Sunday, November 13, 2011

அவன் பெயர் கலியமூர்த்தி !



ஒவ்வொரு யுகங்களிலும் யுக புருஷர்கள் உருவாகி மக்களின் துன்பங்களை களைவார்கள் என்றும் யுகங்களின் இறுதியில் கடவுளே அவதாரமாக வந்து மனிதர்களை வழிநடத்துவார் என்றும் என் வீட்டுப் பெரியோர்கள் உரையாடும் போது அடிக்கடி கூறுவார்கள்.

தற்போது கலியுகம். இந்த யுகத்தில் இறைவன் கலியமூர்த்தியாக அவதரித்து கல்கி அவதாரமாய் வந்து நல்லோர்களை கொடியவர்களிடமிருந்து காத்து ரட்ஷிப்பார் என்று கூறப்படுகிறது. நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகரிக்கும் போது யுக யுகங்களுக்கும் நான் அவதரிப்பேன் என்று கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறான். அதே போல அவதரிப்பானென்றும் நம்பிக்கை கொண்டோர் அநேகம் அநேகம்.

இந்த நம்பிக்கையின் காரணமாகவும் இறைவன் மேலிருக்கும் பக்தியின் வெளிப்பாடாகவும் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு கலியமூர்த்தி என்றும் பெயர் வைப்பதைப் பார்த்திருப்போம்.

எனக்கு கூட அந்தப் பெயரில் ஒருவர் வாய்த்தார், மேலதிகாரியாக. அவதார புருஷனைக் குறிக்கும் பெயரில் இப்படி ஒருவரா? அநேகமாக நான் சொல்லப்போகும் லட்ஷனங்களுடன் அப்படியே பொருந்துமாறு உங்கள் அலுவலகங்களில் கூட யாரேனும் ஒருவராவது அப்படி இருப்பார் என்று நினைக்கிறேன்!

'கலியமூர்த்தி'

அவருடைய துறையில் தான் நான் பணியாற்ற அனுப்பப் படுகிறேன் என்று கேள்விப்பட்ட உடனே உடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னை பரிதாபமாகப் பார்த்தனர்.

'தம்பி, உனக்கு ஏதோ நேரம் சரியில்ல போலிருக்கு, அதான் இப்டியெல்லாம் நடக்குது. ஆனா அது பத்தி கவலப்படாம சாமி மேல பாரத்தப் போட்டு வேலையப் பாரு' என்றார்.

இன்னொருவரோ, 'த பாரு, என்ன நடந்தாலும் வாயே தொறக்காத, அமைதியா வேலையப் பாரு, நமக்கு வேலை தான் முக்கியம்' என்றார்.

மற்றொருவர் 'யப்பா, அவன் கிட்ட வாய குடுக்காத மோசமான ஆளு' என்றார்.

இப்படி பயமுறுத்தும் அளவிற்கு ஒருவர் இருக்கத்தான் முடியுமா

அலுவலகத்தில் யாருக்கும் அவர் மீது நல்லபிப்பிராயம் கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்திருப்பார்.

உடன் பணிபுரிகிறவரைப் பற்றி மேலதிகாரிகளிடம் உணர்ச்சி பொங்க கோள் முட்டுவது அவருக்கு காலைக் கடன்களில் ஒன்று. அதைச் செய்யாவிட்டால் அந்த நாள் இனிய நாளாக வாய்க்காதோ என்ற பயம் அவருக்கு.

சரி அவரோடு பிணங்கி நிற்காமல் இணங்கி நின்று நட்புடன் சிரித்துப் பேசினால் இப்படி செய்யமாட்டார் என்று எண்ணுபவருக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிரித்துப் பேசுபவர்கள் பற்றி சிரித்தபடியே கோள்மூட்டுவார். கடுப்படித்தால், காட்டமாக கோள்மூட்டுவார். இதில் யாருக்கும் அவர் பாரபட்சமே பார்ப்பதில்லை.

அவருக்குச் சம்மந்தம் இல்லாத வேலைகளில் கூட மூக்கை நுழைப்பார். தன்னை நம்பித்தான் மொத்த நிறுவனமும் இருப்பதாய் மேலதிகாரிகள் உட்பட அனைவரிடமும் காட்டிக் கொள்வார். அவரிடம் எந்த வேலையையும் கொண்டுபோகவே மற்றவர்கள் பயப்படுவார்கள். காரணம் ஒரு சின்ன தவறைக் கூட பெரிய பிரச்சனையாக மாற்றி அதை அனைவரும் பேசும்படிச் செய்து பின் அந்தப் பிரச்சனைக்கு அவரே தீர்வும் கண்டு தீர்த்தும் வைப்பார்.

