Showing posts with label ஐயப்பன். Show all posts
Showing posts with label ஐயப்பன். Show all posts

Wednesday, January 19, 2011

சபரிமலை சோகம்!



மனிதர்களை இழந்த உறவுகளின் அழுகுரல் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன புல்மேட்டு விபத்து எனும் அதிர்ச்சியான சம்பவத்தினால்.

அந்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டது அதனால் நாங்கள் பொறுப்பல்ல என மாநில அரசு நழுவுகிறது. வனத்துறையோ, வனத்தை பாதுகாப்பது வேறு அலைஅலையான மக்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது வேறு. எனவே கோடிக்கணக்கில் கூட்டம் வரும் போது அவர்களை காப்பது அரசின் கடமை என்கிறது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களை சரியாக வழிநடத்த காவல் துறையோ கண்காணிப்போ எதுவுமே இல்லாமல் தவித்தோம் என்கிறார்கள் பக்தர்கள். நடந்து முடிந்த மனித இழப்புகளுக்கு யார் மீது பழி போடலாம் என்று அலைகிறது கேரள அரசு.

நம்மூர்களில் தேர் திருவிழாக் கூட்டம் என்றாலே நூற்றுக்கணக்கில் காவலர்களை அரசாங்கம் குவிக்கிறது. சுற்றுலா பொருட்காட்சி நடத்தினாலே அவசர அழைப்பிற்கு தீயணைப்பு வண்டியை நிறுத்தி வைப்பார்கள். சில லட்சம் மக்கள் கூடும் இடத்திற்கே அரசு முனைந்து இத்தனை பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் கோடிக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது அந்த மக்கள் வந்து செல்லும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் கேரள அரசோ தனது பொறுப்பை வெட்கமில்லாமல் தட்டிக்கழிக்க பார்க்கிறது.

இந்நிலையில் இறப்பு பற்றிய முழுமையான் எண்ணிக்கை வெளிவரவில்லை என்றும் பள்ளத்தில் விழுந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அங்கே சென்று வந்த பக்தர்களுக்குள் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. சபரிமலை சென்று காணாமல் போனவர்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்களை சேகரித்தால் எதிர்வரும் நாட்களில் ஏதேனும் தகவல் வரலாம் என்ற அச்சத்தை தெரிவிக்கின்றனர் சிலர். அப்படி எதுவும் வராமல் இருந்தால் நல்லது.

பக்தர்களிடம் வியாபாரம் செய்து காசு சம்பாதிக்க கடை நடத்திய மலையாள சேட்டன்கள் கூட்ட நெரிசலால் கடைக்குள் ஒதுங்கிய பக்தர்களை கட்டையால் அடித்து விரட்டிய கொடுமையும் நடந்திருக்கிறது என்று செய்திகளில் வாசிக்கிறார்கள்.



சாமிக்கும் பயமில்லை மனிதர்கள் மீது கருணையும் இல்லை. தத்துவம் சாராத பக்தியால் ஆகப்போவது என்ன? சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் என்ற கோஷத்துடன் சென்றவர்கள் ஜோதியைக் கண்டவுடன் மோட்ஷத்திற்கு போனார்களே! இது இறைவனின் கொடையா கொடுமையா? மோட்ஷத்திற்கு போனார்களா அல்லது மோசம் போனார்களா?

பக்தி பணமாகிக்கொண்டிருப்பதன் விளைவுகளில் இதுவும் ஒன்றா? ஐயப்பா சரணம் என்று வருபவர்களிடம் அள்ளி விடலாம் பணத்தை என்ற பேராசையால் ஓட்டை வண்டியை எடுத்து ஓட்டி சம்பாதிக்க நினைத்தவன் ஒட்டு மொத்த கூட்டத்தையும் கொன்று குவித்தானே என்ன கொடுமை?

