Showing posts with label முல்லா. Show all posts
Showing posts with label முல்லா. Show all posts

Wednesday, October 27, 2010

நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?





அலுவலகத்தில் வேலைபார்ப்போருக்கெல்லாம் பிடித்ததோ பிடிக்கவில்லையே 'யெஸ் சார்' என்று தலை ஆட்டினால் தான் அடுத்த நாட்களை ஓட்ட முடியும் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. நீங்களும் அப்படி 'எஸ் பாஸ்' ஆசாமியா? வெட்கப்படாதீங்க. அதுவும் ஒரு புத்திசாலித்தனம் தான் என்று முல்லாவைப் பார்த்து தேற்றிக்கொள்ளுங்கள்.

முல்லா ஒரு மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு
அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு
ஏதாவது உரையாடிக்கொண்டு இருப்பார்.

ஒரு நாள் மன்னரும் முல்லாவும் அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தார்கள்.

அன்று பீன்ஸ் கரி சமைக்கப்பட்டிருந்தது. அதிக பசியின் இருந்ததால் மன்னருக்கு பீன்ஸ் கரி
மிகவும் ருசியாக இருந்ததாகத் தெரிந்தது.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி "முல்லா, உலகத்திலேயே மிகவும் ருசியான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்றார்.

"சந்தேகமே வேண்டாம், பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது" என்று ஆமாம் போட்டார் முல்லா. அதாவது 'எஸ் பாஸ்'.

மன்னர் உடனே சமையல்காரரை அழைத்து "இனிமேல் சமையலில் தினமும் பீன்ஸ் இருக்க வேண்டும். நாள் தவறாமல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸ் இருந்தே ஆக வேண்டும்" என்று ஆணையிட்டார். இப்படியே பத்து தினங்கள் ஓடியது.

மன்னருக்கு இப்போது பீன்ஸ் கரியைப் பார்த்தாலே ஒரு வித வெறுப்பும், சலிப்பும்
உண்டாகிவிட்டது.

அன்றும் வழக்கம் போல பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் முல்லாவைப் பார்த்து "உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினார்.

"ஆமாம் மன்னா, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த காய்கறிகளிலேயே
இவ்வளவு மோசமாக சுவையே இல்லாத காயை கண்டதே இல்லை" என்றார் முல்லா. அதாவது மீண்டும் 'எஸ் பாஸ்'.

மன்னருக்கு ஒரே ஆச்சரியம் "என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்ட பொழுது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர், இப்போது தலைகீழாக மாற்றிப் பேசுகிறீரே" என்றார் மன்னர்.

முல்லா சிரித்துக் கொண்டே "மன்னா! என்ன செய்வது? நான் தங்களிடம் தானே வேலை
பார்க்கிறேன். பீன்ஸிடம் இல்லையே!" என்றார்.

ஆக இடம் பொருள் தெரிந்து 'எஸ் பாஸ்' போடுவதும் சாமர்த்தியம் தான் போல இருக்கிறது.
சரி, நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?


.

Monday, May 3, 2010

நகைச்சுவையான முல்லா!


ஒரு நாள் முல்லா வெளியூர் ஒன்றிர்குச் சென்றிருந்தார்.


அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அரை இருந்தது. முல்லா அங்கே குளிக்கச் சென்றார்.


அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்ததால் அங்கிருந்த வேலைக்காரர்கள் அவரை சரியாக கவனிக்கவில்லை. அவரை அலட்சியமாக நடத்தினார்கள். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப்படுத்தினர்.


குளித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக்காசை அன்பளிப்பாக கொடுத்தார்.


அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய் விட்டார்கள்.


ஆகா! ஒரு பெரிய செல்வந்தரை அலட்சியப்படுத்தி விட்டோமே! அவரை நன்றாக கவனித்திருந்தால் நிறைய பரிசு கொடுத்திருப்பாரே. கோட்டை விட்டு விட்டோமே என்று சலித்துக்கொண்டனர்.


இரண்டு நாள் கழித்து முல்லா அதே குளியலரைக்குச் சென்றார்.


இம்முறை வேலையாட்கள் முல்லாவிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டனர். அவருக்கு முதுகு தேய்த்துவிட்டு நன்றாக குளிப்பாட்டி மகிழ்வித்தனர். முல்லா குளித்து முடித்தார்.


அவருக்கு உடல் துடைக்க உயர் ரக தூவாலைகள் கொடுத்தனர்.


அவருக்கு வாசனைத் திரவியங்கள். கொடுத்தனர். பன்னீர் தெளித்தனர்.


இப்போது வேலையாட்கள் முல்லா தங்கக்காசு கொடுக்கப் போகிறார் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முல்லாவோ ஆளுக்கொரு செப்புக்காசை கொடுத்தார்.


இதைப் பார்த்த வேலைக்காரர்கள் முல்லாவிடம் நாங்கள் நன்றாக உங்களை உபசரித்தோமே, ஏன் தங்கக்காசு தரவில்லை என்றனர்.


அதற்கு முல்லா அன்றைக்கு உங்களுக்கு தங்கக்காசு கொடுத்தேனே அது நீங்கள் இன்றைக்குச் செய்த உபசாரத்திற்கு. இப்போது செப்புக்காசு கொடுத்திருக்கிறேனே, அது நீங்கள் அன்று செய்த அலட்சியத்திற்கு என்று கூறி நடையைக் கட்டினார்.


*****************


ஒரு நாள் மாடியில் பராக் பார்த்துக் கொண்டிருந்த முல்லா கீழே தவறி விழுந்துவிட்டார். சப்தம் கேட்டு அவரது மனைவி ஓடி வந்து என்னவென்று விசாரித்தார்.


"மாடியிலிருந்து எனது சட்டை விழுந்து விட்டது" என்றார் முல்லா.


"சட்டை விழுந்ததற்கா இவ்வளவு சத்தம்" என்றார் அவர் மனைவி.


"சட்டைக்குள் நான் இருந்தேனே!" என்றார் முல்லா.




Tuesday, April 14, 2009

முல்லா நசுருதீன் கதைகள்:



அடி கொடுத்த முல்லா:  


முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒரு நாள் புது பானை ஒன்றை வாங்கினார். "பையா! இந்தப் பானையை எடுத்துக் கொண்டு கிண‌ற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா" என்று கூறினார்.  

பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு புறப்பட்டான். முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.  

பையன் திரும்பி வந்து "என்ன எஜமானே" என்று கேட்டான்.  

இந்த பானை புத்தம் புதிது . அதிகப் பணம் கொடுத்து வங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாக கையாண்டு உடைத்தால் உனக்கு அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஓங்கி அறைந்தார்.  

பையன் திடுக்கிட்டுத் திரும்பி "என்ன எஜமானே, பானையை உடைத்தால் தானே அடிப்பேன் என்று கூறினீர்கள். நான் தான் பானையை உடைக்கவே இல்லையே, பின் எதற்க்காக அடித்தீர்கள்?" என்று கேட்டான்.  

அதற்கு முல்லா "பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன்?, உடைந்து போன பானை திரும்ப வருமா?, அதற்க்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்து விட்டேன். இந்த அடியை நினைவில் வைத்துக் கொண்டு நீ பானை விஷயத்தில் கவனமாக இருப்பாய் அல்லவா?!!!" என்று பதிலளித்தார்.  

மனதிற்குள் புலம்பியவாறே பையன் நீர் பிடிக்கப் போனது தனிக்கதை.