Showing posts with label பொன்மொழிகள். Show all posts
Showing posts with label பொன்மொழிகள். Show all posts

Tuesday, May 10, 2011

ஆத்ம பேராணந்தத்தை அடைவது எப்படி?





புத்தியை நிலையாக நிறுத்த முடியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய பூர்வ கர்மாதான். பல தினுசான தப்புத் தண்டாக்கள், பாபங்கள், ஜன்ம ஜன்மமாகப் பண்ணிவிட்டோம். அந்தப் பாபங்கள் தீருகிற வரை நமக்கு ஆத்மாநுபவம் என்கிற பேரானந்தம் கிடைக்காது. கர்மாக்களுக்கெல்லாம் பலன் தருகிற ஈஸ்வரன் நம் பாபத்துக்கெல்லாம் தண்டனை கொடுத்துத் தீர்த்து வைத்த பிறகுதான் நமக்கு அந்த சாசுவதமான பேரின்பம் கிடைக்க முடியும். பாபத்தை எப்படித் தீருத்துக் கொள்வது என்றால், புன்ணியத்தால் தான் தீர்த்துக்கொள்ள முடியும்.

"ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலிருந்து தீர்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகா கருணையால்தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இந்த புது ஜன்மாவில் பழைய பாபங்களுக்கு நிவிருத்தியாகப் புதிய புண்ணியங்களைப் பண்ணாமல்
இருப்பதோடு வேரு புதிய பாபங்களைச் செய்து பாப மூட்டையை சேர்த்து விடுகிறோம்.

ஆசையின் வயப்பட்டு ஒரு லட்சியத்தைப் பிடிக்கப் போகிறபோது தான், இந்த லட்சிய பூர்த்திக்காக எந்தத் தப்பையும் செய்யத் துணிகிறோம். இதனால் சித்தத்தில் துவேஷம், துக்கம், பயம் மாதிரி அழுக்குகளை ஏற்றிக் கொண்டு விடுகிறோம். அதனால் பாப கர்மாக்கள் உண்டாகி விடுகின்றன.

சரி, புண்ய கர்மா என்றால் என்ன?

சொந்த லாபத்தைப் பெரிதாக நினைக்காமல், உலக நன்மைகருதியே கர்மாக்களைச் செய்கிற போது அவை எல்லாம் புண்ணிய கர்மாக்களாகி நமக்கு உள்ளூர நன்மை செய்கின்றன. வெளியில் உலக வாழ்க்கையில் அவை சமூகம் முழுவதற்கும் நன்மை உண்டாக்குவதோடு, உள்ளே நம்முடைய பாப
கர்மங்களையும் கழுவித் தீர்க்கின்றன.

அதாவது புண்ணியச் செயல்களே நமது புத்தி சுத்துமாவதற்குப் படிப்படியாக உதவுகிறது.

பாப சிந்தனைகளைப் போக்கும் புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக இதை அன்பு எனச் சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பிவிடுவது தான் பக்தி.

அதாவது அன்பு, கருணை, தியாகம் போன்றவற்றை ஜீவன்களிடம் காட்டினால் புண்ணியகாரியம், அதையே இறைசக்தியிடம் காட்டினால் பக்தி.

இரண்டையும் ஒருசேர நிகழ்த்தி வந்தால் ஆத்மாவின் பேராணந்தத்தை அடைய முடியும்!

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


.

Saturday, April 30, 2011

ஸ்வாமி என்றால் என்ன?




ஸ்வாமி என்றால் என்ன?


'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம் 
உடைமைக்குச் சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர் தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. 


முன்காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் எல்லாம் 'திருச்சிற்றம்பலமுடையார்', 'திருவேங்கடமுடையார்', 'திருநாகேச்சுவர முடையார் என்பது போலவே 'உடையார்' என்கிற பெயரில் தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால் தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ரமாநுஜரை 'உடையர்' என்றே கூறுகிறார்கள்.


'எல்லாம் உன் உடைமையே' என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம் - அவற்றுக்குப் உரிமை கோரும் நாமுள்பட பிறர் எல்லோருமே, எல்லாமுமே இறைவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. உண்மையில் இந்த உலகில் நாம் உரிமை கோரமுடிகிற சொத்துக்கள் எதுவும் இல்லை.


இப்போது 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குத்தான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலைய மாட்டோம்.


நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதி தான்!


'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை என்பதையும் நாம் இறைவனின் இஷ்டப்படி அட்டுவிக்கப் பட வேண்டிய அவனுடைய சொத்து தான் என்பதை உணர்த்துவதாக் அமைந்திருக்கிறது.


இப்படி உணர்வது தான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பதாகும்.


- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!


.

Thursday, April 28, 2011

நல்லெண்ணங்களே உயர்வுக்கு வழி!




ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையின் கடைசி கட்டத்தை நெருங்கும் போது அந்த கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? அந்த வினாடியில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருப்போம் என்று தோன்றும். 


ஒரு மனிதனின் கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். 


கடைசி எண்ணம் என்பது திடீரென்று வந்து விடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதர்கு நிகரான எண்ணமே தான் கடைசியிலும் தோன்றும்.


இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால் தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை வாய்க்கும்.


அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி நிமிடங்களில் கீழான எண்ணமே தோன்றி அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரையே பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும்
ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும். அதன் தொடர்ச்சியாகவே அடுத்த பிறவிகளிலும் கீழான மனிதர்கள் கூட்டத்திலே பிறக்க நேரிடும். 


எனவே எல்லா காலங்களிலும் நற்சிந்தனை கொண்டிருப்பது கடைசி நிமிடங்களின் எண்ணங்களை நல்லெண்ணங்களாக தோன்ற உதவுவது மட்டுமின்றி அடுத்தொரு பிறவியிருப்பினும் அது நல்ல எண்ணங்களும், நல்ல சிந்தனை உள்ளவர்களின் கூட்டத்தோடு பிறந்து உயர வழிவகுக்கும்.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி


.

Sunday, December 26, 2010

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் அருள்மொழிகள்!


உருவமின்றியும் உருவத்துடனும் கடவுள் விளங்குகிறார். இந்த இரு நிலைகளை கடந்தும் அவரே விளங்குகிறார். அவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஓர் எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்து வயிறார உண்டாலும் எடுத்துச் சென்றாலும் ஒரு பெரிய சர்க்கரை குன்று சிறிதும் பாதிக்கப் படுவதில்லை. முன்பிருந்த படியே அது இருக்கிறது. கடவுள் அது போலவே, பக்தர்கள் எவ்வளவு தான் பரவச நிலையில் ஆடினாலும் பாடினாலும் அவர் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார்.  முழுமையாக அவரை அறியவும் அவரது பெருமைகளை அனுபவிக்கவும் யாராலும் முடியாது.  

மீன் எவ்வளவோ தூரத்தில் இருக்கலாம். ஆனால் கவர்கின்ற விதத்தில் ஏதாவது உணவைப் போட்டால் எங்கிருந்தாலும் விரைந்து அங்கு வந்து சேர்ந்து விடும். அது போல் அன்பும் நம்பிக்கையும் உடைய பக்தனின் இதையத்தில் இறைவன் விரைந்து வந்து குடிகொள்கிறான்.  

இறைவனின் திருப்புகழைப் பாடுகின்ற இடத்தில் தீய சக்திகள் நெருங்குவதில்லை.  நோயும் உடலும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளட்டும். மனமே நீ எப்போதும் ஆனந்தமாக இரு.  

இறைவனை நெருங்க நெருங்க ஒருவன் அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கிறான். முடிவில் அவரிலேயே ஒன்று கலந்துவிடுகிறான்.  

இறையருள் என்னும் காற்று இடயீடின்றி எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது. சோம்பேறி படகோட்டி போன்றவர்கள் பாய்மரத்தை விரித்து அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சுறுசுறுப்பான வலிமையானவர்கள் தங்கள் மனமாகிய பாய்மரத்தை எப்போதும் விரித்து வைத்திருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை விரைவில் எளிதில் அடைகிறார்கள்.  

எப்போதும் சிந்தித்துப் பேசு. மனமும் வாக்கும் ஒன்றினைந்து செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பதில் கட்டயம் கிடைக்கும்.  

- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்


Sunday, October 24, 2010

வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!



அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்து வெற்றி பெற்று விடவில்லை. மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களை விஞ்ஞானம் இன்னும் முழுமையாக அறிந்திட வில்லை.

சுத்த வெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின, பரமாணுக்களின் சேர்க்கையால் பஞ்ச பூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருபு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்சக்தி சுழலும் பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சி நிலை பெற்று ஓரறிவு முதல் பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.

இந்த மனித உடலிலே உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக் கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து
இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக் கூடிய இயக்கங்கள் வேறெதுவிமில்லை.

இந்த உடலில் நடைபெறாத ரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டு பிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது. இவற்றை முழுமையாக உணர்ந்தவர்கள்
சித்தர்கள் மட்டுமே. "இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப் பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன" என்பதையெல்லாம் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.

அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும் உறுதிக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு உடல் பிரபஞ்சத்திலிருந்து பெற்று எவ்வாறு அதை மின்சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களைத் தோற்றுவித்து இயக்க நியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.

ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், .
ஊடுருவுதல், இரண்டினிடையே முன்பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.

இந்த அலைகள் பஞ்சபூதங்களின் மீது மோதும் போது அழுத்தம் , ஒலி, ஒளி, சுவை, மணம்
அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மலர்ச்சி பெறுகின்றன.
அந்த மனநிலையிலேயே பிரபஞ்ச உற்பத்தி ரகசியங்கள் எல்லாம் மனிதர்கள் உள்ளத்திலே
நிறைந்திருக்கும். இவ்வாறு உடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சித்தர்கள் பிரபஞ்சமும் உடலும்
சார்ந்த பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இந்த உடலை ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் ஆராய முடியும்.

அவ்வாறு ஆராய்ந்து உடல் இயக்கமும் பிரபஞ்ச இயக்கமும் ஒன்றே என்று அறிந்த
சித்தர்களே 'அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை' என்று சுருக்கமாகக் கூறினார்கள்.
அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால்
ஒரு சித்தராகச் சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லாரிடத்திலுமே அடங்கியுள்ளது. நமக்குத் தேவை இவற்றை அறிய முயற்சிக்கும் மனமே!

.

Friday, October 1, 2010

கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்!


ஒருவனுக்கு எத்தனை மாட மாளிகைகள் இருப்பினும் அவன் படுக்குமிடம் ஐந்தரை அடி நீளந்தானே. ஒருவனுக்கு எத்தனை ஏக்கர் நிலங்களிருப்பினும் அவன் உண்பது காற்படியரிசிதானே! எத்தனை நூல் துணி ஆலைகள் இருப்பினும் அவன் உடுப்பது நான்கு முழந்தானே! அதனால் போதும் என்ற மனமே ஒருவனுக்கு நிம்மதியை அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும்.

துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் மழையினால் உண்டாகும். மழையே மாநிலத்தின் உயிர்நாடி பயிர்தழைக்க உயிர் தழைக்கும். அத்தகைய மழைபொழிய வானில் இருண்ட மேகம் எழுந்த உடனே உலகிற்கு உண்டாகும் நலனைக் கருதி அந்நலம் தனக்கு எய்தியது போல் மகிழ்ச்சியுடன் தோகையை விரித்துக் களிநடம் புரிகின்றது மயில். இத்தகைய சிறந்த பண்புடைய மயிலைக் கருணை நாயகராகிய கந்தப் பெருமான் தனக்கு வாகனமாகக் கொண்டுள்ளார். அதாவது தன்னலமில்லாமல் பிறருக்கு நன்மையே நினைக்கும் எவரையும் எம்பெருமான் கந்தனுக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தைகள் உணவு அருந்தாமல் வீதியில் வெயிலில் விளையாடிக் கொண்டேயிருக்குமானால் தாய் அக்குழந்தைகள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் வலிய வீட்டுக்குள் அழைத்துச் சென்று நீராட்டி ஆடை அணிகலன்களால் அழ்கு செய்து நல்லுணவு தந்து இன்பம் செய்வது
போல், உயிர்களாகிய நாம் பாவமாகிய வெயிலில் விளையாடும் போது தாயினும் மேலான கருணையுள்ள இறைவன் நம்மை தகுந்த காலத்தில் அழைத்து பக்குவமான நிலைக்கு அழைத்துச் சென்று அருள்புரிவான். ஆனால் தாய் வலியச் சொல்லும் போது குழந்தைகள் மறுக்காமல் அதைக் கேட்டு நடப்பது போல இறைவன் சொல்படி கேட்டு நடக்கும் வகையில் மனதை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம், நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

தன்னிடமுள்ள பொருட்களின் மேல் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். இன்னும் அது வேண்டும் இது வேண்டும் என்று கொழுந்து விட்டு எரிகின்ற நினைவுகள் ஆசை எனப்படும். இதை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கவில்லையென்றால் எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல், சதா உலைந்து அலைந்து நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கும் பேராசை குணத்திற்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடும்.

- திருமுருக கிருபானந்த வாரியார்


Thursday, September 16, 2010

சீர்திருத்த வாதிகள் பற்றி சுவாமி விவேகான‌ந்த‌ர்!


சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு வியாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதிப்பதில் அளவில்லாத பிரியம் கொண்டவர்களை சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவின் மூலம் சாடியதன் சாரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நடந்த ஒரு சொற்ப்பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரையாற்றுகிறார் "சிறுவர்களே, மீசைமுளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச்
செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்து நின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் (அந்தக்காலத்தில்) முதுகில் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைக் கட்டளையிடுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அத்தகையத் தெய்வ நிந்தனையிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியப் பாடத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சில வரிகளை எழுதி அதை வெளியிட சில முட்டள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்த உலகத்தின் கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என்று நினைக்கின்றீர்களா?

நீங்க‌ள் தான் இந்தியாவின் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் என்று நினைத்துக் கொண்டீர்க‌ளா? இந்தியாவில் எந்த‌க் கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா? இந்தியாவின் வ‌ர‌லாற்றை நீங்கள் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? ச‌ங்க‌ர‌ர் யார்? ராமானுஜ‌ர் யார்? நான‌க் யார்? சைத‌ன்ய‌ர் யார்? க‌பீர் யார்? தாது யார்? ஒளிமிகுந்த‌ ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளின் வ‌ரிசைக‌ள் போல் ஒருவ‌ர் பின்னால் ஒருவ‌ராக‌ வ‌ந்த‌ இந்த‌ ம‌க‌த்தான ஆச்சாரிய‌ர்க‌ள் எல்லாம் யார்?

ராமானுஜ‌ர் தாழ்ந்த‌ குல‌த்த‌வ‌ர்க‌ளுக்காக‌ வேத‌னைப் ப‌ட‌வில்லையா? த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் ப‌றைய‌னைக் கூட‌ வைண‌வ‌ ச‌ம‌ய‌த்தில் அனும‌திக்க‌ப் பாடுப‌ட‌வில்லையா? த‌ன்னுடைய‌ ச‌ம‌ய‌த்தில் முக‌ம‌திய‌ர்க‌ளைச் சேர்த்துக்கொள்ள‌ அவ‌ர் முய‌ல‌வில்லையா? இந்துக்க‌ளோடும் முக‌ம‌திய‌ர்க‌ளோடும் உற‌வாடி ஒரு புதிய‌ நிலையைக் கொண்டுவ‌ர‌ நான‌க் முய‌ல‌வில்லையா? அவ‌ர்க‌ள் எல்லாம் முய‌ன்றார்க‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி இன்னும் ந‌ட‌ந்து கொண்டே தானிருக்கிற‌து. வித்தியாச‌ம் இது தான். அவ‌ர்க‌ள் இன்றைய‌ச் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல‌ எக்காளமிட‌வில்லை. இன்றைய‌ச் சீர்திருத்த‌க் கார‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளின் வாய்க‌ளில் சாப‌மே இல்லை. அவர்கள் யாரையும் இழிவு படுத்திப் பேசியதில்லை.

அவ‌ர்க‌ளுடைய‌ உத‌டுக‌ள் வாழ்த்துக்க‌ளை ம‌ட்டுமே கூறின‌. அவ‌ர்க‌ள் எந்த‌க் கால‌த்திலும் நிந்திக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் "இந்துக்க‌ளே, நீங்க‌ள் இதுவ‌ரை செய்த‌வை எல்லாம் ந‌ல்ல‌தே. ஆனால் என் ச‌கோத‌ர‌ர்க‌ளே, அதை விட‌ ந‌ல்ல‌தை நாம் செய்வோம்" என்றே கூறின‌ர். இன்றைய‌ சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல் "நீங்க‌ள் எல்லாம் கெட்டுப் போன‌வ‌ர்க‌ள். இப்போது நாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ முய‌ற்சிப்போம்" என்று சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருந்தீர்க‌ள். இப்போது மேலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாவோம்" என்றே கூறினார்க‌ள். இதுதான் இர‌ண்டு பேரிடையே அமைந்துள்ள‌ மிக‌ப் பெரிய‌ வித்தியாச‌ம்." என்றார் சுவாமி விவேகான‌ந்த‌ர்.

ராம‌சாமி நாய‌க்க‌ர் தோற்றுவித்த‌ இந்து ம‌த‌ ஒவ்வாமையை அது என்ன‌வென்றே ஆராயாம‌ல் அது தான் ப‌குத்தறிவு என்று மூட‌ந‌ம்பிக்கை கொண்டிருக்கும் த‌ற்க்கால‌ போலி சீர்திருத்த‌வியாதிக‌ள் இந்த‌ ப‌குதிய‌ப் ப‌டித்தால் அல்ல‌து சுவாமி விவேகான‌ந்த‌ர‌து புத்த‌க‌த்தை யாரிட‌மாவ‌து ஓசிக்கு வாங்கி ப‌டித்தாவ‌து கொஞ்ச‌ம் உண்மையான ப‌குத்த‌றிவு‌ பெறுவ‌ர்க‌ளா என்று பார்ப்போம்.


Tuesday, September 7, 2010

ஜீவ சமாதி என்றால் என்ன?



வாழ்க வளமுடன்

ஜீவ சமாதி என்று பேசப்படுகிறதே அப்படி என்றால் என்ன? அது இறந்த நிலையா அல்லது உயிரோடு இருக்கும் நிலையா? சமாதியில் அமைந்த பிறகு உடலில் உயிர் இருக்காதே! பிறகு அதை ஜீவ சமாதி என்று எப்படிக் கூறுகிறார்கள்? என்றெல்லாம் உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம்.

அமைதியான மனதுடன் கூடிய ஆழமான தவ வாழ்க்கை மூலமே சாத்தியப்படும் விஷயம் அது.

ஞானிகள் தவத்தின் மூலமாகவு, தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப் பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின் படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மன இயக்கமும் உடல் இயக்கமும் நின்று விட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதெவே ஜீவசமாதி என்றழைக்கப்படுகிறது.

இதுபோல தமிழ் நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோவில், மந்த்ராலயம் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்ற போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. "ஜீவன்" என்றால் உயிர். "சமாதி" என்றால் சமன் - ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.




Sunday, August 29, 2010

ஜாதிகளை இணைத்தால் பிரச்சனை!



ஜாதிகளை எல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் தான் சண்டை ஜாஸ்தியாகிறது. வாதத்தால் ஒற்றுமை ஏற்படுத்த முற்படாமல், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்று கூட இல்லாமல், பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லோரும் சேர்ந்து செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் உண்டாகி விடும்.

தானம் தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனசின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் நீர் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபஹ்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

"பாடும் பணி" யினால் ஜனங்களின் நெஞ்சம் உருகி பரமேஸ்வரனிடம் சேருமாறு செய்தது, அப்பர் ஸ்வாமிகளின் கைவண்ணம். அதோடு, தேக உழைப்பாக ஓர் உழவர் படையை வைத்துக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் ப்ராகரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கினார். அப்பர் காட்டிக் கொடுத்தபடி, அம்மையப்பரிடம் பக்தி வைத்து எல்லோரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்ற அன்பில் ஒன்றுபட்டு சேவை செய்யும் போது களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமை ஏற்படும்.

'தனக்கு மிஞ்சி தானம்' என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் "தனக்கு" என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள். தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தருமத்திற்குச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தானம்". நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி தனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.

எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் அத்தனையையும் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரிதான் ஆசை. எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். 'நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்" என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


Saturday, August 21, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!




நாம் வாழும் காலத்தில் நன்மை செய்தால் இறந்த பின் சொர்கத்திற்குச் சென்று இன்பத்தை அனுபவிக்கலாம் என்றும் தீமைச் செய்தால் நரகத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் பெறியோர்களால் கூறப்பட்டிருக்கிறது.

உண்மையில் சொர்கம் நரகம் என்று இருக்கிறதா என்றால் இல்லை. இவைகள் எல்லாம் அரியாத மக்களுக்கு ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக பெரியவர்கள் சொல்லி வைத்த கற்பனைக் கதைகள்.

மனோதத்துவப்படி, மனிதன் ஒவ்வொரு செயலிலிருந்தும் ஒரு ஆதாயத்தை எதிர்பாக்கிறான். மனிதனுடைய இந்தத் தன்மையைப் பயன்படுத்தி ஞானிகள் சில கதைகளைக் கற்பித்தார்கள்.

"நீ நல்லது செய்தால் சொர்கத்திற்குச் செல்வாய் என்றும் தீமையைச் செய்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவாய் என்றும் எமலோகத்தில் துன்பத்தை அனுபவிக்க நேருமென்றும்" சொல்லி வைத்தார்கள். மக்கள் தீமையைச் செய்வதிலிருந்து தவிர்த்து அவர்களை நல்வழிப்படுத்தவே இது போன்ற தோற்ற மாயைகள் உருவாக்கப்பட்டன. இவைகள் யாவும் ஒரு வகை மனோவியல் காரணங்களுக்காகவே உண்டாக்கப்பட்டவை. இந்த நம்பிக்கைகள் இருப்பதால் தீங்கில்லை மாறாக நன்மைகளே விளைகின்றன.

'மரணம்' என்பது உண்மையில் என்னவென்று புரிந்து கொண்டால் அது பற்றிய கேள்விகளும் அச்சங்களும் நீங்க வாய்ப்பிருக்கிறது. மரணம் என்பது உடலியக்க விதியில் உண்டாகும் ஒரு மாற்றம் தான். வித்து, ஜீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்குகிறது. அதுவே வாழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையையே மரணம் என்கிறோம்.

அதாவது உடல் தனது இயக்கத்திலிருந்து தளர்வடையும் போது அதனோடு இயங்கிக் கொண்டிருக்கும், அதன் இயக்கத்திற்குத் தேவையான கூட்டனுக்களும் இந்த உடலோடு இனி கூட்டாக இயங்க முடியாது என முடிவு செய்து விலகிச் சென்று தனித்தியங்கத் துவங்குகிறது. உதாரணமாக ஒரு நிறுவணம் நஷ்டத்தால் கலைக்கப்படுகிறது என்று கொள்வோம். அந்நிறுவனம் என்ற அமைப்பு கலைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் இருந்த பதவிகள் இல்லாமல் போகின்றன. ஆனால் அந்தப் பதவிகளில் பணி புரிந்து கொண்டிருந்த மனிதர்கள் வெவ்வேறு அமைப்புகளில் சேர்ந்து தனித்தியங்க துவங்குகிறார்கள். அது போலதான் மரணம் என்பதும். உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து தனித்து இயங்க்குகின்றன. அவ்வளவே.


ஆக முற்றிலுமாக மரணம் என்பது நிகழ்வதே இல்லை. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயர்கையின் நியதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி




Friday, August 13, 2010

உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது!




"எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப்பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைபைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்."

"மிருகபலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்."

"புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும் பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியை பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் ப்ரகடனப்படுத்துங்கள்."

"சமய சாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமய சாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்."

"ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ மனதிற்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன் கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்."

"நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்."




சில சுவாரஸ்யங்கள்.:

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மைசூர் மகாராஜா, “நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை
விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தாராம். அதற்கு சுவாமி விவேகானந்தர், “நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார். சத்தியத்தின் வீரியம் இது தான் போலும்.


இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை, பிரிட்டனின் அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார். “கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக முழங்கினாராம். இன்றைக்கும் கிறிஸ்தவ அரசாங்கத்தின் பிடியில் தான் இந்தியா இருக்கிறது என்று
தெரிந்தால் மேலுலகத்திலும் அவர் நிம்மதி இழக்கலாம்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார். அதை வெளிப்படையாக விவாதித்தும் இருக்கிறார்.

அன்றைக்கே கூட கிறிஸ்தவ மத வெறியர்கள் இந்து சாமியார்களை அவமதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்பதற்கு சுவாமி விவேகானந்தரின் வரலாறே சாட்சி எனலாம். சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை. மும்பையில் பிறந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப் பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப் பற்றி அமெரிக்காவிலேயே அவதூறாகப் பேசவைத்தனர். அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லையாம். இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப் பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர். இந்த கொள்ளைக்கூட்டத்தை நம்பி இன்றைய இந்தியாவில் மந்தை மந்தையாக மதம் மாறும் கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?

சுவாமி விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எடுத்தால் அதைப் பத்தி பத்தியாகப் படிப்பாராம். நம்மைப் போல் வார்த்தை வார்த்தையாக இல்லை.

சிறப்பு தானே!




"அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுந்காலமாகத் தனது நாகரீகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளோ அல்லது வேறு காரனங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இப்போது சிந்திக்கவேண்டியது ஒன்று தான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து அந்தக் கப்பலைப் பழுது பார்க்கப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து இந்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் பணிக்கு தருவோம். அல்லது அந்தப் பணியிலே தோல்வி கண்டால் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி மடிவோம். புறப்படுங்கள். நடைபோடுங்கள், தேசம் காக்க உங்களை அர்ப்பணியுங்கள்"

- சுவாமி விவேகானந்தர்


Tuesday, June 15, 2010

கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்!



ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், பெற்ற தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

ஒருவனுக்கு எத்தனை மாட மாளிகைகள் இருப்பினும் அவன் படுக்குமிடம் ஐந்தரை அடி நீளந்தானே. ஒருவனுக்கு எத்தனை ஏக்கர் நிலங்களிருப்பினும் அவன் உண்பது காற்படியரிசிதானே! எத்தனை நூல் துணி ஆலைகள் இருப்பினும் அவன் உடுப்பது நான்கு முழந்தானே! அதனால் போதும் என்ற மனமே ஒருவனுக்கு நிம்மதியை அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம், நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில் ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்

பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

குழந்தைகள் உணவு அருந்தாமல் வீதியில் வெயிலில் விளையாடிக் கொண்டே யிருக்குமானால் தாய் அக்குழந்தைகள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் வலிய வீட்டுக்குள் அழைத்துச் சென்று நீராட்டி ஆடை அணிகலன்களால் அழ்கு செய்து நல்லுணவு தந்து இன்பம் செய்வது போல், உயிர்களாகிய நாம் பாவமாகிய வெயிலில் விளையாடும் போது தாயினும் மேலான கருணையுள்ள இறைவன் நம்மை தகுந்த காலத்தில் அழைத்து பக்குவமான நிலைக்கு அழைத்துச் சென்று அருள்புரிவான். ஆனால் தாய் வலியச் சொல்லும் போது குழந்தைகள் மறுக்காமல் அதைக் கேட்டு நடப்பது போல இறைவன் சொல்படி கேட்டு நடக்கும் வகையில் மனதை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

- திருமுருக கிருபானந்த வாரியார்


Saturday, April 10, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள் நசுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்றுபோகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வந்து சேரும்; உதவி வந்து சேரும்; அசைக்கவே முடியாத உறுதியான வலிமை வந்து சேரும்.


உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவு, முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு. உன் விதியில் நீ நம்பிக்கை கொண்டிரு. அது, கையில் காசில்லாத உன்னை நம்பித்தான் இருக்கிறது. 


கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரப்புங்கள். செயலாற்றுங்கள்! செயலாற்றுங்கள்! வேலை செய்யும்போது ஒரு வேலைக்காரனைப் போல இருங்கள். சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். எல்லையற்ற பொருமையைக் கடைபிடியுங்கள். வெற்றி உங்களுடையதே!


கவனமாக இருங்கள். உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருங்கள். மெதுவாகவே என்றாலும் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி.


இன்றைய இளைய தலைமுறைகள் நவீன தலைமுறைகளான உங்கள் மீது தான் எனது நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக்கருத்துக்கள் பரவும் வரையிலும் , என் மீது பேரண்புகொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே செல்வார்கள்.


மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மை குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.


எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது நல்லதை விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.


- சுவாமி விவேகானந்தர்.



Friday, March 26, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் துடிப்பு மிக்க சகோதர சகோதரிகளே, இந்நாட்டின் இளம்பிராயத்தவர்களே! ஒன்றை மட்டும் நன்றக கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்மீக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு மேலை நாட்டு லௌகீக நாகரீகத்தின் பின்னால் நீ செல்வாயானால் அதன் விளைவாக மூன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும். ஏனென்றால், நமது நாட்டின் முதுகெலும்பு முறிந்து, எந்த அடிப்படையின் மீது இந்நாட்டின் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதோ அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். மேலை நாட்டு நாகரீகத்தின் பின்னால் சென்றால் நாலா பக்கங்களிலும் அழிவைத்தான் நீ காண்பாய்.

இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும்.

யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.

இந்தியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சி பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய ஞாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத
காரணத்தால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள் தான் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம்.

இதே இந்தியாவில் தான், மிகவும் உயர்ந்த சுயநலமற்ற பயன்கருதாத பணியைக் குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறோம். இதயம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நமது சதைப் பிண்டமாகிய உடலைத் தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்க்ளாக இருக்கிறோம்.

செல்வச் செழிப்பை இழந்து, அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து, நசுக்கப்பட்டு என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை, யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால், இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

எப்போது, பரந்த இதயம்படைத்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களைத் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை மற்றும் அறியாமை ஆகிய நீர்ச்சூழலில் சிறிது சிறிதாக மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டின் கோடானு கோடு மக்களின் நல்வாழ்விற்காக வருந்தி முழு ஆற்றலையும் கொடுத்து உழைக்க முன்வருவார்களோ, அப்போது தான் இந்தியா விழித்தெழும்.

- சுவாமி விவேகானந்தர்


Sunday, February 28, 2010

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!


"நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய். புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய்.

உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது. வலிமையைத் தருகிறது. உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வலவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது."

ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் லட்சியம், 'மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது' என்பது தான். மேலும், 'கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?' இதுவே வேதாந்தம் கூறும் அறிவுரையாகும்.


நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆக வேண்டும். நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறாய். ஆனால் அதை நீ அறியாமல் மட்டுமே இருக்கிறாய். இதை நீ உணரவே வேண்டும்.

உன்னிடமுள்ள தெய்விகத் தன்மைதான், 'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்' என்பதற்கு உரிய சான்றாகும். நீ கடவுளாக இல்லாவிட்டால் கடவுள் என்ற ஒருவர் இருக்கவில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை. இந்த உண்மையை வாழ்வில் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதையே வேதாந்தம் கூறுகிறது.

கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை. உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறாய்.

மனித உடலில் உள்ள மனித ஆன்மா ஒன்று தான் வழிபட வேண்டிய ஒரே கடவுள் ஆகும்.

- சுவாமி விவேகானந்தர்.