Sunday, December 2, 2012

கடவுள் என்கிற சிசிடிவி!

கடவுள் என்கிற சிசிடிவி - 1
கடவுள் என்கிற சிசிடிவி - 2


கடவுள் பார்க்கிறார் என்கிற ஆழ்மனப் பதிவு மனிதர்கள் தவறிழைக்கும் சூழ்நிலையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. கடவுள் என்கிற சிசிடிவி வேலை செய்கிறது.


அது சரி, கடவுள் தவறிழைத்தவர்களை தண்டிப்பது எப்படி?

கடவுள் என்பவர் ஒரு சிசிடிவி கேமரா போல நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்கிற ஒரு உள்ளுணர்வை நம் மக்களின் ஆழ்மனத்தில் பதியச் செய்வதால் அத்தகைய உள்ளுணர்வினால் ஏற்படும் நெருடல் அல்லது பயம் மனிதர்கள் தவறிழைக்காமல் வாழ வழிசெய்கிறது எனக்கொள்ளலாம். ஆனால் அப்படியே ஒருவர் தவறிழைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கடவுள் எப்படி தண்டிப்பார். ஒரு வேளை கடவுள் தண்டிக்கவில்லை என்றால் பின்னர் மனிதர்களுக்கு என்ன தோன்றும்? கடவுள் பார்த்துக் கொண்டு மட்டும் தான் இருப்பார். தண்டிக்கவெல்லாம் மாட்டார். அதனால் பார்த்தால் பார்க்கட்டும் நம் வேலையை நாம் செய்வோம் என்று எத்தகைய காரியத்திலும் இறங்கத் தயங்கமாட்டார்கள்.

ஆனால் இந்த இடத்தில் தான் நம் முன்னோர்கள் ஆழ்மனப் பதிவை பயன்படுத்தி கடவுள் என்கிற கருதுகோள் பொய்க்காமல் இருக்கும் உக்தியைக் கையாள்கிறார்கள்.

"மனமும் உடலும் ஒரு மொழி பேசும்" என்பார்கள் பெரியோர்கள். அதாவது நம்மையறியாமல் உடலில் ஏதாவது குறைபாடு உண்டானால் மனம் சோர்வடைவதன் மூலம் அதனை வெளிப்படுத்தும். அதே போல மனதிலே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அது உடல் நோயாக உருவெடுத்து மனப்பிரச்சனையை உடல் வெளிக்காட்டும். இப்படி நம் மனப்பதிவுகள் எதுவானாலும் அது உடல் மொழியாகவும், உடல் மாற்றங்கள் எதுவானாலும் அது மனப்பதிவாகவும் மாறி இரண்டும் ஒரே மொழியில் வெளிப்பிரபஞ்சத்துடன் உறவாடும் தன்மை கொண்டது. இதனை நம் முன்னோர்கள் நன்றாக உணர்ந்து வைத்திருந்தார்கள்.

அதனால் கிராமங்களில் கடவுள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் நாம் தவறிழைத்தால் அவர் தண்டிப்பார் என்றும் ஒரு மனப்பதிவை உண்டாக்குகிறார்கள். அப்படியே எவ்விதம் தண்டிப்பார் என்கிற மனப்பதிவையும் சேர்த்தே ஏற்படுத்துவார்கள்.
கிட்டத்தட்ட ஒரு சாபம் போலத்தான் இருக்கும். ஆனால் நேரடியாக சாபம் விடாமல் கதைசொல்வது போல மனதில் ஏற்றி விடுவார்கள்.

உதாரணமாக சில விஷயங்களைப் பார்ப்போம்..!

