Friday, April 15, 2011

கீதோபதேசம் - பிரபஞ்சத்தின் பிரயாணம்!


அர்ஜுனா! எனது இவ்வுடலில், ப்ரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்களும், அசையாப் பொருட்களும் ஒருங்கிணைந்திருப்பதைப் பார். இதைத்தவிர மேலும் பார்க்க விரும்பும் வேரு பலவற்றையும் இப்போது பார்.


ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."


ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.


திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.


அப்போது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவாதி தேவனின் அந்த உடலில் ஒன்றுகூடி இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.


பிறகு அர்ஜுனன் பெருவியப்புடன் ரோமம் சிலிர்க்க குனிந்த தலையுடனும் கூப்பிய கரங்களுடனும் இறைவனை வணங்கிக் கூறலானான்.


"மகாத்மாவே! விண்ணுலகுக்கும், மண்ணுலகுக்கும் இடையே உள்ள வெளியும், மற்ற திசைகள் யாவும் உன்னாலேயே நிரப்பப்ட்டுள்ளன. உன்னுடைய அற்புதமான இந்த உக்கிர வடிவத்தினைக் கண்டு மூன்று உலகங்களும் அச்சத்தினால் நடுங்குகின்றன.


இந்த வானவர்கள் எல்லோரும் உன்னிடம் புகுகின்றனர். சிலர் அச்சத்தினால் உன்னைக் கைகூப்பி வனங்கி புகழ்கின்றனர். மகரிஷிகள், சித்தர்கள் கூட்டத்தினர் வாழ்க என்று சொல்லிக் கொண்டு உன் புகழைப் போற்றிப் பாடுகின்றனர்.


உருத்திரர்கள், ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர்கள், விசுவே தேவர்கள், அசுவினி தேவர்கள், மருத்துக்கள், பித்ரு தேவர்கள், கந்தர்வகள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் ஆகியோர் கூடி உன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


நெடுந்தோளாய், பல முகங்கள், கண்கள், அநேக கைகள், துடைகள், பாதங்கள், பலவயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உன்னுடைய பெரிய உருவத்தைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.


பயங்கரமான கோரப்பற்களுடைய உமது வாய்க்குள் பரபரப்புடன் வேகமாக நுழைகிறார்கள். சிலர் பொடிப்பட்ட தலைகளோடு உனது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். 


வெள்ளப் பெருக்கோடு கடலை நோக்கி விரைந்து பாய்ந்தோடும் ஆறுகளைப் போல் இப்போர் வீரர்கள் தீப்பிழம்புகளை வெளியிட்டுக் கொண்டுள்ள உமது வாய்களுக்குள் புகுகின்றனர்.


அழிவதற்காக விளக்கை நோக்கிப் பறக்கும் விட்டில் பூச்சிகளைப் போல், இந்த மக்கள் உன்னுடைய வாய்களுக்குள் நாசத்தை எதிர்நோக்கி விரைந்து செல்கிறார்கள்.வெம்மையான கதிர்களைக் கொண்ட வாய்களால் உலகு அனைத்தையும் விழுங்கி நாவால் நக்கி ருசி பார்க்கின்றீர்! 


விஷ்ணுவே! உன்னிடமிருந்து வெளிவரும் வெம்மையான கதிர்கள் உலகம் முழுதும் நிறைந்து சுடுகின்றன.


பயங்கர தோற்றத்தை உடைய மூர்த்தியாக நீ யார் என்று எனக்குக் கூறு. உன்னை வனங்குகிறேன்!. 


தேவர் தலைவா! அருள் புரிவாயாக! முதல்வனாகிய உன்னை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உன் செயல் எனக்கு விளங்கவில்லை." என்கிறான் அர்ஜுனன்.


அர்ஜுனனின் மேற்கண்ட இந்த வர்ணனைகள் யாவும் பரமாத்மா என்றழைக்கப்படும் அந்த மகா சக்தியை கண்ணாடி போல காட்டுவதாக இருக்கிறது.
.
"உலகு அனைத்தையும் விழுங்கி நாவால் நக்கி ருசி பார்க்கின்றீர்! " என்கிற இந்த வரிகள் பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணிலடங்கா சூரியன்களும் நட்சத்திரங்களும், பூமிகளும் எங்கோ இருக்கும் ஒரு மையப்பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதாக அறிவியலாளர்களின் கூற்றை அப்படியே மெய்ப்பிப்பதாக இருக்கிறது. 


