Showing posts with label முல்லா நசுரிதீன். Show all posts
Showing posts with label முல்லா நசுரிதீன். Show all posts

Tuesday, April 21, 2009

முல்லா நசுரிதீன் கதைகள்


முல்லா வசித்த ஊரில் நெடு நாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. 

மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர்.  

"தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் ஒருவர் என் கண்ணில் படவில்லை. அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை" என்று மன்னர் பதிலளித்தார்.  

இந்தச் செய்தியை முல்லா அறிந்தார்.  

ஒரு நாள் காலை முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக்கொண்டு இருந்தார்.  

அரண்மனை உப்பரிகையில் இருந்து இந்த காட்சியைப் பார்த்த மன்னர், தனது பணியாளரை அனுப்பி முல்லாவை அழைத்து வரச்சொன்னார்.  

"முல்லா நீர் ஏன் இப்படி மீன் பிடிக்கும் வலையைப் போர்த்திக் கொண்டு உலவுகிறீர்?" என்று கேட்டார்.  

"மன்னர் அவர்களே, நான் அந்த காலத்தில் மீன் பிடிக்கும் தொழில் தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகக் கருதக்கூடாது என்பதற்க்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன்" என்று கூறினார் முல்லா.  

இத்தனைக் காலமாக நாம் தேடிக்கொண்டிருந்த அடக்கமான மனிதர் முல்லா தான் என்று மன்னர் நினைத்தார். அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார்.  

சில நாட்கள் கழித்து மன்னர் உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்பொழுது முல்லா மீன் வலை இல்லாமல் வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.  

உடனே முல்லாவை வரவழைத்து "என்ன முல்லா மீன் வலையைக் காணோம்" என்று கேட்டார்.  

உடனே முல்லா "மன்னர் பெருமானே மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு?" என்றார்.  

முல்லா மீன் என்று சொன்னது நீதிபதி பதவியை என்பது மன்னருக்குப் புரியவில்லை.