Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Saturday, March 12, 2011

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 4



நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்


ஒருவருக்கு நாம் உதவி செய்து விட்டால் அதே போன்ற உதவியை அவர் நமக்குத் திருப்பி எப்போது செய்வாரோ என்று நினைத்திருக்க வேண்டாம். தளராமல் வளர்ந்து நிற்கும் தென்னை மரம் தரையிலிருந்து தானுண்ட நீரை தன் தலை மேலிருந்து இளநீராய் நமக்கு பிரதிபலன் எதிர்பாராமல்  தருவது போலே பலன் எதிர்பாராமல் உதவுவதே மனித மான்பு!


- தமிழ்ப் பாட்டி ஒளவையார்


மொத்தத்தில் தர்மம் தலைகாக்கும் என்கிறார்.  'அன்கண்டீஷனலாக' உதவ வேண்டும் !



.

Wednesday, March 2, 2011

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 3



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

பவளம் போன்ற திருமேனியும் துதிக்கையையும் கொண்ட விநாயகரின் பாதங்களை சரணடைந்து, நாள்தோறும் தவறாமல் உடற்சோம்பல் கொள்ளாமல் பூவைக் கொண்டு பூஜிப்பவர்களுக்கு நல்ல சொல்வளமும், நல்லதை நினைத்து நல்லதைச் செய்யும் நல்ல மனமும், மாமலர் மேலமர்ந்திருக்கும் லக்ஷ்மி தேவியின் அருள் பார்வையும் உண்டாகும். 

 - ஒளவைப் பாட்டி


மேற்கண்ட ஒளவைப் பாட்டியின் அருந்தமிழைப் படிக்கும் போது ஒரு விஷயம் குறிப்பிடத் தோன்றுகிறது. தமிழன் என்றாலே நாத்திகனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தமிழர்கள் மீது நாத்திக மதத்தை தினித்து மக்களின் அறிவை மழுங்கச் செய்து வருகிறார்கள் நாத்திக மத போதகர்கள்! ஆனால் அருந்தமிழின் அத்தனை வடிவங்களும் ஆன்மீகத்தின் உச்சத்தில் தான் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.


அருந்தமிழச்சியான ஒளவைப்பாட்டி எழுதிய மூதுரையின் முதற்பாடலே இறைப்பாடல் தான். அதுவும் யாரைப் பற்றி? ராமசாமி நாயக்கர் நாத்திக மதம் பரப்ப போட்டுடைத்து உபயோகித்தாரே அந்த விநாயகர் பற்றிய பாடல் தான். 


ஆக தமிழின் சிறப்பு ஆன்மீகத்திலும், பழந்தமிழர் பக்தியிலும், ஆன்மீக தர்மத்திலும் சிறந்தும் விளங்கினார்கள் என்றுனர்ந்து தமிழையும் ஆன்மீகத்தையும் ஒருசேர நேசிக்க வேண்டும் என்பதையே இப்பாடல் காட்டுகிறது.


ஆன்மீகமில்லாமல் தமிழ் இல்லை என்பதற்கு ஒளவையே சாட்சி!

.

Saturday, January 2, 2010

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 2 கொடியது, இனியது, பெரியது, அரியது


ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.

“பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.

ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, “சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார்.

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் “பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.

“சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....” என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.

“பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!” என்று கூறினான்.

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, (கதலித்தண்டு) வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.

ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.

‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

முருகனை வணங்கிய ஒளவையாரின் மனத்திலிருந்த புலமைக் கர்வம் அகன்றது; நெஞ்சில் அமைதி குடி கொண்டது.

ஒளவையாரைப் பார்த்து முருகன், “ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள்” என்றான்.

“முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்” என்றார் ஒளவையார்.

அப்போது முருகன் "கொடியது, இனியது, பெரியது, அரியது இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வாயாக!" என்று கேட்டான். அதற்கு ஒளவையார் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற அவர்கையில்
உண்பதுதானே

இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும்.

தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று கொடுமையானவற்றுள் எல்லாம் மிகவும் கொடுமையானது அன்பு இல்லாத பெண் இடும் உணவை உண்பதுதான் என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

இந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால், தனிமையில் இருப்பதுதான் இனிமையானது. அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது.

இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.


பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால் தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத்தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர்.

எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்று ஒளவையார் பாடினார்.

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது.

அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார்.

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததே ஆகும். ஆன்மீகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆனால் நாத்திகம் தான் தமிழர் மரபு என்ற தோற்றம் உண்டாகும் வகையில் ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகம் தவறான பாதைக்குத் திருப்பப்பட்டு வருகிறது.

ஆனாலும் ஆன்மீகமில்லாமல் தமிழ் இல்லை என்பதற்கு ஒளவையாரே சான்று.

Saturday, November 7, 2009

ஒளவைப்பாட்டியின் மதிநுட்பம்!


ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும், வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் சிறப்பான நூல்கள் அல்லது பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.

1. சங்க கால ஒளவையார்
2. பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.
3. சோழர் கால ஒளவையார்
4. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்
5. தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.

இப்போது நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். ஒளவையார் மிகவும் மதி நுட்பம் கொண்டவர்.

சோழ அரசர்களுக்கு ஒளவையார் மீது தனிப்பிரியம் இருந்தது. அரசு விழாக்களில் பங்கேற்க ஒளவையாருக்கு எப்போதும் தனி அழைப்பு வந்து விடும்.

அன்றும் அப்படியே, குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி பாடல்களைப் பாடி மன்னரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘வரப்புயர’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்.

இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

என்று பாடி மன்னனை வாழ்த்தி முடித்தார் ஒளவையார். மன்னரும் அவையோரும் பெரு மகிழ்ச்சியடைந்து ஒளவையாரை பாராட்டினார்கள்.

அது சரி 'வரப்புயர' என்ற வார்த்தை மூலம் மன்னனை எப்படி வாழ்த்தினார்? இப்படித்தான்..

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்றும் ஒளவைப் பாட்டி விளக்குகிறார்.

அதாவது மன்னனின் பணி மக்கள் பசிப்பிணி போக்குவதே என்பதையும், விவசாயம் நல்ல முறையில் நிகழ்ந்தால் தான் நாடு சுபிக்ஷமாக இருக்கும் என்றும், ஒரு நாட்டு மன்னனின் பெருமை ஒரு வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே இருக்கிறது என்றும் உணர்த்த ஒரே வார்த்தையாக 'வரப்புயர' என்று சொல்லி பின்னர் விளக்கியிருக்கிறார் ஒளவையார்.

இதிலிருந்து ஒளவைப்பாட்டி உழவுத் தொழில் நுட்பத்தை பற்றியும் நன்கு உணர்ந்தவர் என்பதையும் ஒரு வார்த்தையின் மூலமே மிகப்பெரிய அர்த்தங்களை உணர்த்துவதில் மிகுந்த மதிநுட்பம் கொண்டவர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா!

நம் கலாச்சாரத்தில் பெண்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை. ஆணோ பெண்ணோ அவரவர் பெற்ற ஞானத்திற்கும் அறிவுக்கும் தகுந்த மரியாதை எக்காலத்திற்கும் கிட்டும் என்பதற்கு ஒளவைப்பாட்டியே சான்று.

Wednesday, October 21, 2009

ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!


ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவும், வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் சிறப்பான பாடல்கள் பல பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.

1. சங்க கால ஒளவையார்
2. பாரி மகளிர் - பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்.
3. சோழர் கால ஒளவையார்
4. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்
5. தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.

இப்பகுதியில் நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். இவர் எங்கே பிறந்தார் என்பதற்கு வரலாறில்லை. இவர் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடிய நாலு கோடிப்பாடல்கள் குறிப்பிடதக்கவையாகும்.

ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா...! என்று தருமியைப் போலப் புலம்பத் துவங்கி விட்டார்கள் புலவர்கள். எப்படிப் பாடுவது என அஞ்சினார்கள்.

அந்த வழியாக வந்த ஒளவையார், புலவர்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தார். புலவர்களோ "எப்படிச் சிக்கிருக்கோம் பார்த்தீங்களா??" என்று வடிவேலு ரேஞ்சுக்கு நடந்ததைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட ஒளவைப் பாட்டி "பூ இவ்வளவு தானா?" என்று சொல்லி 'சிறப்பான பண்புளைக்' குறிக்குமாறு நான்கு பாடல்களை ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம் எனப் பொருள் படும்படியாகப் பாடி அந்த நான்கு பாடல்களையும் புலவர்களிடம் தந்தார்.

மறுநாள் புலவர்கள் அந்தப் பாட்டை மன்னரிடம் பாடிக்காட்டினார்கள். மன்னனுக்கோ மிகவும் ஆச்சரியம். இத்தனைச் சிறப்பு வாய்ந்த பாடலை இவ்வளவு சமயோசிதமாகப் பாட ஒளவையாராலேயே முடியும் என்று கூற புலவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

பெருமகிழ்ச்சியடைந்த மன்னன் ஒளவைப்பாட்டியை அழைத்து அவருக்கு பெரு மரியாதை செய்து பரிசுகளும் கொடுத்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு.

விடிவதற்குள் பாடப்பட்ட அந்த நான்கு கோடிப்பாடல் என்னவென்று கேட்கிறீர்களா? இதோ கீழே:

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

(ஒளவையார் தனிப் பாடல்:42)


என்பதே அப்பாடல்.

இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

இப்படி நான்கு கோடிப்பாடலை எழுதியதால் ஒளவையார் சோழ மன்னனால் மிகவும் போற்றப்பட்டார்.

நம் கலாச்சாரத்தில் பெண்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை என்பதற்கும், ஆணோ பெண்ணோ அவரவர் பெற்ற ஞானத்திற்கும் அறிவுக்கும் தகுந்த மரியாதை எக்காலத்திற்கும் கிட்டும் என்பதற்கு ஒளவைப்பாட்டியே சான்று.