வின்வெளி பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கேலக்ஸி என்றழைக்கப்படும் நட்சத்திர கூட்டம் பற்றியும் அவைகள் வின்வெளியில் ஏதோ ஒரு இலக்கை நோக்கி மிகப்பெரிய ஈர்ப்பு ஒன்றின் காரணமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும் தெரிவிக்கிறார்கள். 


பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ஒருவகை ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குழுக்களைப் போன்று வட்டமிட்டு வருகின்றன. இப்படி குழு குழுவாக பலகோடிக்கணக்காண குழுக்கள் விண்வெளியில் கொத்துக்கொத்தாக இருக்கின்றன. இவ்வாறான குழுக்களை அண்டம் (கேலக்ஸி-Galaxy) என்று குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஆயிரம் கோடி அண்டங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.


நமது சூரியக்குடும்பம் இருப்பது பால்வழி அண்டத்தில் (மில்கி வே கேலக்ஸீ). இந்த அண்டத்தில் கோடிக்கணக்காண நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் இதில் ஒரு நட்சத்திரம் போன்றதே! 


வானத்தை நாம் நிமிர்ந்து பார்க்கும் போது நமக்கு தெரிவது ஒரு சிறு பகுதி தான். அப்படியெனில் இந்த அண்டம் எவ்வளவு பெரியது, அதேபோல கோடிக்கணக்காண அண்டங்கள் பிரபஞ்சத்தில் இருந்தால் இந்த பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை கற்பனை கூட செய்ய முடியாது.


ஆனால் கற்பனைக்கெட்டாத இத்தனை அண்டங்களையும் ஒரு மையப்பகுதி மகாஈர்ப்பின் மூலமாக உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த ஈர்ப்பு விசைக்கு ஈடுகொடுத்து அத்தனை மகா அண்டங்களும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


உதாரணமாக நமது மில்கிவே கேலக்ஸி வினாடிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு திசை நோக்கி நகர்வதாக கூறுகிறார்கள். அதாவது இந்த கேலக்ஸியில் அடங்கிய பூமியில் இருக்கும் நாம் வினாடிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் எங்கோ ஓரிடத்திற்கு இந்த வினாடி சென்று கொண்டே இருக்கிறோம். அதை நாம் உணர்வதில்லை. அவ்வளவுதான். 


இப்படி பிரபஞ்சத்தின் ஈர்ப்பு இந்த அண்டங்களையெல்லாம் அப்படியே விழுங்கிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தான் ஸ்ரீ க்ருஷ்ணர் தனது மகா பெரிய உருவமாகிய விஸ்வரூப தரிசனத்தின் மூலம் கண்ணாடி போல காட்டுகிறார். 


"உலகு அனைத்தையும் விழுங்கி நாவால் நக்கி ருசி பார்க்கின்றீர்!" என்று அர்ஜுனன் அரண்டு போய் வியந்து கூறுவதும் இந்த பிரபஞ்சத்தில் மகா அண்டங்கள் ஒரு சக்தியால் ஈர்க்கப்பட்டு வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துதான். 


இப்படிப்பட்ட மகா பிரபஞ்சத்தையும் அதன் நகர்ந்து போவதையும் நம் சாதாரணக்கண்களால் பார்க்க முடியுமா? அதனால் தான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் "இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன்" என்று கூறி அவனது ஞானக்கண்ணால் காணச் செய்கிறார். உலகத்தின் எந்த விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடித்திராத அப்படி ஒரு 'லென்ஸை' ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கொடுத்து பார்க்கச் செய்தது எத்தனை பெரிய பேறு!


ஆக இந்த பிரபஞ்சத்தின் ஆதார சக்தியான மகாசக்தியே இறைவன் என்பதையும் பிரபஞ்சத்தின் சக்தியோடு ஒன்றிப்போதலே பரமாத்மாவோடு கலத்தல் என்பதையும் நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணர். அந்த மகா சக்தியை தியானிப்போமாக!


.

2 comments:

Ramani said...

அருமையான பதிவு
எப்போதும் தங்கள் பதிவை
எல்லா பதிவையும் போல
ஒருமுறை படித்தால்
மனம் நிறைவடையாது
இப்பதிவையும் மீண்டும் மீண்டும்
படித்து உள்ளம் பூரித்தேன்
தஙகள் பதிவுலப் பணி சிறக்க
எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

hayyram said...

மிக்க நன்றி திரு.Ramani, தங்கள் மனநிறைவே என் பாக்கியம்!