Saturday, October 13, 2012

வரலாற்றுப் பிழை!




தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசியல்வாதிகளால் தொடர்ந்து கூறப்பட்டு வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிரான விமர்சனத்தை வைப்பதையே அதற்கு தீர்வாக கருதுகிறார்கள். ஹிந்து மதத்தை விட்டு விலகி விடுவதால் தங்களின் நிலை உயர்ந்து விடும் என்றும் சிலர் நினைக்கின்றனர். குறிப்பாக தலித்துகளில் பெரும்பாலானவர்கள் இந்த விதமான மூளைச்சலைவைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

திரு. அம்பேத்கார்

தலித்துகள் என்றால் மதம் மாறியே தீரவேண்டும் என்கிற டெம்ப்ளேட் உணர்ச்சியை அவர்கள் மனதில் ஆழப்பதிய வைத்த வரலாற்றுக் குற்றத்தை அம்பேத்கர் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அம்பேத்கரை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்களின் பெரும்பாலானவர்கள்  இன்றைக்குச் கிறிஸ்தவத்தில் தான் இருக்கிறார்கள். அம்பேத்கர் இவ்வளவு பாடு பட்டு ஆய்வெல்லாம் செய்து 'இஸ்லாம் வேண்டாம் , கிறிஸ்தவம் வேண்டாம்' என்று அவற்றை விலக்கி புத்தமதம் மாறியது வீனாகிப் போனது. அவரை தலையில் தூக்கி வைத்து ஆடும் ஒருவரும் அவரை மதித்துப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. 

அம்பேத்கரை குலதெய்வம் போல் கொண்டாடுபவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாதிரிமார்களின் மூலைச் சலவைக்கு ஆட்பட்டு மிஷனரிகளுக்கு விலை போய்விட்ட மக்களாகவே உள்ளனர். அல்லது விலை போய்விட்ட தங்களை, இந்திய பாரம்பரிய நீரோட்டத்தில் தொடர்ந்து தங்கள் இருப்பை வெளிப்படுத்த அம்பேத்கரை உபயோகப்படுத்தி வருகின்றனர். அம்பேத்கார் உயிருடன் இருந்திருந்தால் மிஷனரிகளுக்குவிலை போவதை விட தலித்துகளைப் பார்த்து நீங்கள் இந்து மதத்திலேயே இருந்துவிடுங்கள்என்று கூட கூறியிருப்பார். காரணம், ஜாதிகள் இல்லை என்று சொல்லி  ஊரை ஏமாற்றி ஜாதிக்கொரு சர்ச் கட்டி இருக்கிறார்கள் என்பது தான்.

வாழ்க்கை முறை , வாழிடம், சுற்றம் சூழம் வாழும் மனிதர்கள் என்று எதுவும் மாறாத நிலையில், தலித்துகள் தங்கள் வழிபாட்டு முறையையும் வழிபடும் தெய்வத்தையும் மாற்றினாலே அவர்களின் வாழ்க்கை நிலை மாறிவிடும் என்று ஒரு படித்த மேதை எப்படி கணக்கிட்டாரோ என்று தெரியவில்லை.

மதம் என்பதை ஏதோ ஒரு கம்பெனி வேலையை ராஜினாமா செய்து, இன்னொரு கம்பெனி வேலைக்குச் செல்வதைப் போல அம்பேத்கார் நினைத்து விட்டார் போலும். பொதுவாக ஒரு மனிதன் கடவுளைக்கும்பிடுவதும், ஒரு மதத்தில் இணைந்திருப்பதும் தனக்கு மரியாதை கிடைக்கும் என்பதற்காக அல்ல. ஏதோ ஒரு அபார சக்தியும், மகிமையும் நாம் இணைந்திருப்பதால் தன்னைக் காக்கிறது என்று எண்ணுவதாலேயே அதில் இருக்கிறான். மனிதர்கள் இறைவழிபாட்டால் பிரச்சனை தீரும் என்று நம்புவதாலேயே அதனைச் செய்கிறார்கள். 

அம்பேத்கார் வழியில் தலித்துக்கள் எல்லாருமே புத்தம் தழுவாமைக்கு முக்கியக் காரணம், புத்தரிடம் மகிமைக் கதைகள் இல்லை. புத்தர் ஒரு மனிதராகவே, போதனை மட்டுமே செய்யும் குருவாகவே அறியப்பட்டார். ஆனால் தலித்துக்கள், அம்பேத்காரே தனக்கு வேண்டாமென்று ஒதுக்கி விட்டுப் போன, 'கிறிஸ்தவத்திற்கும், மிஷனரிகளுக்கும்' விலை போவதற்கு முக்கியக் காரணம், ஏசுவிற்கு நிறைய மகிமைக் கதைகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிச் சொல்லி, 'ஏசுவைக் கும்பிட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன' என்று ஆழப்பரப்பப்படுவதால். ஆனால் புத்தரிடம் அந்த ஈர்ப்பும் மகிமையும் கிடைக்கவில்லை. ஆக உணர்வுப்பூர்வமாக அனுகப்பட வேண்டிய விஷயத்தை அம்பேத்கார் அறிவுப்பூர்வமாக மட்டுமே அனுகி தலித் சகோதரர்கள் வெளிநாட்டு மிஷனரிகளிடம் கூட்டம் கூட்டமாக விலை போகும் வாய்ப்பை, தோற்றுவாயை ஏற்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

இதனால் தலித் சகோதரர்கள் இழந்தது தங்களது சொந்த பாரம்பரியம். மூதாதையர்களின் அற்புதமான இறைசார்ந்த கலாச்சார வாழ்க்கை முறை. மூலைச் சலவையற்ற சுதந்திரமான வாழ்க்கை தர்மம். தலை முறைத் தலைமுறையாக வந்த முன்னோர்களின் சங்கிலிப் பிணைப்பான உறவுத் தொடர்புகள், ஆழமான வாழ்வியல் தத்துவங்கள். 

கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்துக்கோ மாறினால் இவற்றையெல்லாம் நம் மக்கள் இழந்து விடக்கூடும் என்பதாலேயே இந்திய பாரம்பரியத்தின் வேரிலிருந்தே உருவான புத்தத்தின் பின்னால் போக நினைத்தார் அம்பேத்கார். ஆனால் அம்பேத்காரின் சொல்படி கேட்காமல் அவர் வழி நடக்காமல் 'கிறிஸ்தவத்துக்கும் , இஸ்லாத்துக்கும்' மாறும் தலித்துக்கள் தங்களுக்காகவே வாழ்நாள் முழுதும் போராடிய மதிப்பிற்குரிய அம்பேத்கரை மோசமாக அவமதிக்கின்றனர்.

நல்லவர்களோ கெட்டவர்களோ, தி க மற்றும் தி மு க போன்றவர்களால் அரசாங்க சட்டதிட்டங்களில் மாற்றம் ஏற்பட்டு தலித் மக்கள் இன்று சக மனிதர்களைப் போல் செல்வமும், செல்வாக்கும் பெற்று வாழ்கின்றனர். ஆனால் அப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்ற முயலாமல் ஒரு மதத்தை மாற்றுவதால் அவர்கள் வாழ்க்கை மாறி விடும் என்று மதிப்பிற்குரிய அம்பேத்கார் நினைத்தது, ஏதோ ஒரு வேகத்தில் எங்கோ சறுக்கியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது ஒரு வரலாற்றுப் பிழை!

No comments: