படம்: ச. திருமலை
அருமை நண்பர் திரு
ச.திருமலை தன் குடியிருப்புப் பகுதியின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
படிக்க மிகச்சுவையாக இருந்ததால் நண்பர்களுக்காக இங்கேயும்!
இனி திருமலை :
நேற்று காலை மதுரையில் இருந்த என் தந்தையை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். புரட்டாசி வந்து விட்டது இன்னும் வெயில் கடுமையாக வாட்டுகிறது. தாங்க முடியாத அனல் வீசுகிறது கரெண்ட் வேறு இல்லை என்று புலம்பித் தள்ளினார். மதுரையில் மட்டும் இல்லை இங்கு கலிஃபோர்னியாவிலும் கூட செப்டம்பர் மாத இறுதிக்கு கடும் வெயில் அடிக்கிறது, இன்று இங்கும் கூட 100 டிகிரி வெப்பம் இந்த வார இறுதியிலும் நூறைத் தாண்டப் போகிறது என்று அவரைத் தேற்றினேன். அவருக்கும் அங்கு கொஞ்சம் வெப்பம் குறைந்த மாதிரித் தோன்றியிருந்திருக்கலாம். அவரிடம் பேசி விட்டுக் காரைக் கிளப்பி வழக்கம் போல என்.பி.ஆர்/கேக்யூடி ரேடியோவுக்குக் காதை ஒப்படைத்த பொழுது நேற்றிரவு காட்டப் போகும் அவர்கள் எடுத்திருக்கும் ஒரு விவரணப் படம் குறித்து ஒரு கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. அதாவது மாறி வரும் பருவ நிலைகளினால் கலிஃபோர்னியா மாகாணத்தில் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தான படம் அது. நேற்றிரவு அவர்களது டி வி யில் காண்பிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக அந்த கலந்துரையாடலை நடத்திக் கொண்டிருந்தார்கள். கலிஃபோர்னியாவில் மெதுவாக வெப்பம் அதிகரித்து வருகிறது. சாதாரமாக ஒரு வருடத்தில் ஒரு 20 நாட்களில் 100 டிகிரிக்கும் மேலாக இருக்கும். ஆனால் அவை இப்பொழுது மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. வரும் வருடங்களில் ஒட்டு மொத்தமாக ஒரு 2 டிகிரி வரை ஏறலாம் என்கிறார்கள். ஒரு பத்து நாட்கள் கூடுதலாகக் கோடை இருப்பதினால் ஏதும் அதிக பாதிப்பு வந்து விடாது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அந்த நிகழ்ச்சியைக் கேட்ட பொழுது நிலமை அவ்வளவு எளிமையானது இல்லை என்பது புரிந்தது.
மெல்ல மெல்ல அதிகரித்து வரும் சீதோஷ்ணத்தினால் விவசாயத்துக்கு ஏற்கனவே கடும்
பாதிப்புகள் ஏற்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். கலிஃபோர்னியாவின் நீர் வள ஆதாரமே
அதன் கிழக்கே ஓடும் சியாரா மலைத் தொடரின் மலைச் சிகரங்களில் பெய்யும் வெண்பனிப்
பொழிவுதான். அந்த மலைகளில் குளிர் காலங்களில் நவம்பர் மாதம் துவங்கி அனேகமாக
ஏப்ரல் மே மாதம் வரை தொடரும் குளிர் காலங்களில் எவ்வளவு பனி பெய்து பனி மலையின்
உயரம் கூடும். பல அடி உயரங்கள் வரை இந்த ஸ்நோ ஃபால் சேர்ந்து கெட்டியாகி
பனிப்பாறையாக மாறி நிற்கும். அடுத்து வரும் ஜீன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவை உருகி வரும் தண்ணீர்
கட்டுப்படுத்தப் பட்ட அணைகள் மூலமாகவும் ஆறுகள் மூலமாகவும் மாகாணத்தின் நடுவே
இருக்கும் நீண்ட பள்ளத்தாக்கின் விவசாயத்திற்கு பாயும். அப்படி ஸ்நோ (பனி என்ற
வார்த்தை எனக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை வேறு ஏதாவது நல்ல தமிழ்ச் சொல்
இதற்காக உருவாக்கப் பட வேண்டும்) பெய்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலையில் சில டிகிரிகள்
அதிகமானாலும் கூட ஸ்நோவாகப் பெய்வதற்குப் பதிலாக மழையாகவே பெய்து விடும். ஆகவே
ஸ்நோவாக பெய்து அவை கட்டியாகி மெதுவாக உருகி ஆண்டு முழுவதும் தண்ணீர்
பெருகுதவற்குப் பதிலாகக் குளிர் காலத்திலேயே மழையாகவே கொட்டி அவை கடலில் சென்று
வீணாகி விடுகின்றன. அவற்றை சேமிக்கத் தேவையான அணைகள் கட்டப் படவில்லை. ஆகவே ஜூன்
ஜூலை ஆகஸ்ட் போன்ற மழையில்லாத கோடை காலங்களில் ஸ்நோ உருகுவதன் மூலமாக வரவிருக்கும்
தண்ணீர் வருவதில்லை. ஆதலால் கடும் வறட்சியை உருவாக்குகிறது. 110 டிகிரி
வெப்பத்திற்கு சர்வ சாதாரணமாகப் பழகிப் போன நமக்கு ஒன்றிரண்டு டிகிரி வெப்பம்
கூடுவதினால் என்ன பெரிதாக இழப்பு நேர்ந்து விடப் போகிறது என்று தோன்றக் கூடும். ஆனால்
அதன் இழப்பு மிகப் பெரிதாகவே இருக்கிறது. ஒரு சில டிகிரி வெப்ப அதிகரிப்பு மாநிலம்
முழுவதும் கடும் வறட்சியை ஏற்படுத்தி விடும் என்றார்கள். இது விவசாயத்துக்கு
விழும் முதல் அடி.
படம்: ச.திருமலை |
அடுத்ததாக கோடை
நீள்வதன் காரணமாகவும் காலம் திரிவதன் காரணமாகவும் இது நாள் வரை குளிர் சீதோஷ்ண
நிலையில் கலிஃபோர்னியாவில் காணப் பட்டிராத ஏராளமான பூச்சிகள் உருவாகி வருகின்றன
என்றார்கள். ஏற்கனவே நிலவி வந்த குளிர்ச்சியான சீதோஷ்ணம் மாறி கோடைக்காலம் நீளும்
பொழுதும் சில டிகிரி வித்தியாசங்களிலும் பல்வேறு புழுக்களும் பயிர்க் கொல்லிப்
பூச்சிகளும் கட்டுக்கடங்காமல் உருவாகின்றன என்கிறார்கள் இங்குள்ள விவசாயிகளும்
பூச்சியியல் நிபுணர்களும். அதன் காரணமாக 6 பில்லியன் டாலர் அளவிற்கான உருளைக் கிழங்கு
வறுவல் வியாபாரம் பெருத்த அடி வாங்கும் என்கிறார்கள். வெப்ப மாறுதலினால் உருளைக்
கிழங்கின் உள்ளே வரி வரியாக பூச்சி அரிக்கிறதாம். அந்த வரிப்புலி அரிப்பினால்
உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் அதன் ருசியை இழப்பதுடன் கெட்டுப் போகவும்
வாய்ப்பிருக்கிறது ஆகவே முதலில் உருளைக் கிழங்கு வியாபரம் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகப்
போவதாகத் தெரிவித்தார்கள். உருளைக் கிழங்கின் விலை ஏறினால் அமெரிக்காவில் பல
உணவுப் பொருட்களின் விலைகளும் கூடவே ஏறும். மேலும் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்
படுத்த கடுமையான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிவிப்பது மூலமாக அது
வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கும் என்றும் இது ஒரு விஷச் சுழற்சியை
ஏற்படுத்துவதாகவும் கவலைப் பட்டார்கள்.
