Monday, April 11, 2011

ஆடுகளம் - தேர்தல் மலேரியா!



இன்றைய தினமலர் செய்தியில்!


தமிழக அரசியலில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கருத்து சொல்லக்கூடியவர்களில் முதன்மையானவர், பத்திரிகையாளர் சோ.பெயருக்கேற்றார் போல, "சோ'வென தன் கருத்துக்களைக் கொட்டக்கூடியவர். 

"அச்சேற்றுவதற்கு முன் படித்துக் காட்ட முடியுமா? நான் கூறிய எதையும் வாபஸ் வாங்க மாட்டேன்.எப்படி ஏறுகிறது எனத் தெரிந்துகொள்ளத் தான்' என்றார். 


அவரது பேட்டி:தமிழக தேர்தல் என்றாலே, கூட்டணி அமைப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்தத் தேர்தலில் எப்படி?


என் பங்களிப்பு இருப்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும். ஏதாவது நடந்தால் என் தலையில் பழிபோடுவது வழக்கமாகிவிட்டது. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், என் தலையில் எதைப் போட்டாலும் வழுக்கி விழுந்துவிடும். என் பங்களிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?


அதென்ன, அ.தி.மு.க., ஆட்சி வந்தேயாக வேண்டும் என்பதில் உங்களுக்கு அவ்வளவு அக்கறை?


தி.மு.க., ஆட்சி போகவேண்டும் என்பது முதல் காரணம். தமிழகம், ஒரு குடும்பத்தின் பல கிளைகளுக்கு பங்கு போடப்பட்டு வருகிறது. இங்கு மட்டுமில்லாமல், மத்திய ஆட்சியிலும் பங்கு பெற்று, அங்கும் பெரும் ஊழலைச் செய்திருக்கின்றனர். "ஸ்பெக்ட்ரம்' வெளியில் வந்துவிட்டதால், அது மட்டும் தான் ஊழல் என நினைத்துவிடக் கூடாது. அதற்கு முன்பும் எவ்வளவோ நடந்திருக்கிறது. இதற்கு முன் இவ்வளவு மோசமாக நடந்ததில்லை எனுமளவுக்கு தமிழகத்தில் நிர்வாகம் இருக்கிறது. ஊருக்கு பகுத்தறிவு; தங்களுக்கு பக்தி. ஊருக்குத் தமிழ்; தங்களுக்கு ஆங்கிலம்; ஊருக்கு தமிழ் கலாசாரம்; தங்களுக்கு கலைஞர் "டிவி' கலாசாரம் என, எதை எடுத்தாலும் இந்த தி.மு.க., போலியாகத் தான் செய்து வந்திருக்கிறது. இந்த ஆட்சி மாறாவிட்டால், தமிழகத்தில் மிகப் பெரிய விபரீதங்கள் நிகழ ஆரம்பித்துவிடும். மக்கள் அவ்வளவு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.


ஊழல் புகார்கள் பற்றி பாமர மக்கள் கவலைப்படுவது போல தெரியவில்லையே?


கவலைப்படுவதில்லை என நாம் ஏன் நினைக்க வேண்டும்? படித்தவர்கள் கூடத்தான் ஓட்டே போடுவதில்லை. எனவே, அவர்கள் ஊழலைப் பற்றி கவலைப்படவில்லை என அர்த்தமா? மகாத்மா காந்தி ஊழல் செய்துவிட்டார் என ஒரு தகவல் வந்தால், எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ஊழலே செய்துகொண்டிருக்கும் தி.மு.க., பற்றி புகார் வந்தால், "இது ஒரு பேச்சா? அதான் தெரியுமே' என்பது தான் மக்கள் மனநிலையாக இருக்கும். அதற்காக, அவர்கள் கவலைப்படவில்லை என்று அர்த்தமல்ல.


இத்தகைய புகார்கள், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா? 


பாதிக்கும் என்றே நான் நினைக்கிறேன். இவையெல்லாம் சேர்ந்து தான் தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் மனதைத் திருப்பியிருக்கிறது. 


சரி, அ.தி.மு.க., ஆட்சி வந்தால் ஊழல் நடக்காது என உங்களால் உத்தரவாதம் தர முடியுமா?


ஏன், 2001-06 ஆட்சியில் என்ன ஊழல் நடந்தது? "வழக்கு போட்டுப் பாருங்கள்' என ஜெயலலிதாவே கருணாநிதிக்கு சவால் விட்டாரே. 91 - 96ல் போடப்பட்ட வழக்குகளில் 12ல் நீதிமன்றங்களே அவரை விடுவித் திருக்கிறதே.


தற்போது அதிகரித்துவிட்ட, "இலவச அரசியல்' பற்றிய உங்கள் கருத்தென்ன?


