Saturday, September 15, 2012

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!



உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மீகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத் தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவின் பாரம்பரியமிக்க மகாத்மியத்தை அழிக்க நினைப்பவர்கள் தோல்வியையே தழுவுவார்கள்.

எனது அருமைச் சகோதரா! ஒரு பழைய விளக்கை எடுத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள், பட்டி தொட்டிகள், காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலை சிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு, பார்க்கலாம்.

நமது தாய்நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருகும் கடன் மகத்தானது. நாட்டுக்கு நாடு எடுத்துஒப்பிட்டுப் பார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருப்பதைப் போன்று, பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்.

கிரீஸ் நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரீகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக் கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரீகம் இருந்து வந்திருக்கிறது. ஏன், அதற்கும் முன்பேகூட வரலாற்றிலே குறிப்புகளே கண்டுபிடிக்க முடியாத, சரித்திரமே புக முடியாத, இருண்ட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் அன்புடனும் வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே இருந்துவந்திருக்கின்றன.

ஓர் முனிவர் தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையிலே வைத்திருந்தார். அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றித் தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி ஒரு கதையை நாம் குழந்தைகளாக இருந்த போது கேட்டிருக்கிறோம். அதே போன்றது தான் நம் நாட்டின் கதையும். நம் நாட்டின் உயிர் மதத்தில் தான் இருக்கிறது. இதை ஒருவராலும் அழித்துவிட முடியவில்லை. எனவே தான் பாரத நாடு எத்தனை எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

-- ஸ்வாமி விவேகானந்தர்

2 comments:

அம்பாளடியாள் said...

சிறந்த படைப்பு மேலும் தொடர வாழ்த்துக்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்..