Sunday, January 19, 2014

பஞ்சகச்சம் பிராமணர்களின் உடையா?

பஞ்ச கச்சம்/ கச்சம் சில விவாதங்கள்:

கச்சம் கட்டிய மராத்தியர் உடை


தமிழ் நாட்டில் சில பொதுப் புரிதல்கள் உண்டு. நாம் நினைக்கும் சில கருத்துக்களுக்கு மாற்றாக சில எண்ணங்களை கொண்டு இருந்தால் உடனே அவன் பார்ப்பான்.அவன் அப்படித்தான் இருப்பான் என்று பொத்தம் பொதுவாகக் ஏசிவிடுவார்கள்.. இந்த போக்குகளை இணையத்திலும் இதை நீங்கள் பார்க்கலாம். அப்படி சமீபத்தில் பார்த்த ஒன்று. பிராமணர்கள் தான் பஞ்சகச்சம் கட்டுகிறார்கள் என்றும், 'வேறு சில சாதிக்காரர்களும் பஞ்சகச்சம் கட்டுகிறார்கள்,எதற்கு என்றால் பிராமணர்களோடு உறவாடுவதற்கும், ஈஷிக்கொள்வதற்கும் தான்' என்று பஞ்சகச்சம் கட்டும் பிற ஜாதியினரையும் பார்ப்பனர்களின் அடிவருடிகள் என பிராமணர்கள் கட்டும் பஞ்சகச்ச உடையை விமர்சனம் செய்து செய்திகள் உலாவுகின்றன. சரி இந்த பஞ்சகச்சம் என்பது ஒரு ஜாதிக்காரர்களின் உடையா என்ற கேள்வி எழுந்த போது பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள நேர்ந்தது. அதாவது பஞ்சகச்சம் என்பது பாரதத்தின் பொதுவான உடைக்கலாச்சாரம். அது எந்த ஜாதியினருக்கும் தனியான உடைக் கலாச்சாரமாக இருக்கவில்லை என்பதே.

சில நண்பர்கள் சொன்னார்கள்எதற்கு இந்த விவாதம் என்று? நண்பர்களே நாம் பதில் கூறாமல் விட்டு தான் இன்று பல அபத்த வரலாறுகள் எழுதப்படுகின்றன. நான் முதலில் புரட்டியது முனைவர் பகவதி எழுதிய தமிழர் ஆடைகள்.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு.வழக்கம் போல சில ஆச்சரிய தகவல்கள்.

கச்சு என்ற வார்த்தை சங்க இலக்கியங்களிலே வருகிறது. ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழே கச்சம் அணிந்துள்ளனர். பெண்களின் மார்பு உடை கச்சு. இந்தியாவின் ஒரு காலத்திய பொது உடை கச்சம். தமிழகத்திலும் ஒரு காலத்தில் கச்சம் அணிந்துள்ளனர்.

முக்கியமாக போர் செய்யும் ஜாதிகள் அனைவரும் கச்சம் அணிந்துள்ளனர்.கொஞ்சம் நம் கோயில் சிற்பங்களை பார்த்தாலே தெரியுமே, நம் பண்டைய கால உடைகளை பற்றி.  ஏன் போர் ஜாதிகள் கச்சம் அணிந்தனர்? குதிரையின் மீது ஏறுவதற்கும், ஓடுவதற்கும் சிறந்த உடை கச்சம். நாம் இப்போது கட்டுவது போல வேஷ்டியை கட்டிக் கொண்டு ஓடினால் தடுக்கி தான் விழ வேண்டும்.

கச்சம் கட்டிய மருது பாண்டியர்கள்!


இன்னும் தரவு வேண்டுமா? கொஞ்சம் இந்தியாவில் பயணம் செய்தாலே போதும். குறிப்பாக ஆந்திரம்,மகாராஷ்டிரம் பகுதிகளில் ஆண்கள், பெண்கள் இருவருமே கச்சம் வைத்து உடை அணிவர். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கச்சம் வைத்து உடை அணிகின்றனர். இவை ஒவ்வொரு பகுதிகளிலும் சில மாறுதல்களோடு அணிகின்றனர். பழைய கால ராணுவத்தின் கச்சம் வைத்த உடை இஸ்லாமியர்கள் வருகை பின்பு பைஜாமா ஆக மாறி, ஆங்கிலேயர் வருகை பின்பு பேண்ட், சட்டை ஆக மாறியது.

