Tuesday, January 14, 2014

பிராமணர்களும் சிறுதெய்வங்களும்!

- ஞானதேசிகன்

மதுரகாளி அம்மன்

'சாமிக்குள்ளேயே சாதி பார்த்து பிரித்து வைத்துவிட்டார்கள் இந்த பார்ப்பனர்கள்' என்று நாத்திகமதத்தைச் சார்ந்தவர்களும் வே ரா கும்பல்களும் அடிக்கடி மேடைகளிலும் சில நேரங்களில் சினிமா வசங்களின் மூலமாகக் கூட முழங்கி இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சாமி கும்பிடுவது என்பது ஹிந்து தர்மத்தில் ஒருவழிப்பாதை கிடையாது. அவரவர்க்கு பிடித்த உருவத்தில் , முறைகளில், வாழும் சூழலுக்கும், நம்பிக்கைகளுக்கும் தகுந்தாற்போல தத்துவங்களைப் பிரதிபலிக்கும் வழிபாட்டு முறைகளை வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு வாழும் மனிதர்கள் அவர்களது சூழலுக்கேற்ற கடவுளரை சுதந்திரமாகவே வணங்கி வழிபாடு செய்து கொண்டாடியும் வந்தனர். அவற்றையெல்லாம் மிஷனரிகளுக்கு உதவும் திராவிட ஏஜண்ட்டுகள் ஜாதிக்கண்ணோட்டத்தோடு பார்த்து நீண்டகாலமாக ஹிந்துக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி வருகின்றனர்.

சாமியைப் பெருந்தெவங்கள் சிறுதெய்வங்கள் எனப் பிரித்தும் அவற்றை அவ்வாறு பிரித்து வைத்தவன் பிராமணன் என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்து தூற்றி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன? பல பிராமண குடும்பங்களுக்கு அவர்கள் வாழும் கிராமக்கோவில் தெய்வங்கள் எதுவோ அதுவே தான் குல தெய்வங்களாகவும் இருக்கின்றனர். தமிழகத்தின் ஓரத்தில் ஒரு குக்கிராமத்தில் வாழும் ஒரு பிராமணருக்கு திருப்பதி வெங்கடாஜலபதியோ, சிதம்பரம் நடராஜனோ குலதெய்வமாக இருப்பதில்லை. மாறாக அந்த கிராமத்து ஐயனாரோ , அம்மனோ தான் குலதெய்வமாக இருப்பார்கள். பிராமணர்கள் வாழும் கிராமத்தோடு கலந்தே வாழ்ந்திருக்கிறார்களே அன்றி பிரித்தோ-பிரிந்தோ வாழ்ந்ததில்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

பிராமணர்கள் சிவன், பெருமாள் சாமிகளை கோயில் உள்ளே வைத்துக்கொண்டு பிற தெய்வங்களை வெளியே வைத்து விட்டனர். பிராமணர்கள் காளி, மாரி, சாஸ்தா, அய்யனார் போன்ற தெய்வங்களை வழிபடமாட்டார்கள் போன்ற பேச்சுக்களை அடக்கடி கேட்கிறோம். ஆக, மொத்தம் பிராமணர்கள் சதி செய்து சிறு தெய்வ வழிபாட்டை அழித்து விட்டார்கள் போன்ற அரைகுறை ஆய்வுகளை சிலர் செய்கின்றனர். இவை உண்மையா??  இவை எவ்வளவு பொய்கள் என்று பார்ப்போம்.

இந்த கட்டுரையின் நோக்கம் இந்த பொய்களை அம்பலப்படுத்துவது. மேலும் இந்த ஆய்வுகளின் பின்ணனி என்ன ?? இந்த தொடர் கட்டுரை ஆய்வு செய்வதற்காக நான் பல இடங்களுக்கு நேரில் சென்று , மேலும் பலரிடம் பேசி உள்ளேன். இந்த கட்டுரைக்காக தகவல்கள் தேடி பல இடங்களுக்கு சென்ற போது பல அனுபவங்கள் கிடைத்தன. இந்த ஆய்வுக்கு நாம் தமிழகத்தை பல பகுதிகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்வோம். தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், தஞ்சை, மதுரை, நெல்லை மற்றும் நாஞ்சில், பாலக்காடு பகுதிகள்.

நாம் முதலில் செல்ல போவது தஞ்சை பகுதி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயில்.

மதுரைக் காளி மருவி மதுரகாளி ஆயிற்றுஇங்கு என்ன சிறப்பு??

இந்த் கோயிலில் பூஜை செய்யும் பூசாரி பிராமணர் கிடையாது. ஆனால் பிராமணர் உட்பட பல சாதிகளுக்கு இந்த கோயில் தெய்வமே குல தெய்வம் ஆகும். தஞ்சை, குடந்தை, திருவையாறு பகுதிகளில் உள்ள பல பிராமணர் குடும்பங்களுக்கு இந்த கோயில் தெய்வமே குலதெய்வம். திங்கள், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மட்டுமே கோயில்  திறக்கும். பிராமணர்கள் இங்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வர். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சில சிவன் கோயில் சிவாச்சாரியார்கள் குடும்பத்திற்கே இந்த அம்மன் குல தெய்வம். சிவாச்சாரியார்கள் இந்த கோயில் கருவறை உள்ளே செல்ல முடியாது. இந்த கோயில் பூசாரிகள் மட்டுமே கருவறை உள்ளே செல்ல முடியும்.

சில குடும்பங்கள் மாவிளக்கு மாவு இடித்து மாவிளக்கு போடுவார்கள். பிராமணர்களுக்கு இந்த கோயில் குலதெய்வமாக இருந்தால் கண்டிப்பாக மாவிளக்கு போட வேண்டும். சில சைவ குடும்பங்கள் பொங்கல் வைப்பார்கள். கிடா வெட்டும் உண்டு. ஒரு ஆச்சரியமான உண்மை. சில பிராமணர் குடும்பங்களில் வேண்டிக் கொண்டு கோழியை வாங்கி கோயிலில் விடுவார்கள்.

இன்னொறு ஆச்சரியம்.. காஞ்சி மகா பெரியவர் அவர்களுக்கு இந்த கோயில் தெய்வமே குலதெய்வம்.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களேபிராமணர்கள் சிறு தெய்வங்களை வணங்குவதில்லை என்ற கூற்று உண்மையா என்று??

கண்களை திறந்து பார்தால் இந்த உண்மை தெரியும். ஆனால், நம் திராவிட ஆய்வாளர்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மேலும் சில உண்மைகளோடு அடுத்து சந்திப்போம்…….

அடுத்து மண் மேட்டை கும்பிடும் பிராமணர்கள்

தொடரும்

No comments: