Saturday, December 29, 2012

'கனபாடிகள்' எனப்படுபவர் யார்?


எமதர்மனிடம் சென்ற நசிகேதன் கதை பற்றி ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். எமதர்மனால் காத்து நிற்க வேண்டி வந்ததால் நசிகேதனுக்கு மூன்று வரங்களை எமதர்மன் வழங்கினான். அப்போது இரண்டாவது வரத்தைக் கேட்கலானான் நசிகேதன். "எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். கவனமுடன் புரிந்துகொண்டு அதன் படி நடந்து சொர்கத்தை அடைய விரும்பும் எனக்கு அத்தகைய யாகத்தைப் பற்றி சொல்வாயாக. இதனை எனது இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்" என்றான்.

எமதர்மனும் அதை ஏற்றுக்கொண்டு ஆதிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தகைய யாகங்களை விளக்கிச் சொன்னான். நசிகேதனும் அதனைக் கேட்டு புரிந்து கொண்டான். தான் கேட்டதை அப்படியே திருப்பிச் சொல்லி தெளிவாகக் கற்றுக் கொண்டான். நசிகேதனின் கவனமும் புரிந்துகொள்ளும் தன்மையும் கண்ட எமதர்மன் மிகவும் மகிழ்ந்து போனான். வண்ணமயமான தனது மாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பின் கூறினான் "நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி நீ விரும்பிய படியே எடுத்துக் கூறிவிட்டேன். மக்கள் அந்த யாகத்தை இனி உன் பெயராலேயே அழைப்பார்கள்" என்றான்.

இங்கே கற்பித்தல் மற்றும் கற்றல் பற்றிய ஒரு விஷயத்தை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். நசிகேதன் எமதர்மன் சொல்லிக் கொடுத்த யாக வித்யைகளை அப்படியே அவர் சொல்லிக் கொடுத்தபடியே ஒன்று கூட மறக்காமல் அக்ஷரம் பிசகாமல் திருப்பிச் சொல்லி தான் புரிந்து கொண்டதன் ஆழத்தை வெளிப்படுத்தினான். அவ்விடத்தில் எமதர்மன் ஒரு குருவாகவும் நசிகேதன் ஒரு சிஷ்யனகவும் மாறியிருந்தார்கள். தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியாகவே எமதர்மன் நசிகேதனின் பெயராலேயே அந்த யாகம் நடைபெறட்டும் என்ற வரத்தையும் வழங்கினான்.

நம் பழங்கால கற்றல் முறையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுகிறது. ஏறக்குறைய வெள்ளையர்கள் தங்களது ஆங்கில வழிக்கல்வியை பாரதத்தில் தினிப்பதற்கு முன்பாக குருகுலக் கல்வி இந்த முறை தான் இருந்தது. அதாவது சொல்லிக்கொடுக்கப்படும் பாடத்தை மனதில் வாங்கி அதனை மனனம் செய்து அப்படியே பிசகின்றி திருப்பிச் சொல்லி மனதில் மதியவைக்கும் முறை. இம்முறையில் பாடம் கற்றால் அப்பாடம் இறக்கும் வரை மறக்காது.

சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடு படித்திருப்போம். ஓரெண்ட் ரெண்டு, ஈரெண்டு நாலு, முவி ரெண்டு ஆறு என்று சொல்லிச் சொல்லி படிக்கும் வாய்ப்பாடு. அவ்வழி கற்ற வாய்ப்பாடு வாழ்நாள் முழுதும் நினைவிருக்கும். மேலை நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அங்கே சிலர் கால்குலேட்டர் கொண்டு கணக்குப் போட்டு முடிக்கும் முன்னர் மனக்கணக்கில் அதன் விடையைச் சொல்லுவதைப் பார்த்து அந்நாட்டவர் ஆச்சரியப்படுவதுண்டு என்று கேள்விப்படுகிறோம். இவ்வாறு மனனம் செய்யும் கல்விமுறை வேகமாக புரிந்து கொள்ளுதலுக்கு உதவுகிறது. 

இன்னொரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்க. மனனம் செய்வது என்றால் வெறும் உதவாத பாடத்தை பத்தி பத்தியாக மனனம் செய்யும் கல்வியாக அக்காலக் கல்வி இருந்ததில்லை. சூத்திரங்களை மனப்பாடம் செய்தல் தான் மூலக்கல்வி. அவற்றை மனப்பாடம் செய்துவ்ட்டால் அச்சூத்திரங்களை மனதில் கொண்டு பிற வேலைகளை மிகவும் எளிமையாக முடித்து விடலாம். அது தான் அதன் சூக்ஷமம். நாம் கற்ற வாய்ப்பாடு என்பது கணிதம் போடுவதற்கான அடிப்படை சூத்திரம். அது மனதில் ஆழப்பதிந்திருந்தால் எந்தகணக்கையும் எளிதாக மனக்கணக்காவே போட்டுவிடலாம். இக்கால மாணவர்கள் படிப்பது போல குப்பைகளானாலும் மணப்பாடம் செய்தால் மதிப்பெண் என்கிற முறையாக அக்காலத்தில் இல்லை. சூத்திரங்களை மனப்பாடம் செய்தலே முக்கியத்துவம் பெற்றிருந்தது.

வேதங்களையும் அப்படிப்பட்ட மனனம் செய்தல் முறையிலேயே கற்றும் கற்பித்தும் வந்திருக்கிறார்கள். காரணம் வேதங்கள் ஓதுகையில் சப்தங்களின் அளவு மிக முக்கியமானதாகும். அவை இம்மி பிசகாமல் அக்ஷரசுத்தம் மாறாமல் சொல்லப்பட வேண்டியவை என்பதலால் அதை குரு வாயால் கூறக்கேட்டு அதனை மாணவர்கள் அவ்வழியே திருப்பிச் சொல்லி மனனம் செய்தார்கள். இன்றைக்கும் வேதம் ஓதும் பயில்விப்பு அப்படியே நடந்து வருகிறது.

வேதம் ஓதும் கடினமான பல வழிமுறைகள் பற்றி நம் பெரியோர்கள் மேலும் இப்படி விளக்குகிறார்கள். பத பாடம், கிரம பாடம் என்று இரண்டு வழிகள் உள்ளது. அதன் பின்னர் மனனம் செய்து ஒப்பிப்பதில் எட்டு விதமான வழிமுறைகள் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஜடை, மாலை, சிகை, ரேகை, த்வஜம், தண்டம், ரதம், கனம் என்று இது போன்ற எட்டு பெயர்களில் அவை அழைக்கப்படும். ஜடை என்ற உடன் நமக்கு கூந்தலை ஒன்றோடொன்று இணைத்து பிரிக்க முடியாமல் பிண்ணுதல் ஞாபகம் வரலாம். மாலையும் அப்படியே. ஓதப்படும் சொற்களை பல வார்த்தைக் கோர்வைகளால் ஆக்கி பிசகில்லாமல் ஒப்பித்தல். இது ஒரு கடினமான ஒப்புவித்தல் முறையாகும். அதாவது முதல் வார்த்தையுடன் இரண்டாவது வார்த்தை, இரண்டாவது வார்த்தையுடன் மூன்றாவது சேர்த்துப் பிரித்து ஒப்பித்தல்.

உதாரணமாக, "அம்பிகையே மகாசக்தி அகிலாண்ட நாயகியே" என்பது மந்திரம் என வைத்துக் கொள்வோம், அதனை "அம்பிகையே அம்பிகையே மகா மகா அம்பிகையே சக்தி.." என்று தொடர்தல் அல்லது "அம்பிகையே மகாசக்தி, சக்தி சக்தி அம்பிகையே, மகா மகா சக்தி சக்தி அகிலாண்ட அம்பிகையே, நாயகியே நாயகியே அம்பிகையே மகா சக்தி.." "அகிலாண்ட அகிலாண்ட அகிலம் ஆண்ட அகிலம் ஆண்ட அகிலாண்ட மகாசக்தி" என்று இப்படி வார்த்தைகளை வெவ்வேறு கோர்வைகளாக பாடிப்பாடி மனப்பாடம் செய்தால் அந்த வார்த்தைகளும் ஒலியும் உச்சரிப்புக்களும் நரம்பு நாளங்கள் அனைத்திலும் பதிவாகி காலம் முழுதும் ஞாபகம் இருக்கும். இதில் கனம் என்கிற வகையில் மனனம் செய்வதில் உள்ள சொற்கோர்வைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்றும் கூறுவார்கள். இதை நன்கு கற்றறிந்து, இவ்வழியில் ஓதுவதில் வித்தகர்களாக விளங்குபவர்களையே, கனம் பாடம் அறிந்தவர்கள் - அதாவது "கனபாடிகள்" என்று பெரியோர்கள் அழைக்கிறார்கள்.

ஆக இவ்வாறு கற்று கற்றதை அப்படியே க்ரஹித்து ஒப்பித்தும் நசிகேதன் எமதர்மனின் ஆசியைப் பெறுகிறான். ஆக நசிகேதன் இவ்வழியான பாரத மண்ணின் பழம்பெரும் அறிவான கற்கும் வித்தையை நமக்கு நினைவூட்டுகிறான்.

1 comment:

Sampath Kumar said...

Good article. I have been reading your article on MARANATHUKU PINNAAL can i have the copy of entire episode . I think 19 episode. I shall pay the cost. Kindly send your a/c Number. I have been trying to contact on your contact email address ie mirrors @gmail.com. but i could not reach you.
my email id mskus25@yahoo.com

my name M.SAMPATH KUMAR.Kindly reply