இதை சத்தமில்லாமல் அவரே செய்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால் நாம் வேலை செய்கிறோம் என்று நிர்வாகத்திற்குத் தெரியவேண்டும் என்று தத்துவம் பேசுவார்.

மொத்தத்தில் சக நண்பர்களின் சாபங்களை பேரமே பேசாமல் மொத்தமாக வாங்கிக் கொள்ளும் குத்தகைதாரர்.

அன்றைக்கு என்னுடைய முறையை ஆண்டவன் கொடுத்தான் போலும், எழுதிய பேனா மக்கர் செய்ய, காசோலையில் ஒரு எழுத்து அழுந்திப் பதிந்து விட்டது. ஆனால் எழுத்தென்னவோ சரியாக இருந்தாலும் அது மட்டும் திருத்தி எழுதியது போல துருத்திக் கொண்டு நின்றது.

இதுக்கெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று நம்பி கையெழுத்திற்குப் போனால் 'என்னப்பா செக் போட்டிருக்க?' என்றார். ஆகா, ஆரம்பிச்சுட்டாரய்யா என்று நினைத்துக் கொண்டேன்.

'என்ன சார்?'.

'என்ன ஓவர் ரைட் பண்ணிருக்க'

'இல்ல சார் பேனா...

'பேங்க் காரங்க கிட்ட அதெல்லாம் சொல்ல முடியாதுப்பா?'

'எழுத்து க்ளியரா தான் சார் இருக்கு, திருத்தம் இருந்தாதான் செல்லாது'

'நீ யாருய்யா அத சொல்றதுக்கு? உனக்குத் தெரியுமா? செக் ரிட்டன் ஆனா நீயா பதில் சொல்லுவ? என்னயில்ல கேப்பாங்க?'

'பாஸாயிடும் சார்',

ஆகலைன்னா, நீ பதில் சொல்றியா? நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ வா எங்கூட, விருட்டென்று எழுந்து, ஜி எம் ரூமுக்குப் போய்விட்டார்.

'சார், என்ன சார் இந்தப் பையன் இப்டி இருக்கான். செக் போடறது சரியில்லன்னு சொன்னா எங்கிட்டயே ஆர்க்யூ பன்றான் சார்?"

அவ்வளவு தான், அன்றைக்கு சனி என் உச்சந்தலைக்கு மேலே சஞ்சாரித்தது தெரியாமல் இருந்துவிட்டேன் போலும். கேலண்டரில் என் ராசிக்கு என்ன போட்டிருந்தான் என்று பார்த்துவிட்டு கிளம்பியிருக்கலாமோ என்றெல்லாம் தோன்றியது.


அன்று முழுவதும் பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்தேன். மீண்டும் அதே சக நண்பர்கள்அதே பரிதாபப் பார்வை. 'அவன் அப்படித்தான் சகிச்சிக்கோஎன்று அறிவுரைகள்.


பிறகு பல சிறிய காரியங்களுக்குக் கூட உரக்கக்ப் பேசி அவமதிக்கும் செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அலுவலகக் கூடத்தில் ஒருகணம் அனைவரும் திரும்பிப் பார்த்து அமர்வார்கள். மறுத்துப் பேசும் போது ஈகோ அதிகரித்து கோபம் பொங்கினால் சில சமயம்கையை ஓங்கிக்கூட பேசிவிடுவார். அவரை கண்டிக்க ஆள் இருக்காது.


சில சமயங்களில் வாழ்க்கை தரும் அழுத்தத்தால் இது போன்ற கொடுமைகளை எதிர்கொள்ள முடியாத இயலாமையில் இருக்க நேரிடும். இயலாமையினால் ஒரு கொடுமையை எதிர்க்க முடியாமல் போவது மிகவும் பரிதாபத்திற்குரிய தருணம்.