உருளைக் கிழங்கைத் தொடர்ந்து செர்ரிப் பழங்கள் போன்ற ஒரு சில பழ வகைகள்
விளைவதற்குத் தேவையான உறை குளிர் சீதோஷ்ணம் குறைந்து வருவதினால் செர்ரி அறுவடையும்
வெகுவாகக் குறையப் போவதாக செர்ரி விவசாயிகளும் தொடர்ந்து பல்வேறு காய்கறி கனிகளில்
இந்த மெல்லிய தட்ப வெட்ப்ப வேறுபாடுகள் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களைச்
சொன்னார்கள். அமெரிக்காவின் தக்காளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தக்காளிகள்
கலிஃபோர்னியாவின் சமவெளி வயல்களில் விளைகின்றன. நெடுஞ்சாலை எண் 5ல் செல்லும்
பொழுது பத்து நிமிடத்துக்கு இருபது தக்காளி வழியும் ராட்சச டிரக்குகளைக் காணலாம். தக்காளியில்
இந்த நீள் வெப்பம் காரணமாக ஒரு வித புதுவிதமான புழு தோன்றி அழிப்பதாகச்
சொன்னார்கள். கலிஃபோர்னியா ஒயின் உற்பத்திக்குப் பேர் போனது. இங்கு திராட்சை
அதிகம் விளையும் ஒயின் மாவட்டம் முழுவதும் இந்த தொடர் கோடை ஒரு விதமான நோயையையும்
விளைச்சல் குறைவையும் சுவை மாறுபாட்டையும் உருவாக்குவதாக கவலையடைந்தனர். வறட்சி
காரணமாக பெரும்பாலான தோட்டங்களில் சொட்டு நீர் பாசனத்துக்கு மாறி
விட்டிருக்கிறார்கள். சொட்டு நீர் பாசனத்தில் நீர் பெருகி ஓடாது. வேர்களில்
மட்டுமே நீர் பாயும் அதனால் மண்ணில் அதிக நீர் ஓடாததன் காரணமாக மண்ணின் உப்புத்
தன்மை அதிகரிப்பதாகவும் அது அனைத்து விளை பொருட்களின் உற்பத்தியையும் பெரும்
அளவில் பாதிப்பதாகவும் குறை பட்டனர். இப்படி ஏராளமான பிரச்சினைகளை பருவ நிலை
மாறுதலினாலும் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் கோடைக்காலத்தின் விளைவுகளாகவும்
அனைவரும் கவலையுடன் அச்சப் பட்டனர்.
கலிஃபோர்னியாவின் அணைக்கட்டுகளில் அதிக நீரைச் சேமித்து வைக்க முடியாததற்கு
மற்றொரு காரணத்தையும் சொன்னார்கள். அதிகரித்து வரும் வெப்பத்தினால் மெல்ல மெல்ல
ஏறி வரும் கடல் நீரின் காரணமாக அதிக அளவு உப்பு நிலப் பகுதிக்கும் புகுந்து
விடுவதாகவும் அதை உள்ளே தள்ள பெரும் அளவு நதி நீர் உள்ளே செல்ல வேண்டிய அவசியம்
குறித்தும் சொன்னார்கள். நதி நீரையெல்லாம் கடலுக்கு அனுப்பாமல்
உள்நாட்டுக்குள்ளேயே பயன் படுத்திக் கொள்ள முடியாது என்பதையும் விளக்கினார்கள்.
இப்படியாக நீண்டதொரு உரையாடல் தொடர்ந்தது. ஏராளமான விவசாயிகளும் பொது மக்களும்
அழைத்து உரையாடினார்கள். நான் இன்னும் அந்த விவரணப் படத்தைப் பார்க்கவில்லை. அவசியம்
பார்க்க வேண்டும். சரி, இங்கு எதற்காக நான் இதைச் சொல்ல வந்தேன்?........
படம். ச.திருமலை |
மதிய நேரத்தில் வெயில் தாங்காமல் ஆபீஸ் வாசலில் படுத்து ஹாயாக உறங்க வந்த நரி. யாரோ அதனிடம் இங்கு ஃபயர் ஃபாக்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. |
இந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த
பொழுது நானும் சிலவற்றை உணர ஆரம்பித்திருப்பதை உணர்ந்தேன். அதற்கும் கோடை
நீண்டதற்கும் தொடர்பு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக இங்கே பாம்புகளை
அவ்வளவாகக் காண முடியாது. காட்டுப் பகுதிகளில் இருக்கும் பாம்புகள் கூட அவ்வளவாக
வெளி வராது. ஜெயமோகன் இங்கு வந்திருந்த பொழுது நல்ல கோடைக்காலம் தான் அப்பொழுது
கூட ஒரு சின்ன புழு பூச்சி கூட அவர் கண்களில் தட்டுப் படவில்லை. ஆனால் கடந்த இரு
வருடங்களாக நான் பாம்புகளை அதிக அளவில் கண்டு வருகிறேன். சாதரணமாக அலுவலக
வளாகத்தில் நடக்கும் பொழுது கூட பாம்புகளைக் கண்டு துள்ளித் தாவிக் கடப்பது
இப்பொழுது சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. சென்ற வருடம் மத்தியானம் கையில் காப்பிக்
கோப்பையுடன் அலுவலகக் கதவைத் திறந்து பின்னால் உள்ள பேட்டியோவுக்குச் சென்ற பொழுது
அங்கு சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நரி ஒன்றின் மீது மிதிக்க இருந்தேன். பின்னர்
நான் காமிரா கொண்டு வந்து போட்டோ எடுத்தது கூடத் தெரியாத ஆழ் உறக்கத்தில் அந்த நரி
அங்கு கிடந்தது. வீட்டின் அருகே நடக்கும் பொழுதும் கூட அடிக்கடி பாம்புகளும் பிற
மிருகங்களும் அதிக அளவில் தென்படுகின்றன. செப்டம்பர் 1 அன்று நானும்
நண்பர் அருணகிரியும் ஒரு கடற்கரைக்குச் சென்றிருந்த பொழுது அனேகமாக அழிந்து போனதாக
நினைத்து எண்டேஜர்ட் ஸ்பீஸிஸ் பட்டியலில் சேர்த்திருந்த ஒரு அரிய வகைப் பாம்பை
நாங்கள் கண்டோம். அது நிதானமாக நின்று எங்கள் ஃபோட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்து
விட்டுத்தான் சென்றது. ஒரு வேளை இந்த வெப்பத்தினால் குளிர்ச்சி தேடி அவை அதிகமாக
வெளி வருகின்றனவா என்பதும் தெரியவில்லை. பாம்புகள் என்று மட்டும் அல்ல சாதரணமாக
வீட்டுக்கருகே உலாவும் ஸ்கங்க் என்னும் மிருகமும் ராக்கூன் என்ற மிருகமும்
அவ்வளவாக வெளி வருவதில்லை. இப்பொழுதெல்லாம் அவற்றின் பெருக்கம் அதிகரித்து விட்டது
வீட்டுக்குள் நுழைவதற்கு அவை துணிந்து விட்டன.