வேஷ்ட்டி அவிழாமலும் அதே நேரத்தில் நடப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற வாறு இருக்குமாறும் தரிக்கப்பட்ட உடை தான் பஞ்சகச்சம். இன்று அதையே 'பேண்ட்' , 'ட்ரவுசர்' என்று வெவ்வேறு வடிவங்களில் தைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

பாரதத்தில் பெண்களும் இதே போல கச்சம் அணிந்து தான் புடவை உடுத்தி இருக்கிறார்கள். பிராமணர்கள் மடிசார் என்ற பெயரிலும் மற்றவர்கள் வெவ்வேறு பெயரிலும் முன் கொசுவம், பின் கொசுவம் எல்லாம் வைத்து புடவை கட்டிக்கொள்வார்கள். இதுவும் கச்சம் கட்டிக்கொள்ளவது போலதான். கால்கள் தடுக்காமல் நடக்க துணியை லாவகமாக கட்டிக்கொள்ளும் கலை.

முரட்டுக்காளை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காளை அடக்க களத்தில் இறங்கும் போது தனது வேஷ்ட்டியை கச்சம் கட்டி இறங்குவார். ஆக கச்சம் கட்டிக் கொள்ளுதல் என்பது எந்த ஒரு ஜாதியினருக்கும் சொந்தமான உடை அல்ல. இது பாரதத்தின் பெருமை வாய்ந்த எல்லோருக்கும் பொதுவான ஒரு கலாச்சார உடை. அந்தக்காலத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் அரைமண்டைக் குடுமியாக இருந்து பின்னார் கிராப்புக்கு மாறினார்கள். எப்படி பிராமணர்கள் மட்டும் இன்னும் அந்த குடுமியை விடாமல் வைத்து வருகிறார்களோ அதே போலத்தான் அந்த காலத்தில் எல்லா ஜாதியினராலும் உடுக்கப்பட்டு வந்த கச்சை முறை வேஷ்ட்டி கட்டுதலை இன்றும் பிராமணர்கள் விடாமல் உடுத்தி வருகிறார்கள்.தமிழகத்தில் இன்றும் பிராமணர்கள், நாயிடுக்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், தெலுங்கு செட்டிக்கள் ஆகியோர் பஞ்ச கச்சம்  உடையை அணியத்தான் செய்கின்றனர்.

நண்பர்களே…!! பஞ்சகச்சம் அணியும் பிற ஜாதியினர் பிராமணர்களுடன் ஈஷிக்கொள்வதற்காகத்தான் அணிகிறார்கள் என்றால் அமெரிக்காவில் ஒரு காலத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் அணிந்து வந்த ஜீன்ஸ் உடை இன்று இளைஞர்களின் பொது உடை.!!! எதற்கு, அமெரிக்காரன் உடன் ஈஷிக்கொள்வதற்கா???

கச்சம் கட்டிய முல்லா முலாயம்!

குளிர் பிரதேசத்தில் அணியும் சூட், டையை இந்தியாவில் கொளுத்தும் வெய்யிலில் அணிகிறோம். பல நிறுவனங்களின் அலுவலக உடை பேண்ட், சட்டை, டை ஆகும். இதெல்லாம் நம் நாட்டின் பாரம்பரிய உடையாநம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஒவ்வாத வகையில் பிற நாட்டினரின் உடை வகைகளை அணிந்து கொள்ளத்தயாராகும் மடையர்கள் சொந்த நாட்டின் பாரம்பரிய உடைக்கு ஜாதிச்சாயம் பூசி அவமதிக்கிறார்கள்.


நண்பர்களே! ஆதாரங்கள் போதும் என நினைக்கிறேன். இந்தியாவின் ஒரு காலத்திய பொது உடை, கால மாற்றங்களில் மாறி வருகிறது. அவ்வளவே…  இதில் சாதிக் காழ்ப்போ, பெருமையோ ஒன்றும் இல்லை நன்றி.

2 comments:

sanathana tharmam said...

ஐயா வணக்கம்.இது நகை வேலை செயபவர்களுக்குத்தான் உரியது அதாவது விஸ்வப் ப்ராமணர்களுக்குத்தான் உரியது என்று வாதிடுகிறானர்.இது முற்றிலும் பொய் என்று புரிகின்றது.

Anonymous said...

எல்லாம் திராவிடர் கழகத்தின் பிராமண துவேஷம் தான் காரணம்.