வனத்தில் வண்டி போகக்கூடாது என்று சேட்டன் மார்கள் சட்டமியற்றி விட்டு
சாமிமார்களிடம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக சட்டையை கழற்றி எரிவது போல சட்டத்தை தூக்கி எறிந்தானே! சத்தமே இல்லாமல் பல உயிர்கள் சமாதியாவதற்காகவா?

தமிழனென்றாலே பாண்டிக்கூட்டமென்று முகம் சுழித்துப் பேசும் பட்டிக்கூட்டம்
தனது ஒட்டு மொத்த அலட்சியத்தால் இன்று உயிர்க்காவு வாங்கியிருக்கிறது.
சபரி மலைக்கு தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்கு ரயில் பெட்டியிலேயே தொல்லைகள் தாளாது. மூன்று மாதம் முன்பாகவே அடித்துப் பிடித்து பயணச்சீட்டு எடுத்து ரயில் வந்த உடன் இடம் தேடி அமரப்போனால் இரவு எட்டு மணிவரை ரிஷர்வேஷன் என்பது கிடையாது. எட்டு மணிக்குப் பின் தான் நீங்கள் சீட்டு கேட்க வேண்டும் என்று சண்டைபிடிப்பார்கள் மலையாளிகள். எட்டு மணிவரை நீ முன்பதிவுப் பெட்டியில் பிரயானிக்கலாம் ஆனால் எனது ரிஷர்வேஷன் சீட்டில் உட்கார சட்டப்படி உனக்கு உரிமை இல்லை என்று வக்கீல் போல வாதாடித்தான் சாமிமார்கள் கேரள ரயில்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளிலேயே உட்கார முடியும்.

சபரிமலைக்கு ஏறி விட்டால் அங்கே மக்கள் படும் அவஸ்தை வேறுமாதிரி.
சாமிமார்கள் சுத்தமாக ஆட்டு மந்தைகளாகவே நடத்தப்படுவார்கள். அவர்கள் தங்கும் அரைக்கு காசு வாங்குவார்கள். ஆனால் அரைகள் எதுவுமே சுத்தமாக இருக்காது. ஜன்னல் கண்ணாடி உடைந்து அரைக்குள் சிதறிக்கிடக்கும். மாட்டு சாணம் கூட காய்ந்திருக்கும். காகிதக்குப்பைகள், மழையால் பாசிபிடித்த ஈரமான தரைகள் என்று மோசமாக இருக்கும். இவை எதையுமே சுத்தம் செய்து தராத சேட்டன்கள் அந்த அரைக்கு நூறு முதல் ஐநூறு வரை கூட்டத்தை பொறுத்து காசுபார்ப்பார்கள். சாமி மார்கள் அவர்களே ஒரு துடைப்பத்தை வாங்கி பெருக்கி சுத்தம் செய்து பின்னர் உணவருந்தவோ உறங்கவோ செய்வார்கள்.

மலை மேலே இருக்கும் ஹோட்டல்கள் என்ற பெயரில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொள்ளை இன்னொரு புறம். வரண்ட தோசை, வேகாத இட்லி, மொட்டை தண்ணீர் காபி, டீ, சுகாதாரமே இல்லாத சுற்றுப்புறம், கழுவாத குடிநீர் டம்ப்ளர் என கொடுக்கும் காசிற்கு கொஞ்சமும் பிரயோஜனம் இல்லாத உணவுகள் உயிரை வாங்கும். 30 ரூபாய்க்கு தயிர் சாதம் கொடுப்பார்கள். ரயில்வே கேண்டீனில் தரப்படும் பார்சல் போல இருக்கும். திறந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கும். மொத்தமாக வாரி எடுத்தால் ஒரே ஒரு கவளம் தான் அதில் சோறு இருக்கும். இதை பற்றி கேட்கவும் முடியாது. கேட்டால் திரும்பி முகத்தை கூட பார்க்காமல் வேறுபக்கம் திரும்பி வேலையைப்பார்ப்பான் மலையாளச் சேட்டன். மலையேறிய களைப்பும், நெருக்கி வரும் தூக்கமும் சண்டை போட மனமில்லாமல் கொடுத்ததை முழுங்கிப் பின் படுத்துக்கொள்ள தூண்டும்.

நடக்கும் பாதைகள் குப்பை மேடுகளாகவும் வழுக்கும் பாசிகளாகவும், அரைகுரை சிமெண்ட் தரைகளாகவும் இருக்கும். கால் வைத்து நடக்க முடியாமல் தவித்து எப்போதடா படுத்து உறங்குவோம் என்றாகிவிடும் பக்தர்களுக்கு. அரைகுரை சாப்போடோடு தூங்கி விழித்து பிரசாதங்களை பிரித்துக்கொடுத்து தேங்காய் உடைத்து கையைத் தூக்கி கடைசியாக ஒரு கும்பிடு போட்டு ஐயப்பா இனி அடுத்த வர்ஷம் பாக்கலாம்ப்பா என்று சொல்லி கீழே இறங்கும் போது அப்பாடா என்றாகிவிடும்.

இதில் எந்த இடத்திலும் கேரள அரசாங்கம் பக்தர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் நுகர்வு உரிமைக்காக என்று எந்த நடவடிக்கைகளையும் இது நாள் வரை எடுத்ததில்லை. ஹோட்டல்களில் சரியான அளவுடன் தரமான உணவு கொடுக்கப்படுகிறதா என்று கண்காணிப்பதில் கேரள அரசுக்கு எந்த அக்கரையும் இல்லை. கூட்டம் கூட்டமாக மலைமேல் தங்கும் பக்தர்கள் சிறு நீர்கழிக்கக்கூட பொதுக் கழிப்பறைகள் தென்படுவதில்லை. கோவிலின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க எந்த முனைப்பும் எடுப்பதில்லை.

ரூம் புக்கிங், ரெஸ்ட் ஹால் போன்றவற்றிற்கு சேட்டன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இப்படி எண்ணற்ற அலட்சியத்தில் லட்சக்கணக்கான மக்களை ஆட்டு மந்தைக் கூட்டங்களைப் போல நடத்துவதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு மந்தை மந்தையான இந்த மரணங்கள். முழுமையான அலட்சியம்.

கேரள அரசு திருவாங்கூர் தேவஸ்வம் போர்டை குறை கூறுவதைப் பார்த்தால் ஏதோ உள்விவகாரம் இருக்கலாம் எனவும் ஐயம் உண்டாகிறது. காரணம் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பத்மநாதர் சுவாமி கோவிலை கையகப்படுத்த முனைந்தது கேரள அரசு. ஆனால் தேவசம் போர்டு மற்றும் பல இந்து அமைப்புகள் அதனை கடுமையாக எதிர்த்ததை அடுத்து அந்த முயற்சியை கைவிட்டது. அதனால் தேவசம் போர்டுக்கான பாதுகாப்பை
நாம் ஏன் செய்ய வேண்டும் என கேரள அரசு வேண்டுமென்றே அலட்சியப்படுத்தி இருக்கலாமோ என்கிற ஐயப்பாடும் உண்டாகிறது.

இப்படி பலவித அலட்சியங்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கேரள அரசாலும் திருவாங்கூர் தேவசம் போர்டாலும் நடத்தப்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது. இறைவன் மீது கொண்ட பக்தியாலும், மாலை போட்டிருக்கிறோம் என்கிற காரணத்தாலும் சண்டை போடக்கூடாது என்கிற மனோபாவமும் மட்டும் இல்லையெனில் எந்த மலையாளியும் இத்தனை அலட்சியத்தை தமிழர்கள் மீது காட்டிவிட்டு சபரிமலையில் தப்பி விட முடியாது. அது மட்டும் பக்தித்தளமாக இல்லாமல் இருந்திருந்தால் சேட்டன்களை தமிழர்களும் தெலுங்கர்களும் சாயா பிழிந்து குடித்திருப்பார்கள்! அத்தனை அலட்சியங்களும், அவமதிப்புக்களும், மோசமான சூழ்நிலைகளும் கோடிக்கணக்கான மக்களால் தாங்கிக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்றால் அது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் என்பதை மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட அமைதியான கூட்டத்தின் உயிர்களை மயிறுக்குக்கூட மதிக்காமல் சாகடித்த கேரள அரசும் தேவசம் போர்டும் என்ன பதில் கூறப்போகின்றன? உயிருக்கு ஒரு விலை கொடுத்து விட்டு மீண்டும் தங்கள் தொழிலை பார்க்கப் போவார்களோ? தமிழக ஆந்திர அரசாங்கங்கள் தம் மக்கள் அண்டை மாநிலத்தில் படும் அவதியைத் தீர்க்க கேரள அரசோடு கைகோர்த்து ஏதேனும் செய்வார்களா?

மாயையில் சிக்கி வாழ்வது மனிதர்களின் இயற்கை. ஏதாவது ஒரு உணர்வில் மயங்கி வாழ்வது மனிதனுக்கு தேவைப்படுகிறது. பக்தியுணர்வும் ஒரு வித மயக்கமே. மற்ற மயக்கத்தை விட பக்தியென்ற மயக்கம் மயங்கியவனுக்கும் அவனைச் சார்ந்த மற்றவர்களுக்கும் நன்மையே செய்கிறது என்பதாலேயே அது சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்தகைய மயக்கம் மரணத்தை கொடுக்கும் ஆபத்தாகுமெனில் மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வது மக்களின் கடமை.

ஆறாத காயத்திற்கு காலம் தான் கஷாயம்.

1942 - ல் சபரிமலை



.

Monday, December 14, 2009

பூனூல் போடுவது எதற்காக?


சொல்ல மறந்துட்டேனே! சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்! ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொல்லிக்கொண்டிருந்த மூத்த சாமியிடம் தொடர்ந்து விவாதிக்கும் போது இடையே மக்களது சமூக பழக்கங்களும் நம்பிக்கைகளும் பற்றி பேச்சு எழுந்தது.

நான் கேட்டேன் "சாமீ, சில சமூகத்தார் பூனூல் போட்டுக்கறாங்களே! அது எதுக்கு? அந்த நூல்ல ஏதாவது சக்தி இருக்கா? இல்லன்னா அவங்க தான் உசந்தவங்கன்னு காமிக்கவா? இல்லன்னா பூனூல் போட்டாதான் ஒருத்தன் நல்லவனா இருக்க முடியும்ன்னு ஏதாவது இருக்கா" என்றேன்.

ரொம்ப பக்குவமுள்ள மனிதரான அவர் சலனமே இல்லாமல் விளக்கினார்.

"தம்பி எல்லாமே ஒரு மனோவியல் விஷயம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலேயும் மனிதர்களை செம்மைப்படுத்த, அவர்தம் உணர்ச்சிகளை பக்குவப்படுத்த ஏதாவது உபாயத்தை கடைபிடித்து வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பின்னால் அந்த உபாயம் நீர்த்துப் போய் காலம் மாறும் போது அவர்தம் உபாயங்களும் மாறும். அப்படி அந்த காலத்தில் நம் முன்னோர்களால் கடைபிடித்து வரப்பட்ட ஒரு மனோவியல் ரீதியான உபாயம் தான் இந்த பூனூல் அணிந்து கொள்வது. ஒரு உதாரணம் மூலம் சொல்றேன் கேளு" என்று தொடர்ந்தார்.

