முறைகளைக் கடந்து கதை சொல்லப்படும் போதும் அதே காலம் அதே குரலில் பேசிக்கொண்டிருக்கும். ஒரு இதிகாசத்தை படமாக்கும் போதும் வெறுமனே வர்த்தக எண்ணத்துடன் மட்டுமே படமாக்காமல் அந்த இதிகாசத்தின் மகிமையை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி ஒரு அற்புதமான விஷயத்தை இதிகாசத்துடன் இனைத்து காட்ட முடியும். ஆம்! காலம். அது என்றைக்கும் இருக்கக் கூடியது. மைக்ரோ முதல் மாக்ரோ வரை எந்த ரூபத்திலும் நிலையான இயக்கத்துடன் இருப்பது காலம் ஒன்று மட்டுமே.

அத்தகைய காலத்தையும் அதன் சுழற்சியையும் யாரும் ஒரு வாழ்க்கை பருவத்தில் கணித்து விட முடியாது. பல முறை பிறப்பெடுத்து ஒவ்வொரு முறையும் விட்ட இடத்திலிருந்து ஆராய்ந்து மேலும் மேலும் உணர்ந்தறிபவர்கள் மட்டுமே காலத்தின் சுழற்சியை முழுமையாக கண்டறிய முடியும். அப்படி உணர்ந்து பார்த்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்டதாகக் கூறப்படுவதே நாம் பார்க்கும் நாள், வருடம், யுகம் போன்ற காலக்கணக்குகள். சூரிய உதயத்தின் அனு அளவு காலத்தில் துவங்கி யுகக் கணக்கு வரை இப்படி துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள்.

சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.
நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது. மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது. வருடம் என்றால், பூமி சூரியனை சுற்றும் ஒரு முழுச்சுற்று.

இப்படிப்பட்ட காலக்கணக்கின் படி தான் பஞ்சாங்கம் மற்றும் ஜோடித ஸாஸ்திரங்கள் கணிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இப்படியே வருடங்கள் சுற்றி சுற்றி லட்சக்கனக்கான வருடங்கள் ஆனால் அதை யுகம் என்கிறார்கள். சரி அப்படி எத்தனை வருடங்கள் சுற்றினால் ஒரு யுகம் வருகிறது என்றும் என்னென்ன யுகங்கள் எத்தனை வருடங்கள் என்றும் பார்க்கலாம்!

கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்

திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)

துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)

கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.

(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.

அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

ஆம், காலம் சக்கரம் அல்லவா!

இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..

கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.

கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.

பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.

பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.

மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.

மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.

பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.

அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)

ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.

மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.

ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)

ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.

மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.

அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.

புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.

மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.

தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)

திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!

அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.


உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!

இந்தப் படத்துக்கும் கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!


ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.

பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.

கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.

பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
(அடிமாடு கொண்டு செல்லும் லாரியைப் பார்த்தாலே தெரிகிறதே)

ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.

சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.

மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
(வன்னி மரங்கள் எப்படி இருக்கும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

இப்படியெல்லாம் நடக்குமாம். இவற்றில் தற்காலத்தில் எவையெல்லாம் கலியுகத்திற்கு பொருத்தமாக நடக்கிறது என்று யோசித்துக் கூறுங்கள் பார்ப்போம்.



கல்கி வருவாரோ இல்லையோ கலியுகத்தில் நாம் காலத்தை ஓட்ட வேண்டுமே!

கொசுறு: தொலைக்காட்சிகள் கூட்டாக சேர்ந்து மறைக்கும் அதிர்ச்சி தகவல் -
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளைக் கடந்தி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஒரு பாதிரியாரும் அடக்கம். செய்தி இங்கே

கலிகாலத்தில் இப்படித்தான் நடக்குமாமே! ஈஸ்வரோ ரக்ஷது!