skunk
நாஞ்சில் நாடன் வந்திருந்த பொழுது தினசரி
இரவில் அவர் ஸ்கங்கையும், ராக்கூனையும் தரிசனம் செய்யாமல் அவர் உறங்கப் போவதில்லை. அவற்றின் மீது
அவருக்கு அலாதியான காதல் பிறந்து விட்டது. ஒரு நாள் பார்க்காவிட்டாலும் என்ன
இன்றைக்கு நம்ம ஸ்கங்க்கைக் காணோமே என்பார். அவருக்காகவே அவை அசைந்து அசைந்து
ஃபேஷன் ஷோ அழகிகள் நடைமேடையில் நடப்பது போல உலா வந்து அவருக்கு ஹலோ சொல்லி
விட்டுப் போயின. அவை நடக்கும் பொழுது அலை அலையாக எழும்பி எழும்பி நடந்து வரும். எலக்ட்ரோஸ்கோப்பில்
வரும் சைனுசாய்டல் அலைகள் போல அவற்றின் நடை இருக்கும். ஒரு நாள் இரவு உறக்கம்
வராமல் கண்ணாடி வழியாக எட்டிப் பார்க்க வீட்டு வாசலில் இருக்கும் நீச்சல்
குளத்தின் நீல ஒளி பரவிய நீரில் இரண்டு ராக்கூன்கள் ஆனந்தமாக நீராடிக்
கொண்டிருந்தன. அருகே போயிருந்தால் “பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை ஏன் என்று
நான் சொல்ல வேண்டுமா என்று இரண்டும் டூயட் பாடிக் கொண்டிருந்திருக்கலாம்”
படம்: ச.திருமலை |
அவற்றின் ஆனந்தமான
நீராடலை நான் குலைத்து கண்ணாடிச் சன்னலை ஒதுக்கி விட்டு ஹலோ என்று குரல் கொடுத்து
விட்டேன். அவ்வளவுதான் இரண்டும் அடித்துச் சுருட்டிக் கொண்டு கரையேறி டர்க்கி டவல்
துணையில்லாமல் ஒரு சிலிர்ப்பில் நீரை உலுப்பி விட்டு வேக வேகமாக அலை நடை நடந்து என்
வீட்டை நோக்கி வர ஆரம்பித்து விட்டன. நான் ஏதோ விருந்துக்கு அழைத்ததாக நினைத்து
விட்டன போலும் நேராக வீட்டு வாசல் கதவில் வந்து நின்று கதவை உரச ஆரம்பித்து விட்டன.
கதவைத் திறந்திருந்தால் சோபாவில் வந்து ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு டி வியில்
நெட் ஃப்ளில்ஸில் ஏதாவது நல்ல படமாகப் போட்டு விட்டு எங்களுக்கு சாப்பாடு தயார்
செய் என்று உத்தரவிட்டிருந்திருக்கலாம். நடு ராத்திரியில் இது ஏதடா வம்பு கதவைத்
திறந்து விருந்தினரை உபசரிப்பத்து மனைவியிடம் திட்டு வாங்குவதா வேண்டாமா வாசல் வரை
வந்த விருந்தினர்களை உபசரிக்காத விஷயம் ஜெயமோகனுக்குத் தெரிய வந்தால் அவர் வேறு
கோபித்துக் கொள்வாரே என்ற கவலையில் தர்மசங்கட பண்பாட்டுச் சிக்கலுக்கு உள்ளானேன். சிறிது
நேரம் காத்திருந்து விட்டு தமிழர் பண்பாடு காப்பாற்றாத என்னை திட்டிக் கொண்டே அவை
சென்று விட்டன. என் மனைவியை எழுப்பி விஷயத்தைச் சொன்ன பொழுது இப்படித்தான்
இணையத்திலும் கண்ட பேர்களிடம் வம்பு இழுத்துக் கொண்டு திட்டு வாங்குகிறீர்கள்
என்று அவள் பங்க்குக்கு ரெண்டு திட்டு திட்டி வைத்தாள். ஆனால் இந்த ஸ்கங்க் என்ற
மிருகம் ஒரு வித கெட்ட நாற்றம் ஏற்படுத்தும் திரவத்தை வேறு பீச்சி விட்டுப் போய்
விடும் ஆனால் இணைய வசவு நாற்றத்திற்கு அது தேவலாம் என்றேன்.
ஆக இந்த
மிருகங்களும்,
பாம்புகளும், பூச்சிகளும்
பெருத்துப் போனது இயல்பானதா அல்லது பருவ நிலை மாற்றத்தினாலா என்று உறுதியாகத்
தெரியவில்லை. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது மலை
உச்சியில் கார் திக்கித் திணறி ஏறிக் கொண்டிருந்த பொழுது சாலையை அடைத்துக் கொண்டு
சென்ற அந்த மிருகத்தை நான் இதுவரை கலிஃபோர்னியாவில் கண்டதேயில்லை. அந்தக் காட்டில்
மலைச் சிங்கங்கள் உள்ளன. அவற்றைக் கண்டிருந்தால் கூட அவ்வளவு ஆச்சரியம்
அடைந்திருக்க மாட்டேன். சாலையைக் கடந்து கொண்டிருந்ததோ ஒரு பெரிய மலைப் பாம்பு. அது
மலையின் உச்சி சிகரம் அங்கு பாம்புகள் தென்படுவதில் ஆச்சரியமில்லை ஆனால் இத்தனை
பெரிய பைத்தானை ஒத்த பாம்புதான் ஆச்சரியம் ஏற்படுத்தியது. ஒரு எட்டு அடி நீளமும்
ஒரு ஜான் அகலமுகாக ஏதோ சீன ஓவியம் வரையப் பட்ட வழுவழுபான சீனப் பட்டினால் ஆன ஒரு
திண்டு ஒன்று கடந்து கொண்டிருப்பதாக முதலில் தோன்றியது.
படம்: ச. திருமலை
காரை ஓரம் கட்டி
நிறுத்தி விட்டு இரு பக்கமும் விரைந்து கொண்டிருந்த கார்களை நிறுத்தினேன். மிகவும்
பெருத்த அந்தப் பாம்பினால் விரைவாக நகர முடியவில்லை. நல்ல செமத்தியான நீளமான ஏதோ
ஒரு இரையை உண்டு விட்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும்
அல்லது சூல் கொண்டிருக்க வேண்டும். பொறுமையிழந்த காரோட்டிகள் சிலர் என் மீது
கோபமாகி ஹார்ன்களை அழுத்த ஏற்பட்ட திடீர் சப்தத்தினால் கலவரமான அந்த வாசுகி அல்லது
கார்கோடன் சற்றே பதட்டத்துடன் சாலையை வேகமாகக் கடக்க முயன்றது. பெரிய கடல் யானை
தன் 3000 பவுண்டு உடலை இழுக்க முடியாமல் இழுத்து இழுத்து நகர்வது போல அந்தச் சீனத்துப்
பட்டுத் திண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பெருத்த உடலுக்கு ஒவ்வாமல் சிறிய தலையைக்
கொண்டிருந்தது. அதன் வேகத்துக்கு உடல் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில்
வேகமாக நகர முடியாத அந்தப் பாம்பு மெதுவாகத் தலையைத் தூக்கி என்னை பரிதாபமாக
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்று விட்டது. எனக்கோ நாஞ்சில் நாடனின் வனம்
நினைவுக்கு வந்தது. “போ மோளே பதுக்கப் போ, எந்தக் கார் காரனும் என்னை மீறி வந்து விட மாட்டான் என்னை நசுக்காமல் உன்னை
நசுக்க முடியாது தைரியமாச் செல்லு” என்று அருகே போய் நின்றேன். பெருத்த
பெருமூச்சுடன் மீதமிருந்த சில அடிகளை தன் உடலை இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டு
கடந்து பத்திரமாக அடர்ந்த காட்டுக்குள் சென்ற பிறகு இரு பக்கமும் இருந்த கார்களைச்
செல்ல வழி விட்டேன். என்னை பழித்துக் கொண்டு வேகமாகக் கடந்தார்கள்.
படம்: ச.திருமலை
கலிஃபோர்னியாவில்
எங்கள் பகுதியில் இருப்பதாகப் பட்டியலிடப் பட்டுள்ள பாம்பு இன வகைகளில் இத்தனைப்
பெரிய பாம்பை நான் கண்டதேயில்லை. ஒரு பெரிய மலைப்பாம்பை ஒத்திருந்தது. ஆனால் இங்கோ
மலைப்பாம்பு வகையே கிடையாது. அப்படியானால் இதுவும் பருவ நிலை மாற்றத்தின்
கோளாறுதானா?