இலவசங்கள் கூடாது என்பது தான் என் கருத்து. மேலை நாடுகளிலேயே வேலை இல்லாதோருக்கு நிதி உதவி போன்ற சில திட்டங்கள் இருந்தன. அவை தவறு என சிந்தனை இப்போது வந்திருக்கிறது. சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்திய போதே நான் தவறு என்று தான் நினைத்தேன். ஆனால், அதற்கு நல்ல பலன் இருப்பதை அறிந்தேன். ஏழை மாணவர்கள், அதிகளவில் பள்ளிக்கு வந்தனர். இங்கே ஏழ்மை இருக்கிறது. அவர்களின் தேவையில் சிலவற்றை பூர்த்தி செய்வது சரியே. அதற்காக, "டிவி' கிரைண்டர், மிக்சி என ஆடம்பரப் பொருட்களைத் தருவது ஓட்டு வாங்குவதற்காகத் தான். ஓட்டுக்கு நோட்டு தருவதற்கு பதிலாக, "தேர்தல் முடிந்ததும் தருகிறேன். இப்போது ஓட்டு போடுங்கள்' என்ற கதை தான்.ஜெயலலிதா பார்த்தார். தன்னால் என்னென்ன முடியுமோ, அதையும் அறிவித்துவிட்டார். இப்போது நீங்கள் இலவசத்துக்காகத் தான் ஓட்டு போடுவேன் என்றால், தி.மு.க.,வுக்கு போட்டால் என்ன, அ.தி.மு.க.,வுக்கு போட்டால் என்ன? அதனால், அந்த விஷயமே தற்போது சம்பந்தமில்லாத தாகிவிட்டது. இலவசத்தை வைத்து தேர்தல் தீர்மானிக்கப்படப் போவதில்லை. 


அதனால் தான் ஜெயலலிதாவும் இலவசங் களை அறிவித்துள்ளாரா?


அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனால், அவர் சொன்னால் கொடுத்துவிடுவார். 


ஜெயலலிதா ஏன் நரேந்திர மோடி மாதிரி, இலவசங்கள் தரமாட்டேன் என அறிவிக்கவில்லை? 


குஜராத் போன்ற, இலவசங்களுக்குப் பழக்கப்படாத மாநிலங்களில் அவ்வாறு அறிவிக்கலாம். திடீரென அதை மாற்ற முடியாது. இலவச போதையில் இருந்து மக்களை வெளிக்கொண்டுவர கொஞ்சம் அவகாசம் தேவை. நல்ல அரசாங்கத்தை ஜெயலலிதா கொடுக்கும்போது, இந்த இலவச போதையில் இருந்து மக்கள் வெளியே வருவர்.


ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனிருக்கும்போது, அவரால் எப்படி இலவசங்களைக் கொடுக்க முடியும்?


ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது, வணிக வரி வசூல், எப்போதுமில்லாத அளவு உச்சத்தில் இருந்தது. அது தவிர, ஜெயலலிதா ஆட்சி நடக்கும்போது, அரசு செயல்படுகிறது என்பதை உணர முடியும். இப்போது குடும்பம் தானே நடக்கிறது. குடும்பத்தினரை திருப்திப்படுத்தினால் போதுமே. மழைநீர் சேகரிப்பு என அவர் அறிவித்த உடனே, அனைவரும் விழுந்தடித்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தினரா, இல்லையா? அப்புறம் ஏன் போய்விட்டது? "இவங்க சும்மா சொல்வாங்க; அவ்வளவு தான்' என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதாவைப் பொறுத்த வரை, "சும்மா சொல்வாங்க' என்பதே கிடையாது.


இந்த ஆட்சிக்கு எதிரான ஆக்டோபசில் ஒருவராக உங்களை தி.மு.க., சித்தரித்திருந்ததே. 


அப்படியா? எனக்கு தெரியாது. இருந்துவிட்டுப் போகட்டுமே. உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை, ஆக்டோபஸ் தானே சரியாகச் சொன்னது! இப்போது நான் சொல்கிறேன்: தி.மு.க., தோற்கும்.


ஜெயலலிதா சொல்வது போல, ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய அலை இருப்பது போல தெரியவில்லையே.


உங்களுக்குத் தெரியவில்லை; எனக்குத் தெரிகிறதே. எங்கள் நிருபர்கள் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்றனர். அங்கு எங்கேயும், தி.மு.க.,வுக்கு சாதகமாக மக்கள் கருத்து சொல்லவில்லை. இந்த ஆட்சி போக வேண்டும்; அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் சொன்னது: விலைவாசி, மின்வெட்டு, குடும்ப அரசியல், ஸ்பெக்ட்ரம். இதைத் தான் பெரும்பாலான மக்கள் சொல்லியுள்ளனர்.


சமீபத்தில் வெளியான மூன்று கருத்துக் கணிப்புகளில், எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதே


ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இல்லை என நீங்கள் சொன்னதே உண்மையாக இருந்தால், ஒரேயடியாக, ஒட்டுமொத்த ஆதரவும் ஆட்சிக்குத் தானே சென்றிருக்க வேண்டும்.


தொங்கு சட்டசபை வர வாய்ப்பு இல்லையா?


எனக்கென்னமோ அவ்வாறு நடக்கும் எனத் தோன்றவில்லை. 


தி.மு.க.,வின் தேர்தல் பிரசாரத்தில் அதிகளவு நடிகர்கள் களமிறக்கப்பட்டுள்ளனரே!


தி.மு.க.,வில் முன்பு ஒரு ஐம்பெரும் தலைவர்கள் இருந்தனர். தற்போது, வடிவேலு, குமரிமுத்து, குஷ்பு, தியாகு, பாக்யராஜ் ஆகியோர் தான் ஐம்பெரும் தலைவர்களாக உள்ளனர்.


அந்தளவுக்கு இவர்கள் இறங்கிவர என்ன காரணம்?


திரை நட்சத்திரங்களின் பிரசாரம் என்பது, எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இப்போது தான் என்றில்லை. ஆச்சார்ய கிருபளானியை எதிர்த்து, காங்கிரசே செய்திருக்கிறது. தற்போது, திரை நட்சத்திரங்கள் செய்வது தான் பிரசாரம் என்பது போல, "டிவி'யில் காட்டிக்கொண்டிருக்கின்றனர். அதனால், அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. சிதம்பரம் கூட சொன்னாரே, "திருமண வீடு போல இருக்கணும் தேர்தல்; வேற வீடு மாதிரி ஆயிடுச்சு' என்று. இவர்களுக்கு, தேர்தல் என்பது ஒரு தமாஷ். ஜாலியாக இருக்க வேண்டும். அதை அவர் சோனியாவிடம் சொல்ல மறந்துவிட்டார் போலும். சென்னை பிரசாரத்தில் அவர், ஏதோ ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பது போல தான் உட்கார்ந்திருந்தார். சோனியா, இந்தக் கூட்டணிக்கு மலர் வளையம் வைக்காத குறை. அப்படி நடந்துகொண்டார்.


ஜெயலலிதாவை விட விஜயகாந்த் மீது அதிக விமர்சனம் வைக்கப்படுகிறதே...


அது இவர்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கிறது. அதைத் திரிக்க முடிகிறது. "ஆப்பு அடிக்கணும்' என நீங்கள் சொல்வது ஒரு மாதிரி இருக்கும்; நான் சொல்வது ஒரு மாதிரி இருக்கும். அதை வைத்து அவர்கள் என்னவெல்லாமோ சொல்லுகின்றனர்.


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மத்திய அரசில் பாதிப்பு இருக்குமா?


நிச்சயம் இருக்கும். இப்போதே தி.மு.க., - காங்., உறவு திருப்தியாக இருப்பது போல் நான் நினைக்கவில்லை. மேலும், தேர்தல் கமிஷன் இவ்வளவு தூரம் சுதந்திரமாக செயல்படுவதை காங்கிரஸ் விரும்பாது. தி.மு.க.,வுடன் நல்லுறவு நிலவியிருந்தால், இந்நேரம் தேர்தல் கமிஷனை அடக்கியிருப்பர். தி.மு.க.,வின் வெற்றியில் காங்., அக்கறை காட்டவில்லை என்று தான் நினைக்கிறேன். காங்கிரஸ் ஓட்டே தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.


தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக புகார் எழுந்துள்ளதே?


சட்டவிரோதமாக பணம் எடுத்துச் செல்பவர்களுக்கு என்ன தனி மனித சுதந்திரம் வேண்டியிருக்கிறது. நான் சம்பாதிக்கிறேன். ஏன் கணக்கு காட்ட வேண்டும்; வருமான வரி கட்ட வேண்டும் எனக் கேட்பது போல் இருக்கிறது. மாட்டுகிறவர்கள் யார்? ஏதோ ஒரு வகையில், சட்டவிரோதமான பணத்தைக் கையாள்பவர்கள் தானே. "ஆவணம் வைத்திருக்க வேண்டுமா? இதென்ன அக்கிரமம்' என்கின்றனர். சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகச் சொல்கின்றனர். பஸ்சின் மேற்கூரையில் சிறு வியாபாரி தான் ஐந்தரை கோடி ரூபாய் பணம் வைத்திருந்தானா?  


நன்றி தினமலர்!

_____________________________________________________

எந்த ஆட்சி வந்தாலும் வீட்டு வாடகை குறையப்போவதில்லை. நில உச்ச வரம்புச் சட்டம் அமல்படுத்தப்படப் போவதில்லை! இதை எல்லாம் யார் செய்வாரோ அவர் அரசியல் வாதிகளுள் மாணிக்கமாவர். பார்க்கலாம் யார் வந்து என்ன செய்யப்போகிறாரோ!



இந்த கொசுத்தொல்ல தாங்கலடா சாமி!


.













.

No comments: