ஆன்மா இதயக்குகையினில் இருக்கிறது என்று உபநிஷத்து கூறுகிறது. அத்தகைய ஆன்மா வேறெங்கிருந்தோ வருவதில்லை. அது உள்ளது உள்ள படியே இருப்பது. என்றென்றும் நிலைபேறானது. ஆட்டமோ அசைவோ இல்லாதது. மாற்றம் காணாதது. காணப்பெறும் மாற்றங்கள் ஆன்மாவைச் சார்ந்தவை அல்ல. ஏனெனில் ஆன்மா இதயத்தில் குடிகொண்டுள்ளது.
ஜீவநாடி, ஆத்மநாடி அல்லது பரநாடி என்று கூறப்படும் ஒரு நாடி உள்ளது என்றே யோகிகள் சொல்கிறார்கள். இதயத்திலிருந்து வெளியே செல்லும் முக்கிய நாடிகள் 101 என்றும், அவற்றிலொன்று நேரே ஸஹஸ்ராரத்திற்குச் செல்கிறதென்றும் உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பத்தின் ஏழாம் மாதத்தில் பிரும்ம-அந்தரத்தின் அதாவது சிசுவின் தலையில் மண்டை ஓடு வளர்ச்சி பெறாத நிலையில் மென்சதை மட்டுமே உடைய உச்சி மையத்தின் வழியே ஜீவனுடன் அகந்தை உடலுக்குள் ப்ரவேசிப்பதாகவும், உடல் முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான நாடி நரம்புகள் மூலம் அது இயங்குகிறது என்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகவேதான், பேருண்மையை நாடுவோர் உச்சந்தலை மூளைப்பகுதியில், மனம் குவித்துத் தியானித்து மூல சக்தியைத் திரும்பப் பெறவேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் நாபி அதாவது தொப்புள் நரம்பு முடிவலையில் சுருண்டு பதுங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்புவதற்குப் பிராணாயாமம் யோகிகளுக்கு உதவுகிறது என்றும் அந்த சக்தி முதுகுத் தண்டினுள் பதிந்து மூளைவரையில் செல்லும் சுழுமுனை எனும் நரம்பு வழியே மேலெழும்புவதாகவும் விளக்கப்படுகிறது.
சூக்ஷும்னா என அழைக்கப்படும் சுழுமுனை என்பது ஒரு வளைவுக்கோடு போன்றது. நாபியிலிருந்து தொடங்கி முதுகுத் தண்டின் வழியே மூளைக்குச் சென்று, அங்கிருந்து வளைந்து கீழிறங்கி இதயத்தில் முடிவுறுகிறது. இவ்வாறு இதய மையத்தை எட்டும்போது தான் யோகியின் சமாதி நிலைபேறாகிறது. ஆகவே இதயமே முடிவான மையம் என்பதே இதிலிருந்து அறியலாம்.
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஒரு வெள்ளைக்காரர் "நான் ஆன்மாவை எப்படி அடைவது?' என்று கேட்டாராம். அதற்கு ரமணரோ, 'அதுவாகவே நீ இருக்கும் போது அதனை அடைய முயற்சிப்பது என்பது அறியாமையே!' என்றாராம்.
.