ஒரு யானையை குழந்தையாக இருக்கும் போது அதன் கால்களை சனல் கயிறு மூலம் கட்டி விடுகிறார்கள். அந்த கயிறு தன்னை கட்டுப்படுத்துவதாக யானை நினைத்துக் கொண்டது. அந்த கயிறு இருந்ததால் சிறிய யானை அதைத் தாண்டி வெளியேற பயப்பட்டது.

யானை வளர்ந்த பிறகும் அது அதே சனல் கயிறுக்கு கட்டுப்பட்டு அசையாமல் இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் யானைப் பாகனிடம் கேட்டான் ‘யானையின் பலத்திற்கு இந்த சனல் கயிறு ஒரு விஷயமா? அது ஏன் அறுத்துக் கொண்டு போகவில்லை என்று?’ கேட்க, பாகன் சொன்னான் ‘யானைக்கு சனல் கயிறு ஒரு விஷயம் இல்லை. ஆனால் சிறுவயதில் கயிறால் கட்டப்பட்ட அந்த பயம் இப்போதும் இருப்பதால் அது அசையாமல் கட்டுப்பட்டு நிற்கிறது. எல்லை மீறுவதில்லை" என்றான்

'சில சமூகத்தவர்கள் பூனூல் போடுவதும் இப்படிப்பட்ட ஒரு சனல் கயிறு மனோவைத்தியம் தான். சிறு வயதிலேயே அந்த நூல் மூலமாக அடையாளப்படுத்தி, நீ இன்னன்ன தவறுகள் செய்யக்கூடாது என்று மனதில் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கி விட்டால் வளர்ந்த பிறகும் அந்த நூல் இருக்கும் வரை அவன் தவறிழைக்க ஆழ்மனம் ஒத்துக்கொள்ளாது என்பதே காரணம்' என்றார்.

"ஓஹோ அதான் காரணமா? ஆனா சாமீ ஒரு நூல் ஒரு மனுஷனோட நல்லது கெட்டதை கட்டுப்படுத்தீரும்னா உலகத்துல உள்ள எல்லாருமே அப்படி ஒரு நூலை போட்டுக்கலாம் தானே" என்றேன்.

"நூல்ன்னு பாத்தா அது மனுஷனைக் கட்டுப்படுத்தறதில்லை. எப்படி சனல் யானையைக் கட்டுப்படுத்த முடியாதோ அப்படித்தான் உடலைச் சுற்றிய நூலும். உணர்ச்சிப் பித்து தலைக்கேறி மதம் பிடித்த யானைக்கு இரும்பு சங்கிலி கூட சனலாகிவிடும். அது போலவே உணர்ச்சிப் பெருக்கால் சுய கட்டுப்பாட்டை இழக்கும் எந்த மனிதருக்கும் பூனூல் என்ற ஒரு நூல் உடம்பில் இருப்பது எந்த கட்டுப்பாட்டையும் கொடுத்து விடாது. ஆனால் மிகச்சிறிய வயதிலிருந்தே ஒருவனது ஆழ் மனதில் நீ இந்த நூலை உடையவன் அதனால் நீ இன்னன்ன தவறுகளைச் செய்யக்கூடாது என்று திரும்ப திரும்ப சொல்லி ஆழ் மனதில் பதியவைத்தால் அதுவே பின்னாளில் நிலைக்கும் என்ற நம்பிக்கைதான்.

சின்ன வயசுல கத்துக்கற விஷயம் பசுமறத்தானி போல பதியும்னு பெரியவங்க சொல்வாங்களே, அந்த முயற்சி தான் இது. எவ்வளவு அழுத்தமாக சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே பலன் கிடைக்கும். இந்த முயற்சி பெரும்பாலும் பலன் குடுத்திருப்பதாகத்தான் பெரியவங்க சொல்றாங்க. இப்ப புரியுதா" என்றார்

"சரி சாமி! அது உண்மையிலேயே பலனைக் கொடுத்திச்சா! அப்படீன்னா எல்லாரும் அதை ஏன் ஏத்துக்கலை?" என்றேன்.