காலையில்
ரேடியோவில் கேட்ட செய்தி நினைவுக்கு வந்து வயிற்றைக் கலக்கியது. இப்படியே போனால்
அடுத்த வருடம் அமோசானில் வாழும் அனகோண்டா மலையேறி இங்கு வந்து விடுமோ என்று
நினைத்த பொழுது தமிழ்ப் பத்திரிகைகளின் பாணியில் சொல்வதானால் நான் பீதியில் சற்று
உறைந்து போய்தான் விட்டேன்.
கலிஃபோர்னியாவில் இருந்து
ச.திருமலை
5 comments:
melithana nakaichuvaiyudan rasikumpadiyana pathivu. share panni kondathukku nanri. sorry for the thanglish.
என்ன அருமையானதொரு பதிவு! ரசித்துப் படித்தேன். ஜெமோவை சொல்லாமல் ஒரு நகைச்சுவை பதிவு கூட இனி தமிழில் வராது போலும் :-)
Loved your post :)
amas32
அருமையான பதிவு.. ஆனால் நடுவில் மொழிநடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு விட்டது போல தோன்றுகிறது. மற்றபடி சிந்திக்க வைக்கும் பதிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நாம் வாழும் இயற்கைச் சூழலில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊன்றி வரும் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் கவலைப்படுவதில்லை. ஆனால் பாருங்கள் அமெரிக்காகாரனே அது குறித்து கவலைபட ஆரம்பித்து இருக்கிறான். ஆக அவன் கிழக்குவாசியாக மாறிவருகிறன் நாமோ மேற்குவாசிகளாக மாறிவருகிறோம்.
வெப்பநிலை மாற்றம் குறித்து நீங்கள் இங்கு பதிவிட்டுள்ள செய்தி ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான். இதனைப்போல உலகில் நடக்கும் ஒவ்வொரு சிறிய விஷயமும் (மாற்றம், புதிதாக நடக்கும் நிகழ்வு ஏதுவாக இருந்தாலும் சரி) அல்லது பற்பல சிறிய விஷயங்களுக்கும் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் பெரியளவில் மாற்றங்கள் நிகழ துணைபுரிகிறது அல்லது பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ மூலக்காரணியாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
இதனைப் பற்றி நம் முன்னோர்களிடம் தெளிவான புரிதல் இருந்தது. கருமவினைப்பலன்கள் இந்த அடிப்படை தத்துவத்தோடு ஒத்துப்போவதே..
இதோ செப்டம்பர் முடியப்போகிறது. ஆனால் திருமலை சொல்வது போல், எங்கள் தெற்கு கலிஃபோர்னியாவிலும் (அவர் இருப்பது வடக்கே) இன்னமும் சூடு தணியவில்லை. சாதாரணமாக ஆகஸ்ட்டோடு சூடு போய் செப்டம்பரில் ஜிலீர் வானிலை ஆரம்பித்துவிடும்.
“இன்னிக்கு நேத்தியவிட சூடாம், நாளைக்கு இன்னியவிடவாம்” என்று மனைவியிடம் புலம்பிக்கொண்டேதான் எழுந்தேன். உடனேயே இதைப் படிக்க நேர்ந்தது ஆச்சரியம். ட்விட்டரில் இதைப் பகிர்ந்துகொண்ட @அலெக்ஸ் பாண்டியனுக்கு நன்றி!
திருமலை பிரமாதமாக ஆவணப்படுத்தி எழுதி இருக்கிறார். வழக்கமாகவே தெளிவாக எழுதுவார். இப்போது படங்களுடன் ஆதாரப்படுத்தி இருக்கிறார். வாழ்த்துகள், திருமலை! உரிய அரசு மற்றும் பார்க் மேனேஜ்மெண்டியிடம் இதுபற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் செய்கிறேன்.
நன்றி நண்பர்களே, எல்லாப்புகழும் திருமலைக்கே! :-)
Post a Comment