Wednesday, July 11, 2012

மகாபாரத்தில் ஒரு நாள் - நான் ஒரு முடிவெடுத்தா...!

மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அது பாரதக் கதையில் சாத்தியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் கூட வாழும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

பொதுவாக நம் எல்லோருக்குமே எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி தவறுகளை ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இருக்கத்தான் செய்யும். மானைத் திண்ணும் புலிக்கு அதை எப்படி எப்போது சாப்பிடுவது என்று முடிவெடுக்கும் திறன் இருந்தால் அதனால் திண்ணப்படப் போகும் மானுக்கும் அதே புலியிடமிருந்து எப்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் திறனும் இருக்கும். இதில் புலியோ மானோ ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஆனால் ஒன்று மற்றொன்றுடன் தோற்கும் நிகழ்வைத் தீர்மானிப்பது அதனதன் சூழலே ஆகும்.

மனிதனும் அதே போன்ற சூழ்நிலைக் கைதிதான் என்பது இயற்கையின் நியதி. சூழ்நிலைகள் தான் பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு கடந்து வருபவன் சூழலை வெற்றி பெருகிறான். கடந்து வரமுடியாமல் சுழலுக்காட்பட்டு அதனால் தூண்டப்பட்ட எண்ணங்களினால் அலைக்கழிக்கப்படுபவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ராமாயனம் , மகாபாரதம் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் அதுபோன்று துன்புறுபவர்களை நாம் காணமுடியும்.

உதாரணமாக சிலருக்கு தான் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் நிலைத்திருக்கும். தன்னைப் பற்றி அவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் விஷயமாகவும் அது அமைந்திருக்கும். ஆனால் சூழ்நிலைகள் அவர்களை அறியாமலேயே அவர்களை மோசமாக வழிநடத்தும் போது அந்த பெருமிதம் துணைவராது. தன் முடிவு சரியென்ற நம்பிக்கையில் செயல்பட்டுப் பின் துன்பமுறுபவர்களை நாம் பார்க்கலாம்!

இதற்கு காரணம் எல்லாம் சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் அது பற்றிய சிந்தனை நம்  கண்களை மறைத்து ஒருவித கர்வத்தைக் கொடுத்துவிடும். அந்த மாயை நம் செயல்களின் மீது தெளிவு கொள்ளச் செய்யாது.பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாது. அத்தகைய மாய வலையில் நாம் சிக்கிக் கொண்டால் பின்னர் நம்முடைய முடிவுகளுக்கும் அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்.

அப்படி ஒரு சூழலில் தான் அன்று தர்மராஜன் யுதிஷ்ட்டிரர் இருந்தார். அந்த ஒரு நாள் பாண்டவர்களின் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வந்து நமக்கு கீதை கிடைக்கக் காரணமான நாள். மகாபாரத்தில் ஒரு நாள்!

ஆம், அரக்கு மாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிவந்த பாண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த காண்டவ வனத்தை நாடாக மாற்றி இந்திரபிரஸ்தம் என்கிற நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனி நமக்கு துன்பமில்லை என்கிற மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த தருமபுத்திரரை சூதாட அழைக்கின்றான் துரியோதனன். தர்மபுத்திரர் யுதிஷ்டிரரும் அவனது அழைப்பை ஏற்று சூதாட்டக்களத்தில் அமர்கிறார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை ஓட்டத்தில் சூதுவாதுகள் புரிவதில்லை. காரணம் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூதாட்ட அழைப்புக்கு முன்பாக ஒருநாள் சகுனி வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த யுதிஷ்ட்டிரனை ஒரு ஆட்டம் போடு எனக் கூப்பிட அந்த ஒரே ஆட்டத்தில் யுதிஷ்ட்டிரன் வென்று சகுனி தோற்கிறார். அதாவது தோற்பது போல யுதிஷ்ட்டிரனிடம் நடிக்கிறார்.


காரணம் இது தான், யுதிஷ்ட்டிரன் தனது முடிவுகள் மீது நம்பிக்கை கொண்டவனாக ஏற்கனவே இருந்து வருகிறார். அவனிடம் ஒரு முறை தோற்றுக் காண்பித்தால் கண்டிப்பாக தனது முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற மனத்திரை பலமாக விழுந்து விடும் என்று சகுனி நம்பினார். அது பலித்தும் விட்டது.

சகுனி திட்டம் தீட்டிய அந்த நாள் வந்தது. சூதாட்டக் களத்தில் பாண்டவர்கள் ஒரு புறம் துரியோதனன் சகுனி மற்றும் கௌரவர்கள் மறு புறமும் அமர்ந்திருக்க ஆட்டம் துவங்கியது. அந்த வேளையில் துரியோதனன் வஞ்சகமாகச் சொல்கிறான் "அவையோர்களே, என் சார்பாக என் மாமா சகுனி காய்களை உருட்டி விளையாடுவார்." என்று அறிவித்தான். அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். யுதிஷ்ட்டிரனும் புண்ணகையுடன் ஏற்றுக் கொண்டார். காரணம் ஏற்கனவே யுதிஷ்ட்டிரன் மனதில் சகுனி நம்மிடம் ஒரு முறை தோற்றவர் தானே என்றும் விளையாட்டில் நாமும் அவரை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் யுதிஷ்ட்டிரன் தான் சூழலின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணரவில்லை.

ஆட்டம் துவங்கியது. தன் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற அவரது நம்பிக்கை பொடிப்பொடியானது. சகுனியின் சூதாட்டத் திறனுக்கு முன்னால் யுதிஷ்ட்டிரன் ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை. தன் நாட்டை, செல்வங்களை, சகோதரர்களை, ஏன் தன்னையே வைத்து சூதாடி பின் தங்கள் மனைவியையும் வைத்துச் சூதாடி அனைத்தையும் இழந்து தலை குனிந்து நின்றான். சூழலின் மாயத்தோற்றத்தால் , அந்த மாயை தந்த மயக்கத்தால் யுதிஷ்ட்டிரன் தன்நிலை மறந்து தோல்வியுற்று நின்றான். தான் செய்யும் செயல்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என்றும் தன்னுடைய முடிவுகள் எப்போதும் வெற்றியையே தேடித்தரும் என்றும் பிறருடைய ஆலோசனைகள் தனக்குத் தேவைப்படாது என்றும் நினைப்பவர்களுக்கு அந்த நாள் ஒரு பாடமாக இருந்தது.

ஆட்டம் துவங்கும் முன்பாக யுதிஷ்ட்டிரன் ஒரு முறை தனக்கு உதவத் துணை வேண்டுமென்று நினைத்திருந்தால் இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். துரியோதனன் தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று அறிவித்த அடுத்த நொடி யுதிஷ்ட்டிரனும் தனக்குப் பதிலாக தன் உறவினனும் உற்ற நண்பனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே விளையாடுவார் என கண்ணனை அழைத்திருந்தால் அவன் நாடிழந்திருக்க மாட்டான். தன் சகோதர்களை இழந்திருக்க மாட்டான். மனைவி திரௌபதிக்கு அவமானம் தேடித்தந்திருக்க மாட்டான்.

அந்த ஒரு நாள் சூழல் மயக்கத்தால் யுதிஷ்ட்டிரர் செய்த தவறு குருக்ஷேத்திரத்திற்கு வழிவகுத்தது!

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!" என்று உங்கள் அருகில் யாரேனும் பேசுகிறார்களா!

அவர்களிடம் சொல்லுங்கள்!

குருக்ஷேத்திரம் காத்திருக்கிறது!


No comments: