அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்து வெற்றி பெற்று விடவில்லை. மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களை விஞ்ஞானம் இன்னும் முழுமையாக அறிந்திட வில்லை.
சுத்த வெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின, பரமாணுக்களின் சேர்க்கையால் பஞ்ச பூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருபு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்சக்தி சுழலும் பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சி நிலை பெற்று ஓரறிவு முதல் பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.
இந்த மனித உடலிலே உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக் கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து
இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக் கூடிய இயக்கங்கள் வேறெதுவிமில்லை.
இந்த உடலில் நடைபெறாத ரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டு பிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது. இவற்றை முழுமையாக உணர்ந்தவர்கள்
சித்தர்கள் மட்டுமே. "இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப் பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன" என்பதையெல்லாம் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.
அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும் உறுதிக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு உடல் பிரபஞ்சத்திலிருந்து பெற்று எவ்வாறு அதை மின்சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களைத் தோற்றுவித்து இயக்க நியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.
ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், .
ஊடுருவுதல், இரண்டினிடையே முன்பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.
இந்த அலைகள் பஞ்சபூதங்களின் மீது மோதும் போது அழுத்தம் , ஒலி, ஒளி, சுவை, மணம்
அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மலர்ச்சி பெறுகின்றன.
அந்த மனநிலையிலேயே பிரபஞ்ச உற்பத்தி ரகசியங்கள் எல்லாம் மனிதர்கள் உள்ளத்திலே
நிறைந்திருக்கும். இவ்வாறு உடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சித்தர்கள் பிரபஞ்சமும் உடலும்
சார்ந்த பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இந்த உடலை ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் ஆராய முடியும்.
அவ்வாறு ஆராய்ந்து உடல் இயக்கமும் பிரபஞ்ச இயக்கமும் ஒன்றே என்று அறிந்த
சித்தர்களே 'அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை' என்று சுருக்கமாகக் கூறினார்கள்.
அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால்
ஒரு சித்தராகச் சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லாரிடத்திலுமே அடங்கியுள்ளது. நமக்குத் தேவை இவற்றை அறிய முயற்சிக்கும் மனமே!
.
No comments:
Post a Comment