ஆன்மீக ஞானத்தால் தீமையிலிருந்து விடுபடும் ரகசியத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்!
பகவான் சொல்கிறார்..
அர்ஜுனா கேள்!
அனுபவத்தோடு கூடிய ஞானமாகிய இந்த மிகப்பெரிய ரகசியத்தை இப்பொழுது உனக்குச் சொல்லுகிறேன். இதைத் தெரிந்து கொள்வதால் நீ தீமையிலிருந்து விடுபடுவாய்.
இந்த ஆன்மீக ஞானம் வித்தைகளுக்கு அரசன். மிகச் சிறந்த ரகசியம். தூய்மை தருவதில் மிகச் சிறந்தது. மறைபொருளில் மேலானது. கண்கூடாக உணர்த்தற்குரியது. தர்மத்தோடு கூடியது. செய்வதற்கு மிகவும் சுலபமானது. அழிவில்லாதது.
பரந்தபா! இந்த ஆன்மீக ஞானத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடையாமல், மரணத்தோடு அமைந்த சம்சார வழியிலேயே உழல்கின்றனர்.
அருவம் என் இயல்பு. இந்த இயல்பினால் நான் இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறேன். உயிர்கள் அனைத்தும் எனக்குள்ளே வசிக்கின்றன. ஆனால் நான் அவற்றிற்குள்ளே இல்லை.
பொருட்கள் என்னிடம் நிலை கொள்ளவே இல்லை. ஈஸ்வரனுக்குரியதாகிய என்னுடைய யோகத்தைப் பார். உயிர்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்து அவைகளைக் காக்கவும் செய்கின்ற நான் அவைகளுக்குள் இல்லை.
இடைவிடாமல் எங்கும் அலைந்து திரிகின்ற காற்று விண்வெளியில் நிலை பெற்றிருப்பதைப் போல், உயிர்கள் அனைத்தும் என்னிடம் தங்கி உள்ளன என்று அறிந்து கொள்.
அர்ஜுனா! எல்லா உயிர்களும் பிரளய காலத்தில் எனக்குள்ளே வந்து அடைகின்றன. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் நான் அவைகளை மறுபடியும் தோற்றுவிக்கிறேன்.
என்னுடைய இயல்பை அருள் உடையதாகச் செய்து கொண்டு சுதந்திரமில்லாத இந்த உயிர்களை எல்லாம் இயற்கையின் வசத்தால் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்.
தனஞ்ஜெயா! இச்செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. ஏனென்றால் நான் அவற்றைப் பொருட்படுத்தாமலும், பற்றற்றும் இருக்கிறேன்.
குந்தியின் மகனே, என் மேற்பார்வையில் இயற்கை அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் படைக்கிறது. இதன் காரணத்தால் உலகம் சுழல்கிறது என்பதை அறிவாயாக!
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
1 comment:
பதிவாக்கி பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... நன்றி...
Post a Comment