'மனமும் உடலும் ஒரு மொழி பேசும்'

என்றோ ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது ஒரு குளிர் நேரத்தில் அழகான மலரைப் பார்த்து மெய்சிலிர்க்கிறோம். பிறிதோர் நாள் ஒரு வெயில் காலத்தில் வேறோரிடத்தில் அதே பூவைப் பார்க்கும் போது ஊட்டியின் நினைவு வந்தால் சில வினாடிகள் உடல் சிலிர்த்து வெயில் மறந்து ஊட்டி அனுபவத்திற்குள் சென்று மீள்வோம். நாம் பார்த்த அதே மலர் நம் பழைய நினைவின் பதிவைத் தூண்டும் பொழுது அது மூளையைச் சென்று அடைகிறது. மூளை அதனை உடலுக்கணுப்பி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கி குளிர்ச்சியான ஒரு உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு மனமும் உடலும் ஒரு மொழி பேசுவது வாடிக்கை.

தலையும் கை கால்களும் கட்டுப்படில்லாமல் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் பாதிப்பைக் கொண்ட ஒரு வாலிபர் ஹோமியோபதி மருத்துவரிடம் வருகிறார். நன்றாக இருந்தவர் தான். ஒரு நாள் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இடறி கீழே விழுந்து விட்டார். அது முதல் தலையும் கை, கால்களும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்திருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்சைக்கிளில் இருந்து விழுவது என்பது மிகச்சாதாரணமான விஷயம். ஆனால் அதன் பாதிப்பு அதற்குச் சம்பந்தமே இல்லாத பெரியதான விஷயம். அப்படியென்றால் பிரச்சனை உடலில் இல்லை மனதில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறார் மருத்துவர்.

இப்போது பாதிக்கப்பட்டவரிடம் சிறுவயது முதல் அவரது மனதை பாதித்த சம்பவங்கள் பற்றி விளக்கிக் கூறுமாறு மருத்துவர் கேட்க ஒவ்வொன்றாக விளக்குகிறார் அந்த இளைஞர். அப்போது ஒரு சம்பவம் பற்றி அவர் சொன்ன போது அது தான் அவரது உடல் பாதிப்பிற்கு காரணம் என்பது புரிந்துகொள்ளப்பட்டது.

ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்த அவர் கட்டுபாடிழந்த ஒரு லாரி வேகமாக வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக மோதி அவர்கள் மீது ஏறிச் சென்று விட்டதை தன் கண்களால் காண்கிறார். அங்கு நின்றிருந்தவர்களின் கை கால்கள் துண்டாகி கிடந்த கோலத்தையும் தலை துண்டிக்கப்பட்டு கழுத்தருகே துடித்துக் கொண்டிருந்த காட்சியையும் பள்ளி செல்லும் வேளையில் அவர் அருகிலேயே தன் கண்களால் பார்க்க நேருகிறது. இது அவரது மனதில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட்டது. ஆனால் பிறகு அடுத்தடுத்த நாள்களில் அதையெல்லாம் மறந்து வழக்கம் போல தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் அவர் பார்த்த காட்சிகளெல்லாம் ஒரு மனப்பதிவாக மூளையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விட்டது. அதை யாரும் அறியமாட்டார்.

அதே வாலிபர் பிறிதொரு நாள் அதே சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற பொழுது சறுக்கி விழுகிறார். விழுந்தவர் சுதாரித்து எழுந்து நிற்கவும் செய்துவிட்டார். அது வரை அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் எழுந்தவர் அந்த பேருந்து நிறுத்தத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்தவுடன் அவர் மனதில் பதிந்திருந்த பழைய நினைவுகள் தூண்டப்படுகின்றன. லாரி ஏறியதால் கைகால்கள் துண்டான மனிதர்களின் நினைவுகள் அவருக்கு உண்டாகிறது. அதே சூழலுக்கு அவர் இழுத்துச் செல்லப்படுகிறார். இப்போது தன் நிலை பற்றி யோசிக்கிறார். "நான் சைக்கிளில் இருந்து விழுந்த போது அதே போல ஒரு லாரி வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?" என்று ஒரு வினாடி அச்சப்பட்டு உடல் நடுங்கினார். அவ்வளவு தான். 