சிலருக்கு இப்படித்தான், யாரையாவது மிகவும் கஷ்டத்தில் ஆழ்த்தி அந்த சங்கடத்தில், அவர்கள் செய்வதறியாது நிற்கும் நிலையில் அவர்களிடம் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளும் மனோபாவம் இருக்கும். உன்னைவிட நான் பெரியவன் என்கிற சுய ஈகோவின் வெற்றிக் கொடிநாட்டி நான் என்கிற அகம்பவத்தை ஆழமாக வெளிப்படுத்தும் குணம் இருக்கும். அந்த குணத்தை இழந்து விட்டால் அத்தகையோர் தாங்கள் உயிருடன் இருப்பதாகவே உணர மாட்டார்கள்.

இத்தனைக் கொடுமைக்காரர்களாக மனிதர்கள் இருக்க முடியுமா?

அதுவும் எப்பொழுதுமே அதே மனநிலையில் இருந்துவிட முடியுமா? கலியுகத்தில் இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கொடுமைக்கு இந்த ஜன்மத்திலேயே தண்டனை கிடைத்து விடுமாமே..! இது போன்ற மனிதர்களுக்கு அப்படி தண்டனை எதுவும் கிடைக்காதா?

எல்லோரும் ஒரே மாதிரி மனிதர்களாக இருக்கும் போது சிலரால் மட்டும் எப்படி இவ்வாறு பிறரை கொடுமை செய்து பார்ப்பவர்களாய் இருக்க முடிகிறது. நான் ஏன் இவரிடம் வந்து மாட்டிக் கொண்டேன்?

நிறைய கேள்விகள் என்னைத் துளைத்தன. ஆனால் என்னைக் கூட ஒருமுறை 'கொடுமை செய்பவன்' என்று எனது பள்ளிக்கூட ஆசிரியை திட்டியது நினைவிற்கு வந்தது.


அரைக்கால் டவுசர் போட்டு பதின்ம வயதை அடுத்த வருடம் அடைந்துவிடும் பருவத்தில் இருந்த காலம்.

பெரியவனாகவும் சிரியவனாகவும் ஒரே நேரத்தில் உணரும் மாணவப் பருவம். மாணவர்களைத் தரையில் அருகருகே உட்கார வைத்து பாடம் நடத்திய பள்ளிக்கூடம் அது.

ரம்யமான காலகட்டம். பத்து பைசாவிற்கு கடுக்காய் பழமும், நாலணாவிற்கு கொடிக்காய் புளியும் கைநிறைய வாங்கி ஆளுக்குக் கொஞ்சமாய் பகிர்ந்துண்ட பள்ளிக்காலம்.

மாங்காய் கீற்றை உப்புதடவிச் சுவைக்கவும், முழுநெல்லிக்காயை வாயாலே தவில் போல செதுக்கி அதை கையிலெடுத்து மீண்டும் சுவைப்பதுமாய் கழிந்த பருவங்கள்.

யாருக்கும் மறக்க முடியாத எளிதாய் மனதிலிருந்து அழிக்கமுடியாத காலகட்டம் என்று இருக்குமானால் அது பள்ளிப்பருவமாகத்தான் இருக்க முடியும்.

அன்று அனைவரும் வகுப்பு மாறி உட்கார்ந்தோம். இனி முழு வருஷமும் அங்கே தான் வகுப்பு நடக்கும் என்றார்கள். இதுவரை அருகே இருந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில். இப்போது அருகே இருப்பவனைப் பார்த்தேன். சிரித்தான். நானும் சிரித்தேன்.

அவனுக்கு என்னைப் பிடித்திருந்தது. ஏனோ எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. காரணம் தெரியாது. பிடிக்கும், பிடிக்காது என்பதைத் தவிற ஏன் எதற்கு என்று யோசிக்கத் தெரியாத பருவம்.

ஆனால் நல்ல பையனாக இருந்தான். பாவமாக இருந்தான். மிகவும் மெலிந்த சன்னமான குரலில் பேசுபவனாக இருந்தான். தொள தொள என்ற சதையுடன் குண்டாக இருப்பான். அதற்கு காரணம் உண்டு. அவன் சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவன் என்று ஆசிரியை மற்றவர்களிடம் கூறக்கேட்டேன்.

அவன் பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்குப் போகும் போதும் அவன் வீட்டு வழியே போகும் பள்ளிச் சிறுவர்களில் யாராவது அவனை கைத்தாங்கலாகப் பிடித்து கூட்டிப்போவார்கள். அதே போல பள்ளிக்கு வரும் போதும் கூட்டி வருவார்கள்.

