Friday, July 20, 2012

ஹிந்துக் கோவில்கள் படும் பாடு!தினமணி செய்தி 


ஈரோடு,  ஜூலை  17:  ஈரோடு அருகே நசியனூரில் உள்ள அருள்மிகு மூவேந்தர் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஈரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சேலம்- கோவை 4 வழிச்சாலைக்கு அருகே உள்ள நசியனூரில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ முத்து மரகதவல்லி சமேத மூவேந்திர ஈஸ்வரர், ஈஸ்வரன் கோவிலின் இடதுபுறம் கிழக்கு நோக்கி,  பூதேவி-ஸ்ரீதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் சன்னிதானங்கள் உள்ளன.

இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மூவேந்தர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் புராதனப் பெருமைமிக்க சிலைகள், மண்டபங்கள் உள்ளன. சன்னிதானங்களில் உள்ள சுவர்கள், மண்டபங்களில் உள்ள தூண்களில் பழங்கால வரலாற்றுச் சம்பவங்கள், கோவில் தொடர்பான தகவல்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.ண்

இக்கோவிலில் சீரமைப்பு என்ற பெயரில் பழம்பெருமை வாய்ந்த 16 தூண்களைக் கொண்ட மண்டபம் இடிக்கப்பட்டுவிட்டதாகவும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள் இந்து சமய அறநிலையத்துறையால் தடை செய்யப்பட்ட "சேண்ட்  பிளாஸ்டிங்' (மணலை தண்ணீர் போலப் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் முறை) முறையில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவில் புனரமைப்பு என்ற பெயரில் புராதனச் சின்னங்களை அழிப்பது எந்த வகையில் நியாயம் என்பது பக்தர்களின் நியாயமான கேள்வி.

இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயல் தலைவரும், வழக்குரைஞருமான லட்சுமண நாராயணன் கூறியது:

கங்கை குல காராள வம்ச நாட்டுக் கவுண்டர்கள், காணியாள வெள்ளாளக் கவுண்டர்களில் 6 குலத்தினர் ஆகியோருக்குச் சொந்தமானது இக்கோவில். இங்கிருந்த தெப்பக்குளத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே மூடிவிட்டனர். இப்போது கோவிலைப் புனரமைப்பதாக பெயருக்கு அனுமதி பெற்றுவிட்டு கோவிலில் இருந்த பழமையான 16 கால் மண்டபத்தை இடித்துவிட்டு, கான்கிரீட் மண்டபத்தைக் கட்டி வருகின்றனர்.

இதில் இருந்த 16 தூண்களையும், ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த ஒரு  இடைத்தரகர் மூலமாக ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் தெரிவித்ததும், அந்த 16 தூண்களுக்குப் பதிலாக வேறு தூண்களைக் கொண்டுவந்து வைத்துள்ளனர். கோவில் வளாகத்தில்தான் புதைத்து வைத்திருந்ததாக இப்போது தவறான தகவல்களைக் கூறுகின்றனர்.

சேண்ட் பிளாஸ்டிங்குக்குப் பதிலாக தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. அதைப் பயன்படுத்தி கோவில் சிலைகள், மதில் சுவர்கள், கல் தூண்களை சுத்தப்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் புராதனச் சின்னங்களை சேதமுறச் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம் என்றார்.

இதுகுறித்து, தேசிய சிந்தனைக் கழக மாநில இணை அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியது:

கோவிலில் பழமையான கல் மண்டபத்தை அகற்றிவிட்டு, கான்கிரீட் மண்டபம் கட்டுவதால் கோவிலின் பழமை மாறியுள்ளது. பக்தர்களின் குற்றச்சாட்டு  குறித்து  இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். ஆகம விதிக்கு மாறாக இருக்கிறதா  என்பதை ஆகம விதிகள் தெரிந்த குழுவை அமைத்துத்தான்  மாற்றி அமைக்க வேண்டும். கல் தூண்களை மண்ணில் புதைக்க வேண்டிய அவசியம் என்ன? அறநிலையத் துறை முழு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கோவில் மண்டபத்தை இடித்தது மிகப்பெரிய தவறு என்றார்.

'6 பேருக்கு நோட்டீஸ்'

இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலரும், இக்கோவிலின் தக்காருமான எம்.அருள்குமார் கூறியது:

ஏற்கெனவே இருந்த கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் 23.9.2008-ல் அறநிலையத் துறையில் அனுமதி பெற்று இக்கோவில் புனரமைப்புப் பணியை நடத்தி வந்தனர். நான் தக்காராக பதவியேற்றப் பின்னர் கோவில் சீரமைப்புப் பணியில் சேண்ட் பிளாஸ்டிங் முறை பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதை நிறுத்த உத்தரவிடப்பட்டது. 16 கால் மண்டபம் நான் பதவி ஏற்கும்முன்பே இடிக்கப்பட்டுவிட்டது. இது, மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் இடித்ததாக கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர்.

கோவில் ஆகம விதிப்படி சுவாமி சன்னிதானம் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ, அதே திசையில்தான் கோவில் மண்டபமும்  இருக்க வேண்டும். ஆனால், இங்கு ஈஸ்வர சுவாமி சன்னிதானம் மேற்கு நோக்கி உள்ளது. அதே நேரத்தில் மண்டபம் தெற்கு நோக்கி இருந்தது. இதனால், ஆகம விதிப்படி மண்டபத்தை இப்போது மேற்கு நோக்கி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 

கோவிலில் கிரானைட் கற்கள் பதிக்க சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிரானைட் என்பது இயற்கையான கல் என்பதால் அதைப் பயன்படுத்தி வருகிறோம். 

கோவிலில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இப்புகார் தொடர்பாக 6 பேருக்கு 1.6.2012-ல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் கொடுத்த விளக்கத்தை அறிக்கையாகத் தயாரித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் என்றார்.

நன்றி:தினமணி (18.7.2012)