அடுத்த வினாடி அவர் கை கால்கள் நடுங்கத் தொடங்கின. தலை நிற்காமல் ஆடத்துவங்கியது. பின்னர் அது நிற்கவே இல்லை. காரணம் அவர் தனது கை கால்கள் துண்டாகிவிட்டது போலவும் தன் தலை துண்டிக்கப்பட்டது போலவும் உணர்ச்சி மிகுந்த நேரத்தில் கற்பனை செய்து கொள்ளஏற்கனவே அவர் மனதில் இருந்த பதிவு தூண்டப்பட்டுவிட அப்படி ஒரு சம்பவம் நடந்தே விட்டதென மூளை கருதிவிட, துண்டிக்கப்பட்ட கை கால் மற்றும் தலைகளிலிருந்து தன் கட்டுப்பாட்டை மூளை இழந்து விடுகிறது. இவ்வளவும் ஒரு கற்பனையால் நடந்து விட்ட நிகழ்வு..! ஆனால் மூளை தன் கட்டளையாக ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தி விட்டது.

பிறகு அந்த மனபாதிப்பு தான் இந்த நோயின் மூலம் என்பதை அறிந்து அதற்கு மருந்துகொடுத்து குணப்படுத்திவிட்டனர்.

மேற்கண்ட இந்த விஷயத்தில் எப்படி ஒருவரது உடல் அவரது மனப்பதிவால் பாதிப்பிற்குள்ளானதோ அதே சூக்ஷமத்தைத் தான் கடவுள் என்கிற பெயரால் செயற்கையாக ஒருவரிடம் கதைகளின் வாயிலாக உண்டாக்குகிறார்கள்.

இப்படி கதை சொல்வார்கள் "கருப்பன் தன் மகள் கல்யாணத்துக்கு வெச்சிருந்த நகையை சுப்பன் திருடிட்டார். சுப்பன் அதை ஒத்துக்கலை. அதனால கருப்பன் சொடலைமாட சாமி முன்னாடி நின்னு காசு வெட்டிப் போட்டான். அடுத்த நாளு நாள் கழிச்சு சுப்பனுக்கு ஒரே வாந்தி பேதி எடுத்துச்சு. கையும் காலும் இழுத்துக்கிட்டு நாக்கு வெளியே தள்ளி படுத்த படுக்கையாகிட்டான். ஊர்காரங்களுக்கு சந்தேகம் வந்து எல்லாருமா போய் விசாரிச்சதில அவன் உண்மையை ஒத்துக்கிட்டு நகையை திருப்பி குடுத்திட்டான். அதனால சாமிக்கிட்ட காசு வெட்டி போட்டோம்னு வெச்சிக்கோ தப்பு பண்ணினவன் நரம்பெல்லாம் இழுத்துக்கிட்டு வாந்தி பேதியெல்லாம் வந்து செத்தே போய்டுவான்' தெரியுமா?" என்று நடித்துகாட்டியே கூட சிறுவயதுப் பிள்ளைகளிடம் சீரியசாக எடுத்துச் சொல்வார்கள்.

எங்கேயோ ஒருவர் அரசாங்க காசை இரண்டாக வெட்டிப் போடுவதற்கும் யாரோ ஒருவரின் உடல் நலம் குன்றுவதற்கும் சற்றும் தொடர்பில்லை தான். ஆனால் அப்படி நிகழ்ந்து விடும் சாத்தியம் உண்டா என்றால் கண்டிப்பாக உண்டு எனலாம். நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்கள் மற்றும் நம் எண்ணங்கள் யாவுமே நரம்பு நாளங்களில் துல்லியமாகப் பதியப்படுகிறது. எப்படி கம்ப்யூட்டர் டிஸ்க்கில் நாம் தட்டச்சுவதெல்லாம் செக்டார் செக்டாராக பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் பதியப்படுகிறதோ அது போல. சேமிக்கப்பட்ட கோப்புகள் ஒரு க்ளிக் செய்வது மூலம் செயல்படத் துவங்கி விடுகிறது. அதுபோல நரம்பு நாளங்களில் சூக்ஷமமாக சேமிக்கப்படும் எண்ண அலைகள் தூண்டப்படுமானால் அவை மூளைகளுக்கு ஒரு கட்டளையாகவே சென்று அதனை உடல் வெளிப்படுத்திவிடும்.