சில நேரங்களில் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் முதுகில் சுமந்தும் அழைத்துப் போகும் சிறுவர்கள் உண்டு.

ஆனால் அப்படிப்பட்டவனிடம் எனக்கு எந்த வித கரிசனமோ, பரிதாபமோ, பாசமோ தோன்றியிருக்கவில்லை. காரணம் அந்த வாடை.

அவனிடம் ஒரு கெட்ட சுபாவம் இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் எப்பம் விட்டுக் கொண்டே இருப்பான். அது வனது வியாதியா, வயிற்றுக் கோளாரா என்றே தெரியாது. அவனது பெற்றோர்களுக்கு அது பற்றித் தெரியுமா, அல்லது அவனுக்கே கூட தனக்கு ஏன் அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருக்கிறது என்கிற யோசனை வந்ததா என்றும் தெரியாது.

ஆனால் ஏப்பம் விட்டுக் கொண்டே இருப்பான். சத்தமில்லாமல் அடிவயிற்றிலிருந்து. அதில் என்னக்கென்ன பிரச்சனை இருந்தது? ஆம், கவுச்சி வாடை என்று கூறுவார்களே அது தான். ஒவ்வொரு முறையும் அவனிடமிருந்து வெளிவரும் கவுச்சி வாடை அறவே பிடிக்காமல் போனது. அதனால் அவனையும் பிடிக்காமல் போனது.

இதை ஒரு பிரச்சனையாக வெளியே சொல்லவும் வெட்கமாக இருந்ததால், எனது 'பிடிக்காது' என்னும் குணம் வெறுப்பாகவே மாறியிருந்தது.

அந்த வெறுப்பின் காரணமாக அவன் எப்பொழுதெல்லாம் ஏப்பம் விடுகிறானோ அப்போதெல்லாம் அவனைக் நறுக்கென்று கிள்ளி விடுவேன்.

அவன் ஒரு பாவம். அவனால் எதிர்க்க முடியாது. எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான். ஆனால் வலிக்கும், முகத்தை சுளித்துக் கொள்வான். அவனால் ஏப்பத்தை அடக்க முடியாது. அதனால் அடிக்கடி என்னிடம் கிள்ளு வாங்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் கிள்ளுவதில் அழுத்தம் அதிகரிக்கும். 'கிள்ளாதே, வலிக்குது' என்று பாவமாய் தனது சன்னமான மெல்லிய குரலில் பேசுவான். இப்போதெல்லாம் அந்த நாட்களை நினைத்தால் எனக்கே வருத்தமாக இருக்கும். காரணம் இயலாமையினால் ஒரு கொடுமையை எதிர்க்க முடியாமல் போவது மிகவும் பரிதாபத்திற்குரிய தருணம். 

ஒரு முறை நான் கிள்ளுவதையும், அவன் கிள்ளாதே, ஐயோ வலிக்குது என்று வலிதாங்காமல் சத்தமாகச் சொல்லுவதையும் ஆசிரியை பார்த்து விட்டார். அவருக்கு அந்தப் பையன் மீது கருணை ஜாஸ்தி.

அவருக்கு கடுமையாக கோபம் வந்தது. 'ஏண்டா அந்த புள்ளைய போட்டு 'கொடுமை பன்ற', நானும் அப்போதேருந்து பாத்துக்கிட்டிருக்கேன், கைய வெச்சிக்கிட்டு சும்ம இருக்க மாட்டே.....அடி வேணுமா உனக்கு? இன்னொரு முறை அவன் மேல கைய வெச்சன்னா பெரம்பு பிஞ்சிரும் ஜாக்கிரதை!' என்றார் கடுமையான முறைப்புடன்.

வருத்தமும் அவமானமுமாக அவன் முகத்தைத் திரும்பி பார்த்தேன்.

இதுவரை இல்லாத பிரகாசமாய் அவன் என்னைப் பார்த்தான். 'நல்லா வேணும்' என்பதைப் போல இருந்தது அந்தப் பார்வை.

வாயெல்லாம் பற்களாகத் தெரிய சிரித்தான்.

அவன் பெயர் 'கலியமூர்த்தி' !
.

1 comment:

Jayachandran said...

என்ன தோழா, இப்பத்தான் பண்ணுண பாவத்தோட பலன் தெரியுதா.....

உங்க சீனியர் கலியாமூர்தியை நான் நலம் விசாரித்தாக கூறவும்....