Monday, February 25, 2013

5 ஆவது ஹிந்து ஆன்மீக கண்காட்சி!


சென்னையில் வருடந்தோறும் நடத்தப்படும் ஹிந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு நேற்று நிறைவு நாள். சில மணி நேரங்கள் நம் ஆன்மீக அமைப்புகள் செய்து வரும் சேவைகளைப் பற்றி அறிந்து கொள்வோம் எனச் சென்று வந்தேன்.  

பொதுவாக சமூக சேவைகளெல்லாம் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் செய்கின்றன, ஹிந்து அமைப்புகளெல்லாம் யாருக்கும் எதுவும் செய்வதில்லை என்ற மோசமான எண்ணம் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சத்தமில்லாமலும் விளம்பரம் இல்லாமலும் பல நற்செயல்கள் செய்துவரும் ஹிந்து அமைப்புகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவே இது போன்ற ஹிந்து ஆன்மீக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆதரவில்லாதோர்க்கு விடுதிகள், ஏழை எளியோர்க்கு உதவும் அமைப்புகள், கோவில்களை சுத்தம் செய்யும் உழவார அமைப்புகள், பள்ளிக்கூடங்கள், சம்ஸ்கிருத மற்றும் வேத பாடசாலைகள், இலவச யோகா மையங்கள் என பலவகை செயல்பாடுகளில் இயங்கும் அமைப்புகளை பார்க்க முடிந்தது.

குறிப்பிட்டுச் சொல்ல விரும்பு புதிய அம்சங்களும் சில உள்ளன. எழுத்தாளர் ம வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் துவங்கப்பட்ட 'இந்துத்துவப் பதிப்பகம்' மூலமாக ஐந்து புத்தகங்கள் வெளியாகி அவை தமிழ்ஹிந்து அரங்கில் விற்பனையில் இருந்தன. அவற்றில் புதிய பதிப்பாக  மூன்று புத்தகங்கள்:

'1947 - பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டோர்' - மொழிபெயர்ப்பு ராஜசங்கர்
'தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?' - ம. வெங்கடேசன்
'புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? - ம. வெங்கடேசன்

மேலும் 'பண்பாட்டைப் பேசுதல்' மற்றும் 'சாதிகள்' ஆகிய புத்தகங்களும் இந்துத்துவ பதிப்பகம் மூலமாக வெளியாகி உள்ளன.

படிக்க வேண்டிய புத்தகங்கள். வாங்க விரும்புவோர் பதிப்பகத்தை அனுக முகவரி:

இந்துத்துவ பதிப்பகம், 46, அனுமந்தபுரம், வி.ஆர். பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005. தொலைபேசி: 9941298629. 

இன்னொரு புத்தகம் திரு.பால.கௌதமனுடையது. 'பாதகம் செய்பவரைக் கண்டால்' என்கிற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகம் அவருடைய வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அரங்கில் கிடைத்தது. எந்த போலித்தன பூடகமும் இல்லாமல் மனதில் வெளியாகும் கோபங்களின் கொப்பளிப்பை அப்படியே வடித்து கட்டுரைகளாக்கும் தைரியம் பால கௌதமனுக்கு மட்டுமே உண்டு. பல்வேறு சூழலில் அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுருந்தார். திரு ரங்கநாதன் மற்றும் ராஜேஷ் ராவ் போன்ற நண்பர்கள் அவரது அரங்கம் சிறப்புற அவருக்கு உதவிபுரிந்து வந்தனர்.   கண்காட்சியை காணவந்த காவல்துறையைச் சேர்ந்த சிலரும் ஆர்வமாக அவரது விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தமிழ்புத்தாண்டு எப்படியெல்லாம் அரசியலாக்கப்படுகிறது, விஸ்வரூபம் படவிவகாரம் மூலமாக வெளிப்பட்ட முஸ்லீம்களின் மதவெறி, கிழியும் பலரது செக்யூலரிச முகமூடிகள் என பலவற்றை அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கிக் கொண்டிருந்தார்.

பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் சிலரும் குடும்பத்துடன் வந்திருந்ததை பார்க்க முடிந்தது.

வரவேற்கும் குழந்தைகள்!
படத்திலிருக்கும் சிறுமிகள் அரங்கத்திற்கு வந்திருந்தோருக்கெல்லாம் சந்தனம் குங்கும கொடுத்து வரவேற்றனர். அவர்களிடம் 'உங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளவில்லையே' எனக்கேட்டேன். சந்தனம் வைத்திருந்த சிறுமி நான் க்றிஸ்டீனு என்றாள் சிறித்துக் கொண்டே. 'ஒஹ் அப்படியா, ஸாரிம்மா' என்றேன். 'பரவாயில்லை' என்றாள் மீண்டும் சிரிப்புடன். 'ரெண்டு பேரும் நல்ல காரியம் செய்கிறீர்கள். குட் கேர்ள்ஸ்' என்றேன். 'தேங்க்ஸ்' என்றனர் கோரஸாக. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் நிறைய பள்ளிக்குழந்தைகள் பங்கேற்றதையும், கண்காட்சி காண வந்ததையும் பார்க்க முடிந்தது.

அந்த அரங்கத்தில் நாம் மறந்து போய்க்கொண்டிருக்கும் நமது சிறுவயது விளையாட்டுக்களை வைத்திருந்தார்கள். அரங்கத்திற்கு வரும் நபர்களையெல்லாம் பள்ளிச் சிறுமிகளும் சிறுவர்களும் அழைத்து விளையாடச் சொல்கிறார்கள். பலரும் தங்களது சிறுவயது ஞாபகம் மேலிட பூரிப்புடன் விளையாடிச் சென்றதைக் காண முடிந்தது.

பல்லாங்குழி

மண்ணுக்குள் பொருளை புதைத்து விளையாடுவார்களே! இதுக்கென்ன பேருன்னு தெரியலை!

மதுரைப் பக்கத்தில் 'சொங்க்கல்' என்பார்கள். சென்னை பாஷையில் 'கல்லாங்காய்' விளையாட்டு!

பரமபதம்!


இந்த  முறை ஆன்மீக கண்காட்சியில் ஜாதி அமைப்புக்கள் சிலவற்றின் ஸ்டால்களும் இருந்தன. சிலருக்கு அவைகள் உறுத்தலாக இருந்தது. ஹிந்து என்கிற உணர்வில் மக்கள் கூடும் போது ஜாதிரீதியாக அரங்கங்கள் தேவையா என்று தோன்றுகிறது. வழக்கம் போல மற்ற ஜாதி அரங்கத்தை விட்டுவிட்டு பிராமணர்களின் அரங்கில் வாதம் செய்ய சில ஒவ்வாமைக் காரர்கள் வந்திருந்தனர்.

பிராமணர் சங்கத்தினரின் அரங்கை எட்டிப் பார்த்த ஒருவர் அங்கிருந்த சில தலைவர்களின் படங்களைப் பார்த்தவுடன் பொங்கினார். பொதுவான தலைவர்களையெல்லாம் இப்படி ஜாதிவாரியாக பிரிக்கிறீர்களே என்று. ஆன்மீக கண்காட்சியில் எதற்கு ஜாதிப் பேர் போட்டு வைக்கிறீர்கள் என்றெல்லாம் கொதித்தார். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் 'அமைப்பாளர்களிடம் போய்க் கேளுங்களய்யா' என்று விரட்டாத குறையாக அவரை அனுப்பி வைத்தனர். சுதந்திரத்திற்காக போராடிய முத்துராமலிங்க தேவரை ஜாதித்தலைவராக ஏன் ஆக்குகிறீர்கள் என்று இதே வீரர் தேவர் ஜாதியிடம் போய் இதே போன்ற கொதிப்புடன் கேட்பாரா எனத் தெரியாது.

அருகிலேயே விஸ்வகர்மா, நாயர்,  சௌராஷ்ட்ரா என பல ஜாதியினருக்கான அரங்கங்களைப் பார்க்க முடிந்தது. குஜராத்தி மண்டல் கூட இருந்தது. பிராமணர் ஸ்டாலை பார்த்து கொதித்த வீரர் மற்றவற்றை வேடிக்கை மட்டும் பார்த்து வாய் மூடிச் சென்ற கோழைத்தனத்தை பார்த்த போது நல்ல நகைச்சுவைக் காட்சியாகஅமைந்தது.              
விஸ்வகர்மா ஸ்டாலில் அம்மன் சிலைகள் பலரைக் கவர்ந்தது.   


 சௌராஷ்ட்ரா சமூக நல பேரவை!

 'அருன் எக்ஸெல்லோ' போன்ற வியாபார ஸ்டால்களும் இருந்தன. புத்தகப் பிரசுரங்களின் ஓரிரண்டு ஸ்டால்களும் தென்பட்டன. ஆன்மீக ஸ்டால்களுக்கு நடுவில் வியாபார ஸ்டால்களும் ஏற்கனவே புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்ற பிரசுரங்கள் ஏன் வந்தன என்று தெரியவில்லை.

ஆலய வழிபடுவோர் சங்கம் சார்பில் அரங்கம் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தது.  அறநிலையத் துறையினர் புரியும் அறமற்ற செயல்கள் பற்றி வருபவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் கூறுவதைக் கேட்டுச் சென்றனர். மேலும் பத்து ரூபாய் மதிப்புள்ள அறிந்து கொள்வோம் அறம் நிலையாத் துறையை என்கிற புத்தகத்தை பலரும் வாங்கிச் சென்றனர்.

மேலும் மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக கடத்தப்படுவதைப் பற்றியும் அவைகள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டு கொல்லப்படுகின்றன என்பது பற்றியும் ஆவனப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. காண்போர்களை மனம் பதைக்க வைத்த அந்தக் காட்சிகள் பார்ப்பவர்களின் முகத்தில் ஒரு வித அச்சத்தை உண்டாக்கியதை கவனிக்க முடிந்தது. 


சென்ற வருடமே ஐயா வழி அரங்கம் நன்றாக அமைத்திருந்தார்கள். இந்த வருடமும் அதே பொல அழகுடன் அமைக்கப்பட்டிருந்தது. பலரது நெற்றியிலும் அய்யாவழி திருநாமம் தெரிந்தது. ஐயா வைகுண்டர் பற்றி காண வருபவர்களுக்கு அழகாக எடுத்துரைத்தனர். இது போன்ற ஆன்மீக கண்காட்சியின் மூலமாகத் தான் பலருக்கும் ஐயா வைகுண்டர் பற்றி தெரியவரும். இல்லையேல் தென் தமிழகத்தில் ஐயாவழி ஒன்றிருக்கிறது என்று கேள்விப்படுவார்களே யன்றி கேட்டறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  தான் முதன் முதலில் ஹிந்து எழுச்சியே உண்டானது. காரணம் கிறிஸ்தவர்களுடைய அதிகார மற்றும் ஆதிக்க வெறியால் ஹிந்துக்கள் அதிக துன்பமடைந்த மாவட்டம் கன்னியாகுமர். ஐயாவழி மக்கள் ஹிந்து எழுச்சிக்கும் மிக முக்கியமான தொரு பங்கு வகிக்கிறார்கள் என்றால் மிகையாகாது. அவர்கள் கொடுத்த சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து சில துளிகள் கீழே:
"அய்யா வைகுண்ட பரம்பொருள்' கொல்லம் ஆண்டு 1008 மாசி 20ல் திருச்செந்தூர் திருப்பாற்கடலில் வெளிப்பட்டு தெச்சணாமூலை எனப்படும் கன்னியாக்குமரியில் அமைந்துள்ள சுவாமிதோப்பில் பண்டாரகோலமாக வந்தமர்ந்து இறைவன் ஒன்று தான், அவனுக்கு உருவம் இல்லை, சாதி இல்லை, எல்லோரும் ஓர் இனம் என்றும், தர்மயுக வாழ்விற்கு வழிகாட்ட அறியாமை மூட நம்பிக்கை இல்லாத தத்துவ வழியை கொடுத்து, முக்காலத்தையும் உணர்த்தும் காலக்கண்ணாடியாக திகழும் "அகிலத்திரட்டு அம்மானை" "அருள்நூல்" போன்ற ஆகமத்தை அருளினார்." 
நன்றாக படமெடுக்க வேண்டுமென ஆசையாய் கேமெராவை கூட்டிக் கொண்டு போயிருந்தேன். ஆனால் அதற்கு தேவையான மின்சார உணவு கொடுக்காததால் ஐந்தாறு படத்துடன் அது கண் மூடிவிட்டது. அதனால் கைபேசிக் காமெராவில் மிச்சமீதத்தைப் படமாக்கி கொண்டு வந்தேன். சரி, ஆன்மீக கண்காட்சிக்குப் போகாத நண்பர்களுக்காக சில படங்கள் இங்கே: 
                                                 

















 








அரங்கில் நடந்த தெருக்கூத்து நாடகம். பலரும் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
 

5 comments:

Arun Ambie said...

சற்றே நீளமான தகவல் செறிவு மிக்க பதிவு (வழக்கம் போல). தகவல்களுடன் படங்களும் நன்றாக உள்ளன.

gujjan said...

அண்ணே. நீங்கள் போக இருப்பதாக என்னிடம் சொல்லியிருந்தால் நானும் உங்களுடன் வந்திருப்பேனே !! இன்னும் நிறைய படமும் பிடித்திருக்கலாம்..

hayyram said...

நண்பர்கள் அரூன் மற்றும் குஜ்ஜனுக்கு நன்றி. குஜ்ஜன், எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள். நாம் தொடர்பிலிருப்போம்.

gujjan said...

நாம் ஏற்கனவே தொடர்பில் உள்ளோம். மடிப்பாக்கத்தில் சந்தித்தோமே.. இது எனது புனைப்பெயர் :-)

பிரகாஷ் said...

Nice Coverage. Many Thanks Ram