கதை கேட்கும் பொழுதே நரம்பு இழுத்துக் கொண்டு நாக்கு வெளியே வந்து கிடப்பது போல கற்பனை செய்து கொண்டால் கூட அந்தக் கற்பனை ஒரு மனப்பதிவாக, எண்ண அலைகளாக சேமித்து வைக்கப்படும். என்றாவது ஒரு நாள் உணர்ச்சி மிகுந்த ஒரு நேரத்தில் அந்தப் பதிவு தூண்டப்பட்டு விட்டால் உடல் அதே போன்றதொரு செயலை செய்து கட்டிவிடும். ஆக ஒருவர் காசு வெட்டிப் போட்டவுடன் தவறிழைத்தவர்தனக்கு ஏதோ ஆகப்போகிறது என்று ஒரு முடிவுக்கு தானே வந்து விடுவார். அப்படி ஆகிவிடுமோ என்று கற்பனையும் செய்து கொள்வார். அந்த உணர்ச்சி மிகுந்த கற்பனையே மூளைக்கு ஒரு கட்டளைபோல செல்லத்துவங்கி உடல் அதன் படி செயல்பட ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பயத்தின் காரணமாக உடல் சோர்வடையும். சும்மா இருந்தவர் திடீரென சுருண்டு விழுவார். அவரது மனப்பதிவே அவரை அடித்து விடும். ஆக 'காசு வெட்டிப் போட்டவுடன் கடவுள் தண்டிச்சிட்டார் பார்த்தாயா? அவன் பாத்துக்கிட்டு தான்யா இருக்கான்' என்று கடவுளின் இருப்பிற்கு கட்டியம் கூறப்படும்.

மனமும் உடலும் ஒரு மொழி பேசும் என்கிற சூக்ஷமத்தை புரிந்து கொண்ட முன்னோர்கள் அதனை சமூக நலனுக்காக எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறார்கள் என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கடவுள் என்கிற கருதுகோளை காவல் தெய்வமாகவும் எல்லைச்சாமியாகவும் வைத்து அவர் நம் எல்லோரையும் பார்க்கிறார் என்கிற உள்ளுணர்வை உண்டாக்கி, அதன் மூலம் நன்னடத்தை கட்டுப்பாடுகளை வலியுறுத்தினார்கள். அதனை மீறுபவர்களுக்கான தண்டனைகளை மனிதர்களின் மனத்திலேயே பதியச்செய்து விதைத்து விடுகிறார்கள். உடலுக்குள் 'கம்ப்யூட்டர் சிப்வைத்து தூரத்தில் இருந்து அவர்களை கண்காணிக்கிறார்களே, அது போல. தவறிழைப்பவர்களை அவர்களது ஆழ்மனமே தண்டனைக்குள்ளாக்கிவிடும். கடவுள் என்கிற சிசிடிவியை நம் உள்ளத்திற்குள்ளேயே பதித்து விடுகிறார்கள்.

நம்பிக்கைகள் எதுவும் மூடத்தனம் அல்ல. அவற்றை புரிந்து கொள்வதில் தான் நமக்கு பக்குவக் குறைவு உள்ளது.

எச்சரிக்கை!

கடவுள் என்கிற சிசிடிவி உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது.!

1 comment:

Arun Ambie said...

மிக நன்று. Sub conscious memory குறித்த விவரங்களை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். தவறிசைப்பதற்கு எதிரான அச்சம் சிறுவயதிலேயே ஊட்டப்படுகிறது, அதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்படுகின்றன. இது சநாதன வாழ்வு முறை. இதெல்லாம் மூடநம்பிக்கை என்றால் ஊரில் அக்கிரமம் பெருத்துத் தான் போகும்.