Sunday, September 16, 2012

விரதங்களும் அதன் நன்மைகளும் - 2


மௌன விரதம் - மனதுக்கு மருந்து!

"வாயை மூடு!" என்று சில லொடலொடப்பைகளை நாம் கடிந்து கொள்வதுண்டு. பேசாமல் இருப்பது என்பது அவ்வளவு கஷ்டமான வேலையா?

ஆம். பேசாமல் இருக்க முடியாது. ஏதாவது காரணத்திற்காக, காரியத்திற்காக நாம் பேசிக்கொண்டே இருப்பது அவசியம். ஆனால் நாம் காரியத்திற்காகவோ அல்லது அவசியத்திற்காகவோ மட்டும் தான் பேசுகிறோமா? இல்லை.

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஏன் தூக்கத்தில் கூட ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். காரணம் பேசுவது என்பது வெறும் விஷயத்தை வார்த்தைகளால் பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்வாக இருப்பதில்லை. பேசுவதென்பது உணர்ச்சிகளின் வடிகாலாக இருக்கிறது. உணர்ச்சிகளின் உந்துதல் பேசினால் தீர்ந்துவிடுகிறது. கோபம், பாசம், காதல், காமம் என்று பல விஷயங்களை பேசித் தணிக்கும் குணம் நம்மிடயே இருக்கிறது.

உணர்ச்சியின் உந்துல் எண்ணங்களின் உற்பத்தியால் உண்டாகிறது. எண்ணங்கள் மனத்தில் தொடர்ந்து தோன்றுவது உணர்வுப்பூர்வமாக நம் மனதில் ஓர் உந்துதல் ஏற்படக் காரணமாகிறது. அந்த உந்துதலே எண்ணங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்தச் செய்கிறது. மௌன விரதத்தின் மூலம் வார்த்தைகள் வெளிப்படுவது முதலில் தடுக்கப் படுகிறது. அவ்வாறு வார்த்தைகளைப் பேசாத சூழலில் எண்ணங்கள் மட்டும் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும். அப்போது நம்மையறியாமல், அந்த எண்ணங்களின் மீது நாம் கவனத்தைச் செலுத்துகிறோம். அவற்றைப் புரிந்து கொள்ள முயல்கிறோம். பேச முடியாத சூழலில் எண்ணங்கள் தோன்றுவது நமக்கே ஒரு உபத்திரவமாக இருக்கத் துவங்கும். அதனால் எண்ணங்கள் உண்டாவதை நாமே தடுத்து நாம் அப்போது செய்து கொண்டிருக்கும் வேலையிலேயே முழுக்கவனத்தைச் செலுத்தத் துவங்குவோம். 

இதனால் நம் மனதில் எண்ணங்கள் உற்பத்தியாவது நம்மாலேயே தடுக்கப் படுகிறது. எப்போது நம் எண்ணங்களை நாம் கட்டுப்படுத்தத் துவங்குகிறோமோ அப்போதே நம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. விழித்திருக்கும் போதே தியானம் செய்யும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறோம். காரணம் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படாத சூழலில் மனம் ஒருநிலைப் பட்டிருக்கும். அதுவே தியானத்தின் முதல் படி. 

எண்ணங்கள் இல்லா மனது அலைகளில்லா ஆழ்கடல் போன்றது. அச்சூழலில் மட்டுமே ஆழ்மனம் விழித்திருக்கும். ஆழ்மனம் வெளிமனத்துடன் ஒன்றிச் செயலாற்ற சலனமற்ற மனமே உதவும். நல்ல நினைவாற்றால் பெருகவும் செய்யும் காரியங்களில் நேர்த்தி கிடைக்கவும் இந்த சலனமற்ற மனம் பயன்படும். 


அமைதியான மனத்துடன் நாம் இருக்கும் போது நம் சுவாசம் மிகவும் சீராக இருக்கும். சீரான சுவாசம் ரத்த ஓட்டத்தையும் சீராகக்கும். இதனால் ரத்தக் கொதிப்பு உண்டாகாமல் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க மௌனவிரதம் வகை செய்கிறது. பொதுவாக எல்லா வியாதிகளுமே சுவாசத்தின் சமச்சீர் குலைவிலிருந்து தான் துவங்குகிறது.

உடல் பாகங்கள் அனைத்திற்கும் சமமான அளவு மூச்சின் வேகமும் ரத்தத்தின் ஓட்டமும் தொடர்ந்து இருக்குமேயானால், உடல் பாகங்கள் அனைத்திற்கும் சீரான ஆக்ஸிஜன் கிடைக்கும். நரம்பு நாளங்கள் உயிர்ப்புடன் இருக்கும். அதனால் வியாதிகள் உண்டாவது குறைவுபடும். நம் சுவாசம் தான் ரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே சுவாசத்தை சீராக வைத்திருந்தால் ரத்த ஓட்டமும் சீராகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும். இவற்றை உணர்ந்தே பேசாமல் இருப்பதன் மூலமாக மனம் சலனமடைவதைத் தடுத்து உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் சுவாசத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீர்படச் செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதை ஒரு பயிற்சியாகவே மேற்கொண்டனர் நம் வீட்டுப் பெரியவர்கள்.


பள்ளிக்காலத்தில் எனது பாட்டி அமாவாசை தினமானால் மௌனவிரதம் இருப்பார். அதிகாலை எழுந்தது முதல் வீட்டு வேலைகளை வழக்கம் போலச் செய்து கொண்டே இருப்பார். ஆனால் அவர் யாரிடமும் பேச மாட்டார். யாரும் அவருடனும் பேசக்கூடாது. இதை கண்டிப்பாக கடைபிடிப்பார்.

பிள்ளைகளுக்கு தோசை வாத்துப் போடுவார். வழக்கமாக போதும் என்று கூறினால் 'இரு இன்னொன்னு சாப்பிடு" என்று கூறுபவர், மௌனவிரதம் இருக்கும் நாளில் 'போதும்' என்றால் ஆழ்ந்து ஒரு முறை பார்த்து விட்டு அடுத்த தோசைக்கு மாவு ஊற்றும் வேலையில் இறங்கிவிடுவார். கண்டுகொள்ள மாட்டார். காரணம் 'ஐயோ பிள்ளை  கொஞ்சமா சாப்பிடுதே' என்கிற உணர்ச்சிப் பெருக்கையெல்லாம் அவர் அன்று அடையமாட்டார். அதன் பொருட்டு பேசவும் மாட்டார். 

வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட முகம் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்பிற்காக தலை ஆட்டி விட்டு வேலையை பார்க்கத் துவங்கி விடுவார். வேறு பேசிருக்காது. வந்தவர்களிடம் பேசவில்லையே என்கிற பதட்டமும் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு நாள் துறவி தான். எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அன்றைய வேலையை முடித்து நிம்மதியாகத் தூங்கப் போய்விடுவார்.

இவ்வாறு இருப்பதை ஒரு பயிற்சியாகக் கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. அமைதி அடைகிறது. ஏதோ ஒரு சுதந்திர உணர்வுகிடைக்கிறது. ஆழ்மனம் ஆனந்தம் கொள்கிறது. பறவைகள் சப்தமிடுவதும், தூரத்தே பசுக்கள் கத்துவதும், கன்றுக்குட்டி ஓடி விளையாடுவதையும் மனத்தால் கவனிக்க முடிகிறது. மனம் ஒரு நிலைப்படும் போது நாம் உள்முகமாக நம்மை தரிசிக்கும் ஒரு வாய்ப்பு உண்டாகிறது.

தினசரி சச்சரவுகளைத் தாண்டி ஏதோ ஒன்றை நாம் அடையாமல் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றத் துவங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சச்சரவுகளற்ற வாழ்வை விரும்பத் துவங்குவோம். அமைதியான மனத்தின் காரணமாக குடும்பத்தில் எத்தகைய பிரச்சனை வந்தாலும் அமைதியைத் தரும் தீர்வு எது என்பதையே நாடுவோம். ஈகோ இறந்து போகும். ஆனந்தம் மட்டுமே நிலை கொள்ளும். இந்த இன்பத்தை அதே வழியில் அனுபவிக்கும் போது தான் உணர முடியும்.

எதற்காக மௌனத்தைப் பயிற்சியாகக் கொள்ள வேண்டும்?

'பஜகோவிந்தம்' பாடலில் ஆதிசங்கரர் இவ்வாறு எழுதுகிறார்:-

"பணம் சம்பாதிக்க முடிகிற காலம்வரை உன்னோடு அனைவரும் சேர்ந்திருப்பர் உடல்நடுங்கி ஆரோக்கியம் இல்லாத வயோதிகம் வந்த பின்னே உன்னைப் பார்த்துக் கொள்ளவோ உன்னோடு ஒருவார்த்தை பேசவேனும் யாரும் இருக்கப் போவதில்லைஎனவே கோவிந்த நாமம் பாடு மூடனே கோவிந்த நாமம் பாடு" என்பார் சங்கரர்.

ஆக வயோதிக காலத்தில் நாம் கண்டிப்பாக பேச ஆளில்லாமல் தனிமையில் இருப்போம். அத்தகைய சூழலில் பேசியே தீரவேண்டும் என்ற உந்துதலை தடுக்கவும் வயோதிகத்தை எதிர்கொள்ளவும் மௌனவிரதப் பயிற்சி பெரிதும் உதவுகிறது.

எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, மௌனமாக இருந்து மனதை அமைதியாக வைத்திருக்கவோ அறியாமல் வயோதிகத்தில் பாடு பட்டவர்களும் உண்டு.

எனக்கொரு அத்தைப் பாட்டி இருந்தார். அதாவது தாயாருக்கு அத்தை என்பதால் எனக்கு அத்தைப் பாட்டி. எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கிச் செல்வார். அவர் வந்து விட்டால் திரும்பிச் செல்லும் வரை வீடு வார்த்தைகளால் நிரம்பி வழியும். அவரால் தூங்கும் நேரம் தவிற மீத நேரத்தில் பேசாமல் இருக்க முடியாது. அவருடைய பேச்சுக்கள் பெரும்பாலும் உறவுகள் பற்றியதாகவே இருக்கும். யாருக்குக் குழந்தை பிறந்தது, யாருக்கு யார் வீட்டில் பெண்ணெடுத்தார்கள், அல்லது பெண்கொடுத்தார்கள், யார் குடும்பத்தில் என்னவெல்லாம் நடந்தது, சண்டை சச்சரவுகள் இத்யாதி இத்யாதி எனப் பேசிக்கொண்டே இருப்பார். பேசிக் கொண்டே இருப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதை விட பேசாமல் இருக்க முடியாது என்பதே சரி. பேசாமல் இருந்துவிட்டால், தான் தனிமைப்பட்டு விட்டதைப் போல உணர்வார். அதனால் எப்போதும் அவர் சப்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

வருடங்கள் பல ஓடின. அத்தைப் பாட்டி உடல் நடுங்கி ஆரோக்கியம் இல்லாத அந்த வயோதிகத்தை அடைந்தார்.

வாழ்க்கையின் ஓட்டத்தினால் உண்டான நீண்ட இடைவெளிக்குப் பிறகு வயதான அத்தைப் பாட்டியைப் பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

வீட்டின் கூடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்.

அருகே சென்று அமர்ந்தோம். சலனமே இல்லாமல் எங்களைப் பார்த்தார்.

"யார் நீங்க? என்னைத் தெரியுமா உங்களுக்கு?" என்றார். சற்றே அதிர்ந்தோம்.

'அம்மாக்கு ஞாபக சக்தி முன்ன மாதிரி இல்லை!' அவர் மகன்.

பிறகு என் தாயார் சுய அறிமுகம் செய்து கொண்டார்.

உடனே முகம் மலர்ந்தவர், 'அடடே நீயா? பிள்ளைகளோட வந்திருக்கியா?"என்று கேட்டுக் கொண்டே என்னைப் பார்த்தார்

"டேய், ராமா, நல்லாருக்கியா? எவ்வளோ நாளாச்சு..! எங்கூடப் பேசேன்! யாருமே எங்கூட பேசறதில்லை! கொஞ்ச நேரம் எங்கூட பேசிட்டிருங்களேன்...!" என்றார் மிகவும் ஏக்கத்துடன்.

சரியென்று என்று நானும் அத்தைப்பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு,

"என்ன பாட்டி, உங்க பேரன் அமெரிக்கா போயிட்டானாமே? போன்ல பேசறதுண்டா?" என்றேன்.

என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

"யார் நீங்க? என்னைத் தெரியுமா உங்களுக்கு?" என்றார்.

எத்தனை உறவுகள் இருக்குமோ அத்தனைக் குடும்பங்களையும் நினைவில் வைத்து வாழ்நாள் முழுதும் நிறுத்தாமல் பேசியே பழகியவருக்கு பேரப்பிள்ளைகளைக் கூட அடையாளம் காண முடியவில்லை. ஆனால் தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்கிற ஆதங்கம் மட்டும் நீங்காமல் அவருக்கு இருந்தது.

கொஞ்சம் மௌனத்தைக் கற்றுக் கொண்டிருந்தால் மனம் அமைதியாக இருந்திருக்கும். கடைசி காலத்தில் நிம்மதியாக இருந்திருக்கலாம்.

வயோதிகம் பற்றிய ஆதிசங்கரரின் வரிகள் நினைவுக்கு வந்தது.

ஓரிரு மாதங்கள் கழித்து தொலைபேசி அழைத்தது. அத்தைப் பாட்டி நிரந்தரமான அமைதியை தேடிச் சென்றுவிட்டார் என்று.

அப்பொழுது புரிந்தது.

மௌனம் விரதம் மட்டுமல்ல. அது ஒரு தவம்.

பெரியோர்கள் நமக்களித்த வாழ்க்கைப் பாடம்!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

2 comments: