Showing posts with label tamil stories. Show all posts
Showing posts with label tamil stories. Show all posts

Wednesday, October 27, 2010

நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?





அலுவலகத்தில் வேலைபார்ப்போருக்கெல்லாம் பிடித்ததோ பிடிக்கவில்லையே 'யெஸ் சார்' என்று தலை ஆட்டினால் தான் அடுத்த நாட்களை ஓட்ட முடியும் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. நீங்களும் அப்படி 'எஸ் பாஸ்' ஆசாமியா? வெட்கப்படாதீங்க. அதுவும் ஒரு புத்திசாலித்தனம் தான் என்று முல்லாவைப் பார்த்து தேற்றிக்கொள்ளுங்கள்.

முல்லா ஒரு மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு
அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு
ஏதாவது உரையாடிக்கொண்டு இருப்பார்.

ஒரு நாள் மன்னரும் முல்லாவும் அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தார்கள்.

அன்று பீன்ஸ் கரி சமைக்கப்பட்டிருந்தது. அதிக பசியின் இருந்ததால் மன்னருக்கு பீன்ஸ் கரி
மிகவும் ருசியாக இருந்ததாகத் தெரிந்தது.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி "முல்லா, உலகத்திலேயே மிகவும் ருசியான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்றார்.

"சந்தேகமே வேண்டாம், பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது" என்று ஆமாம் போட்டார் முல்லா. அதாவது 'எஸ் பாஸ்'.

மன்னர் உடனே சமையல்காரரை அழைத்து "இனிமேல் சமையலில் தினமும் பீன்ஸ் இருக்க வேண்டும். நாள் தவறாமல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸ் இருந்தே ஆக வேண்டும்" என்று ஆணையிட்டார். இப்படியே பத்து தினங்கள் ஓடியது.

மன்னருக்கு இப்போது பீன்ஸ் கரியைப் பார்த்தாலே ஒரு வித வெறுப்பும், சலிப்பும்
உண்டாகிவிட்டது.

அன்றும் வழக்கம் போல பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் முல்லாவைப் பார்த்து "உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினார்.

"ஆமாம் மன்னா, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த காய்கறிகளிலேயே
இவ்வளவு மோசமாக சுவையே இல்லாத காயை கண்டதே இல்லை" என்றார் முல்லா. அதாவது மீண்டும் 'எஸ் பாஸ்'.

மன்னருக்கு ஒரே ஆச்சரியம் "என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்ட பொழுது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர், இப்போது தலைகீழாக மாற்றிப் பேசுகிறீரே" என்றார் மன்னர்.

முல்லா சிரித்துக் கொண்டே "மன்னா! என்ன செய்வது? நான் தங்களிடம் தானே வேலை
பார்க்கிறேன். பீன்ஸிடம் இல்லையே!" என்றார்.

ஆக இடம் பொருள் தெரிந்து 'எஸ் பாஸ்' போடுவதும் சாமர்த்தியம் தான் போல இருக்கிறது.
சரி, நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?


.

Saturday, July 24, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 7 காக்கை பாம்பை கொன்ற கதை



ஒரு பெரிய மரம். அதில் ஆணும், பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு காக்கை இடும் முட்டைகளை யெல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

பலநாட்கள் இப்படியே கழிந்தன! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கருனாகத்தைக் காக்கை என்ன செய்ய முடியும்?, அதற்காக விட்டுவிட முடியுமா, விடலாமா?.

ஒரு நரியாரிடம் ஆலோசனை கேட்டது. நரி சரியான யோசனை ஒன்றைச் சொன்னது. ” அந்தப்புரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்துக்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்கள் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு என்றது”.



காக்கை தாமதிக்கவில்லை. பறந்தது அந்தப்புரத்துக்கு. பார்த்தது அரசகுமாரியின் நகைகளை. ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

அங்கு இருந்த அரசகுமாரியின் தோழிகள், ஆ! காக்கை முத்துமாலையைக் கொத்திட்டுப் போகுது என்று கத்தினர். உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள். காக்கை மெதுவாக அவர்கள் கண்ணில் படும்படியே பறந்தது. அவர்கள் அருகில் வந்ததும் பார்க்கும்படி அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையிலிருந்த ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள். சேவகர்கள் முத்துமாலையுடன் அரன்மனை நோக்கிச் சென்றார்கள். சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

நீதி: விவேகத்தோடு கூடிய வேகமே வெல்வதற்கு வழி!
------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஹா ஹா...நாங்கள்லாம் பயப்படமாட்டோம்ல!