"தம்பி சாமி! இந்து மதம் எப்போதுமே எக்ஸ்பரிமண்டலாக விஷயங்களை அனுகி அதில் உயர்ந்தபட்ச உண்மை எதுவோ அதையே தனதாக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த தர்மத்தில் வாழும் மனிதர்களுக்கு அந்தச் சுதந்திரமும் உண்டு.

அந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்கும் அது தனக்குத் தேவையில்லை என்று தங்களுக்கென்று தனி பாதை அமைத்துக் கொள்ளவும் நம் சமூக மனிதர்களுக்கு சுதந்திரமும் உண்டு. அப்படி சுதந்திரம் உள்ள மனிதர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த இப்படி ஒரு நூல் தேவை இல்லை.

நாங்கள் கடவுளுக்கு கட்டுப்பட்டிருப்பதே போதும். அதுவே எங்களை செம்மைப்படுத்தும் என்று சொல்லி அப்படி ஒரு வழக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

தனியொரு நபரின் கட்டளைக்கு கீழ்படிவது தான் மதம் என்றில்லாமல் எல்லாவற்றிலும் உயர்ந்தது எதுவோ அதை ஒவ்வொரு சமூகமும் தனது வாழும் முறையாக ஆக்கிக் கொள்ளும் உரிமை இந்து தர்மத்தில் உள்ளது. அதன் படி இந்துக்களில் சில சமூகத்தவர் ஏற்றுக் கொண்டும் சில சமூகத்தவர் இது தேவையில்லை என்றும் இருந்திருக்கிறார்கள்." என்றார்.

'அப்போ பூனூல் போட்டவங்க உசந்தவங்க, அதப் போடாதவங்க தாழ்ந்தவர்கள்ன்னு சொல்லி ஒரு பேச்சு இருக்கே, அது?" என்றேன்.

"அதெல்லாம் காலப்போக்கில் உண்டான ஜாதீய அடையாளம். ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கை முறையே அவரவர்களின் அடையாளங்களாகப் போனதால் வந்த வினை. இப்போ கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் லுங்கி கட்டின நம்மாளும் ஒன்னா ஸ்டார் ஹோட்டலுக்கு போனா கோட் போட்டவனுக் குத்தான் முதல் மரியாதை. ஏன்னா கோட் போட்டவன் உசந்தவன்னு மனசில பதிஞ்சு போச்சு. கோட் போட்டு வாழும் ஒருவனது வாழ்க்கை முறை அவனுக்கு அடையாளமாப் போனதால இந்த நிலை. அதனால கோட்டு போடறதும் லுங்கி கட்டறதும் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைதானே ஒழிய அது மனிதர்களுக்கான அடையாளம் ஆகாதுன்னு மக்களுக்கு புரிய வெச்சிட்டா
இந்த அடையாள மார்கங்கள் ஒழிஞ்சு மறுபடியும் எல்லாரும் ஒரே மாதிரி வாழ ஒரு வழி பிறக்கும்.

அப்படி ஜாதி மத பேதமில்லாம எல்லோரும் ஒன்னா ஒரே இடத்தில கூடவெக்கிற வேலையத்தான் நம்ம ஐயப்பன் செஞ்சிக்கிட்டு இருக்கார். என்ன நான் சொல்றது" என்றார் சாமீ.

"அம்மாம் ஆமாம். ஜாதி பேதமில்லாமல் எல்லோரும் ஒட்டி உரசி நின்னு, அடையாளமே தெரியாத ஒருவர் கூப்பிடும் சரணத்திற்கு, ஜாதி பாக்காம மற்றவர் பதில் சரணம் சொல்வது நம்ம சபரிமலையில தானே" என்று நானும் அமோதித்தேன்.

நீங்களும் ஆமோதிதீர்களா! அப்போ சேந்து சொல்லுங்க...

சாமியே சரணம் ஐயப்பா!


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்